அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரான் மீது முதல் நாளில் நடத்திய பெரும் வான்வழி தாக்குதல்களில் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
86 வயதான காமனெயி மரணத்தை அந்நாட்டு அரசு ஊடகம் பின்னர் உறுதிப்படுத்தியது. கடந்த மூன்று தசாப்தங்களாக நடந்த அவருடைய ஆட்சி உலகிலேயே மிக நீண்ட ஆட்சிகளுள் ஒன்றாக இருந்தது.
1979ம் ஆண்டில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு இரானில் இரண்டு அதிஉயர் தலைவர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.
நாட்டின் தலைவராகவும் புரட்சிகர காவல் படை உட்பட ஆயுதப் படைகளின் தலைமை தளபதியாகவும் அதிக அதிகாரமிக்க பதவியாக இது உள்ளது.
காமனெயி ஓர் சர்வாதிகாரியாக அல்லாமல், போட்டி அதிகார மையங்களின் சிக்கலான வலைப்பின்னலின் மையத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
மேலும், பொது கொள்கை தொடர்பான எந்த விவகாரத்திலும் நிராகரிக்கும் அதிகாரம் (veto) கொண்டவராகவும் முக்கிய அரசு பொறுப்புகளுக்கு நபர்களை தேர்ந்தெடுப்பவராகவும் இருந்தார்.
இளம் இரானியர்கள் காமனெயி பொறுப்பில் இல்லாமல் தங்களின் வாழ்க்கையை இதுவரை கழித்ததில்லை.
காமனெயியின் எந்தவொரு நகர்வையும் அரசு ஊடகம் செய்தியாக வெளியிட்டுள்ளது. பொது இடங்களில் விளம்பர பலகைகளில் அவருடைய படம் ஒட்டப்பட்டுள்ளது, மேலும் கடைகளில் அவரின் புகைப்படங்கள் எங்கும் காணப்படுகின்றன.
அடுத்தடுத்து வந்த இரானிய அதிபர்கள் வெளிநாடுகளில் அதிக கவனம் பெற்றிருந்தாலும், உள்நாட்டில் காமனெயிதான் அனைத்தையும் கட்டுப்படுத்துபவராக இருந்தார்.
இத்தகைய மோதல் சூழல்களில், காமனெயியின் மரணம், இரான் மற்றும் அதன் பரந்த பிராந்தியத்தில் நிகழவிருக்கும் புதிய மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தை முன்னறிவிப்பதாக உள்ளது.
பல இரானியர்கள் வேறொரு அதிஉயர் தலைவரை பார்த்திருக்கவில்லை
‘ஏழ்மையான, கடவுள் பக்தி கொண்ட குழந்தை பருவம்’
இரானில் வட-கிழக்கு நகரமான மஷாட்டில் காமனெயி 1939ம் ஆண்டில் பிறந்தார். எட்டு குழந்தைகள் அடங்கிய மத குடும்பத்தில் இரண்டாவதாக பிறந்தார் காமனெயி. அவருடைய தந்தை, இரானில் ஆதிக்கம் செலுத்தும் இஸ்லாமிய ஷியா பிரிவை சேர்ந்த நடுத்தர தகுதியைக் கொண்ட மதகுருமாராக இருந்தார்.
காமனெயி தன்னுடைய “ஏழ்மையான, ஆனால் கடவுள் பக்தி கொண்ட” குழந்தை பருவம் குறித்து உயர்வாக பேசியுள்ளார், அவர் பெரும்பாலும் “ரொட்டித் துண்டு மற்றும் உலர் திராட்சைகளை” மட்டுமே சாப்பிட்டதாக கூறியிருக்கிறார்.
அவர் வழக்கமான கல்வியைவிட குரானை அதிகளவில் படித்தார், மேலும் தன்னுடைய 11வது வயதில் மதகுருவாக தகுதி பெற்றார். ஆனால், பொதுவாக அந்த காலகட்டத்தில் பெரும்பாலான மதத் தலைவர்களைப் போலவே, அவருடைய பணிகளும் மத ரீதியாக இருந்ததைப் போன்றே அரசியல் ரீதியாகவும் அமைந்தன.
திறமையான பேச்சாளரான காமனெயி, இரானின் ஷாவின் விமர்சகர்களுள் ஒருவராக ஆனார். இரான் மன்னரான ஷா, இஸ்லாமிய புரட்சியால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.
காமனெயி பல ஆண்டுகளாக தலைமறைவாகவோ அல்லது சிறையிலேயே கழித்தார். ஷா-வின் ரகசிய காவல்துறையால் காமனெயி ஆறு முறை கைது செய்யப்பட்டார். அப்போது துன்புறுத்தல்களையும் எதிர்கொண்டார்.
1979 இல் இரானியப் புரட்சிக்குப் பிறகு டெஹ்ரானில் தொழுகை செய்யும் காமனெயி
அமெரிக்க எதிர்ப்பு
இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு, அதன் தலைவர் ஆயதுல்லா ரூஹொல்லா கொமேனி, காமனெயியை தலைநகர் டெஹ்ரானில் வெள்ளிக்கிழமை தொழுகையின் தலைவராக நியமித்தார்.
ஒவ்வொரு வாரமும் அவருடைய அரசியல் சொற்பொழிவுகள் நாடு முழுவதும் ஒளிபரப்பப்பட்டன. அவை நாட்டின் புதிய தலைமையின் ஓர் அங்கமாக காமனெயியை உறுதியாக நிலைநிறுத்தியது.
புரட்சிக்குப் பிறகான முதல் சில கொந்தளிப்பான மாதங்களில், கொமேனிக்கு விசுவாசமான ஆயுதமேந்திய பல்கலைக்கழக மாணவர்கள் குழு அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றியது. அப்போது பல ராஜீய அதிகாரிகள் மற்றும் தூதரக பணியாளர்கள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஷா-வுக்கு அடைக்கலம் அளிக்கும் அமெரிக்காவின் முடிவுக்கு எதிராக போராடிய மாணவர்களை காமனெயி உட்பட இரானின் புரட்சிகர தலைவர்கள் ஆதரித்தனர்.
பணயக்கைதிகள் 444 நாட்களுக்கு சிறைபிடிக்கப்பட்டனர்.
இது, அமெரிக்காவில் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் நிர்வாகத்தை சிதைக்க உதவியது. மேலும், புரட்சியை வரையறுக்க அமெரிக்க எதிர்ப்பு மற்றும் மேற்கத்திய எதிர்ப்பு பாதையில் இரானை அமைத்தது.
சர்வதேச அளவில் இரான் பல தசாப்தங்களாக தனிமைப்படுத்தப்படுவதற்கான தொடக்கமாகவும் இந்த நிகழ்வுகள் அமைந்தன.
அமெரிக்க தூதரகம் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர், அமெரிக்க பணயக்கைதிகளை இரானின் மாணவர்கள் குழுவினர் அணிவகுத்துச் செல்கின்றனர்.
இந்த நெருக்கடிக்குப் பிறகு சிறிது காலத்திலேயே, காமனெயி படுகொலை முயற்சியிலிருந்து தப்பித்தார்.
1981ம் ஆண்டு ஜூன் மாதம், எதிர்ப்பு குழு ஒன்று ஒலிப்பதிவு கருவிக்கு உள்ளே வெடிகுண்டை மறைத்து வைத்தது. அவர் சொற்பொழிவு ஒன்றை ஆற்றும்போது அது வெடித்தது.
அதில் அவர் படுகாயமடைந்தார். அவருடைய நுரையீரல் குணமாவதற்கு பல மாதங்கள் எடுத்தன, மேலும் அவருடைய வலது கை நிரந்தரமாக செயலிழந்தது.
அந்த ஆண்டின் இறுதியில் அதிபர் முகமது-அலி ராஜாய் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில், பெரும்பாலும் சம்பிரதாயப்பூர்வமான அந்த பதவிக்கு காமனெயி போட்டியிட்டார்.
யார் போட்டியிட வேண்டும் என்பதை கொமேனி கட்டுப்படுத்தியதால், அந்த தேர்தல் முடிவுகள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் இருந்தன. காமனெயி 97% வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
தன் தொடக்க உரையில், “விலகல், தாராளமயம் மற்றும் அமெரிக்க செல்வாக்கு மிக்க இடதுசாரிகளை” கண்டித்தார். இது, அதிபர் பதவிக்கான அவருடைய அணுகுமுறையை அமைத்தது.
1981 ஆம் ஆண்டு நடந்த ஒரு படுகொலை முயற்சியில் இருந்து காமனெயி மீண்டு வந்தபோது
இராக் உடன் போர்
காமனெயி பதவியில் இருந்தபோது, போரை கவனிக்கும் தலைவராக இருந்தார்.
அதற்கு சில மாதங்களுக்கு முன்பு அண்டை நாடான இராக், இரானில் படையெடுத்தது. இராக் அதிபர் சதாம் ஹுசைன் கொமேனியின் இஸ்லாமிய புரட்சி வெளிநாடுகளுக்கும் பரவி தன்னுடைய சொந்த ஆட்சியை ஆபத்துக்கு உட்படுத்தலாம் என அஞ்சினார்.
இந்த கொடுமையான மற்றும் ரத்தக்களரியான போர் எட்டு ஆண்டுகளாக நீடித்தது, இதில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
காமனெயி பல மாதங்களாக போர் முனைகளில் இருந்தார், அவர் சந்தித்த மற்றும் அறிந்த பல தளபதிகள் மற்றும் வீரர்கள் அதில் கொல்லப்பட்டனர்.
1980 இல் இராக்கிய வீரர்கள் இரானில் படையெடுத்தனர்
இராக் ராணுவம் இரானின் எல்லை கிராமங்களுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது மற்றும் தலைநகர் டெஹ்ரான் உட்பட தொலைதூர நகரங்களை ஏவுகணைகளால் தாக்கியது.
இரான் தன் பங்குக்கு, இராக்கிய படைகளை தாக்க இளம் மற்றும் மதப்பற்று கொண்ட படையை நம்பியிருந்தது, அதில் போராடும் வயதை எட்டாத சிலர் உட்பட ஆர்வமுள்ள இளைஞர்கள் பலரும் இருந்தனர். இதில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
சதாம் ஹுசைனின் படையெடுப்பை ஆதரித்த அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் மீது காமனெயிக்கு இருந்த ஆழ்ந்த அவநம்பிக்கையை இந்தப் போர் மேலும் வலுப்படுத்தியது.
1989-ஆம் ஆண்டில், 86 வயதில் கொமேனி இறந்த நிலையில், அவருக்கு அடுத்து, மதகுருமார்களின் சபையான நிபுணர்களின் கூட்டத்தால் (Assembly of Expert) காமனெயி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மத புலமையில் குறைவான சாதனைகள் இருந்தபோதிலும், அவர் புதிய அதிஉயர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
“நான் பல குறைகளையும் குறைபாடுகளையும் கொண்ட ஒரு சாதாரண மனிதன், உண்மையிலேயே சிறியளவில் மதப்பயிற்சி பெற்ற மாணவர் மட்டுமே,” என பதவியேற்ற பின்னர் தன்னுடைய முதல் உரையில் அவர் ஒப்புக்கொண்டார்.
“இருப்பினும், என் தோள்களில் பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது, இந்தப் பெரிய பொறுப்பைச் சுமக்க என் எல்லாத் திறன்களையும், சர்வவல்லமையுள்ளவரின் மீதான எனது முழு நம்பிக்கையையும் பயன்படுத்துவேன்.”
1989 ஆம் ஆண்டு ஆயதுல்லா கொமேனியின் மரணத்திற்குப் பிறகு காமனெயி அதி உயர் தலைவரானார்.
மதகுருமார்களின் மரியாதை மற்றும் கொமேனியின் தனிப்பட்ட புகழ் இரண்டும் இல்லாததால், புதிய அதிஉயர் தலைவர் தனது சொந்த அதிகார தளத்தை உருவாக்க எச்சரிக்கையுடன் நகர்வுகளை மேற்கொண்டார்.
ஆனால், அடுத்த 30 ஆண்டுகளில், காமனெயி இரானிய ஸ்தாபனத்தின் ஒவ்வொரு மட்டத்திலும், அதாவது நாடாளுமன்றம், நீதித்துறை, காவல்துறை, ஊடகங்கள் மற்றும் மதகுருமார் உயரடுக்கு உட்பட விசுவாசிகளின் வலைப்பின்னல்களை உருவாக்கினார்.
வாஷிங்டனில் உள்ள சர்வதேச அமைதிக்கான கார்னகி அறக்கட்டளையின் ஆய்வறிஞரான கரீம் சத்ஜத்பூரின் கூற்றுப்படி, அதிஉயர் தலைவரின் அதிகாரம் “கடுமையான மதகுருமார்கள் மற்றும் புதிய பணக்கார புரட்சிகர காவல்படையினரின் இறுக்கமான கூட்டணியை” சார்ந்துள்ளது.
அவர் அரிதாகவே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார். மத்திய டெஹ்ரானில் உள்ள ஒரு வளாகத்தில் தனது மனைவி, ஆறு குழந்தைகள் மற்றும் பல பேரக்குழந்தைகளுடன் சிக்கனமாக வாழ்ந்தார்.
தனது அதிகாரத்தை உறுதிப்படுத்த அயதுல்லா காமனெயி இரானின் மதப் படிநிலையை விட, அதன் பாதுகாப்பு மற்றும் ராணுவ எந்திரத்தை நம்பியிருந்தார்.

