தற்போது இஸ்ரேலின் கட்டுப்பாட்டு பகுதிக்கும் ஹமாஸ் அமைப்பின் ஆட்சியில் இருக்கும் பகுதிக்கும் இடையே காசா பிரிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக நம்பகமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
காசா போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் திட்டத்தை முன்னெடுப்பதில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களுக்கு மத்தியிலேயே இந்த நிலை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
காசா போர் நிறுத்தத்தின் அடுத்த கட்ட திட்டத்தை முன்னெடுக்கும் முயற்சி தொடர்பில் அறிந்த ஆறு ஐரோப்பிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் தற்போது ஸ்தம்பித்து இருப்பதாகவம் மீள்கட்டமைப்புகள் தற்போது இஸ்ரேல் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு மட்டுப்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதமாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி அமுலுக்கு வந்த முதல் கட்ட திட்டத்தின் கீழ், இஸ்ரேலிய இராணுவம் தற்போது காசாவில் 53 வீத நிலப்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதில் காசா நகரின் பகுதிகள் மற்றும் நகரப் பகுதிகள், தெற்கில் ரபாவுடன் சேர்த்து விவசாய நிலப்பகுதிகளும் அடங்குகின்றன.
இந்நிலையில் 2 மில்லியனுக்கும் அதிகமான காசா மக்கள் எஞ்சி இருக்கும் ஹமாஸ் கட்டுப்பாட்டு நிலப்பகுதிகளில் இடிபாடுகள் மற்றும் கூடாரங்களில் சிக்கியுள்ளனர்.
போர் நிறுத்தத்திற்கு முன்னர் இஸ்ரேலியப் படை காசாவில் நடத்திய இறுதிக் கட்ட தாக்குதல்களில் காசா நகரின் வடகிழக்கு பகுதி பேரழிவுக்கு உட்படுத்தப்பட்டு அந்தப் பகுதி முழுமையாக தரைமட்டமாக்கப்பட்டிருப்பது ரோய்ட்டஸின் ட்ரோன் படங்கள் காட்டுகின்றன. இந்தப் பகுதி தற்போது இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கட்டுப்பாட்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டத்தில் டிரம்பின் திட்டத்தின் கீழ் இணக்கம் எட்டப்பட்ட மஞ்சள் கோடு என அழைக்கப்படும் எல்லையில் இருந்து இஸ்ரேல் மேலும் வாபஸ் பெற வேண்டும்.
இதன்போது நிலைமாற்று அரசு ஒன்று அமைக்கப்பட்டு காசாவில் சர்வதேச படை ஒன்று நிலைநிறுத்தப்பட்ட பின் இஸ்ரேலின் இராணுவத்தின் நிலைகளை கைப்பற்றும்.
இதன்போதும் ஹமாஸின் ஆயுதம் களையப்பட்டு காசாவில் மீள்கட்டுமானங்கள் ஆரம்பிக்கப்படும்.
எனினும் இந்தத் திட்டத்திற்கான காலவரையறை ஒன்று அல்லது அதனை செயற்படுத்துவதற்கான பொறிமுறை ஒன்று வழங்கப்படவில்லை.
அதேநேரம், ஹமாஸ் ஆயுதங்களை களைய மாறுப்பதோடு பலஸ்தீன அதிகாரசபையின் தலையீட்டை மறுக்கும் இஸ்ரேல் அங்கு நிலைநிறுத்தப்படும் சர்வதேச படையின் குறிப்பிட்ட தரப்புகளை நிலைநிறுத்துவதை நிராகரித்து வருகிறது.
இந்த முட்டுக்கட்டைகளை உடைப்பதில் அமெரிக்காவின் அழுத்தம் இல்லாத பட்சத்தில், தற்போது இஸ்ரேல் நிலைகொண்டிருக்கும் மஞ்சள் கோடு காசாவின் எல்லைக் கோடாக மறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக மேற்படி ஆறு ஐரோப்பிய அதிகாரிகள் மற்றும் இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் அறிந்த முன்னாள் அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா முன்வைத்திருக்கும் ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மான நகலில் காசாவில் நிலைமாற்று அரசு ஒன்றை அமைப்பது மற்றும் சர்வதேச படை ஒன்றை நிலைநிறுத்துவதற்கு அனுமதி பெறப்படவுள்ளது. எனினும் தமது துருப்புகளை அனுப்புவதில் பல நாடுகளும் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
அமைதிகாப்புக்கு அப்பால் பொறுப்புகள் நீடிக்கப்படும் பட்சத்தில் ஐரோப்பிய மற்றும் அரபு நாடுகள் தமது துருப்புகளை காசாவுக்கு அனுப்புவதை மறுத்து வருகின்றன. இதனால் ஹமாஸ் அல்லது மற்ற பலஸ்தீன போராட்டக் குழுக்களுடன் மோதல் ஏற்படக் கூடும் என்று அந்த நாடுகள் அஞ்சுகின்றன.
காசாவில் தற்போது அமுலில் இருக்கும் போர் நிறுத்தமும் அடிக்கடி மீறப்படும் ஒன்றாகவே நீடித்து வருகிறது.
போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் மூவர் கொல்லப்பட்டு மேலும் ஒருவர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் போர் நிறுத்தம் ஆரம்பித்தது தொடக்கம் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 245 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 623 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த 2023 ஒக்டோபரில் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கையும் 69,182 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

