Ind Vs SA கிரிக்கெட்: 2-வது டெஸ்ட்டிலும் இந்தியா வெற்றி – சொந்த மண்ணில் தொடர்ந்து 11 வது முறையாக தொடரை கைப்பற்றியது
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 137 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைப்பெற்ற இப்போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மீதம் உள்ளேபோதே நான்காம் நாளில் போட்டியை வென்றது இந்திய அணி. இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
இந்த வெற்றி மூலம் சொந்த மண்ணில் தொடர்ந்து அதிக முறை டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய அணி என்ற பெருமையை இந்தியா அடைந்தது.
இது இந்தியாவுக்கு சொந்த மண்ணில் தொடர்ந்து கிடைத்த 11வது வெற்றி ஆகும். 2012 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடர்களை தொடர்ந்து கைப்பற்றியுள்ளது இந்தியா.
டாஸில் வென்ற இந்திய அணி முதலாவதாக பேட்டிங்கை தேர்வு செய்தது. மயங்க் அகர்வாலின் சதம் மற்றும் இந்திய கேப்டன் விராட் கோலியின் ஏழாவது இரட்டை சதத்துடன் இந்தியா இரண்டு நாளில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் எடுத்தது.
தென்னாப்பிரிக்கா அணியின் தரப்பில் அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட் எடுத்தார். மேலும் செனூரன் முத்துசாமியும், கேஷவ் மஹராஜும் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
அதன் பின் மூன்றாம் நாளில் தன் முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்கா 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக கேஷவ் மஹராஜ் 72 ரன்னும் கேப்டன் டூ ப்ளசிஸ் 64 ரன்களும் எடுத்திருந்தனர்.

இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஷ்வின் 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், முஹமது ஷமி 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இத்துடன் தன் முதல் இன்னிங்ஸில் இந்தியாவைவிட 326 ரன்கள் பின்தங்கியிருந்தது தென்னாப்பிரிக்கா.
இதைத் தொடர்ந்து நான்காம் நாளான இன்று தன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்கா 189 ரன்களில் 10 விக்கெட்டையும் இழந்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் ஈல்கர் 48 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா மற்றும் உமேஷ் யாதவ் தலா மூன்று விக்கெட்டுகள் எடுத்தனர். அஷ்வின் இரண்டு விக்கெட்டும் ஷமி மற்றும் இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதன் மூலம் ஒரு இன்னிங்ஸ் மீதம் உள்ளபோதே 137 ரன்னில் இந்த டெஸ்ட் போட்டியை வென்றதுடன் தொடரின் மூன்று போட்டியில் இரண்டு போட்டிகளில் வென்று தொடரையும் கைப்பற்றியது இந்திய அணி.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment