news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஆமையும் முயலும் : நிலவுப் பயணப் போட்டியில் அமெரிக்காவை சீனா முந்துமா?

12 May, 2026

ஆமையும் முயலும் : நிலவுப் பயணப் போட்டியில் அமெரிக்காவை சீனா முந்துமா?

நாசா (Nasa) நான்கு விண்­வெளி வீரர்­களை நிலவைச் சுற்றி வரச் செய்­ததை கடந்த மாத  தொடக்­கத்தில் உலகம் கவ­னித்­தது. ஆனால், நிலவின் மேற்­ப­ரப்பில் உண்­மை­யா­கவே தரை இறங்­கு­வ­தற்கு அமெ­ரிக்கா மீண்டும் ஒரு விண்­வெளிப் போட்­டியில் இறங்­கி­யுள்­ளது. சீனா­வு­டன்தான்  இம்­முறை அந்தப் போட்டி. அதில் சீனா வெற்றி பெறவும் வாய்ப்­புள்­ளது.

இரு நாடு­களும் நிலவில் மனி­தர்கள் வசிக்­கக்­கூ­டிய தளங்­களை அமைக்கத் திட்­ட­மிட்­டுள்­ளன. - இது மற்­றொரு கிர­கத்தில்  அமையும் முதல் குடி­யேற்­ற­மாக இருக்கும். அத்­துடன் அரிய வளங்­களைத் தேடு­வதும் செவ்வாய்க்கிர­கத்­திற்­கான எதிர்­கால மனிதப் பய­ணங்­க­ளுக்­கான தொழில்­நுட்­பங்­களை ஆழ­மான விண்­வெளிச் சூழலில் சோதிப்­ப­தையும் அவை நோக்­க­மாகக் கொண்­டுள்­ளன.

நன்கு நிதி வசதி கொண்ட சீன தேசிய விண்­வெளி நிர்­வாகம் (CNSA) , அமெ­ரிக்­கா வின் தேசிய வானூர்­தி­யியல் மற்றும் விண்­வெளி நிர்­வா­கத்­துடன் (NASA) போட்­டி­யி­டு­கி­றது.

அப்­பலோ திட்­டத்தின் மூலம் ஏற்­க­னவே நிலவில் தரை­யி­றங்­கிய அனு­ப­வமும்  நிறு­வன ரீதி­யான அறிவும்  நாசா­வுக்குச் சாத­க­மாக இருந்­தாலும், 1960 களில் இருந்த தேசிய பட்ஜட் ஒதுக்­கீட்டில் ஒரு சிறிய பகு­தியை மட்­டுமே கொண்டு மீண்டும் நில­வுக்குச் செல்ல அது முயற்­சிக்­கி­றது.

மேலும், அமெ­ரிக்க விண்­வெளி முகா­மை­யா­னது ஒவ்­வொரு நான்கு ஆண்­டு­க­ளுக்கும் மாறும் அர­சாங்க மாற்­றங்­களால் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய சூழலில் உள்­ளது. இது தசாப்த காலத் திட்­டங்­களைத் தடை­யின்றித் தொடர்­வதைக் கடி­ன­மாக்­கு­கி­றது.

ஆனால், ஒரு கட்சி ஆட்சி நடை­பெறும் சீனாவில் பணி­பு­ரியும் ரொக்கெட் பொறி­யி­ய­லா­ளர்­க­ளுக்கு இத்­த­கைய பாதிப்­புகள் இல்லை.

வேக­மாக முன்­னே­று­வ­தற்­காக, நிலவில் இறங்கும் விண்­க­லங்­களை வடி­வ­மைக்கும் முக்­கியப் பணி­களை நாசா தனியார் நிறு­வ­னங்­க­ளிடம் ஒப்­ப­டைத்­துள்­ளது. 

