இலங்கை அரசியலின் நகர்வுகள் எப்போதும் ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும் நிறைந்தவை. கடந்த கால அரசியல் வரலாற்றை உற்றுநோக்கினால், தற்போதைய அரசியல் சூழலின் ஆழத்தையும் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் சவால்களையும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
குறிப்பாக, மக்கள் விடுதலை முன்னணி கடந்து வந்த பாதையையும், அவர்கள் அன்று எடுத்த முடிவுகள் இன்று அவர்களுக்கு எத்தகையதொரு வரலாற்றுப் பொறியை உருவாக்கியுள்ளன என்பதையும் ஆய்வு செய்வது இன்றைய சூழலில் மிக பொறுத்தமானதாகும்
2004ஆம் ஆண்டு, அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜே.வி.பி-யுடன் இணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிடத் தயாரானபோது, பல சிரேஷ;ட உறுப்பினர்கள் அவருக்கு எச்சரிக்கையை விடுத்தனர்.
ஜே.வி.பி-யுடன் வைக்கும் கூட்டணி ஆபத்தானது என்பதே அந்த அறிவுரை. ஆனால், ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அதனைப் பொருட்படுத்தவில்லை. அவருக்கு அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தை வீழ்த்தி, ஐக்கிய தேசியக் கட்சியை அதிகாரத்தில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கு மட்டுமே இருந்தது.
அதன்படி, ஜே.வி.பி-யுடன் ஒப்பந்தம் செய்து, 'ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி' உருவாக்கப்பட்டது. அந்தத் தேர்தல் முடிவு, 2024 ஆம் ஆண்டில் ஜே.வி.பி பெற்ற வெற்றியைப் போன்றதொரு அரசியல் சுனாமியாக இருந்தது.
இதன் பின்னரே நிலைமை தலைகீழானது. கம்பஹா மாவட்டத்தில் பண்டாரநாயக்க குடும்பத்தின் இளவரசராகக் கருதப்பட்ட அநுர பண்டாரநாயக்க, விருப்பு வாக்குப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
முதலிடத்திற்கு ஜே.வி.பி-யின் விஜித ஹேரத் தெரிவானார். ஏனைய மாவட்டங்களிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தூண்கள் என வர்ணிக்கப்பட்ட பல தலைவர்கள் தோற்கடிக்கப்பட, ஜே.வி.பி 41 பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்த முடிவு சந்திரிகாவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சுதந்திரக் கட்சியையுமே உலுக்கியது.
இதன் விளைவாக, ஜே.வி.பி-யின் முக்கிய தலைவர்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
இதன் பிரகாரம் அமைச்சர்களாக அநுரகுமார திஸாநாயக்க, விஜித ஹேரத், கே.டி. லால்காந்த, சந்திரசேன விஜேசிங்க தெரிவானார்கள். அதே போன்று பிரதி அமைச்சர்களாக பிமல் ரத்நாயக்க, சமந்த வித்யாரத்ன, சுனில் ஹந்துன்னெத்தி, நிஹால் கலப்பத்தி ஆகியோர் பதிவியேற்றனர்.
கொள்கை முரண்பாடுகளும் முதல் மோதலும்அமைச்சரவை அமைக்கப்பட்ட சில நாட்களிலேயே சந்திரிகாவிற்கும் ஜே.வி.பி-க்கும் இடையில் மோதல் வெடித்தது. விவசாய அமைச்சராகப் பதவியேற்ற அநுரகுமார திஸாநாயக்க, மகாவலி அமைச்சையும் தனக்கு வழங்குமாறு கோரினார்.
ஆனால், சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன அந்த அமைச்சைத் தன்வசம் வைத்திருந்ததால், அதனை அநுரவுக்கு வழங்க மறுத்துவிட்டார்.
இதுவே முதல் மோதலாக அமைந்தது. அடுத்ததாக, நட்டத்தில் இயங்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் சந்திரிகாவின் திட்டங்களுக்கு ஜே.வி.பி அமைச்சர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.
ஜே.வி.பி-யின் நிபந்தனைகளால் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடனான கொடுக்கல் வாங்கல்களைச் சந்திரிகா நிறுத்த வேண்டியதாயிற்று. ஒருகட்டத்தில், சர்வதேச நாணய நிதியம் தனது கொழும்பு அலுவலகத்தை மூடிவிட்டு இலங்கையை விட்டே வெளியேறியது.
இலங்கை இத்தகையதொரு பொருளாதார, அரசியல் முட்டுக்கட்டையில் இருந்தபோதுதான் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 'சுனாமி' பேரழிவு நாட்டைத் தாக்கியது. நாடே நிலைகுலைந்து போயிருந்த வேளையில், அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நோர்வேயின் தலையீட்டுடன் ஒரு பிரம்மாண்டமான நிவாரணப் பொதி இலங்கைக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால், அதற்கு அரசாங்கமும் விடுதலை புலிகள் அமைப்பும் இணைந்து ஒரு கூட்டுப் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என சர்வதேச நாடுகள் நிபந்தனை விதித்தன.
இவ்வாறு உருவானதுதான் சுனாமி நிவாரணக் சபை (P-TOMS, Post-Tsunami Operational Management Structure) ஒப்பந்தம். ஜே.வி.பி, சந்திரிகாவுடன் கூட்டணி அமைத்த போதே இரண்டு முக்கிய நிபந்தனைகளை விதித்திருந்தது.
அதாவது நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் விடுதலை புலிகள் இயக்கத்துடன் செய்யக் கூடாது. அதே போன்று நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் விடுதலை புலிகளுடனான பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது. ஆனால், சந்திரிகா இந்த நிபந்தனைகள் அனைத்தையும் மீறினார்.
சுனாமிக்குப் பிந்தைய சூழலில் சந்திரிகாவின் அரசாங்கம் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வந்தது. அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்தி தங்களையும் பாதிக்கும் என்பதால், கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஜே.வி.பி-யின் உள்வட்டத்தில் அழுத்தம் அதிகரித்தது.
எனினும், திடீரென வெளியேறினால் மக்கள் மத்தியில் தவறான பிம்பம் ஏற்படும் என்று அவர்கள் அஞ்சினர். அரசாங்கத்தின் 'அழுக்குகளைச்' சுமக்காமல், சரியானதொரு காரணத்தைப் பிடித்துக்கொண்டு வெளியேற அவர்கள் காத்திருந்தனர்.
விடுதலை புலிகளுடன் சந்திரிகா கையெழுத்திட்ட சுனாமி நிவாரணக் சபை ஒப்பந்தம் அவர்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்தது. அழுவதற்குத் தயாராக இருந்த குழந்தையைக் கிள்ளிவிட்டது போல, அந்த ஒப்பந்தத்தைக் காரணம் காட்டி ஜே.வி.பி அரசாங்கத்திலிருந்து வெளியேறியது.
மக்களின் ஆதரவு மீண்டும் ஜே.வி.பி-யை நோக்கித் திரும்பியது. இந்த அரசியல் பலத்தைப் பயன்படுத்தித்தான், பின்னாளில் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் பணியில் ஜே.வி.பி தீவிரமாக இறங்கியது.
மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சியில் அமர்த்திய பின், அவரது அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்பதா இல்லையா என்ற குழப்பம் ஜே.வி.பி-க்கு இருந்தது.
ஜே.வி.பி-க்கு அமைச்சுப் பதவிகளைக் கொடுத்து அரசாங்கத்திற்குள் குழப்பங்களை ஏற்படுத்த மஹிந்தவும் விரும்பவில்லை. இதற்கிடையில், மஹிந்தவும் நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் விடுதலை புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி ஜே.வி.பி-யை இக்கட்டான நிலைக்குத் தள்ளினார்.
சந்திரிகாவிடமிருந்து பிரிந்து எதிர்க்கட்சிக்குச் சென்றது போல, மஹிந்தவிடமிருந்தும் பிரிந்தால் மக்கள் மத்தியில் தங்களது அரசியல் கேலிக்கூத்தாகிவிடும் என்பதை ஜே.வி.பி உணர்ந்திருந்தது.
இதனால், அவர்கள் மஹிந்தவை யுத்தத்தை நோக்கித் தள்ளும் உத்தியைக் கையாண்டனர்.யுத்தத்தின் ஆரம்பக் கட்டத்தில் மஹிந்த அரசாங்கம் கடுமையான இழப்புகளையும் விடுதலை புலிகளின் வான்வழித் தாக்குதல்களையும் எதிர்கொண்டது.
