ilakkiyainfo

மர்மங்களின் கதை: ஹிட்லருக்கு மரியாதை கொடுக்க மறுத்த ஒரு வரலாற்று நாயகன்!! – பகுதி-1

மர்மங்களின் கதை: ஹிட்லருக்கு மரியாதை கொடுக்க மறுத்த ஒரு வரலாற்று நாயகன்!! – பகுதி-1
April 25
22:02 2021

எதிர்கால வாழ்வின் மீது மிகப்பெரும் அச்சத்தையும் உருவாக்கி விட்டிருக்கும் ஒருவன் வந்து உங்களின் முன்னால் நிற்கும்போது அவனை புகழ்ந்து எப்படி உங்களால் கையை உயர்த்த முடியும்?

1936ம் ஆண்டில் ஜெர்மனி நாட்டில் எடுத்த புகைப்படம் இது. ஹிட்லரின் ஆட்சிக்காலம்.

கை உயர்த்துவது நாஜிகளின் ஜெர்மனியில் ஹிட்லருக்கு வணக்கம் சொல்வது என அர்த்தம். ஜெர்மனியின் மக்கள் உட்பட அனைவரும் எந்த நேரத்திலும் ஹிட்லருக்கு வணக்கம் செலுத்த தயாராக இருக்க வேண்டும். ஒருவேளை அவர்கள் தவறும் பட்சத்தில் தேசவிரோதி என முத்திரை குத்தப்படுவார்கள். கடுமையான தண்டனை வழங்கப்படும். உயிர் கூட பறிக்கப்படும்.

புதிதாக ஒரு கப்பல் ஜெர்மனியின் ஹேம்பர்க் துறைமுகத்திலிருந்து கிளம்பவிருந்தது. ஹிட்லரின் சாதனையாக கருதப்பட்ட கப்பல்! ஜெர்மனி அரசு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

கப்பல் கிளம்பியதும் ஹிட்லருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அனைவரும் கையை உயர்த்தினர், ஒருவரைத் தவிர. அந்த ஒருவர் கூட்டத்துக்கு நடுவே, கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டி, ஒரு கண்ணை குறுக்கிக் கொண்டு ஏளனப் புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தார்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த நிகழ்ச்சியில் இந்த கூட்டத்துக்கு எதிரே இருந்த மேடையில் ஹிட்லரும் நின்று கொண்டிருந்தார். ஹிட்லருக்கு எதிரேயே இந்த நபர், வணக்கம் வைக்காமல் எள்ளலுடன் நின்று கொண்டிருந்தார்.

வரலாறு குறிப்பெடுத்துக் கொண்ட நபர்

எல்லா காலங்களிலும் நிகழும் எல்லா ஒடுக்குமுறைகளுக்கும் அடிபணிந்து செல்லும் மக்களே அதிகமாக இருந்திருக்கின்றனர். ஆனால் அவர்களை வரலாறு நினைவில் கொள்வதில்லை.

எத்தனை பெரிய அதிகாரமாக இருந்தாலும் ஒற்றை ஆளாகக் கூட அதை எதிர்க்கத் துணிபவரையே வரலாறு அள்ளியெடுத்து தலையில் வைத்துக் கொண்டாடும். ஹிட்லருக்கே சவால் விடுக்கும் மிடுக்குடன் புகைப்படத்தில் நிற்பவரும் அத்தகையவர்தாம். அவர் அப்படி நிற்பதற்கு பின் ஒரு சோகக்கதையும் ஒரு குடியுரிமைச் சட்டமும் இருந்தது.

புகைப்படத்தில் இருப்பவரின் பெயர் ஆகஸ்ட் லேண்ட்மெஸ்ஸர்.

1930-ம் ஆண்டில் ஜெர்மனியின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியில் தத்தளித்துக் கொண்டிருந்தது. அந்த காலத்தில்தான் ஹிட்லர் மக்களிடம் செல்வாக்கு பெறத் தொடங்கியிருந்தார்.

வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்த பல இளைஞர்களுக்கு ஹிட்லர் ஒரு மாற்றுச்சக்தியாக தெரிந்தார். ஆகஸ்ட் லேண்ட்மெஸ்ஸருக்கும் தெரிந்தான். ஆகஸ்ட் லேண்ட்மெஸ்ஸர் ஹிட்லரின் நாஜி கட்சியில் சேர்ந்தார்.

ஆகஸ்ட் லேண்ட்மெஸ்ஸர்

1933-ம் ஆண்டிலேயே ஹிட்லர் அதிகாரம் பற்றினான். ஆகஸ்ட் லேண்ட்மெஸ்ஸருக்கும் பிரச்சினை ஏதும் இல்லை. 1934-ம் ஆண்டு ஒரு மாற்றம் நேர்ந்தது. ஆகஸ்ட் லேண்ட்மெஸ்ஸரின் வாழ்வில் வசந்தம் வந்தது.

காதல் பிறந்தது. இர்மா எக்ளர் என்ற பெண்ணை காதலித்தார். இருவருக்கும் வாழ்வு இனித்து திருமணம் செய்வதற்கு ஆயத்தமாகினர். திருமணம் செய்து கொள்ளப் போகும் சேதியை அறிவித்தனர். ஒரு வருடத்தில் ஆகஸ்ட் லேண்ட்மெஸ்ஸர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். காரணம், அவர் காதலித்த இர்மா எக்ளர் ஒரு யூதர்.

சாதி, மதம், இனம், மொழி பார்த்து காதல் வருமா? அப்படி வந்தால் அது காதலாக இருக்க முடியுமா?

ஆகஸ்ட் லேண்ட்மெஸ்ஸர் தளர்ந்துவிடவில்லை. காதலுக்காக கட்சியை புறக்கணித்தார். திருமணத்துக்கான வேலைகளை தொடர்ந்தனர் இருவரும். ஆனால் அவர்களின் திருமணத்துக்கான விண்ணப்பத்தை அரசு நிராகரித்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடியாது என்றது. காரணம், புதிதாக கொண்டு வரப்பட்டிருந்த குடியுரிமைச் சட்டம்.

அது என்ன குடியுரிமைச் சட்டம்?

காதலை நிராகரித்த குடியுரிமைச் சட்டம்

1935-ம் ஆண்டில் இரண்டு முக்கியமான சட்டங்கள் ஜெர்மனியின் Nuremberg நகரத்தில் நடந்த நாஜி கட்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்டன. இரு சட்டங்களும் பொதுவாக Nuremberg சட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன. யூத துவேஷத்தை அடிப்படையாகக் கொண்டு பிரசாரம் செய்தி அதிகாரம் ஏறிய ஹிட்லரின் கனவுக்கு அடித்தளமிட்ட சட்டங்கள்.

முதல் சட்டம் Law of Protection of German Blood and Honor. ஜெர்மன் ரத்தத்தையும் மரியாதையையும் காப்பதற்கான சட்டம் என மொழிபெயர்க்கலாம்.

அச்சட்டத்தின் முக்கிய கூறு ஜெர்மானியர்கள் யூதர்களைத் திருமணம் செய்யக் கூடாது என்பதுதான்.

யூதர்களுடன் எந்தவித உறவுகளையும் ஜெர்மானியர்கள் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற சட்டம், முன்னமே யூதர்களை திருமணம் செய்திருந்தவர்கள் விவாகரத்து செய்வதற்கு மிக சுலபமான வழிகளையும் கொண்டிருந்தது.

45 வயதுக்கு குறைவான வயதை கொண்டிருக்கும் யூதர்கள் 45 வயது குறைந்த எந்த ஜெர்மானியரையும் தங்கள் வீட்டில் வேலைக்கு வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் சட்டம் அறிவுறுத்தியது.

45 வயது வரையில் பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் திறன் இருக்குமென்பதால், யூத ஆண்கள் ஜெர்மானிய பெண்களை மயக்கி பிள்ளைகள் கொடுத்துவிடக் கூடாதாம்.

கடைசியாக அச்சட்டத்தில் இருந்த விஷயம், யூதர்கள் ஜெர்மானிய கொடியை தங்களின் உடைகளிலோ வீடுகளிலோ வைத்திருக்கக் கூடாது.

வெற்றிகரமாக ஜெர்மானியர்களை யூத மக்களிடமிருந்து பிரித்து தூரமாக நிறுத்தியது சட்டம்.

ஹிட்லரின் திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை. அவனது அருவருப்பான பிற்போக்கு கனவுக்கு உயிரூட்டம் சட்டம், Nuremberg நகரத்தில் கொண்டு வந்த இரண்டாம் சட்டம்தான்.

Reich Citizenship Law. குடியுரிமைச் சட்டம்!

குடியுரிமைச் சட்டம் குடிமக்களை கணக்கெடுக்கவில்லை. யாரெல்லாம் குடிமக்கள் இல்லை என கணக்கெடுத்தது.

ஜெர்மானியர்களை பற்றி குடியுரிமைச் சட்டம் பேசவே இல்லை. முழுக்க முழுக்க யூதர்களை பற்றித்தான் சட்டம் பேசியது. அதிலும் உச்சம் என்னவென்றால், யாரெல்லாம் யூதர்கள் என்பதை அரசு நிர்ணயித்தது.

யூத மதத்திலிருந்து விலகி கிறித்துவ மதத்தை பின்பற்றினாலும் அவர்களை யூதர்கள் என்றே கூறியது குடியுரிமைச் சட்டம். அச்சட்டத்தை பொறுத்தவரை மூன்று வகை யூதர்கள் இருக்கிறார்கள்.

முதலில் உள்ளவர்கள் முழு யூதர்கள். மூன்று தலைமுறை யூத முன்னோர்கள் இருந்தார்கள் என்றால் அவர்கள் முழு யூதர்கள்.

இரண்டாவது, அரை யூதர்கள். இரண்டு தலைமுறை யூதர்களாக இருந்து யூத மதத்தை பின்பற்றாமலும் யூத கணவனோ மனைவியோ இல்லாமல் இருந்தாலும் அவர்கள் அரை யூதர்கள்.

மூன்றாவது, கால்வாசி யூதர்கள். தாத்தா, பாட்டி மட்டும் யூதர்களாக இருந்து இந்த தலைமுறையினர் யூத மதத்தை பின்பற்றவில்லை எனில், அவர்கள் கால்வாசி யூதர்கள்.

இத்தனை நவீன காலத்திலும் கூட நம் எவரின் பெற்றோருக்கும் பிறப்பு சான்றிதழ் இல்லை என்கிற சூழலில், 1935-ம் ஆண்டை கற்பனை செய்து பாருங்கள்.

யூதர்கள் அனைவரும் தங்களின் தந்தை, தாய், தாத்தா, பாட்டி, அதற்கும் முந்தைய தலைமுறையினர் ஆகியோரின் பிறப்பை உறுதிப்படுத்த வேண்டும். சட்டத்துக்கு பயந்து பல யூதர்கள் தங்களின் பெற்றோரையே மறுதலிக்கும் துயரமும் நடந்தேறியது. பல பெற்றோர்கள் தங்களுக்கு மகன் – மகள்கள் தங்களுக்கே பிறந்தவர்கள் என உறுதிப்படுத்த நீதிமன்றங்களின் படிகளேற வேண்டியிருந்தது.

இந்த குடியுரிமைச் சட்டத்தால் ஜெர்மானியர்களுக்கு எதுவும் பாதிப்பு இருக்காதே என நினைத்தால் நீங்கள் தவறு செய்கிறீர்கள். யூதர்களுக்கு துயரம் ஒரு மடங்கு என்றால் ஜெர்மானியர்களுக்கு துயரம் இரு மடங்கு.

எல்லா ஜெர்மானியர்களும் தங்களின் பெற்றோர் யூதர் அல்ல என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அவர்களுக்கும் அதே நீதிமன்றம்தான். அதே அலைச்சல்தான். அதே துயரம்தான். குடியுரிமை சட்டத்தில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருந்தது.

ஜெர்மனியின் குடிமகனாக ஜெர்மானியன்தான் இருக்க முடியுமென சொல்லும் சட்டம், அந்த ஜெர்மானியனும் அரசின் விருப்பதுக்கு ஏற்ப நடந்து கொள்ளும்வரைதான் குடிமகன் என முக்கிய குறிப்பையும் உள்ளடக்கியிருந்தது. அதாவது அரசு எந்த ஜெர்மானியன் மீது நடவடிக்கை எடுக்க விரும்பினாலும் அவனது குடியுரிமையை ரத்து செய்துவிட முடியும்.

1935-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட Nuremberg சட்டங்கள் ஆகஸ்ட் லெண்ட்மெஸ்ஸரின் காதலை சிதைத்தது. யூதரை ஜெர்மானியர் திருமணம் செய்யக் கூடாது என்கிற சட்டத்தால், ஆகஸ்ட் லேண்ட்மெஸ்ஸரின் திருமணம் நிராகரிக்கப்பட்டது.

இருவரின் காதலும் தெரிந்ததும் கட்சியிலிருந்தும் வெளியேற்றப்பட்டார். ஆனாலும் ஆகஸ்ட் மனம் தளரவில்லை. இர்மா எக்ளருடன் இணைந்தே வாழ்ந்தார். தம்பதிகளுக்கு இங்கிரிட் என்கிற பெண் குழந்தையும் பிறந்தது, நிகழப்போகும் அவலங்கள் ஏதும் தெரியாமல்.

மரியாதை தர முடியாது

இவை எல்லாவற்றுக்கும் பிறகுதான் இந்த புகைப்படம் நேர்ந்தது. தான் விரும்பிய பெண்ணை மணம் முடிக்க முடியாமல் தடுத்தும் எதிர்கால வாழ்வின் மீது மிகப்பெரும் அச்சத்தையும் உருவாக்கி விட்டிருக்கும் ஒருவன் வந்து உங்களின் முன்னால் நிற்கும்போது அவனை புகழ்ந்து எப்படி உங்களால் கையை உயர்த்த முடியும்?

1937-ம் ஆண்டு குடும்பத்துடன் ஜெர்மனியிலிருந்து ஆகஸ்ட் லேண்ட்மெஸ்ஸர் தப்பிக்க முயன்றார். தோற்று பிடிபட்டார். `ஜெர்மானிய இனத்தை களங்கப்படுத்தும் நடத்தை’ என்ற பெயரில் கைது செய்யப்பட்டார். ஒரு வருடத்தில் விடுதலை செய்யப்பட்டாலும் இர்மாவுடன் தொடர்பு இருக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டே வெளியே அனுப்பப்பட்டார்.

மறுபக்கத்தில் ஆகஸ்ட் லேண்ட்மெஸ்ஸரின் மனைவியும் குழந்தையும் யூதர்களுக்கென ஹிட்லர் கட்டிய மரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். தனக்கிடப்பட்ட உத்தரவை பொருட்படுத்தாமல் ஆகஸ்ட் இர்மாவை பார்க்க முயன்றபோது மீண்டும் கைதானார். இந்த முறை வெளிவரவே முடியாத ஒரு மரண முகாமுக்குள் அடைக்கப்பட்டார்.

இறுதிவரை ஆகஸ்ட் லேண்ட்மெஸ்ஸர் தன் மனைவியையும் குழந்தையையும் பார்க்க முடியவேயில்லை.

ஹிட்லரை அவமதித்து கைகட்டி ஆகஸ்ட் லேண்ட்மெஸ்ஸர் நின்றிருக்கும் புகைப்படத்துக்கு பின் இருக்கும் கதை, ஒரு ஜெர்மானியரும் ஓர் யூதரும் ஹிட்லர் கட்டிய மரண முகாம்களால் உயிர் பறிக்கப்பட்ட கதை!

– ஆர்.எஸ்.ஜெ.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2021
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com