ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவின் இந்தியப் பயணம் அரசியல் வட்டாரங்களில் அதிகம் பேசப்படும் ஒன்றாக இருந்தது.
அரசாங்கப் பதவி வகிக்காத போதும் அவர் இந்திய அரசாங்கத்தினால் அழைக்கப்பட்டிருந்தார்.
ஆட்சியில் இல்லாத காலகட்டங்களில், பல அரசியல் தலைவர்கள், இந்தியா, சீனா போன்ற நாடுகளால் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.
சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக் ஷ, நாமல் ராஜ பக் ஷ, கோட்டாபய ராஜபக் ஷ, சஜித் பிரேமதாச போன்றவர்களுக்கு இவ்வாறான வாய்ப்புகள் கிடைத்திருந்தன.
ஆனால், இவர்களிடத்தில் இருந்து ரில்வின் சில்வா வேறுபட்டவர்.
ஏனென்றால், அவர் முற்றுமுழுதாக இந்திய எதிர்ப்புவாதத்தை முன்னிறுத்தி, அரசியல் செய்து வந்தவர்.
ஜே.வி.பி அரசியல் கட்சியாக இருந்த போதும், ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட போதும், அதற்குப் பின்னரான அரசியல் செயற்பாடுகளின் போதும், அதன் முதன்மை இந்திய எதிர்ப்பும், சீன சார்பும் அதன் கொள்கை நிலைப்பாடாக இருந்தது.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீவிரப்படுத்தப்பட்ட ஆயுத போராட்டம், இந்தியப் படைகளுக்கு எதிரான நடவடிக்கைகள், இந்தியப் பொருட்கள் புறக்கணிப்பு போன்றவற்றில் மாத்திரமன்றி, அதற்குப் பின்னரான காலகட்டங்களிலும், இந்தியாவை எதிர்ப்பதை ஜே.வி.பி. முக்கிய இலக்காக கொண்டிருந்தது.
இந்தியா பிராந்திய சக்தியாக இருப்பது, எப்போதும் இலங்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பது ஜே.வி.பி.யின் கணிப்பு.
அதனால் அதன் பிரதான கொள்கையிலேயே, இந்தியா எதிர்ப்புவாதம் உள்வாங்கப்பட்டது. அவ்வாறு உள்வாங்கப்பட்டதற்கான அடிப்படை காரணம், அதன் சீன சார்பு நிலையும், சீனாவின் ஆதரவை பெற்றுக் கொள்கின்றஉத்தியாகவும் இருந்திருக்கலாம்.
இவ்வாறான பாரம்பரியத்தில் இருந்து வந்த ஒரு கட்சியின் பொதுச் செயலாளர், இன்று ஆட்சியில் பங்கு கொள்ளாவிட்டாலும், அதிகாரத்தை தீர்மானிப்பவராக இருக்கிறார். ரில்வின் சில்வாவே நாட்டின் அதிகாரபூர்வமற்ற ஜனாதிபதியாக செயற்படுகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
அண்மையில் இந்தியாவுக்குப் புறப்படுவதற்கு முன்னர், பெலவத்தையே நாட்டை ஆள்கிறது என்ற குற்றச்சாட்டை அவர் நிராகரித்திருந்தார்.
ஆனாலும் அவர் தான், நாட்டின் நிழல் ஜனாதிபதி என்ற கருத்து வலுவாக இருப்பதை மறுக்க முடியாது.
இத்தகைய பின்னணியில், அவரது இந்தியப் பயணம் ஆச்சரியமானது தான்.
ஜே.வி.பி. அண்மைக் காலத்தில் இந்திய ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும், அது எந்தளவுக்கு உண்மையானது, விசுவாசமானது, நேர்மையானது என்ற கேள்விகள் இருக்கின்றன.
நீண்ட பாரம்பரியத்தை விட்டு விலகி, ஜே.வி.பி. இந்திய ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க முனைகிறது என்றால் அதனை யாரும் இலகுவாக நம்பி விடக் கூடிய நிலை இல்லை.
அதனை சாதகமான ஒரு நிலையாகவும் எடுத்துக் கொள்ள முடியாது.
இவ்வாறான பின்னணியில் ரில்வின் சில்வா மற்றும் குழுவினரின் இந்திய பயணம் உன்னிப்பாக நோக்கப்பட வேண்டிய ஒன்று.
முதன்முதலாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட ரில்வின் சில்வாவிடம் உள்ள இந்தியா தொடர்பாக அவரிடம் உள்ள எதிர்மறை நிலையை களையும் வகையில் அவரது பயண நிகழ்ச்சி நிரல் ஏற்பட்டாளர்களால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் நகர்வுகளுக்கு ஜே.வி.பி. எதிர்ப்பை வெளிப்படுத்திய விடயங்கள் குறித்த தவறான அபிப்பிராயங்களை களைய இந்தியா முயன்றிருக்கிறது.
இந்திய- – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது மற்றும் மாகாண சபைகளை இயங்கச் செய்வது குறித்து இந்திய தரப்பில் பேச்சுக்கள் நடத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், அவ்வாறான பேச்சுக்கள் நடக்கவில்லை என ரில்வின் சில்வா கூறியிருக்கிறார்.
இந்தப் பயணத்தின் போது ரில்வின் சில்வாவை, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும், துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பவன் கபூர் ஆகியோரே சந்தித்துள்ளனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு எதுவும் நடக்கவில்லை, இது மோடியின் பணிச்சுமையினால் தவிர்க்கப்பட்டிருக்கலாம். அல்லது ரில்வின் சில்வாவுக்கு கூடுதல் முக்கியத்துவத்தை கொடுக்க விரும்பாமல் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
ரில்வின் சில்வாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தே அவர் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அப்படியிருக்க, அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பாமல் இருக்கலாம் என்பது சற்று குழப்பமானது தான்.
இந்தியாவின் உயர்மட்ட தலைவர் தன்னைச் சந்திப்பதை வைத்து, ரில்வின் சில்வா மிகையாக எடைபோடுவதற்கும், அரசியல் செய்வதற்கும் இந்தியா இடமளிக்க விரும்பாதிருக்கலாம்.
புதுடெல்லியில் இந்தியாவின் தனித்துவமான டிஜிட்டல் ஆவண மையத்திற்கு ரில்வின் சில்வா பயணம் மேற்கொண்டிருந்தார்.
இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் திட்டம், இந்தியாவின் ஆதார் திட்டத்தை அடியொற்றியது தான். இதனை நிறைவேற்றும் பொறுப்பு இந்தியா நிறுவனத்திடமே பொறுப்பேற்றிருக்கிறது.
டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் பொறுப்பு இந்திய நிறுவனத்திடம் வழங்கப்படுவதை ஜே.வி.பி. கடுமையாக எதிர்த்து வந்தது.
முன்னர் இதனை பாகிஸ்தானுக்கு கொடுக்க திட்டமிட்டபோது, இந்தியா அதனை தடுத்தது.
இப்போது தவிர்க்க முடியாமல் இந்தியாவிடம் இந்தத் திட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பேரிடருக்கு பின்னர், பேரிடர் மீட்பு படை ஒன்றை உருவாக்குவதற்கு இந்தியா உதவ முன் வந்திருக்கிறது.
பயிற்சி அளிக்கவும், தேவையான உபகரணங்களை வழங்கவும் தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் தனது இலங்கைப் பயணத்தின் போதும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு இலங்கை அரசாங்கம் இன்னமும் தெளிவான எந்த பதிலையும் கொடுக்கவில்லை.
இந்தியா உதவ முன் வருகின்ற சில விடயங்களை இலங்கை சந்தேகத்துடன் நோக்குகின்றது.
இந்த விடயத்தில் இலங்கை தரப்பை குறிப்பாக ஜே.வி.பி.யை திருப்திப்படுத்துவதற்கு இந்தியா முயன்றிருக்கிறது.
இதுபோல, இலங்கையில் ‘மில்கோ’ மற்றும் கால்நடை அபிவிருத்திச் சபையின் பண்ணைகளை, இந்தியாவின் ‘அமுல் நிறுவனத்துக்கு 99 வருட குத்தகைக்கு வழங்கும் முன்னைய அரசாங்கத்தின் உடன்பாட்டை தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் இரத்து செய்திருந்தது.
