`ரூ.15 லட்சம் கோடி என்ன ஆனது?' செபியின் பிடியில் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்!தங்க சாம்ராஜ்யம் சரிகிறதா?
13 Jun, 2026
நாகசாகியில் வீசப்பட்ட புளூட்டோனியம் அணுகுண்டு, ஆரம்பத்தில் கோகுராவில் வீச திட்டமிடப்பட்டது.
1945ம் ஆண்டு ஜூலை மாத நடுப்பகுதியில், அமெரிக்க ராணுவம் ஜப்பானில் 12 நகரங்களை அணுகுண்டு தாக்குதலுக்காக தேர்ந்தெடுத்தது. இந்த நகரங்களில் ராணுவத் தளங்கள், ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகள் போன்ற முக்கிய இடங்கள் இருந்தன.
அணுகுண்டு முதலில் வீசப்படவிருந்த நகரங்களில் ஹிரோஷிமா முதலில் இருந்தது. அதற்குப் பிறகு கோகுரா இரண்டாவது இலக்காக இருந்தது. கோகுரா ஒரு முக்கிய ஆயுத உற்பத்தி மையமாக இருந்தது, ஜப்பானிய ராணுவத்துக்குச் சொந்தமான பெரிய ஆயுதக் கிடங்கும் இங்கு இருந்தது.
ஏதாவது காரணத்தால், ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா மீது குண்டு வீச முடியாமல் இருந்திருந்தால், கோகுரா தான் முதல் இலக்காக மாறியிருக்கும்.
மூன்று நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 9 அன்று அதிகாலையில், பி-29 விமானங்கள் கோகுராவை நோக்கிப் புறப்பட்டன.
அவற்றில் ஒன்று 'பாக்ஸ்கார்' என்ற பெயருடைய விமானம், 'ஃபேட் மேன்' என அழைக்கப்படும் புளூட்டோனியம் அணுகுண்டை எடுத்துச் சென்றது. இந்த குண்டு, ஹிரோஷிமாவில் வீசப்பட்ட யுரேனியம் குண்டை விட அதிக சக்தி வாய்ந்தது.
ஆனால் அன்று காலை, கோகுரா நகரம் மேகங்களால் மூடப்பட்டிருந்தது. அதற்கு மேலாக, அதன் அருகிலுள்ள யவடா நகரத்தில் முந்தைய நாள் நடந்த குண்டுவீச்சால் வானத்தில் புகை பரவியிருந்தது. இதனால், விமானங்களில் இருந்து தரையை தெளிவாக பார்க்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டிருந்தது.
கோகுராவின் தொழிற்சாலைகள் வேண்டுமென்றே நிலக்கரியை எரித்து, நகரம் முழுவதும் புகை மூட்டத்தை உருவாக்கியிருக்கலாம். இதனால், அடிக்கடி நடக்கும் விமானத் தாக்குதல்களில் இருந்து ஓரளவு பாதுகாப்பு கிடைக்கும் என அவர்கள் நம்புகின்றனர் என சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்க ராணுவ ஆவணங்களும், அந்த பயணத்தில் பங்கேற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையாளர் வில்லியம் லாரன்ஸ் எழுதிய அறிக்கையும், பி-29 விமானங்கள் கோகுரா மீது மூன்று முறை சுற்றி வந்ததாகக் கூறுகின்றன.
அமெரிக்க விமானப்படைக்கு, இலக்குகளை கண்களால் தெளிவாகப் பார்க்க முடிந்தால் மட்டுமே அணுகுண்டு வீச வேண்டும் என்ற உத்தரவு இருந்தது. இதனால் அதிகபட்ச அழிவை ஏற்படுத்த முடியும் என அவர்கள் எண்ணினர்.
ஆனால் இலக்கை உறுதிப்படுத்துவதற்கு முன்பே, கோகுராவில் தரையில் இருந்த ஜப்பானிய படையினர் விமானங்களை பார்த்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அப்போது 'பாக்ஸ்கார்' என்ற விமானத்தை இயக்கிய மேஜர் சார்லஸ் ஸ்வீனி, விமானம் ஏற்கனவே நிறைய எரிபொருளைப் பயன்படுத்திவிட்டதால், கோகுராவை விட்டுவிட்டு நாகசாகி நோக்கி பறக்க முடிவு செய்தார்.
இந்த வகையில், கோகுரா இரண்டாவது முறையாக அணுகுண்டு தாக்குதலிலிருந்து அதிசயமாக தப்பியது.
நாகசாகி மீதான அணுகுண்டு தாக்குதலில் 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என அறியப்படுகிறது.
கிடாக்யுஷு ஆசியாவின் பசுமையான நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஆகஸ்ட் 15, 1945 அன்று, ஜப்பான் பேரரசர் ஹிரோஹிட்டோ, ஜப்பான் நிபந்தனையின்றி சரணடைகிறது என்று அறிவித்தார்.
இப்போது கிடாக்யுஷு என அழைக்கப்படும் கோகுரா, அணுகுண்டு தாக்குதலிலிருந்து தப்பியது. ஆனால் மக்கள் மனதில் கவலையும் பதற்றமும் இருந்தது.
நாகசாகி மீது வீசப்பட்ட குண்டு, முதலில் தங்கள் நகரம் மீது வீசப்படவிருந்தது என்பதை கோகுரா மக்கள் அறிந்தபோது, அவர்களுக்கு சோகமும், நிம்மதியும், நாகசாகி மக்கள் மீது அனுதாபம் கலந்த உணர்வும் ஏற்பட்டது.
கிடாக்யுஷுவில், நாகசாகி அணுகுண்டு நினைவுச்சின்னம் அமைந்துள்ளது. இது, முன்னாள் ஆயுதக் கிடங்கின் மைதானத்தில் உள்ள ஒரு பூங்காவில் அமைந்துள்ளது.
இந்த நினைவுச்சின்னம், கோகுரா நகரம் சிறு இடைவெளியில் தப்பியதையும், நாகசாகி சந்தித்த துயரத்தையும் நினைவுகூர்கிறது.
1973 முதல், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி இங்கு இறந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.
2022ஆம் ஆண்டு, கிடாக்யுஷு நகர அமைதி அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
இந்த இரண்டு நகரங்களும் பல ஆண்டுகளாக நட்புறவுடன் உள்ளன. அவற்றின் விதிகள் ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றன என்ற கருத்தை அனைவரும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்கின்றனர்.
ஆனால் கிடாக்யுஷு நகரம் பெரிய மாற்றங்களைச் சந்தித்தது. ஜப்பானின் மறுகட்டமைப்பின் போது, இந்த தொழில்துறை நகரம் மிகவும் மாசுபட்டதால், அதன் டோக்காய் விரிகுடா கிட்டத்தட்ட தண்ணீரை இழந்தது.
இப்போது, இந்த நகரம் ஆசியாவின் மிகப் பசுமையான நகரங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. இது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் பல ஆண்டுகளாக செய்யப்பட்ட முதலீட்டால் சாத்தியமானது.
கடந்த காலத்தை ஒருபோதும் மறக்காத இந்த நகரம், எதிர்காலத்தை நோக்கி உறுதியாக நகர்ந்துள்ளது.
- இது, பிபிசி நியூஸ்ரூம் வெளியீடு-
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!