news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அமைதி ஒப்பந்தத்தை ஈரான் நிராகரிப்பதால் மீண்டும் பதற்றம்!

01 Jun, 2026
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அமைதி ஒப்பந்தம் கோரி பலமுறை தொடர்பு கொண்டாலும், ஈரான் அதை நிராகரித்து வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் தரப்பு ட்ரம்ப் மீது கடுமையான அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூன்று மாதங்களாக நீடித்த மோதலுக்கு தற்காலிக தீர்வு காணும் வகையில் 60 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானின் அணு ஆயுதத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளவும் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த முன்னேற்றம் உலகப் பொருளாதாரத்துக்கு நிம்மதியை அளித்துள்ளது.

ஆனால், இந்த ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இஸ்ரேல் மாற்றுத் திட்டத்தை முன்வைத்து அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்ய டிரம்ப்பை தூண்டி வருகிறது.

ஈரான் தரப்பில் இருந்து வரும் தகவலின்படி, ட்ரம்ப் நிர்வாகம் ஒப்பந்தம் கோரி தினமும் பல்வேறு வழிகள் மூலம் தொடர்பு கொண்டு வருகிறது. ஆனால், ஈரான் தனது நிபந்தனைகள் முழுமையாக ஏற்கும் வரை எந்த பதிலும் அளிக்காது என்ற உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது. ஈரான் பாராளுமன்ற தலைவர் கலிபாப் உடன் நெருக்கமான வட்டாரங்கள், “ஈரான் ட்ரம்ப் நிர்வாகத்தின் மீது எந்த நம்பிக்கையும் வைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளன.

மேலும், நிதிச் சந்தைகள் மூடும் வரை காத்திருந்து ட்ரம்ப் ஒப்பந்தத்தை ரத்து செய்து தாக்குதலை மீண்டும் தொடங்கலாம் என்ற அச்சமும் ஈரான் தரப்பில் நிலவுகிறது.

இதேவேளையில், இஸ்ரேல் அதிகாரிகள் ட்ரம்ப் நிர்வாகத்தை இரகசியமாக அணுகி, ஈரானுடனான பேச்சுவார்த்தைகளை முழுமையாக கைவிடுமாறு வலியுறுத்தி வருகின்றனர். 

ஈரான் பேச்சுவார்த்தை குழுவின் தலைவராக இருக்கும் கலிபாப்-ஐ கொலை செய்யவும், ஈரானின் எண்ணெய் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை உடனடியாக தாக்கி ஆட்சி மாற்றம் ஏற்படுத்தவும் இஸ்ரேல் வலியுறுத்துவதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தரப்பு, ஈரானின் பதிலடியால் வளைகுடா பகுதியில் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளைப் பொருட்படுத்தாமல் தாக்குதலைத் தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது.

ஈரான் – அமெரிக்க மோதல் தொடர்ந்தால், உலக அளவில் எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்படும் அபாயம் உள்ளது. 

ஏற்கனவே மூன்று மாதங்களாக நீடித்த இந்த மோதல் உலகப் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. தற்போதைய சூழல் மிகவும் முக்கியமானது, ஒருபுறம் அமெரிக்கா ஒப்பந்தத்தை விரும்பினாலும், இஸ்ரேலின் அழுத்தம் மற்றும் ஈரானின் கடுமையான நிலைப்பாடு காரணமாக பேச்சுவார்த்தைகள் சிக்கலில் உள்ளன.

அடுத்த சில நாட்களில் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்படுமா அல்லது மீண்டும் மோதல் தீவிரமடையுமா என்பதை உலகம் உன்னிப்புடன் கவனித்து வருகிறது.

இது இவ்விதமிருக்க ஈரான் மீது அமெரிக்க இராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது உறுதியாகி உள்ளது. தற்காப்புக்காக ஈரானின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தெற்கு ஈரானில் உள்ள ஈரானின் ஏவுகணை தளம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இது போர்நிறுத்த அத்துமீறல் என ஈரான் குற்றச்சாட்டு வைத்தது.

தற்காப்பு கருதி இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது. இந்தத் தாக்குதலில் நான்கு ட்ரோன்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. 

அதோடு பந்தர் அப்பாஸில் ட்ரோன்களை ஏவுவதற்கு பயன்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு மையத்தையும் அமெரிக்கா தாக்கியுள்ளது. 

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு இந்த ட்ரோன்கள் அச்சுறுத்தலாக விளங்கியது என அமெரிக்கா விளக்கம் தந்துள்ளது. 

இதற்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்க இராணுவ தளம் மீது உள்ளூர் நேரப்படி இரு தினங்களுக்கு முன்னர் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இருப்பினும் எந்த பகுதியில் இந்த தாக்குதல் நடந்தது என்பது குறித்து ஈரான் உறுதி செய்யவில்லை. அத்தோடு அமெரிக்கா மீது போர் நிறுத்த அத்துமீறல் குற்றச்சாட்டை ஈரான் முன்வைத்துள்ளது. இருதரப்புக்கு இடையிலும் அமைதி உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே இந்த தாக்குதல் முடிவுக்கு வரும் என்று நம்பப்படுகின்றது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!