மத்திய கிழக்கு பிராந்தியத்தை ஸ்திரமற்ற நிலைக்கு ஆளாக்கும் வகையில் பலஸ்தீனர்களை படுகொலைகள் மற்றும் இனப்படுகொலைகள் மூலம் அழித்தும், அவர்களின் சொத்துக்களை கொள்ளையடித்தும் பலஸ்தீன நிலங்களில் நிறுவப்பட்ட செயற்கை அரசான இஸ்ரேல், மற்றும் குருட்டுத் தனமாக அதை ஆதரிக்கும் அமெரிக்க, பிரித்தானிய, ஐரோப்பிய ஆதரவாளர்கள் என எவருமே எந்த ஒரு முஸ்லிம் நாடும் அணு ஆயுதங்களை வைத்திருப்பதை விரும்பவில்லை. விரும்பப் போவதும் இல்லை.
அணு ஆயுதங்களை வைத்திருக்கும் உலகின் ஒரே முஸ்லிம் நாடு பாகிஸ்தான் மட்டுமே ஆகும். எவ்வாறாயினும், பாகிஸ்தான் அதன் வரலாற்றில் நீண்ட காலமாக அமெரிக்க சார்பு சர்வாதிகாரிகளால் தான் மறைமுகமாக ஆளப்பட்டு வருகின்றது. ஒருவேளை, பாகிஸ்தான் விடயத்தில் மேற்கத்திய நாடுகள் கண்மூடித்தனமாகவும் சகிப்புத் தன்மையுடனும் இருப்பதற்கு இதுவே காரணமாகவும் இருக்கலாம்.
முஸ்லிம் உலகில் தனது அணுசக்தி திட்டத்தை தொடங்கியுள்ள அடுத்த நாடு ஈரான் இஸ்லாமிய குடியரசு ஆகும். ஈரான், மத்திய கிழக்கில் அமெரிக்க-, இங்கிலாந்து-, ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய தீய வடிவமைப்புகளை துணிச்சலாகவும், வெளிப்படையாகவும் எதிர்க்கும் சுதந்திர போக்குள்ள நாடாகும்.
உண்மையில் எந்த ஓர் அரபு நாடும் அணுசக்தி வசதிகளை உருவாக்க முயற்சிக்கவில்லை. அது பற்றி யோசிக்கும் துணிச்சல் கூட அவர்களிடம் இல்லை. இஸ்ரேலும் அதன் போர் வெறி கொண்ட அமெரிக்க, -ஐரோப்பிய குழுவும், 1979 இல் ஈரானிய இஸ்லாமிய குடியரசு நிறுவப்பட்ட காலத்திலிருந்து, இஸ்லாமிய ஆட்சியை கவிழ்க்கவும், அதன் அணுசக்தி திட்டத்தை நிறுத்தவும் பெரும் முட்டுக் கட்டைகளை ஏற்படுத்தின.
ஈரானின் அணுசக்தி திட்டத்தை அகற்றுவதற்காகவே, இஸ்ரேல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அச்சுறுத்தி, ஏமாற்றி, 2026 பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது போரைத் தொடங்கும் அளவுக்கு இழுத்துச் சென்றது. ஆனால், ஈரானையும் அதன் அணுசக்தி திட்டத்தையும் அழிப்பதற்குப் பதிலாக, அமெரிக்க, -இஸ்ரேல் தரப்புக்கு பேரழிவாகவே அமைந்தது.
