மத்திய கிழக்கில் தற்போது வெடித்துள்ள போர், கடந்த கால மோதல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பரிமாணத்தை எட்டியுள்ளது.

அமெரிக்காவின் “ஒபரேஷன் எபிக் ஃபியூரி” (Operation Epic Fury) மற்றும் இஸ்ரேலின் இடைவிடாத வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியிலும், ஈரான் இன்னும் வீழாமல் நிற்பது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இது வெறும் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையிலான போர் மட்டுமல்ல; இது நவீன தொழில்நுட்பத்துக்கும், பரவலாக்கப்பட்ட தற்காப்பு யுக்திக்கும் இடையிலான ஒரு பெரும் மோதல்.

மத்திய கிழக்கில் பெப்ரவரி 28 அன்று தொடங்கிய “ஒபரேஷன் எபிக்பியூரி” மற்றும் “ஒபரேஷன் ரோவரிங் லயன்” ஆகிய கூட்டு இராணுவ நடவடிக்கைகள், இன்று ஆறாவது நாளை எட்டியுள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த அதிரடித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமனெய் உயிரிழந்திருப்பதோடு ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இருப்பினும், ஒரு நாட்டின் தலைமை வீழ்த்தப்பட்ட பிறகும், அதன் இராணுவம் இன்னும் வீரியத்துடன் திருப்பித் தாக்குவது உலக இராணுவ வல்லுநர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதற்குப் பின்னால் உள்ள ஈரானின் ‘மொசைக் தற்காப்பு’ (Mosaic Defense) யுக்தியும், அதன் பொருளாதாரத் தாக்கமும் குறித்து ஆராய்வது அவசியமானது.

பொதுவாக ஒரு போர் நடக்கும்போது, எதிரி நாட்டின் தலைநகரையும் அதன் தலைமைப் பீடத்தையும் அழித்தால் அந்த நாடு சரணடைந்துவிடும் என்பது மேற்கத்திய நாடுகளின் கணக்கு.

ஆனால், ஈரான் கடந்த 20 ஆண்டுகளாக ‘சிதறடிக்கப்பட்ட மொசைக் தற்காப்பு’ என்ற யுக்தியை வளர்த்தெடுத்துள்ளது.

Map of Iran

ஈரானின் புரட்சிகர காவல்படை, நாட்டை 31 மாகாண அலகுகளாகப் பிரித்துள்ளது. தெஹ்ரானில் உள்ள தலைமைக்கும் இந்த அலகுகளுக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்பட்டாலும், ஒவ்வொரு மாகாணத் தளபதியும் தன்னிச்சையாக முடிவெடுத்து ட்ரோன்களை ஏவவும், ஏவுகணைகளைத் தாக்கவும் அதிகாரம் பெற்றுள்ளனர்.

இந்த 31 அலகுகளும் தங்களுக்குத் தேவையான நிதி, ஆயுதக் கிடங்கு மற்றும் தகவல் தொடர்பு வசதிகளைத் தனித்தனியாகக் கொண்டுள்ளன.

இதனால் அமெரிக்கா எத்தனை இராணுவ நிலைகளை அழித்தாலும், எஞ்சியிருக்கும் அலகுகள் தொடர்ந்து போரிடுகின்றன.

இது ஒரு விளையாட்டைப் போன்றது; ஒன்றை அழித்தால் மற்றொன்று எழுந்து தாக்கும்.

இந்தப் போரில் ஈரானின் பலம் அதன் நவீன விமானங்கள் அல்ல, மாறாக அதன் மலிவான காமிகாசி ட்ரோன்கள்மற்றும் பெலஸ்டிக் ஏவுகணைகள். இங்கே ஒரு மிகப்பெரிய பொருளாதார முரண்பாடு நிலவுகிறது:

அமெரிக்கா ஒரு ட்ரோனைச் சுட்டு வீழ்த்த 100 மடங்கு அதிகப் பணத்தைச் செலவிடுகிறது. ஈரானிடம் சுமார் ஒரு லட்சம் ட்ரோன்கள் இருப்பதாகக் கணிக்கப்படும் நிலையில், இந்தப் போர் நீண்டால் அமெரிக்காவின் ஆயுதக் கிடங்குகளும் நிதியும் மிகப்பெரிய அழுத்தத்திற்கு உள்ளாகும்.

