தலாவ பேருந்து விபத்து சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பேருந்து சாரதி, எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, அதன் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு தம்புத்தேகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஆரம்ப கட்ட விசாரணை

விபத்துச் சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பேருந்தின் நடத்துநரை தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய தம்புத்தேகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர், ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது, விபத்தானது முதலாவது சந்தேகநபரான பேருந்து சாரதியின் அஜாக்கிரதை மற்றும் கவனக்குறைவு காரணமாகவே இடம்பெற்றது எனத் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றில் கருத்துத் தெரிவிக்கையில், வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் பேருந்து மோதவிருந்த நிலையில், அந்தச் சாரதியைக் காப்பாற்ற முற்பட்டபோதே இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ஜயகங்கைக்கு இணையாக ஓடும் வீதியில் பயணித்த பேருந்தை, நிரம்பி வழிந்த ஜயகங்க நீர்த்தேக்கத்தை நோக்கி கவிழ்ந்து விடாமல் இந்த வழியிலாவது காப்பாற்ற முடிந்தது, சந்தேகநபரான சாரதியின் திறமையினால் தான் என்றும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.

முதலாவது சந்தேகநபரான சாரதி மதுபோதையில் இருக்கவில்லை என்றும், அவர் சாரதி அனுமதிப்பத்திரம் கொண்ட அனுபவமுள்ள சாரதி என்பதால், அவர்களை எந்தவொரு பிணை நிபந்தனைகளின் கீழும் விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் கோரினர்.

இரு தரப்பினரின் வாதங்களையும் கருத்தில் கொண்ட தம்புத்தேகம நீதவான் காயத்திரி ஹெட்டியாரச்சி, முதலாவது சந்தேகநபரான சாரதியை பிணையில் விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை நிராகரித்து, அவரை இந்த மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும், நடத்துநரை சரீரப் பிணையில் விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply