தேர்தல் மற்றும் ஏனைய அரசியல் பிரச்சினைகளை விட குடும்ப பிரச்சினையே கருணாநிதியின் அன்றாட நேரத்தை அரிக்கும் அமிலமாக இருக்கிறது.

ஏதோ ஒரு வகையில் கட்சியை தமது சுயநலத்திற்காகவாவது கட்டுப்பாட்டோடு வைத்திருக்க வேண்டும் என்பதைத் தாண்டி திமுகவில் வேறு கட்டுப்பாடுகள் இல்லை. இதுதான் ஸ்டாலினுக்கு உள்ள பலம். ஆனாலும் இந்த பலமும் தேர்ந்தெடுக்கப்பட்ட தொண்டர்களின் கட்சி அமைப்பு தருகின்ற பலம் அல்லை என்பது அவருக்குள்ள பலவீனம்.

ஆகவே சுயநலமும், காரியவாதமும் கைகூடி நடத்தும் இந்த குடும்ப அரசியலில் குத்து வெட்டுக்களும், அதிரடி திருப்பங்களும் அடிக்கடி நடக்கும். அதிலும் திராவிட இயக்க வெறுப்பை தேடி ஆதாயம் அடையத் துடிக்கின்றன பார்ப்பன ஊடகங்கள்.

அதனாலேயே வில்லன் நிலையிலிருந்த அழகிரிக்கு இன்று கோபக்கார கதாநாயகன் நிலைக்கு உயர்த்திருக்கிறார்கள். விரைவேலேயே அது காமடி டிராக்காக மாற்றப்படும் என்றாலும் அழகிரி அதையும் ஒரு விளம்பரமாக எடுத்துக் கொள்வார். காரணம் அவரது அஞ்சா நெஞ்சம் அத்தனை அறிவு வறட்சியை உடையது.

கோவை செம்மொழி மாநாட்டின் முதல் வரிசைகளில் கருணாநிதியின் குடும்பத்தினரே ஆக்கிரமித்திருந்த போது கருணாநிதியின் மனதில் ராஜ கம்பீரம் கொடிகட்டிப் பறந்திருக்கும். இந்தக் கொடிக்கு திமுகவின் அமைப்பு விதிகளோ இல்லை கட்சி தொண்டர்களோ எந்த விதியின் கீழ் இடமளித்திருந்தார்கள்?

ஆகவே அழகிரியை நிரந்தர நீக்கம் என்று திமுக தலைமை தண்டித்திருக்கலாம். ஆனால் அந்த தண்டனை கருணாநிதிக்கு கிடையாதா? அழகிரியாவது தனது வாரிசுகளை இன்னமும்  தென் தமிழக திமுகவின் இளவரசர்களாக அறிவிக்கவில்லை. ஆனால் கருணாநிதி?