இலங்கையின் பால்உற்பத்தியை, இந்திய நிறுவனம் தன் கூட்டு முயற்சியின் கீழ் கொண்டு வருவதற்கு வழிவகுத்த அந்த உடன்பாடு இரத்து செய்யப்பட்டது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் உறவுகளில் சற்று நெருடலை ஏற்படுத்தியது.
இப்பொழுது அது சீராக்கப்பட்டிருந்தாலும், மீண்டும் அந்தக் கூட்டு ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கான முயற்சிகள் இந்தியத் தரப்பில் மேற்கொள்ளப்படுகின்றதா என்று தெரியவில்லை.
அதற்கான சூழலை உருவாக்கும் முயற்சியாக, இந்திய அரசாங்கம் குஜராத்தில் உள்ள ‘அமுல்’ பால் பண்ணை மற்றும் அதன் உற்பத்தி பிரிவுகளுக்கு ரில்வின் சில்வாவை அழைத்துச் சென்றிருக்கலாம்.
கேரளாவில், விழிஞ்ஞம் ஆழ்கடல் கொள்கலன் துறைமுகத்திற்கும் ரில்வின் சில்வா அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.
இது அண்மைக்காலத்தில் உருவாக்கப்பட்ட துறைமுகம். அதானி குழுமமே இதனை உருவாக்கியுள்ளது.
இது முறையாக – முழுமையாகச் செயற்படத் தொடங்கினால், கொழும்பு துறைமுகம் மீதான ஈர்ப்பு குறையும் என்ற அச்சம் இலங்கைக்கு இருக்கிறது.
இவ்வாறான நிலையில், விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு ரில்வின் சில்வா அழைத்துச் செல்லப்பட்டது, அது சார்ந்து எதிர்ப்புகள் வருவதை தவிர்ப்பதற்கு அல்லது வராமல் தடுப்பதை நோக்கத்தை கொண்டிருக்கலாம்.
விழிஞ்ஞம் துறைமுகம் தற்போதைய இலங்கை அரசாங்கத்தினால், அதிருப்தியுடன் பார்க்கப்படுகின்ற ஒன்று. அது கொழும்பு துறைமுகத்திற்கு நேரடியாக சவாலை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.
இவ்வாறான நிலையில், அந்தத் துறைமுகம் வெற்றிகரமாக செயற்படுகிறது என்ற கருத்தை நிறுவுவதன் மூலமாக, எதிர்காலத்தில் இலங்கையில் உள்ள துறைமுகங்களை இந்தியா நிர்வாகிப்பதற்கான சூழலை உருவாக்குகின்ற நோக்கமும் இருக்கலாம்.
எவ்வாறாயினும், ரில்வின் சில்வாவின் இந்தப் பயணம் அவரிடம் நீண்ட காலமாக காணப்பட்டு வந்த இந்திய எதிர்ப்பு வாதத்தை வலுவிழக்கச் செய்திருக்கிறது.
அவர் நாடு திரும்பிய பின்னர் வெளிப்படுத்தியுள்ள கருத்து ஒன்றே அதற்குச் சான்று.
இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சியின் போது, ஜே.வி.பி. இந்தியாவுக்கு எதிராக செயற்படவில்லை, என்றும், அப்போதைய இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கே பதிலளித்ததாகவும் கூறியிருக்கிறார்.
அதாவது, நாடு என்ற ரீதியாக இந்தியாவை எதிர்க்கவில்லை, அப்போதைய (காங்கிரஸ்) அரசாங்கத்தின் நடவடிக்கைகளையே எதிர்த்தோம் என்ற ரீதியாக அவர் பதிலளித்திருக்கிறார்.
தமது இந்திய எதிர்ப்புவாதத்தை அவர் கட்சி அரசியலாக சுருக்குவதற்கு முற்பட்டுள்ளார்.
அத்துடன், நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், இந்திய–இலங்கை உறவுகள் மாறிவிட்டன என்றும் விபரித்திருக்கிறார்.
அப்படியானால் இரண்டு தரப்புகளும் புரிந்துணர்வுக்கு வந்திருக்கின்றனவா? இணக்கப்பாட்டை எட்டியுள்ளனவா?
அத்தகைய இணக்கம்- புரிந்துணர்வு ஏற்பட்டிருக்குமேயானால், சீனா இதனை எவ்வாறு எடுத்துக் கொள்ளப் போகிறது என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.
-ஹரிகரன்-

