புத்தளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்ற பயங்கர சம்பவம் யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று.
முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்திச் சென்ற சிறுவன் ஒருவன், வெறும் பணத்திற்காகவும், முச்சக்கர வண்டிக்காகவும் சாரதியை கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
புத்தளம் , அல்காசிமி சிட்டி – அடப்பனார்வில்லு உள்வீதியின் வீதியோர வடிகானுக்குள் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) சடலமாக மீட்கப்பட்டார்.
பாலாவி, ரத்மல்யாய 4ம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஆதம்பாவா அப்துல் லதீப் (வயது 72) எனும் ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.
இவர் முச்சக்கர வண்டி சாரதி எனவும், சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவரின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கர வண்டி ஓட்டுனரான ஆதம் பாவா அப்துல் லதீப், சனிக்கிழமை (21) இரவு சுமார் 9 மணியளவில் வாடகை ஓட்டத்தை நிறுத்திவிட்டு வீட்டில் தேநீர் குடித்து கொண்டிருந்தார்.
அப்போது ஒரு ‘ஹயர்’ வரவே, போய் வருகிறேன் என்று தனது மனைவியிடம் கூறினார். மனைவி என்ன நினைத்தார் தெரியவில்லை, இந்த நேரத்தில் போக வேண்டாம் எனத் தடுத்திருக்கிறார்.
“தெரிந்த புள்ளதான் கூப்பிடுது… போய்ட்டு வாரன்” என்று கூறிவிட்டு நம்பிக்கையோடுதான் வெளியே சென்றார் பவா லத்தீப். ஆனால் அவர் வீட்டுக்கு திரும்பி வரவே இல்லை.அவரது கைத்தொலைபேசிக்கு அவரது குடும்பத்தினர் பல தடவை அழைப்பை ஏற்படுத்தினர்.
ஆனால் எவ்வித பதிலும் இல்லை. இதனையடுத்து குடும்பத்தினர் பதற்றமடையத் தொடங்கினர்.இதனையடுத்து அவரது மருமகன் தனது மாமா காணாமல் போன விடயத்தை புத்தளம் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்தார்.பின்னர் குடும்ப உறவினர்கள், நண்பர்களின் உதவியுடன் சனிக்கிழமை (21) இரவு முழுதும் அவரைத் தேடினர்.
இந்த நிலையில், புத்தளம் , அல்காசிமி சிட்டி – அடப்பனார்வில்லு வீதியின் வீதியோர வடிகானுக்குள் சடலமொன்று கிடப்பதாக ஞாயிற்றுக்கிழமை (22) காலை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர், சனிக்கிழமை இரவு முச்சக்கர வண்டியுடன் காணாமல் போன அப்துல் லத்தீப் என்பதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.
அவரது உடலின் கழுத்துப் பகுதியின் பின்பக்கமாக கூரிய ஆயுதம் ஒன்றினால் குத்தப்பட்ட காயங்கள் காணப்பட்டன. இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை தொடர்கின்றனர்.
இதேவேளை, உயிரிழந்தவரின் முச்சக்கர வண்டி, அவரது ஜனாஸா கிடந்த இடத்திலிருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
அதனையடுத்து ஒரு சில மணி நேரத்தில் இதனுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காணாமல் போன முச்சக்கர வண்டி சாரதி இவ்வாறு கொலை செய்யப்பட்டு வடிகானுக்குள் வீசப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்த போது,
இது போதைப் பொருளுக்கு அடிமையான குழு ஒன்றின் நாசகார வேலையாக இருக்கும் என்பதே பலருடைய சந்தேகமாக இருந்து.எனினும், இந்தக் கொலையைப் புரிந்தவர் 16 வயதுடைய சிறுவன்தான் என்ற செய்தியைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், கொலைச் சம்பவம் இடம்பெற்ற சனிக்கிழமை இரவு சந்தேக நபருடன் சென்று ஹோட்டலில் உணவு உட்கொண்டதாக கூறப்படும் 6 பேரும் கைதாகி விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலையை செய்தவரென்ற சந்தேகத்தில் கைதான 16 வயது சிறுவனிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகிய நபர் என்றும் பணத்திற்காகவும் , முச்சக்கர வண்டியை கொள்ளையடிப்பதற்காகவுமே இக்கொலையை செய்ததாகவும் பொலிஸாரிடம் ஒப்புக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த முச்சக்கர வண்டி சாரதியை வாடகைக்கு அமர்த்தி அழைத்துச் சென்று, பின்பக்கமாக கழுத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவரிடம் இருந்து ஒருதொகை பணத்தை எடுத்துக்கொண்டு, உடலை வடிகானுக்குள் வீசிவிட்டு இரத்தக் கறை படிந்த முச்சக்கர வண்டியை எடுத்துச் சென்ற அந்தச் சிறுவன், தனது நண்பர்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு எந்தவிதமான குற்ற உணர்வுமின்றி புத்தளம் நகர் முழுவதும் சுற்றித் திரிந்துள்ளதுடன், ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று விருந்தும் கொடுத்துள்ளான்.
அச்சிறுவன் சிறுவயதில் இருந்தே சிறுசிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளமை பொலிசார் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சிறுவன் முன்னர் ஒருதடவை நீதிமன்ற உத்தரவில் ஹெட்டிப்பொல சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இருந்து வெளியே வந்த நிலையிலும் இச்சிறுவனின் நடத்தைகளில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படவில்லை. இந்த நிலையில்தான் கொலைக் குற்றத்திற்காக மீண்டும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருளுக்கு அடிமையான ஒருவரால் ஐந்து பிள்ளைகள் ஒரு நல்ல தந்தையை இழந்திருக்கிறார்கள்.
ரத்மல்யாய கிராமம் ஒரு நல்ல சமூகத் தலைவரை இழந்திருக்கிறது. இந்த இழப்புக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளதோடு பலரும் தமது கண்டங்களை வெளியிட்டுள்ளனர்.

