அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த நிலையில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் உத்தியோகத்தர்களை எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்றப் பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர்கள் ஹட்டன் நீதிமன்றப் பதில் நீதிவான் நாராயணன் பார்த்தீபன் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (02) அன்று காலை ஆஜர்படுத்தப்பட்டபோதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
அஸ்வெசும ஊழல் தொடர்பாக நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு அரச ஊழியர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதனை அடுத்து, மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோனின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
நோர்வூட் பிரதேச செயலகத்தில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய குறித்த இரு உத்தியோகத்தர்களும் விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கும், மற்றொருவர் தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கும் இடமாற்றப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, நோர்வூட் பிரதேச செயலாளரால் ஹட்டன் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை (31.07.2026) மாலை ஹட்டன் விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் 33 மற்றும் 30 வயதுகளை உடைய கைது செய்யப்பட்ட இரண்டு பெண் உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும் 2025 ஆம் ஆண்டு முதல் இதுவரை காலப்பகுதியில் 2,989,500 ரூபாய் (29 இலட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய்) மோசடி செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளில் ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெற்றதாகக் கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அஸ்வெசும ஊழல் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக நோர்வூட் பிரதேச செயலகத்தின் கீழ் பணிபுரியும் சுமார் 30 க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்களிடம் இருந்து தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. மேலும், உள்ளகக் கணக்காய்வு அதிகாரிகள் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அஸ்வெசும தொடர்பான கணினிகளும் உள்ளகக் கணக்காய்வு அதிகாரிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!