உள்நாட்டில் போராட்டம்
உள்நாட்டில் அவர் எதிர்ப்புகளை நசுக்கினார்.
1999 ஆம் ஆண்டில் நிகழ்ந்த மாணவர் போராட்டங்கள் ஒரு ஆபத்தான தருணமாக இருந்தன, ஆனால் அவை அடக்கப்பட்டன.
அதற்கு ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, அதிபர் தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறப்படுவதற்கு எதிரான ஒரு கிளர்ச்சியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பெப்பர்-ஸ்பிரே தெளிக்கப்பட்டு தாக்கப்பட்டனர் மற்றும் சுடப்பட்டனர்.
2019 ஆம் ஆண்டில், எரிபொருள் விலை திடீரென உயர்ந்து தெருக்களில் போராட்டங்களுக்கு வழிவகுத்தபோது, சட்டவிரோத பேரணிகளைத் தடுக்க காமனெயி பல நாட்களுக்கு இணையத்தை முடக்கினார்.
ஆம்னெஸ்டி இன்டர்நேஷனலின் கூற்றுப்படி, காவல்துறையினர் இயந்திர துப்பாக்கியால் போராட்டக்காரர்களைச் சுட்டுக் கொன்றனர்.
பெண்களின் கல்விக்கு தனது முன்னோடி விதித்த தடைகளை அவர் நீக்கினார். ஆனால், காமனெயி பாலின சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர் அல்ல.
ஹிஜாப் அணிவதற்கு எதிராகப் பிரசாரம் செய்த பெண்கள் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை ஆதரித்தவர்களும் குறிவைக்கப்பட்டனர். மனித உரிமை வழக்கறிஞர் ஒருவருக்கு 38 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 148 சவுக்கடிகளும் விதிக்கப்பட்டன.
மேலும், 2022 ஆம் ஆண்டில், ஹிஜாபை சரியாக அணியத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, 22 வயது மாசா அமினி என்ற பெண் ஒருவர், போலீஸ் காவலில் இறந்ததைத் தொடர்ந்து, இஸ்லாமியப் புரட்சிக்கு மிகப்பெரிய சவால்களில் ஒன்று ஏற்பட்டது.
அவரது மரணத்தைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களின்போது 550க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 20,000 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் மனித உரிமை குழுக்கள் தெரிவித்தன.
அயதுல்லா காமனெயி, 2024 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்

காமனெயி ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நாட்டை வழிநடத்துகிறார் என்ற குற்றச்சாட்டு வெளிநாடுகளில் பரவலாக முன்வைக்கபட்டது.
2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்கா மீதான தாக்குதலுக்குப் பிறகு, அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் இரானை தனது “தீமையின் அச்சின்” ( அச்சுறுத்தலாகக் கருதப்படும் நாடுகளின் கூட்டணி) ஒரு பகுதியாக இராக் மற்றும் வட கொரியாவுடன் சேர்த்துக்கொண்டார்.
இஸ்ரேலுடனான மோதலில், லெபனானில் ஆயுதமேந்திய ஷியா குழுவான ஹெஸ்பொலாவை இரான் பயன்படுத்தியுள்ளது.
ஆனால், அவர் தனது மக்களிடையே “அமெரிக்காவுக்கு மரணம்” என்ற மனநிலையை விதைத்திருந்தாலும், அவரது வெளியுறவுக் கொள்கை அமெரிக்காவுடன் இணக்கமாகவோ அல்லது நேரடி மோதலாகவோ இருக்கக்கூடாது என்பதற்காக கவனமாக வடிவமைக்கப்பட்டது.
அணு ஆயுதங்கள் மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்னையாக இருந்தன.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு, காமனெயி அணு ஆயுதங்கள் இஸ்லாம் நெறிகளுக்கு எதிரானது என்று அறிவித்து, அதன் வளர்ச்சியைத் தடைசெய்து ஃபத்வாவை வெளியிட்டார்.
ஆனால், அவரது ஆட்சியின் கீழ், இரான் ரகசியமாக அணு ஆயுதத் திறனை உருவாக்க முயன்றதாக, இஸ்ரேலும் மேற்கத்திய நாடுகளும் நம்பத் தொடங்கின.
உலக வல்லரசுகள் விதித்த தடைகள், ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக இருந்த ஒரு நாட்டை வறுமையில் தள்ள உதவியது – மேலும் அதிகரித்த வேலையின்மை பரவலான அதிருப்திக்கு வழிவகுத்தது.
