என்னை 25 கோடிக்கு விலைபேசினார்கள்- குணவர்த்தன எம்.பி
என்னை 25 கோடி ரூபாய்களுக்கு விலை பேசினார்கள். அத்துடன் தனது தந்தைக்கு ஆதரவளித்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டால் நான் விரும்புவது எல்லாவற்றையும் தருவதாக நாமல் ராஜபக்ஷ என்னிடம் கூறினார்.
என்று எம்.கே.டி.எஸ். குணவர்தன கூறினார். திருகோணமலை 4 ஆம் கட்டை பகுதியில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் பேசுகையில்,
நான் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய பின்னர் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் என்னுடன் இரண்டுமுறை தொடர்பு கொண்டு பேசினார். 25 கோடி ரூபாய் தருவதாகவும் எனது முடிவை மாற்றிக் கொள்ளுமாறும் கேட்டார்.
நாமல் ராஜபக்ஷ என்னுடன் கதைத்தார். உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள் எனது தந்தை மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார்.
மீண்டும் நீங்கள் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள். அதற்கு பதிலாக நீங்கள் எதனைக் கேட்டாலும் தர தயாராக இருக்கின்றோம் என்று கூறினார்.
நான் கூறினேன். நாமல் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று நான் அரசாங்கத்தை விட்டு விலகவில்லை. இவை எல்லாவற்றிற்கும் காரணம் உங்கள் சிறிய தந்தை.
அதனை பற்றி உங்கள் தந்தையுடன் கதைத்துள்ளேன். ஆனால் அதனை அவர் சிறிதும் கவனத்திற் கொள்ளவில்லை. அதன் பின்னரும் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு அரசாங்கத்தில் இருக்க முடியாது.
அதனால் வெளியேறினேன். இதனை உங்கள் தந்தைக்கு சொல்லுங்கள் என்று கூறினேன். அவர் நிச்சயமாக இதனை அவரது தந்தைக்கு கூறமாட்டார். காரணம் இப்போது குடும்பத்திற்குள் பிரச்சினை தொடங்கியுள்ளது.
கோத்தபாய ராஜபக்ஷ அரை மணி நேரம் என்னுடன் கதைத்தார். ஏன் இப்படி செய்தீர்கள்? ஏன் என்னுடன் இது பற்றி கதைக்கவில்லை? என்றார். நான் கூறினேன். நீங்கள் யார்? ஏன் நான் உங்களுடன் கதைக்க வேண்டும்? என்று.
அதற்கு அவர் நான் ஜனாதிபதியின் தம்பி பாதுகாப்பு செயலாளர். கட்சியின் பழைய உறுப்பினர்களை நன்கு அறிந்தவன் என்று கூறினார். சரி அப்படியானால் அதற்கு நான் என்ன செய்ய என்று நான் கேட்டேன்.
அதற்கு அவர் இல்லை. கொஞ்சம் யோசியுங்கள் என்றார். அதற்கு நான் இனிமேல் யோசிக்க எதுவுமில்லை. உங்களுக்கு தேவையென்றால் என்னை கொன்று விடுங்கள். நான் மனித தன்மைக்கு மட்டுமே கீழ்ப்படிவேன். அழுக்குள்ள இடத்துக்கு மீண்டும் வருவதற்கு நான் விரும்பவில்லை.
இது மட்டுமல்ல கோத்தபாயவும் ஜனாதிபதி செயலக அதிகாரியும் மைத்திரிபால சிறிசேனவுடன் 3 மணி நேரம் கதைத்தார்கள்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை ஜனாதிபதியின் பாராளுமன்ற செயலாளர் குமாரசிறி ஹெட்டிகொட மூன்று தடவை என்னுடன் கதைத்தார். அவர் எனக்கும் ஜனாதிபதிக்கும் மிக நெருங்கிய நண்பர்.
எப்போதும் அவரும் ஜனாதிபதியும் நானும் ஒன்றாகத்தான் உணவருந்துவோம். அவர் கூறினார் குணே என்னை உங்களுடன் கதைக்குமாறு ஜனாதிபதி கூறினார். அவர் மிகவும் கவலைப்படுகின்றார்.
மீண்டும் நீங்கள் அவருடன் வந்து சேருங்கள். அவருக்கு உங்கள் மீது எந்தக் கோபமும் இல்லை. இது வரை அவர் உங்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட குறைவாக பேசவில்லை.
நீங்கள் எந்த நேரமும் அலரி மாளிகைக்கு வர முடியும் உங்கள் முடிவை மாற்றுங்கள் என்றார். இதற்கு நான் கூறினேன். மீண்டும் அந்த அழுக்குள்ள இடத்திற்கு வர நான் விரும்பவில்லை என்று.
நண்பர்களே இப்போது நம்முன்னுள்ள மிகப்பெரிய கேள்வி நாட்டைப் பாதுகாப்பதா? அல்லது தனிப்பட்ட ஒரு குடும்பத்தைப் பாதுகாப்பதா? என்பதே. தீர்மானமெடுக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது என்று கூறினார்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment