news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அமெரிக்காவின் அடுத்த இலக்கு கியூபாவா?

03 Feb, 2026
- அமெரிக்காவின் தொடர் கடல் முற்றுகை! அ மெரிக்கவுக்கு அருகில் இருக்கும் கியூபா, நீண்ட காலமாக அமெரிக்காவின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது. வெனிசுலாவில் நிக்கோலஸ் மதுரோவை ஆட்சியில் இருந்து நீக்கி, கைது செய்துள்ள ட்ரம்ப் நிர்வாகம், அடுத்து கியூபா மீது தொடர்ச்சியாக நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. கியூபாவின் கம்யூனிஸ்ட் அரசு, எண்பது ஆண்டு காலத்துக்கு மேலாக அமெரிக்காவுடன் மோதி வருகிறது. பல காரணங்களுக்காக அதனை அமெரிக்காவினால் தொட முடியவில்லை. ஆனால் அமெரிக்காவால் பல தசாப்தங்களாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் காரணமாக, கியூபாவின் பொருளாதாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கியூபாவை அடக்க முயன்ற கென்னடி: 1960களில் கியூபாவினை அடக்கிக் காட்டுவேன் என முதலில் கிளம்பியவர் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி கென்னடி. அடுத்து என்ன செய்யலாம் என கென்னடி திட்டமிடும் போதுதான் கென்னடி யாரும் எதிர்பார்க்காத வகையில் சுட்டுக் கொல்லப்பட்டார். கென்னடியின் படுகொலையில் யாரும் நேரடியாக சிக்கவில்லை என்பதும் குற்றம்சாட்டபடவில்லை என்பதும் இன்னும் மர்மமாகவே உள்ளது. ஆனாலும் கியூபாவை இலகுவாக அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் பதிலுக்கு கியூபாவின் தோழமை வீரர் சே குவாரேவை பொலிவியாவில் கொன்று தனது பழியைத் தீர்த்துக் கொண்டது. 1991இல் சோவியத் யூனியன் வீழ்ந்தாலும், கியூபாவில் காஸ்ட்ரோவினால் அமெரிக்க எதிர்ப்பைத் தொடர முடிந்தது. நீண்ட வாழ்வைப் பெற்ற பிடல் காஸ்ட்ரோ தன் பழைய சோசலிச நாடுகளின் தொடர்பால் கியூபாவை ஓரளவு காத்தார். அவருக்கு பின் அவர் தம்பி ராவுல் காஸ்ட்ரோ அதைத் தொடர்ந்தார். ஆனால் கியூபாவில் படைகளை அனுப்பி, உட்புகுந்து தாக்கும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை. அப்படிச் செய்தால் பாரிய குழப்பம் வரும் என யோசித்தார்கள். அத்துடன் பெரிய எதிர்ப்பு கியூபாவில் முன்போல் இல்லை என்றாலும் கம்யூனிச ஆட்சியை அமெரிக்காவால் வீழ்த்த முடியவில்லை. சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகு வெனிசுலாவின் எண்ணெய் தான், கியூபாவுக்கு பெரும் பொருளாதார பலமாக அமைந்தது. வெனிசுலா மதுரோவின் வீழ்ச்சியை அடுத்து, கியூபாவை நோக்கி அமெரிக்க அரசு அழுத்தத்தை செலுத்தி வருகிறது. ஏனெனில் இப்போது வெனிசுலா எண்ணெய் கியூபாவுக்குச் செல்வதில்லை என்பதால், ஹவானா அரசு வீழ்ச்சியடையத் தொடங்குகின்றது என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. வெனிசுலா, ரஷ்யா, ஈரான், சீனா, கியூபா என எல்லா நாடுகளுமே அமெரிக்க எதிர்ப்பு நாடுகளாகும். இந்த நாடுகளுக்கு ரஷ்யா ஆயுத உதவி வழங்கலாம். ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்யலாம். இப்படியான அணியில் வெனிசுலாவின் எண்ணெய் கியூபாவுக்கு பெரும் பலமாக இருந்து வந்தது. அமெரிக்காவில் இருந்து 90 மைல் தொலைவில் உள்ள கியூபாவின் எரிபொருள்தான் இந்த நாட்டின் மிகப்பெரிய மூலதனமாகும். தற்போது எரிபொருள் விலை உயர்ந்து வருவதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அத்துடன் எப்போதெல்லாம் அமெரிக்காவில் வலுவான தலைமை வருமோ அப்போதெல்லாம் கியூபாவை நோக்கிய அழுத்தம் அதிகரிக்கும். நீண்ட பகை தீர்க்க்கும் ட்ரம்ப்: கியூபா இப்போது பெரும் சிக்கலில் உள்ளது. கென்னடியால், ரீகனால் சாதிக்க முடியாததை தான் சாதித்து அமெரிக்காவின் களங்கம் துடைக்கப்போவதாக ட்ரம்ப் மார்தட்டியுள்ளார். இம்முறை அமெரிக்காவுக்கு வெற்றி கிடைக்கலாம். அதை பெற்றுவிட்டால் நிச்சயம் அமெரிக்க வரலாற்றில் மிக வலுவான தலைவர், பெரிய காரியங்களை செய்த இரும்பு மனிதர் என அவர் வரலாற்றில் இடம்பெறுவார் என்பது உறுதியாகும். கியூபாவில் அமெரிக்க ஆதரவு ஆட்சி அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். கியூபாவுக்கு சீன உதவி: அமெரிக்காவின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வரும் கியூபாவுக்கு