news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அணுவாயுதம் தயாரிப்பதற்கு வலிந்து தள்ளப்படும் ஈரான்!

02 Jun, 2026

போர்நிறுத்த காலத்தில், தம்மைப் பலப்படுத்தும் இரகசிய நடவடிக்கையில் அமெரிக்கா, இஸ்ரேல்!


போர் நிறுத்த உடன்பாட்டை மீறி அமெரிக்க- இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல் மீண்டும் நிகழ்ந்துள்ளது. ஆனால் 60 நாட்கள் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு இரு தரப்பும் வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்படிக்கையில் அமெரிக்காவும் ஈரானும் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதாக அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. இவான்ஸ் கூறியுள்ளமை கவனத்துக்குரியது.

எனினும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக இல்லை என்றும், 60 நாள் போர்நிறுத்த நீடிப்பு ஒப்பந்தத்திற்கான ஒரு கட்டமைப்பு குறித்து அமெரிக்க மற்றும் ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் எனவும் தெரியவருகிறது.

அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் ஈரானும் இஸ்ரேல் மீதும் அமெரிக்காவின் மேற்காசியத் தளங்கள் மீதும் தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கின்றது. 

குறிப்பாக அமெரிக்க- – இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலை எதிர்கொள்ளும் விதத்தில் ஈரானிய நகர்வுகள் அண்மைக் காலப்பகுதியில் முதன்மையானதாக இருந்தன. 

ஈரானுக்கு எதிரான போர் தொடங்குகின்ற போது ஈரான் வெளிப்படையாக போருக்கு தயார் நிலையில் இல்லாததைக் காட்டிக் கொண்டது. 

ஆனால் தற்போது போருக்குத் தயார் என்ற ஒரு வெளிப்படைத் தன்மையைக் கொண்டிருக்கிறது. இத்தகைய தாக்குதல்களும் போருக்கான முனைப்புகளும் அடிப்படையில் அணு ஆயுத உற்பத்தியை ஊக்குவிக்கும் சூழலை ஏற்படுத்த முனைவதாகத் தெரிகிறது.

அமெரிக்க- இஸ்ரேலிய கூட்டின் பிரதான இலக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கைப்பற்றுவதும், ஹார்மூஸ் போக்குவரத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுமாக அமைந்துள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை மற்றும் உடன்பாடுகளை இரண்டு நாடுகளும் எட்டிக் கொண்டுள்ளன.

சமாதான உடன்பாட்டு முயற்சி என்பது போருக்கான தயார்படுத்தல் என்பது மீண்டும் ஒரு தடவை உணர்த்தப்பட்டுள்ளது. அமைதியான காலப்பகுதியில் இரண்டு தரப்புகளும் ஆயுதங்களைக் குவித்ததோடு, போருக்கான உளவுத் தகவல்களையும் உத்தரவாதப்படுத்திக் கொண்டன.

அதேசமயம், ஈரான் மீதான அமெரிக்க- இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல் அதன் இராணுவ இலக்குகளைக் கடந்து பொதுமக்கள் மீதுதான் அழிவை அதிகம் ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் பெற்றோலிய வளங்களை தகர்த்து அழிப்பதற்கு அவ்விரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன என்பதை ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார்.

ஈரானைப் பொறுத்தவரை இஸ்ரேல் மட்டுமன்றி வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் முற்றாகவே விரட்டி அடிக்கப்படுவதுதான் குறிக்கோளாக உள்ளது. அப்போதுதான் தனது இருப்புக்கு உத்தரவாதம் ஏற்படுமென ஈரான் கருதுகிறது. இதனால் மீளவும் பிராந்திய மட்டத்திலான போர் மூளும் சாத்தியம் உள்ளது.

சமாதான உரையாடலுக்குப் பிந்தியதான தாக்குதல் என்பது அமெரிக்க- – இஸ்ரேலிய கூட்டுக்கு புதியதல்ல. ஈரான் பயன்படுத்தும் அநேகமான தாக்குதல் விமானங்களும் ஆளில்லாத விமானங்களும் அதிகமாக அணு ஆயுத தொழில்நுட்பத்தை பிரயோகித்து மேற்கொள்ளப்படுவதாக தகவல்களும் உள்ளன. இது ஈரானின் அணுவாயுத திறனை உறுதிப்படுத்துகின்றது.

அதேசமயம் சீனா, ரஷ்யா, வடகொரியா போன்ற அணுவாயுத நாடுகளின் ஒத்துழைப்பானது ஈரானிய அணு ஆயுத உற்பத்தியை உறுதிப்படுத்த வழிவகுத்துள்ளது. ஈரான் நெருக்கடி மிக்க சூழலில் அணுவாயுத பரிசோதனையை மேற்கொள்வதற்கான வாய்ப்பை அதிகம் கொண்டிருக்கின்றது.

அணு ஆயுதப் பரிசோதனை மீது நாட்டமில்லை என்ற வாதம் இருந்தாலும் ஈரானியர்களின் இருப்பை உத்தரவாதப்படுத்த வேண்டிய தேவையை ஈரான் கொண்டிருக்கிறது. ஈரானின் உயிர்வாழ்வு அணுவாயுதத்தில் தங்கியிருக்கிறது என்பதே உண்மை.

ஈரானில் இதுவரை அதிகாரத்தில் இருந்த தலைவர்கள் அணு ஆயுத பரிசோதனைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளாத போதும், அதனைத் தவிர்க்க முடியாது போய் விட்டது.

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முற்படவில்லை என்ற சமீபத்திய உறுதிமொழிகளை அந்நாட்டின் ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். பிராந்தியத்தில் நிலவும் உறுதியின்மைக்கு இஸ்ரேலே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

லெபனானில் மனிதாபிமானப் பணியாளரான சிரில் பாசில் தெற்கு லெபனானில் நிலைமை முற்றிலும் பேரழிவானது என்றும், மார்ச் மாதம் முதல் 3320 இற்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்றுள்ள இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களுக்கு மத்தியில் அச்சம் மிகவும் தெளிவாக உணரப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

இஸ்ரேலிய இராணுவம் தெற்கு லெபனானில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்களைக் கட்டாயமாக இடம்பெயரச் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், படைகள் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த லிட்டானி ஆற்றைக் கடந்து செல்லும் நிலையில் ஹிஸ்புல்லாவின் தாக்குதலை எதிர்கொள்கின்றன. இஸ்ரேலின் இடைவிடாத விமானக் குண்டுவீச்சு மற்றும் தீவிரமடைந்து வரும் தரைவழிப் படையெடுப்பின் போது தெற்கு லெபனானில் ஒரு முழுமையான பேரழிவு ஏற்படக்கூடும் என உதவி அமைப்புகள் எச்சரிக்கின்றன.

மறுபுறம் குவைத்தில் அமெரிக்கப் படைகள் தங்கியிருந்த விமானப்படைத் தளத்தின் மீதான ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை ஐக்கிய அரபு அமீரகம், கட்டார் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகள் கண்டித்துள்ளன.

ஹார்மூஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கணிசமாகக் குறைந்துள்ளது. போருக்கு முந்திய காலகட்டத்தில் தினமும் சராசரியாக 138 கப்பல்கள் கடந்து சென்ற நிலையில், சமீப நாட்களில் மூன்று கப்பல்களும், சில நாட்களில் ஏழு கப்பல்களும் மட்டுமே நீரிணையைக் கடந்து சென்றுள்ளன.

ஹார்மூஸ் வழியாகச் செல்லும் கப்பல் வழித்தடங்களில் கண்ணிவெடிகள் புதைக்கப்படுவதும் செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்புகளில் குறுக்கீடுகள் ஏற்படுவதும் தொடர்ந்து நீடிப்பதாக தெரியவருகிறது.

போர்நிறுத்த மீறல்கள் கட்டுப்பாட்டை மீறி அதிகரித்துள்ள நிலையில், எந்தவொரு உடன்பாட்டையும் சீர்குலைப்பதைத் தடுக்கும் முயற்சியில் இரு தரப்பினரும் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஈரான் மீதான இரண்டாவது தாக்குதல் சமாதானத்தை விட அணு ஆயுத உற்பத்தியை மேற்கொள்ளும் நாடாக ஈரானை மாற்றுவதற்கான ஒரு நடவடிக்கையாகவே தெரிகின்றது. ஈரான் அணுவாயுதத்தை தயாரித்துக் கொள்வதே பிராந்திய ரீதியிலும் அதன் இருப்புக்கும் பாதுகாப்பானது என்றே அந்நாடு கருதுகின்றது.

ஈரான் மீதான தாக்குதலை மேற்கொள்கின்ற அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் அணுவாயுத நாடுகளாகவே உள்ளன. அதற்கு பதிலளிக்கும் திறன் ஈரானுக்கு அவசியமானது. அப்போது மட்டுமே ஈரான் மீதான போர் முடிபுக்கு வரும் என்பதுதான் சர்வதேச போரியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

கே.ரீ. கணேசலிங்கம்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!