தியகம மஹிந்த ராஜபக் ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 33ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் வட மாகாண பாடசாலைகளுக்கு 4 தங்கப் பதக்கங்கள், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள், ஒரு வெண்கலம் உட்பட 7 பதக்கங்கள் கிடைத்தன.
18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் சந்திரகுமாரன் ஹெரீனா 1.58 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை வென்றார்.
இதே வயதுப் பிரிவில் ஈட்டி எறிதலில் 37.33 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த சாவகச்சேரி இந்து கல்லூரியின் சந்திரசேகரன் சங்கவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அளவெட்டி அருணோதயா கல்லூரியின் பவானந்தன் சாத்விகா 3.00 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இதே பிரிவில் சாவகச்சேரி இந்து கல்லூரியின் பாலசுப்பிரமணியம் கிரிஜா 2.85 மீற்றர் உயரம் தாவி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அளவெட்டி அருணோதயா கல்லூரியின் நெப்தலி ஜொய்சன் (4.40 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும், தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் எஸ். டிலக்ஷன் (4.20 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பரிதிவட்டம் எறிதல் போட்டியில் இமயானன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் எம். சிவசயன் 47.89 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெள்ளிப் பதக்கதை வென்றார்.
இது இவ்வாறிருக்க, இராஜகிரிய கேட்வே சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த சதீப்பா ஹெண்டர்சன் 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான இரண்டு நிகழ்ச்சிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
முதலாம் நாளன்று நடைபெற்ற நீளம் பாய்தல் போட்டியில் 5.66 மீற்றர் தூரம் பாய்ந்து தங்கப் பதக்கம் வென்ற அவர், 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 12.67 செக்கன்களில் நிறைவு செய்து இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றார்.
20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் சானுக்க சந்தீப்ப (10.89 செக்.) தங்கப் பதக்கத்தையும், நிக்கவெரெட்டிய அன்புக்குளம் முஸ்லிம் மகா வித்தி யாலயத்தின் ஏ.எஸ்.எம். சப்ரான் (10.96 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் வென் றனர்.