ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடுத்திருக்கும் ஆக்கிரமிப்புப் போர் எதிர்வரும் நாட்களில் மேலும் தீவிரமடையும் என்று தோன்றுகிறது.
அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு ஈரான் இணங்காவிட்டால், போரை மேலும் விரிவுபடுத்தப் போவதாக வாஷிங்டன் அச்சுறுத்தியிருக்கிறது.
ஈரான் நாட்டினால் ஏற்றுக்கொள்ள முடியாத நியாயமற்ற கோரிக்கைகளே. முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
ஒரு கையை சமாதானப் பேச்சுவார்த்தைக்காக நீட்டிக்கொண்டு மறு கையால் பலமாகத் தாக்கத் தயாராகும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் செயறபாடுகளினால் இப்போது எவரும் ஏமாந்துவிடப்போவதில்லை.
எனவே, இந்தப் போர் விரிவுபடுத்துவதனால் அதிக உயிரிழப்புகள், அழிவுகள் மற்றும் இடப்பெயர்வுகள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த துயரமான செய்தியை வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் குதூகலத்துடன் உலகிற்கு அறிவித்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
“ஈரான் தற்போதைய யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளத் தவறினால், அவர்கள் தாங்கள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டதைப் புரிந்துகொள்ளா விட்டால், ஜனாதிபதி ட்ரம்ப் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையாகத் தாக்குவார்.
அதிபர் ட்ரம்ப் வெறும் வாயால் வெருட்டுபவர் அல்ல, அவர் நரகத்தையே கட்டவிழ்த்துவிடுவதற்கு தயாராக இருக்கிறார்” என்று அவர் தெஹ்ரானை எச்சரித்தார்.
ட்ரம்ப் நிர்வாகம் பாகிஸ்தான் மூலமாக 15 அம்சக் கோரிக்கைப் பட்டியலை ஈரானுக்கு அனுப்பியது. நடன்ஸ், இஸ்பஹான் மற்றும் ஃபோர்டோவில் உள்ள ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழித்தல், யுரேனியம் செறிவூட்டலுக்கு நிரந்தரத் தடை, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சர்வதேச அணுசக்தி முகமையிடம் (IAEA) ஒப்படைத்தல் மற்றும் ஹிஸ்புல்லா மற்றும் அதனோடு இணைந்த அமைப்புகளுக்கான ஆதரவை நிறுத்துதல் போன்றவை அந்த கோரிக்கைகளில் அடங்கும்.
முழுமையாகச் சரணடையுமாறு கேட்பதைப் போன்ற இந்தக் கோரிக்கைகளை ஈரான் நிராகரித்து விட்டது.
உண்மையில், ஈரான் நிராகரிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கோரிக்கைகள் வடிவமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
ஈரானின் நிராகரிப்பைச் சாட்டாக வைத்து போரைத் தொடருவதை நியாயப்படுத்துவதே நோக்கம். ” கோரிக்கைகளை ஈரான் ஏற்றுக்கொள்ள மறுத்தால் நாம் எமது மனம் கனக்க ஓயாது குண்டுமழை பொழிந்து கொண்டேயிருப்போம்” என்று ட்ரம்ப் சில தினங்களுக்கு முன்னர் கூச்சலிட்டார்.
ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த ஐந்து நாள் போர் நிறுத்தம் என்பது வெறும் தளவாடப் போக்குவரத்துக்கான கால அவகாசமாகவே பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஊடகங்களில் வெளியான விபரங்களின் பிரகாரம் சுமார் 2,000 — 3,000 பாராசூட் வீரர்கள் இந்த வாரம் மத்திய கிழக்கிற்கு அனுப்பப்படவிருக்கிறார்கள். இவர்கள் போர் வலயங்களுக்கு விரைவாக அனுப்பப்படக்கூடியதாக பென்டகனால் அமைக்கப்பட்ட விசேடமான 82 வது பாராசூட் பிரிவைச் சேர்ந்தவர்களாவர்.
“ காவியக் கோபம்” நடவடிக்கை (Operation Fury )
நான்கு வாரங்களுக்கு முன்னர் 2026 பிப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் அதிகாரப்பூர்வப் போர் அறிவிப்பின்றி ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கின.
இதற்கு ” காவியக் கோபம் “. நடவடிக்கை (Operation Fury ) என்று பெயரிடப்பட்டது. ஈரானின் பல நகரங்களில் உள்ள இலக்குகள் மீது விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல்கள மேற்கொள்ளப்பட்டன.
ஈரானின் அதியுயர் ஆன்மீகத் தலைவர் அயத்தொல்லா அலி காமெனி மற்றும் முக்கிய தலைவர்கள் உட்பட 40-க்கும் அதிகமான உயர்மட்ட அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
கடந்த நான்கு வாரங்களில் 1,600-க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 4,000-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
ஈரான் இதற்குப் பதிலடியாக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல், பஹ்ரைன், குவைத், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவற்றின் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.
உலகின் 20 சதவீதமான எண்ணெய் கடந்து செல்லும் ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) குறைந்தது 19 வணிகக் கப்பல்கள் இலக்கு வைக்கப்பட்டன. இதனால் எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டொலர்களைத் தாண்டியது. இதுவரையான வரலாற்றில் இல்லாத மிகப்பெரிய எரிசக்திப் பாதுகாப்புச் சவால் என்று தற்போதைய நிலைவரத்தை சர்வதேச சக்தி முகமை வர்ணிக்கிறது.
ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருந்தால், ஏப்ரிலில் எண்ணெய் விலை 150 டொலர்களை எட்டும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
அதனால், கொடூரமான குண்டுவீச்சுத் தாக்குதல்களுக்கு முகங்கொடுக்கின்ற போதிலும், ஈரான் நெருக்குதல்களின கீழ் தடுமாறாமல் பதில் தாக்குதல்களை உறுதியுடன் நடத்திவருகிறது. ஹோர்முஸ் நீரிணையை தடைசெய்வதற்கு இருக்கும் வல்லமையைப் பயன்படுத்தி ஈரான் உலகில் பாரதூரமான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சூழ்நிலைகளின் கீழ் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு இரண்டு தெரிவுகள் மாத்திரமே இருக்கிறது. போரை முடிவுக்குக் கொண்டுவந்து ஈரானியத் தலைவர்களுடன் சமாதானம் பேச வேண்டும் அல்லது ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் உடனடி இலக்குடன் போரை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். போரைத் தீவிரப்படுத்துவதற்கே டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்திருக்கிறார் போன்று தெரிகிறது. இது கவலைக்குரிய ஒரு நிலைவரம்.
இஸ்ரேல்
இஸ்ரேலின் நெருக்குதலின் காரணமாகவே அமெரிக்கா இந்தப் போருக்குள் தள்ளப்பட்டதாக பரவலான ஒரு கருத்து நிலவுகிறது.
வெற்றியடைய முடியாத ஒரு போருக்குள் தங்களது நாடு சிக்குப்பட்டிருப்பதாக சாதாரண அமெரிக்கர்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். இஸ்ரேல் மாத்திரமே பயனடையக்கூடும் என்று அவர்கள் கவைலைப்படுகிறார் கள்.
அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் செல்வாக்குச் செலுத்துவதில் இஸ்ரேலுக்கு இருக்கும் வல்லமைக்கு காங்கிரஸில் உள்ள இஸ்ரேல் ஆதரவுக் குழாமே Lobby) காரணம் என்று பேராசிரியர் ஜான் மியர்ஷைமர் போன்ற நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அமெரிக்க காங்கிரஸின் செனட் சபை உறுப்பினர்களில் 70 — 75 பேரும் ஜனப்பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களில் 340 — 350 பேரும் இஸ்ரேலிய ஆதரவாளர்கள் என்பது அவர்களது அபிப்பிராயம
வெளியுறவுக் கொள்கை விவகாரத்தில் யூத ஆதரவுக் குழாமுக்கு இருக்கக்கூடிய செல்வாக்மை நிராகரித்துவிட முடியாது.
ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேலும் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகுவும் வகித்துவருகின்ற பாத்திரம் முக்கியமானது. என்றாலும், ஈரானைப் பழிவாங்குவதற்கு அமெரிக்காவுக்கு சொந்தக் காரணங்களும் இருக்கின்றன.
ஈரானுடனான அமெரிக்க உறவுகள் காலத்துக்குக. காலம் மாறிக்கொண்டிருக்கின்றன. முட.யாட்சிக் காலத்தில் அந்த உறவுகள் இனிமையானவையாக இருந்தன.
ஈரான் ஒரு இஸ்லாமியக் குடியரசாக மாறிய பிறகு உறவுகள் கசப்படைந்தன. தற்போது ஈரான் தொடர்பில் அமெரிக்க நலன்களுக்கும் இஸ்ரேலிய நலன்களுக்கும் இடையில் ஒரு சங்கமம் இருக்கிறது. ஆனால், அவை ஒரேமாதிரியான நலன்கள் அல்ல.
அதனால், தற்போதைய மோதல் நிலைவரத்தை முழுமையாக விளங்கிக் கொள்வதற்கு அமெரிக்க — ஈரான் உறவுகளின் வரலாற்றை விரிவாக ஆராயவேண்டியது
முக்கியமானதாகும். வரலாறு சலிப்பூட்டுவதாக இருக்கலாம். ஆனால், உலகை குழப்ப நிலைக்குள்ளாக்கும் இந்த நெருக்கடி பற்றி வரலாற்று நோக்கில் பார்க்க வேண்டியது அவசியமானதாகும்.
கடந்த காலத்தை ஆராய்ந்து பார்க்கவும் சமகாலத்தை விளங்கிக் கொள்ளவும் எதிர்காலத்தை பற்றி சிந்தித்துப் பார்க்கவும் எமக்கு வரலாறு உதவுகிறது. இத்தகைய பின்புலத்தில் இந்த பத்தி அமெரிக்க — ஈரான் உறவுகள் குறித்து கவனத்தைச் செலுத்துகிறது.

பாரசீகம் – ஈரான்
உத்தியோகபூர்வமாக ஈரானிய இஸ்லாமிய குடியரசு என்று அழைக்கப்படும் ஈரான், பரப்பளவில் உலகின் 17-வது பெரிய நாடாகவும் ஆசியாவின் 6-வது பெரிய நாடாகவும் விளங்குகிறது.
அது 636,372 சதுர மைல் நிலப்பரப்பையும் 92 மில்லியன் சனத்தொகையையும் கொண்டது. முற்காலத்தில் பாரசீகம் என்று அழைக்கப்பட்ட இந்த நாடு ஒரு பண்டைய நாகரிகத்தையும் பெருமைமிக்க வரலாற்றையும் கொண்டது. 1936-ஆம் ஆண்டில் தான் நாட்டின் பெயர் பாரசீகத்திலிருந்து ஈரான் என மாற்றப்பட்டது. “ஈரான்” என்பதற்கு “ஆரியர்களின் நிலம்” என்று பொருள்.
புவியியல் ரீதியாக, இந்த நாடு முக்கியமாக ஈரானிய பீடபூமியில் (Plateau) அமைந்துள்ளது. இதன் தெற்கே ஓமான் வளைகுடாவும பாரசீக வளைகுடாவும், வடக்கே காஸ்பியன் கடலும் அமைந்துள்ளன. ஈரான் மேற்கில் ஈராக்; வடமேற்கில் அஜர்பைஜான், ஆர்மீனியா மற்றும் துருக்கி; வடகிழக்கில் துர்க்மெனிஸ்தான்; கிழக்கில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்கிழக்கில் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.
ஈரான் 31 மாகாணங்களாகவும் 5 பிராந்தியங்களாகவும் (Regions) பிரிக்கப்பட்டிருக்கிறது. தலைநகர் தெஹ்ரான் நாட்டின் மிகப்பெரிய நகரமாகவும் பொருளாதார மையமாகவும் உள்ளது.
ஈரானின் சர்வதேச முக்கியத்துவம் அதன் மூலோபாய அமைவிடத்தில். தங்கியிருக்கிறது. இந்த மேற்காசிய நாடு மத்திய ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் தெற்கு ஆசியாவின் சந்திப்பில் அமைந்துள்ளது.
இது உலகின் நான்காவது பெரிய எண்ணெய் இருப்புகளையும் இரண்டாவது பெரிய இயற்கை எரிவாயு இருப்புகளையும் கொண்டுள்ளது. மேலும், பாரசீக வளைகுடா மற்றும் ஓமான் வளைகுடாவுக்கு இடையே உள்ள ஹார்முஸ் நீரிணையின் வடக்குக் கரைகள் ஈரானில் உள்ளன. தற்போதைய போர் வெடிப்பதற்கு முன்பு உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதம. தினமும் இந்த முக்கியமான நீரிணை வழியாகவே சென்றது.
எனவே, ஈரானின் மூலோபாய முக்கியத்துவம் இரு மடங்கு ஆகும். முதலாவதாக, பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் எண்ணெய் வளங்களை யார் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது கட்டுப்படுத்தக் கூடாது என்பதும் எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் என்பதும் குறித்த கேள்வி. இரண்டாவதாக, இந்த முக்கியமான பிராந்தியத்தின் வழியாக எண்ணெய் வளங்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் சீரான போக்குவரத்தை உறுதி செய்வது.
தற்போதைய நெருக்கடிக்கு அமெரிக்கா கூறும் காரணங்கள் மாறுபடலாம், ஆனால் அவை உண்மையில் வெறும் சாக்குப் போக்குகளேயாகும். ஈரானிய சிக்கல்களுக்கான அடிப்படை காரணங்கள் எண்ணெயும் பாரசீக வளைகுடாவின் மீதான கட்டுப்பாடும் தான்.
கார்ட்டர் கோட்பாடு
இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் பதவியில் இருந்த அமெரிக்க ஜனாதிபதிகளில் ஜிம்மி கார்ட்டர் பலரால் உண்மையான அமைதி விரும்பியாகக் கருதப்படுகிறார்.
இருந்தாலும், 23 ஜனவரி 1980 காங்கிரஸின் இரு சபைகளினதும் கூட்டுக் கூட்டத்தில் ( State of the Union address) தனது உரையில், பாரசீக வளைகுடாவில் தனது தேசிய நலன்களைப் பாதுகாக்கத் தேவைப்பட்டால் அமெரிக்கா படைபலத்தைப் பிரயோகிக்கும் என்று அவர் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“எங்கள் நிலைப்பாட்டை மிகவும் தெளிவுபடுத்துகிறோம்: பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் கட்டுப்பாட்டைப் பெற எந்தவொரு வெளிச்சக்தியும் எடுக்கும் முயற்சி அமெரிக்காவின் முக்கிய நலன்கள் மீதான தாக்குதலாகக் கருதப்படும். அத்தகைய தாக்குதல் இராணுவ பலம் உட்பட தேவையான எந்தவொரு வழியிலும் முறியடிக்கப்படும்.” என்று அவர் குறிப்பிட்டார்.

“கார்ட்டர் கோட்பாடு” (Carter Doctrine) என்று வர்ணிக்கப்படும் அந்த பிரபல்யம்ன வார்த்தைகள், அப்போதைய சோவியத் யூனியன் தொடர்பான இரண்டு விடயங்களின் பின்புலத்தில் கூறப்பட்டன. ஒன்று, சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தான் மீது மேற்கொண்ட படையெடுப்பு. மற்றையது, யேமனின் உள்நாட்டுப் போரில் சோவியத் யூனியன் தெற்கு யேமனுக்கு வழங்கிய ஆதரவு.
1979 இஸ்லாமிய புரட்சிக்கும் ஷா மன்னரின் வீழ்ச்சிக்கும் பிறகு அமெரிக்கக் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்ட ஈரானுக்குள் சோவியத் யூனியன் ஊடுருவக்கூடும் என்று அமெரிக்கா கவலைப்பட்டது.
1980-ஆம் ஆண்டின் கார்ட்டர் கோட்பாடு, 1903-ஆம் ஆண்டில் அப்போதைய பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் லான்ஸ்டவுன் பிரபு இதே போன்ற வழிகளில் விடுத்த அறிக்கையின் ஒரு வினோதமான நினைவூட்டலாகும். ரஷ்யாவும் ஜெர்மனியும் இப்பகுதியில் தங்கள் பிரசன்னத்தை விரிவுபடுத்த முயற்சிப்பதாக வந்த செய்திகளால் அதிர்ச்சியடைந்த லான்ஸ்டவுன் பிரபு
“பாரசீக வளைகுடாவில் வேறு ஏதேனும் ஒரு வல்லரசால் கடற்படை தளம் அல்லது பலம்பொருந்திய துறைமுகம் அமைக்கப்படுவதை பிரிட்டிஷ் நலன்களுக்கு விடுக்கப்பட்ட மிகப் பெரிய அச்சுறுத்தலாக பிரிட்டன் கருதும். எமது முழு பலத்தையும் கொண்டு அதை நிச்சயமாக எதிர்ப்போம்.” என்று அறிவித்தார்.
தற்போது அமெரிக்கா ஈரானைத் தனது தேசிய நலனுக்கு மிக முக்கியமானதாகக் கருதுகிறது. இருப்பினும், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவிற்கு நீண்ட காலத்திற்கு முன்பே ஈரானின் மூலோபாய முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டன.
19-ஆம் நூற்றாண்டிலும் 20-ஆம் நூற்றாண்டின் முதல் பாதியிலும் பாரசீகத்தில் ஆதிக்கம் செலுத்தியது பிரிட்டன் தான். 20-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியிலிருந்து தான் ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா ஒரு முக்கிய பங்கை வகிக்கத் தொடங்கியது.
மாறுபட்ட வரலாறு
பாரசீகம் நீண்ட மற்றும் பல திருப்பங்களைக் கொண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்த நாடு பல நூற்றாண்டுகளாக பல்வேறு ஆட்சியாளர்களின் கீழ் சிதறிக்கிடந்தது. கடந்த காலத்தில் பல மன்னர்களும் வம்சங்களும் இந்த நிலத்தை ஆட்சி செய்துள்ளனர்.
இவர்களில் 1789 முதல் 1925 வரை ஆட்சி செய்த கஜார் வம்சம் (Qajar dynasty) குறிப்பிடத்தக்கது. ஆகா முகமது கான் கஜார் என்பவரே கஜார் வம்சத்தை நிறுவி, ஆகா முகமது ஷா என்ற பெயரில் ஆட்சி செய்தார்.
1789-இல் அரியாசனம் ஏறிய பிறகு, அவர் சில ஆண்டுகள் எதிரிகளையும் கிளர்ச்சியாளர்களையும் எதிர்த்துப் போராடி 1796-இல் பாரசீகத்தை வெற்றிகரமாக ஒன்றிணைத்தார். அவர் 1797-இல் காலமானார்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் முன்னோடியான பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனி 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரசீகத்திற்குள் நுழைந்தது. 1616-இல் ஹார்முஸ் நீரிணை வழியாக பட்டு வணிகத்திற்கான வர்த்தகப் பாதை நிறுவப்பட்டது. காலப்போக்கில் ஈரானில் பிரிட்டிஷ் செல்வாக்கு படிப்படியாக வளர்ந்தது. கஜார் வம்ச ஆட்சியின் போது பிரிட்டன் ஈரானில் மிகவும் ஆதிக்கம் செலுத்தியது.
1856-7-ஆம் ஆண்டின் ஆங்கிலோ-பாரசீகப் போருக்குப் பிறகு பாரசீகத்தில் பிரிட்டனின் மேலாதிக்கம் இன்னும் வெளிப்படையானது.சேரஜேம்ஸ் அவுட்ராம் தலைமையிலான பிரிட்டிஷ் படைகளால் பாரசீகர்கள் தோற்கடிக்கப்பட்டனர். பாரிஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது. 20-ஆம் நூற்றாண்டு விடிந்தபோது “சுதந்திர” பாரசீகம் என்பது நடைமுறையில் ஒரு பிரிட்டிஷ் காலனியாகவே இருந்தது.
எண்ணெய் கண்டுபிடிப்பு
எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, பிரிட்டன் ‘ஆங்கிலோ-பாரசீக எண்ணெய் நிறுவனத்தை’ அமைத்து 1908-இல் பாரசீக எண்ணெயை எடுக்கத் தொடங்கியது.
இந்த நிறுவனம் பின்னர் 1936-இல் ‘ஆங்கிலோ-ஈரானிய எண்ணெய் நிறுவனமாக’ மாறியது. இறுதியில் இது 1954-இல் பிரிட்டிஷ் பெட்ரோலியம் (BP) ஆக உருவெடுத்தது. பாரசீகத்தின் எண்ணெய் வளங்களை மிகக் கொடூரமாகச் சுரண்டிய அதே வேளையில், பிரிட்டன் அதிக அரசியல் கட்டுப்பாட்டை நிறுவவும் முயன்றது.
1917-ஆம் ஆண்டின் ரஷ்யப் புரட்சியையும் 1918 ஆம் ஆண்டில் முதலாவதுை உலகப் போர் முடிவுக்கும் பிறகு பெருமளவிலான சோவியத் இராணுவம் (Red Army) பாரசீகத்திற்குள் நுழையத் தொடங்கி செல்வாக்கு மண்டலங்களை அமைத்தது.
பாரசீகத்தில் வளர்ந்து வரும் போல்ஷிவிக் செல்வாக்கைக் கண்டு பிரிட்டன் மகிழ்ச்சியடையவில்லை. தற்போதுள்ள கஜார் வம்சத்தை கவிழ்த்து விட்டு, ஆட்சியாளர் அஹ்மத் ஷா கஜாரை மாற்ற பிரிட்டன் முடிவு செய்தது.
ரேசா கான்

reza khan
அப்போது பாரசீகத்தில் நிலைகொண்டிருந்த பிரிட்டிஷ் படைகளின் தளபதியாக ஜெனரல் எட்மண்ட் அயர்ன்சைட் இருந்தார்.
14 ஜனவரி 1921 அயர்ன்சைட் ஒரு படைப்பிரிவின் பொறுப்பில் இருந்த ரேசா கான் என்ற இளம் பாரசீக கேப்டனை பிரிகேடியராக உயர்த்தி, மதிப்புமிக்க ‘கோசாக் பிரிகேட்’ (Cossack Brigade) தளபதியாக நியமித்தார்.
பெப்ரவரி நடுப் பகுதியில் ரேசா கான் 3500 வீரர்களைக் கொண்ட ஒரு கோசாக் படைப்பிரிவை வழிநடத்தி பாரசீக தலைநகரை நோக்கி அணிவகுத்துச் சென்றார்.
ரேசா கானும் அவரது கோசாக்குகளும் பிப்ரவரி 18 அன்று தெஹ்ரானை அடைந்து பிப்ரவரி 21 அன்று தலைநகரைக் கைப்பற்றினர். ஆட்சியாளர் அஹ்மத் ஷா கஜார் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவரது அரசாங்கம் கலைக்கப்பட்டது.
ஜியா ஓல் தின் தபதாபாயி என்பவர் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். ரேசா கான் போர் அமைச்சராகவும் ஆயுதப் படைகளின் தளபதியாகவும் பொறுப்பேற்றார்.
அதன்பிறகு ரேசா கான் நாட்டை அமைதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். மிக முக்கியமாக, பிப்ரவரி 25 அன்று ரஷ்ய-பாரசீக நட்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் விளைவாக, வளர்ந்து வந்த சோவியத் யூனியன் பாரசீகத்திலிருந்து அனைத்து இராணுவ வீரர்களையும் திரும்பப் பெற்றது. ரஷ்யா பாரசீக மண்ணில் கட்டப்பட்ட ரயில்வே மற்றும் துறைமுகங்களையும் விட்டுக்கொடுத்தது.
அந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு பாரசீகத்தில் பிரிட்டிஷ் அதிகாரம் மீண்டும் நிலைநாட்டப்பட்டது.
பிரிட்டன் இதற்கு மறைமுகமாக ஆதரவளித்தது. அத்துடன் ஜெனரல் அயர்ன்சைட் தனது தெரிவான ரேசா கான் குறித்து மகிழ்ச்சியடைந்தார். ரேசா கான் கிளர்ச்சிகளை அடக்குவதிலும் அதிகாரத்தை மையப்படுத்துவதிலும் போர் அமைச்சராக இரண்டு வருடங்களைச் செலவிட்டார். அவர் தனது பணியில் வெற்றியும் பெற்றார்.
ரேசா கான் 1923-இல் தெஹ்ரான் திரும்பியதும் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் தனக்கு விசுவாசமான ஒரு அமைச்சரவையை நியமித்தார். பாராளுமன்றமும் அவருக்கு சர்வாதிகார அதிகாரங்களை வழங்கியது.
1925-இல் அஹ்மத் ஷா கஜார் பிரான்சிற்கு நாடுகடத்தப்பட்டார். 12 டிசம்பர் 1925 அன்று, “மஜ்லிஸ்” அல்லது பாராளுமன்றம் ஒரு அரசியலமைப்பு சபையாக மாறி ரேசா கானை அடுத்த பாரசீக ஷா அல்லது மன்னராக அறிவித்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 15 ரேசா ஷாவாகப் பதவியேற்றார். அவரது முடிசூட்டு விழா 25 ஏப்ரல் 1926 அன்று நடைபெற்றது.

ரேசா ஷா பகலவி (Reza Shah Pahlav
பஹ்லவி வம்சம்
15 மார்ச் 1878-இல் பிறந்த ரேசா கான், பஹ்லவி வம்சத்தை நிறுவினார். அவர் ரேசா ஷா பஹ்லவி என்ற பட்டத்தை ஏற்றுக் கொண்டார். இவர்தான் 1936-இல் பாரசீகத்தின் பெயரை ஈரான் என்று மாற்றினார்.
பஹ்லவி வம்சம் 1925 முதல் 1979 வரை பாரசீகத்தை/ஈரானை ஆட்சி செய்தது. அது 1979-ஆம் ஆண்டின் இஸ்லாமியப் புரட்சியுடன் முடிவுக்கு வந்தது. பஹ்லவி வம்சத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி மற்றும் அமெரிக்கா-ஈரான் உறவின் ஏற்றத் தாழ்வுகள் இந்தக் கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் ஆராயப்ப்டும்.
-டி.பி.எஸ். ஜெயராஜ்-

