நீண்ட தூரம் செல்லும்போது அல்லது வெளியூர்களில் இருக்கும் நாம் சொந்த ஊருக்கு திரும்பும்போதும், பெரும்பாலும் பேருந்தில் செல்லும்போது, பயணத்தில் பாடல்கள் ஒலித்தால் நன்றாக இருக்கும் என நினைப்போம்.

ஆனால் இது எல்லோருக்கும் பொருந்தாது. காரணம் ஒவ்வொருவரது பயணத்திட்டமும் வேறுவிதமாக இருக்கும்.

பெரும்பாலும் இரவுநேர பயணம் மேற்கொள்ளும் சிலர் பேருந்தில் உறங்கிக்கொண்டு செல்லலாம் என நினைப்பர்.

ஆனால் நிலைமை அங்கு தலைகீழாக இருக்கும். காரணம் அப்போதுதான் பேருந்தில் அதிக சத்தத்தோடு பாடல்களை ஓட்டுநர்கள் வைப்பார்கள்.

அப்படி இல்லையெனில் நம் அருகில் இருப்பவர்கள் முழு சத்தத்தில், இருக்கிறதே இன்ஸ்டாகிராம் என அதில் யாருக்குமே உதவாத வீடியோக்களை பார்த்துக்கொண்டு வருவார்.

அருகில் ஒருவர் தூங்குகிறாரே என்றுக்கூட பார்க்கமாட்டார்கள், யோசிக்கமாட்டார்கள். இந்நிலையில் இதுபோல ஒரு வேலையில் ஈடுபட்ட பெண் ஒருவர் பேருந்தில் இருந்து அல்ல, விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்தில் இருந்து தம்பா நகருக்குப் புறப்படவிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.ஒரு பெண் விமானத்தில் ஹெட்ஃபோன்கள் எதுவும் பயன்படுத்தாமல், சத்தமாக வீடியோக்களை பார்த்துள்ளார்.

இதனால் விமான ஊழியர்கள் அவரை ஹெட்ஃபோன் பயன்படுத்துமாறு பலமுறை கூறியுள்ளனர்.

ஆனால் அந்தப்பெண் அதை கேட்காமல் தொடர்ந்து வீடியோக்களை இயக்கியுள்ளார். இதனால் விமான ஊழியர்களுக்கும், அப்பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

விமான ஊழியர்கள் மிகவும் பொறுமையாக எடுத்துக் கூறியுள்ளனர். இருப்பினும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார்.

அந்தப் பெண் ஊழியர்களைத் திட்டி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், போலீசார் வரவழைக்கப்பட்டு அவர் விமானத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்.

“நான் பாதி சத்தத்தில் வெறும் 30 வினாடிகள் வீடியோவைத்தான் இயக்கினேன், அதற்காகவா என்னை இறக்கி விடுகிறீர்கள்?” என்று அவர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் வெளியேற்றப்பட்டபோது சக பயணிகள் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.கடந்த பிப்ரவரியில்தான் யுனைடெட் ஏர்லைன்ஸ் ‘பயணம் செய்ய அனுமதி மறுத்தல்’ (refusal to transport) கொள்கையைப் புதுப்பித்தது.

அதாவது இந்த விதியின்படி, சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோரை விமானத்திலிருந்து இறக்கிவிட அந்நிறுவனத்திற்கு முழு அதிகாரம் உள்ளது.

அந்த வகையில், விமான நிறுவனத்தின் புதிய விதிகளின்படி ஹெட்போன்கள் (Headphones) பயன்படுத்தாமல் ஆடியோ அல்லது வீடியோக்களை இயக்கும் பயணிகள் விமானத்திலிருந்து இறக்கிவிடப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

விமான ஊழியர்களைத் தாக்குவது அல்லது வெறும் காலில் பயணம் செய்வது உள்ளிட்ட, விமானத்திலிருந்து வெளியேற்றப்படக் காரணமான பிற விதிமீறல்களுடன் இந்த புதிய வழிகாட்டுதலும் சேர்க்கப்பட்டுள்ளது.”,

Share.
Leave A Reply