இதில் வளர்ந்து வரும் விண்­வெளிப் பொரு­ளா­தா­ரத்தைப் பயன்­ப­டுத்திக் கொள்ளத் துடிக்கும் கோடீஸ்­வ­ரர்­களின் நிறு­வ­னங்­களும் அடங்கும்.


இலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ்  (SpaceX)மற்றும் ஜெஃப் பெசோஸின் புளூ ஒரிஜின் (Blue Origin) ஆகிய இரண்டு நிறு­வ­னங்­களும்  அடுத்த ஆண்டு சோதனை ஓட்­டங்­களை நடத்­து­வ­தற்­காக நிலவில் இறங்கும் வாக­னங்­களை வடி­வ­மைப்­பதில் மும்­மு­ர­மாக உள்­ளன.

சோவியத் யூனி­ய­னுக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடையே நில­விய பழைய நிலவுப் போட்­டியைப் போன்று இல்­லாமல், 21ஆம் நூற்­றாண்டின் இந்தப் போட்டி ஒரு மரதன்  ஓட்­டத்தைப் போன்­றது. இது பல ஆண்­டு­களில் பல விண்­க­லங்­களை ஏவும் பிரம்­மாண்­ட­மான முயற்­சி­யாகும்.

ஸ்கொட்­லாந்து  வானி­யற்­பியல் வல்­லு­நரும் ரொக்கெட் பொறி­யியல் நிபு­ண­ரு­மான ஸ்காட் மேன்லி இது குறித்துக் கூறு­கையில்,

"யார் அடுத்­த­தாக நில­வுக்குச் செல்­கி­றார்கள் என்­பது முக்­கி­ய­மல்ல. அடுத்த 10 முறை யார் நில­வுக்குச் செல்­கி­றார்கள் என்­பதே முக்­கியம். 

தொடர்ந்து பய­ணங்­களை மேற்­கொள்ளும் நாடே உண்­மை­யான வெற்­றியைப் பெறப் போகி­றது. விண்­வெ­ளியில் தனது ஆதிக்­கத்தை நிலை­நாட்­டப்­போ­கி­றது. அதுவே மிக முக்­கி­ய­மா­னது"  என்றார்.


விண்­வெளி என்­பது தெளி­வற்ற சட்டக் கருத்­தொ­ரு­மிப்பைக்  கொண்ட ஒரு பகு­தி­யாக இருப்­பதால், வளங்கள் நிறைந்த நிலவின் மேற்­ப­ரப்பில் முதலில் காலடி எடுத்து வைக்கும் நாடு, அதற்­கான விதி­களை வகுப்­பதில் முன்­னிலை வகிக்கும்.

இருந்­த­போ­திலும், நில­வுக்குச் சென்று திரும்பும் முதல் மனிதப் பயணம் என்­பது உள்­நாட்­டிலும் சர்­வ­தேச அள­விலும் ஒரு வலி­மை­யான அடை­யாள வெற்­றி­யாக அமையும் என்­பதில் சந்­தே­க­மில்லை. 

இந்த போட்­டித்­தன்­மையை நாசா தொடர்ந்து முன்­னி­லைப்­ப­டுத்தி வரு­கி­றது. ஏனெனில், இத்­த­கைய அவ­சர நிலையை உரு­வாக்­கு­வதன் மூலமே காங்­கி­ர­ஸி­ட­மி­ருந்து  அதற்­கான நிதியைப் பெற முடியும் என்­பதில் நாசா ஆர்­வ­மாக உள்­ளது.

"விண்­வெ­ளியின் உயர்­மட்டப் பகு­தியை அடை­வதில் உல­க­ளா­விய அதி­காரப் போட்டி நில­வு­கி­றது" என்று  தெரி­வித்த நாசாவின் தலைவர் ஜாரெட் ஐசக்மேன், "போட்டி என்று வரும்­போது, யாரும் தோற்க விரும்­பு­வ­தில்லை" என்றும் கூறினார்.

