ஈரானியப் புரட்சிகர காவல்படை, இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமானதும் இறுதியானதுமான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஈரானியப் படையினர் உடனடியாகத் தமது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, கிளர்ச்சியில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளை மாளிகையிலிருந்து விசேட உரையொன்றை நிகழ்த்திய ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானியப் படைகளுக்கு இரண்டு தெரிவுகளை வழங்கியுள்ளார்:
“ஈரானியப் புரட்சிகர காவல்படை மற்றும் பொலிஸார் உடனடியாகத் தமது ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என நான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் எமது பக்கம் நின்றால், உங்களுக்கு முழுமையான பாதுகாப்பு மற்றும் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.”
“நீங்கள் தொடர்ந்து போராடினால் கொல்லப்படுவது உறுதி. உங்களது மரணம் நிச்சயமாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. நான் அதனைப் பார்க்க விரும்பவில்லை. எனவே, உங்கள் நாட்டை மீண்டும் மீட்டெடுக்க இதுவே சரியான தருணம்.”
இதேவேளை, உலகம் முழுவதும் உள்ள ஈரானிய இராஜதந்திரிகள் தமது பதவிகளைத் துறந்துவிட்டு, அரசியல் தஞ்சம் கோருமாறு ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
“சிறந்த எதிர்காலம் மற்றும் பாரிய ஆற்றல் கொண்ட ஒரு புதிய ஈரானை உருவாக்குவதற்கு எமக்கு உதவுங்கள். ஈரானிய இராஜதந்திரிகள் எமது பக்கத்தில் இணைந்து இந்த மாற்றத்திற்கு வலு சேர்க்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானின் முக்கிய இராணுவ நிலைகள் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஜனாதிபதி ட்ரம்பின் இந்த அறிவிப்பு ஈரானியப் படைகளுக்குள்ளேயே பிளவுகளை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
ஈரானியத் தலைநகர் தெஹ்ரானை நோக்கி அமெரிக்க ஆதரவுப் படைகள் முன்னேறி வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்த “சரணடைதல் அல்லது மரணம்” என்ற எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