ஈரான் வழங்கிய பதிலடி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிர்பார்க்காத தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. உலகளவில் பொருளாதார குழப்பத்தை ஏற்படுத்தியது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்பு, அவர்களது சொந்த நாடுகளிலும் உலகெங்கிலும் தீவிரமடைந்து வருவதால், “தற்போது போர் இல்லை அமைதி” என்ற நிலைமை தொடருகின்றது. இதற்கிடையில் ஈரான் தான் அணு ஆயுதம் வைத்திருக்கப் போவதில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 2 ஆம் திகதி கூறினார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, ஈரானிலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியம் அகற்றப்படும் வரை போர் நிறுத்தம் குறித்து தான் கருத்தில் கொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், ஈரானின் அதி உச்ச தலைவர் ஆயதுல்லா மொஜ்தபா கமேனி தனது நாட்டில் உள்ள ஆயுத உற்பத்தி தரம் கொண்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடாது என்று ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன் மூலம் சமாதானப் பேச்சுக்களில் அமெரிக்கா விதித்துள்ள முக்கிய நிபந்தனைகளில் ஒன்றின் மீதான தெஹ்ரானின் நிலைப்பாட்டை அவர் கடுமையாக்கி உள்ளார்.
இந்த உத்தரவு ஜனாதிபதி ட்ரம்பை மேலும் விரக்தியடையச் செய்து, ஈரான் மீதான அமெரிக்க,- இஸ்ரேல் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுக்களை சிக்கலாக்கி உள்ளது. யுரேனிய இருப்புக்களை வெளிநாடுகளிடம் ஒப்படைப்பது, எதிர்காலத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ஈரானை மிக இலகுவான ஒரு இலக்காக ஆக்கிவிடும் என்று ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் நம்புகின்றனர். எவ்வாறாயினும், மிக முக்கியமான அரச விடயங்களில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் கமேனியை சார்ந்தது.
தற்போதைய போருக்கு முன்னர், ஈரான் தனது 60% செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பில் பாதியை வெளியில் அனுப்பி வைப்பதற்கான ஓரளவு சமிக்ஞையை வெளிப்படுத்தி இருந்தது. இது பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் தேவையானதை விட மிக அதிகமாகும். ஆனால், ஈரான் மீதான தாக்குதலுக்குப் பிறகு அந்த நிலைப்பாடு மாறியதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உலகில் ஒன்பது நாடுகள் அணு ஆயுதங்களை வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், பாகிஸ்தான், இந்தியா, இஸ்ரேல் மற்றும் வட கொரியா என்பன அடங்கும். இந்த நாடுகள் சுமார் 12,000 அணு ஆயுதங்களை உலகளாவிய கையிருப்பில் வைத்திருக்கின்றன. இதில் மொத்தமாக சுமார் 90% ரஷ்யா மற்றும் அமெரிக்காவிடம் உள்ளன.
இவற்றுக்கு மேலதிகமாக இன்னும் நான்கு நாடுகள் அணு சக்தி ஆயுதங்களை வைத்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அல்லது இந்த நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளதாக பரவலாக நம்பப்படுகின்றது. ஆனால், அவை அணு ஆயுதம் சம்பந்தமான எந்த ஒப்பந்தங்களிலும் இதுவரை கையெழுத்திடவில்லை.
• இந்தியாவிடம் 180 அணு ஆயுதங்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
• பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
• இஸ்ரேல் இந்த விடயத்தில் மிகவும் தந்திரமாக, ஒரு தெளிவற்ற கொள்கையை பேணுகின்றது. அணு ஆயுதங்கள் உள்ளதை அது இதுவரை அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டதில்லை. இருப்பினும் இஸ்ரேலிடம் 90 அணு ஆயுதங்கள் உள்ளதாகப் பரவலாக நம்பப்படுகின்றது.
• வட கொரியா பல அணு ஆயுதங்களை சோதனை செய்துள்ளது. சுமார் 50 அணு ஆயுதங்கள் அங்கு இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
1950 களின் பிற்பகுதியிலும் 1960 களிலும் பிரான்ஸிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட இரகசிய தொழில்நுட்ப மற்றும் உட்கட்டமைப்பு உதவிகளுடன் இஸ்ரேல் தனது அணுசக்தி வளர்ச்சியைத் தொடங்கியது.