உலகப் பொருளாதார நெருக்கடியுடன் உள்நாட்டு யுத்தமும் சேர்ந்துகொள்ள, நாட்டின் பொருளாதாரம் பாதாளத்திற்குச் சென்றது. மஹிந்தவினால் இந்த யுத்தத்தை வெல்ல முடியாது என்றும், யுத்தம் நீடித்தால் அதன் பொருளாதாரப் பழி தங்கள் மீதும் விழும் என்றும் ஜே.வி.பி கணக்குப்போட்டது.
அதேநேரம், ஜே.வி.பி-க்குள் இருந்த விமல் வீரவன்ச போன்ற தேசியவாதத் தலைவர்களை மஹிந்த ராஜக்ஷ தன்வசப்படுத்தியதால் ஏற்பட்ட ஆத்திரமும் சேர்ந்துகொண்டது. இதன் காரணமாக, 2008ஆம் ஆண்டு மஹிந்தவின் வரவுசெலவுத் திட்டத்தைத் தோற்கடித்து அரசாங்கத்தை வீழ்த்த ஜே.வி.பி திட்டமிட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே ஜே.வி.பி-யைப் பிளவடையச் செய்து மஹிந்த பட்ஜெட்டை நிறைவேற்றிக் கொண்டார்.
இன்றைய யதார்த்தம்அன்று சந்திரிகா குமாரதுங்கவாக இருக்கட்டும், அல்லது மஹிந்த ராஜபக்ஷவாக இருக்கட்டும் அவர்களுடன் இணைந்து ஆட்சி செய்ய முற்பட்டபோதெல்லாம், அந்த அரசாங்கங்களின் பாவச்சுமைகளையும் தவறுகளையும் தங்கள் தோள்களில் சுமக்க அஞ்சி, சாமர்த்தியமாக ஜே.வி.பி பிரிந்து சென்றது.
ஆனால், இன்று நிலைமை முற்றிலும் தலைகீழானது. இன்று ஆட்சியில் இருப்பது ஜே.வி.பி-யின் சொந்த அரசாங்கம்;. நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருப்பது அவர்களின் சொந்தத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க. இன்று அநுரவின் அரசாங்கம் செய்யும் தவறுகளுக்கோ, எடுக்கும் முடிவுகளுக்கோ வேறு யாரையும் குற்றம் சுமத்த முடியாது. அந்தப் பாவச்சுமைகள் அனைத்தையும் ஜே.வி.பி-யே சுமக்க வேண்டியதுள்ளது.
அநுரவிடமிருந்து ஜே.வி.பி விலக வேண்டுமானால், அவரை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதியதொரு தலைவரை நியமிக்க வேண்டும்.
ஜே.வி.பி இதற்கு முன்பும் தலைவர்களை மாற்றியிருக்கிறது (உதாரணமாக, சோமவன்ச அமரசிங்க ஓரங்கட்டப்பட்டமை).
ஆனால், அன்று சோமவன்ச வெறும் சாதாரணக் கட்சி உறுப்பினராக மட்டுமே இருந்தார். இன்று அநுரகுமார திசாநாயக்க நாட்டின் விம்பமாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக வீற்றிருக்கிறார்.
எனவே, அநுரவிடமிருந்து ஜே.வி.பி பிரிவது என்பது அத்தனை எளிதான காரியமல்ல. அது, ஜே.வி.பி தற்கொலைத் குண்டு அங்கியொன்றை அணிந்துகொண்டு, தங்களது சொந்தத் தலைமையகமான பெலவத்தைக்குள் குதிப்பதைப் போன்றதொரு ஆபத்தான செயலாகவே அமையும்.
வரலாற்றில் பிறரது சுமைகளிலிருந்து தப்பி ஓடிய ஜே.வி.பி, இன்று தனது சொந்தத் தலைவரின் சுமையால் முடங்கிப்போயுள்ளது என்பதே தற்போதைய அரசியல் யதார்த்தமாக உள்ளது.
(லியோ நிரோஷ தர்ஷன்)
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!