ஆப்கன் தாலிபன் தரப்பிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் ‘இந்தியாவின் பங்களிப்பும்’ இருந்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. ஆப்கன் தாலிபன்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ‘துல்லியமான நடவடிக்கை’ எடுக்கப்பட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், பாகிஸ்தானின் நல்லெண்ணம் மற்றும் பொறுப்பான அணுகுமுறை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதுடன், ஆப்கன் மண்ணிலிருந்து பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்தன. இதில் தாலிபன் ஆட்சியின் ஆதரவும் இந்தியாவின் வெளிப்படையான ஆதரவும் அடங்கும்,” என கூறப்பட்டுள்ளது.
“பாகிஸ்தான் மீது மீண்டும்மீண்டும் நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்களில் ‘ஃபித்னா-அல்-கவாரிஜ்’ ‘ஃபித்னா-அல்-ஹிந்துஸ்தான்’ ஆகியவை ஈடுபட்டுள்ளன. இதற்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் நடவடிக்கை எடுத்தது. இந்த நடவடிக்கைகளில் பயங்கரவாத அமைப்புகளுக்குப் பெரும் சேதம் விளைவிக்கப்பட்டதுடன், ஆப்கானிஸ்தானில் உள்ள அவர்களின் உதவித் தளங்களும் இலக்கு வைக்கப்பட்டன.”
பிப்ரவரி 26-ஆம் தேதி இரவு தாலிபன் ஆட்சியின் ‘தேவையற்ற மற்றும் தூண்டுதல் நடவடிக்கைகள்’ காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“தாலிபன் ஆட்சி மீண்டும் தூண்டுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ அல்லது ஏதேனும் பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் மக்களின் நலனுக்கு தீங்கு விளைவிக்க முயன்றாலோ, அதற்கு உறுதியான மற்றும் கடுமையான முறையில் பதிலடி கொடுக்கப்படும்.
பாகிஸ்தான் தனது தற்காப்பிற்காகவும், குடிமக்களின் பாதுகாப்பிற்காகவும் சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின்படி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் உரிமையைக் கொண்டுள்ளது” என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