அதன் நிலத்தடி டிமோனா அணு ஆயுத தள வசதியின் உண்மையான அளவு 1986 ஆம் ஆண்டில் பகிரங்கமானது. முன்னாள் அணுசக்தி தொழில்நுட்ப வல்லுநர் மொர்டெச்சாய் வனுனு இது சம்பந்தமான புகைப்படங்களையும் ஏனைய சில விபரங்களையும் பிரிட்டிஷ் பத்திரிகைகளுக்கு கசிய விட்டார். இஸ்ரேல் ஒரு நவீன மயமான வெப்ப அணுசக்தி திறனை உருவாக்கியுள்ளது என்பதை இதன் மூலம் உலகம் தெரிந்து கொண்டது.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) இஸ்ரேல் இதுவரை கையெழுத்திடவில்லை. இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் ஒருபோதும் கையெழுத்திடாததால், சர்வதேச அணுசக்தி முகாமை நிலையத்தின் (IAEA) சர்வதேச சோதனைகள் அல்லது பாதுகாப்புகளுக்கு இஸ்ரேல் உட்பட்டது அல்ல.
இஸ்ரேலின் அணு ஆயுத கையிருப்பின் மதிப்பீடுகள் 90 முதல் 400 வரை உள்ளன. மேலும் அந்த நாடு ஆகாயம், தரை மற்றும் கடல் வழியாக அணு சக்திக்கான மூன்று விதமான விநியோக முறைகளையும் கொண்டுள்ளதாக நம்பப்படுகின்றது. இஸ்ரேலினால் விநியோகிக்கக் கூடிய முதலாவது அணு ஆயுதம் 1966 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 1967 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தயாரித்து முடிக்கப்பட்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒன்பது அணு ஆயுத நாடுகளில் ஆறாவது இடத்தைப் பிடித்திருக்கும் நிலையாகும்.
இஸ்ரேலின் முதலாவது பிரதமர் டேவிட் பென்-கூரியன், ஹோலோகோஸ்ட் மீண்டும் நிகழாமல் தடுக்க, அணு ஆயுதங்களைப் பெறுவதில் "கிட்டத்தட்ட வெறித்தனமாக" இருந்தார் என்று கூறப்படுகின்றது. "யூதர்களான ஐன்ஸ்டீன், ஓபன்ஹைமர் மற்றும் டெல்லர் ஆகிய மூவரும் அமெரிக்காவுக்காக உருவாக்கியதை இஸ்ரேலில் உள்ள யூத விஞ்ஞானிகளால் தங்கள் சொந்த மக்களுக்காகவும் உருவாக்க முடியும்" என்று அவர் வாதிட்டார்.
இஸ்ரேல் என்ற அரசை நிறுவிய 1948 அரபு- இஸ்ரேலியப் போர் முடிவடைவதற்கு முன்பே, வெளிநாடுகளில் இருந்து யூத விஞ்ஞானிகளை இதற்கென நியமிக்க பென்- கூரியன் முடிவு செய்தார். அவரும் மற்றவர்களும், வெயிஸ்மன் அறிவியல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் பாதுகாப்பு அமைச்சக விஞ்ஞானி எர்ன்ஸ்ட் டேவிட் பெர்க்மேன் போன்றவர்களும், ஓபன்ஹைமர் மற்றும் டெல்லர் போன்ற யூத விஞ்ஞானிகள் இஸ்ரேலுக்கு உதவுவார்கள் என்று நம்பினர்.
இவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்து நின்ற உலகம், ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதைத் தடுக்க மட்டும் பொருளாதாரத் தடைகளை விதித்தது. அதே வேளையில், அமெரிக்க-இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா என்பன, இஸ்ரேல் தனது அணு ஆயுதத்தை உருவாக்க பூரண சுதந்திரத்தை வழங்கின.
ஒரு அணு ஆயுதம் பல்லாயிரக்கணக்கான அல்லது இலட்சக் கணக்கான மக்களைக் கொல்லக் கூடும். இது நீடித்த மற்றும் பேரழிவுகரமான மனிதாபிமான மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகளை ஏற்படுத்தவும் கூடும். அமெரிக்காவின் நியூயோர்க்கில் மட்டும் 1 அணு ஆயுதத்தை வெடிக்கச் செய்தால், அது 583,160 உயிர்களை பறிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
லத்தீப் பாரூக்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!