ஆதரவையும் உதவியையும் வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது. வெனிசுலாவில் நிக்கோலஸ் மதுரோவை ஆட்சியில் இருந்து நீக்கி, கைது செய்துள்ள ட்ரம்ப் நிர்வாகம், அடுத்து கியூபா மீது தொடர்ச்சியாக நெருக்கடி அளித்து வந்தது. இந்த நிலையிலேயே, கியூபாவுக்கு ஆதரவாக சீனா களமிறங்கியுள்ளது. சீனாவும் கியூபாவும் நீண்டகாலமாக சோசலிச நேச நாடுகளாகும். மேலும், அமெரிக்காவால் பல தசாப்தங்களாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை சீன நிர்வாகம் தொடர்ச்சியாக எதிர்த்தும் வந்துள்ளது. கியூபாவின் வீழ்ச்சி உறுதி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து, இந்தப் பதற்றங்கள் தீவிரமடைந்துள்ளன. கியூபாவிடம் ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள் அல்லது வெனிசுலாவைப் போன்ற நிலைக்கு தள்ளப்படுவீர்கள் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் கியூபா மீதான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு சீனா தனது எதிர்ப்பையும் வெளிப்படுத்துகிறது. பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை குறைமதிப்புக்கு உட்படுத்துவதை நிறுத்துமாறு அமெரிக்காவை சீனாவும், ரஷ்யாவும் வலியுறுத்தி வருகின்றன. கடல் முற்றுகையில் கியூபா : கியூபாவிற்கு எதிரான முற்றுகையையும் தடைகளையும் உடனடியாக நீக்குமாறு அமெரிக்காவை பல நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. கியூபாவுக்கு முடிந்தவரை அதிக ஆதரவையும் உதவியையும் சீனா தொடர்ந்து வழங்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக, கியூபாவுக்குள் நுழையும் அனைத்து எண்ணெய் இறக்குமதிகளையும் நிறுத்துவதற்காக, ட்ரம்ப் நிர்வாகம் ஒரு கடற்படை முற்றுகையை தொடங்கியுள்ளது. கியூபாவில் எண்ணெய் இறக்குமதியை முடக்கினால் ஆட்சியை வீழ்த்த முடியும் என ட்ரம்ப் நிர்வாகத்தின் முதன்மை அதிகாரி குறிப்பிட்டிருந்ததார். ஆனாலும் கியூப ஜனாதிபதி மிகுவல் டயஸ்-கனெல் அமெரிக்காவிலிருந்து ஏற்படக்கூடிய சாத்தியமான ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று அண்மையில் தெரிவித்திருந்தார். இலத்தீன் அமெரிக்க ‘மன்ரோ கோட்பாடு’ வெனிசுலாவை தொடர்ந்து இலத்தீன் அமெரிக்காவின் மற்ற இரு நாடுகளான கொலம்பியா மற்றும் மெக்சிகோ மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி அச்சுறுத்தியுள்ளார். இதனால் கியூபா தானாகவே வீழ்ந்துவிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 19ஆம் நூற்றாண்டின் ‘மன்ரோ கோட்பாடு’ என்பது, அதாவது மேற்கு அரைக்கோளத்தை அமெரிக்காவின் செல்வாக்கு மண்டலமாக அறிவிக்கும் கொள்கை. இதனையே தற்போது ட்ரம்ப் பின்பற்றுவது போல தெரிகிறது. கியூபா மீதான பொருளாதாரத் தடை: பனிப்போர் காலத்தில் பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான புரட்சிக்குப் பிறகு அமெரிக்காவுடனான உறவு துண்டிக்கப்பட்டது. ஆனாலும் பராக் ஒபாமா காலத்தில் உறவைச் சீராக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், டிரம்ப் தனது முதலாவது பதவிக்காலத்தில் கியூபா மீது மீண்டும் கடுமையான தடைகளை விதித்தார். 2020 முதல் கியூபா கடும் பொருளாதார வீழ்ச்சியில் உள்ளது. வரலாற்று ரீதியாகவே அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே சுமுகமான உறவு ஒருபோதும் இருந்ததில்லை. இன்று கியூபா தனது பொருளாதார, எண்ணெய் தேவைக்காக வெனிசுலாவைச் சார்ந்துள்ளது. மேலும் சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து முதலீடுகளைப் பெற்று வருகிறது. இன்றைய நிலையில் வெனிசுலாவின் பொருளாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், கியூபா ரஷ்யாவிடம் மீண்டும் உதவியை நாடியுள்ளது. இரண்டாவது பதவிக்காலத்திலும், ட்ரம்ப் கியூபா மீது கடும் பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து வருகிறார். மேலும் கியூபாவின் பொருளாதாரத் தூணான சுற்றுலாத் துறையை அவர் குறிவைத்துள்ளார். வெனிசுலாவில் மதுரோவின் கைதால் கியூப பொருளாதாரம் மேலும் சிதையும் என்றும், அது வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஐங்கரன் விக்கினேஸ்வரா

Comments

Write the comments...............