2015-ஆம் ஆண்டு பொருளாதார தடைகள் மீது தளர்வுகளை அளிப்பதற்கு ஈடாக, இரானின் அணுசக்தி நடவடிக்கைகளுக்கு வரம்புகளை விதித்த அணுசக்தி ஒப்பந்தத்தை காமனெயி எதிர்க்கவில்லை, ஆனால் அமெரிக்கா நீண்ட காலத்திற்கு அதை நிலைநிறுத்தும் என்பதில் அவர் சந்தேகம் தெரிவித்தார்.
இரானிய ஆட்சியின் ஆதரவாளர்கள் 2026 இல் அதிபர் டிரம்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இரானிய ஆட்சியின் ஆதரவாளர்கள் 2026 இல் அதிபர் டிரம்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இறுதி காலத்தில் பலவீனமாக தெரிந்தார்
2018 ஆம் ஆண்டில், டிரம்ப் அணுசக்தி ஒப்பந்தத்தைக் கைவிட்டு, இரான் மீது மீண்டும் தடைகளை விதித்து, வேறு ஒப்பந்தத்துக்கு பேச்சுவார்த்தை நடத்தும்படி கட்டாயப்படுத்தினார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, காமனெயிக்கு நெருக்கமான புரட்சிகர காவல்படை ஜெனரல் காசெம் சுலைமானியை இராக்கில் கொல்ல டிரம்ப் உத்தரவிட்டார். இதற்கு பழிவாங்க ரஷ்யா மற்றும் சீனாவுடன் மிகவும் நெருக்கமாக இணைந்தார் காமனெயி.
2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இஸ்ரேலியப் படைகள் இரானின் அணுசக்தித் திட்டம், பாலிஸ்டிக் ஏவுகணை ஆயுதக் கிடங்கு மற்றும் உயர் ராணுவத் தளபதிகளை குறிவைத்துத் தாக்கியபோது, அந்த நாடு இஸ்ரேலிய நகரங்களை நோக்கி ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
அமெரிக்கர்கள் போரில் இணைந்து, இரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்களைத் தாக்கியபோது, காமனெயி ஒருபோதும் சரணடைய மாட்டேன் என்று சபதம் செய்தார். ஆனால், பல ஆண்டுகளில் முதல் முறையாக, அவர் பலவீனமாகத் தெரிந்தார்.
2026ம் ஆண்டு ஜனவரி மாதம், இரானிய பொருளாதாரத்தின் தோல்வியால் தூண்டப்பட்ட ஆர்ப்பாட்டங்களை காமனெயி ஆட்சி எதிர்கொண்டது. இதற்கு கொடூரமான ஒடுக்குமுறையுடன் எதிர்வினையாற்றப்பட்டது.
இதில் குறைந்தது 6,488 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 53,700 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாகவும் மனித உரிமை குழுக்கள் தெரிவித்தன.
அடுத்தடுத்த வாரங்களில், டிரம்ப் இரானுக்கு அருகில் அமெரிக்க ராணுத்தை பலப்படுத்தினார். மேலும் இரான் தனது அணுசக்தித் திட்டத்தில் ஒரு புதிய ஒப்பந்தத்தை
ஒப்புக்கொள்ளாவிட்டால், அதன் “தீய அணுசக்தி லட்சியங்களை” கைவிடாவிட்டால், இரானை தாக்குவதாக அச்சுறுத்தினார்.
ஆனால் காமனெயி யுரேனியம் செறிவூட்டலைக் கைவிட மறுத்துவிட்டார்.
“அமெரிக்கர்கள் ஒரு போரைத் தொடங்கினால், இந்த முறை அது ஒரு பிராந்தியப் போராக இருக்கும் என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்,” என்று அவர் ஜனவரி மாத இறுதியில் எச்சரித்தார்.
இரானின் அதிகாரத்தில் காமனெயி உறுதியான மற்றும் கொடூரமான பிடியை வைத்திருந்தார்.
சில சமயங்களில், அதிஉயர் தலைவர் தன்னை அரசியலுக்கு அப்பாற்பட்டவராகக் காட்டிக்கொண்டார்.
இரானின் சீர்திருத்தவாதிகளுக்கும் பழமைவாதிகளுக்கும் இடையிலான சண்டையை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், எதிர்ப்பு குரல்கள் அதிகமாக எழவோ அல்லது அவர் ஏற்றுக்கொள்ளாத கொள்கைகளை உருவாக்கவோ காமனெயி அரிதாகவே அனுமதித்தார்.
இரானில் வாழ்க்கை தற்போது அவர் வகுத்த சட்டங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. அவருக்குப் பிறகு யார் வருவார்கள், அதனால் என்ன மாற்றங்கள் வரக்கூடும் என்பதை சிலர் மட்டுமே உறுதியாகக் கூற முடியும்.