இதனால்தான் இஸ்ரேல் தனது 100கிலோவாற் லேசர் பீம் தொழில்நுட்பத்தை அவசரமாகப் பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஒரு ட்ரோனை வெறும் 10 அமெரிக்க டொலர் செலவில் சுட்டு வீழ்த்த முடியும்.

ஈரான் தனது ஏவுகணைத் தாக்குதல்களை வெறும் இஸ்ரேல் மீது மட்டும் நிறுத்தாமல், துபாய், அபுதாபி மற்றும் ரியாத் போன்ற பொருளாதார மையங்கள் மீதும் திருப்பியுள்ளது.

எண்ணெய் விலை உயர்வு:

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் 20% உலகளாவிய எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், ப்ரெண்ட் மசகு எண்ணெய் விலை பீப்பாய் 84 டொலரைத் தாண்டியுள்ளது. இது உலகெங்கும் பணவீக்கத்தை அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாரின் எல்.என்.ஜி (LNG) வசதிகள் மீது நடந்த தாக்குதல், ஐரோப்பாவின் எரிசக்தி பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஜனாதிபதி ட்ரம்ப் நான்கு முக்கிய நோக்கங்களை முன்வைக்கிறார்: ஈரானின் அணுசக்தி அழிப்பு, ஏவுகணைத் தளங்கள் ஒழிப்பு, போராட்ட குழுக்களை முடக்குவது மற்றும் ஈரானின் கடற்படையை அழிப்பது.

ஆனால், சீனா தனது தனியார் செயற்கைக்கோள்கள் மூலம் ஈரானுக்கு உளவுத் தகவல்களை வழங்குவதாகத் தெரியவருவது, இது ஒரு ‘நிழல் உலகப் போராக’ மாறுவதைக் காட்டுகிறது.

பிரிட்டன் தனது தளங்களை வழங்கியிருப்பதும், சவுதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் நேரடியாகப் போருக்குள் தள்ளப்படுவதும் உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். ஷியா சிறுபான்மையினர் வாழும் குவைத், ஈராக், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்நாட்டுப் பதற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

ஈரான்- – இஸ்ரேல் போர் என்பது வெறும் எல்லைப் போர் அல்ல; அது 21ஆம் நூற்றாண்டின் போர் யுக்திகளுக்கான ஒரு சோதனைக்களம்.

தொழில்நுட்ப ரீதியாக அமெரிக்கா வலிமையாக இருந்தாலும், ஈரானின் ‘சிதறடிக்கப்பட்ட தற்காப்பு’ முறையை ஒடுக்குவது என்பது எளிதான காரியமல்ல.

இந்தப் போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்தால், அது உலகப் பொருளாதாரத்தில் ஒரு நிரந்தர வடுவை ஏற்படுத்தும்.

அமைதிக்கான வாய்ப்புகள் தற்போது மிகக் குறைவாகவே உள்ளன. உலக நாடுகள் அனைத்தும் இப்போது ஒரு காத்திருப்பு மற்றும் கவனிப்பு நிலையில் இருக்கின்றன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இந்தப் போரை ஐந்து நாட்களில் முடித்துவிடலாம் என்று கணக்கிட்டன.

ஆனால், ஈரானின் பரவலாக்கப்பட்ட தற்காப்பு யுக்தி இந்தப் போரை வாரக் கணக்கில் நீடிக்கச் செய்துள்ளது.

அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டது நிலைமையின் தீவிரத்தைக் காட்டுகிறது. இது ஒரு நாட்டின் மீதான தாக்குதல் என்பதைத் தாண்டி, உலகப் பொருளாதாரத்தையும், புவிசார் அரசியலையும் மாற்றி அமைக்கும் ஒரு பெரும் போராக உருவெடுத்துள்ளது.

அரவிந்தன்

Share.
Leave A Reply