இது ஒரு கடு­மை­யான போட்­டி­யாகும்.  நாசா 2028 ஆம் ஆண்டில்  நிலவில் இறங்கத் திட்­ட­மிட்­டுள்­ளது (இருப்­பினும் இது தாம­த­மாகவும் வாய்ப்­புள்­ளது), சீனா 2030 ஆம் ஆண்­டுக்குள் அங்கு செல்லத் திட்­ட­மிட்­டுள்­ளது 

(ஆனால், இது அதற்கு முன்பே நடக்­கக்­கூடும்). "வெற்­றிக்கும் தோல்­விக்கும் இடை­யி­லான வித்­தி­யாசம் வரு­டங்­களில் அல்ல, மாதங்­க­ளி­லேயே இருக்கும்" என்­கிறார் ஐசக்மேன்.


சீனாவின் மனித விண்­வெளிப் பயணம் 1990களில் தொடங்­கப்­பட்­டி­ருந்­தாலும், கடந்த 25 ஆண்­டு­களில் அது பெரும் வேக­மெ­டுத்­துள்­ளது. 

மேலும், இத்­திட்டம் அந்­நாட்டு இரா­ணுவம் மற்றும் உள்ளூர் வணிக நிறு­வ­னங்­க­ளுடன் இணைந்து செயல்­ப­டு­கி­றது. 

சீனா இது­வரை அதன் ஒரு  விண்­வெளி வீரரை  பூமியின் குறைந்த சுற்­றுப்­பா­தைக்கு அப்பால் அனுப்­ப­வில்லை என்­றாலும், பெய்ஜிங் ஏற்­க­னவே தனது சொந்த விண்­வெளி நிலை­யத்தைக் கொண்­டுள்­ளது.

மேலும், நாசாவைப் போலன்றி, சீனா தான் நிர்­ண­யித்த காலக்­கெ­டுவைச் சரி­யாகப் பின்­பற்­று­வதில் கவ­னத்தை ஈர்க்­கக்­கூ­டிய  சாத­னையைப் படைத்­துள்­ளது.

"அவர்கள் ஒரு இலக்கை நிர்­ண­யித்தால், அந்தத் திக­தியில் அதைச் செய்து முடிப்­பதில் கெட்­டிக்­கா­ரர்­க­ளாக இருக்­கி­றார்கள்" என்­கிறார் அமெ­ரிக்­காவைச் சேர்ந்த மேன்லி.

"விண்­வெளித் திறன்­களில் ரஷ்­யாவை கிட்­டத்­தட்ட அனைத்து வழி­க­ளிலும் சீனா விஞ்­சி­விட்­டது" என்று கூறிய அவர், சீனா இப்­போது "மிகவும் நிதா­ன­மான, ஆனால், அதே சமயம் வேகம் குறை­யாத விண்­வெளித் திட்­டத்தை" செயல்­ப­டுத்தி வரு­வ­தாகத் தெரி­வித்தார்.

பத்­தாண்­டு­க­ளுக்கு முன்பு, முன்னாள் அமெ­ரிக்கத் தூதர் ஜேம்ஸ் லூயிஸ் காங்­கி­ரஸின் நிலைக்­குழு ஒன்றில் சாட்­சி­ய­ம­ளித்­த­போது, சோவியத் யூனி­ய­னுக்கு எதி­ரான நிலவுப் போட்­டியில் வெற்றி பெற்ற பிறகு அமெ­ரிக்கா "விண்­வெ­ளியில் பெரும்­பாலும் ஆர்­வத்தை இழந்­து­விட்­டது, அதே­ச­மயம் சீனா தனது திட்­டத்தைத் தீவி­ரப்­ப­டுத்­தி­யது" என்று குறிப்­பிட்டார்.

"நிதா­ன­மாகச் செயல்­படும் சீனா, அமெ­ரிக்­காவைக் கடந்து செல்லும் ஆமை-­–முயல் கதையைப் போன்ற சூழலை நாம் விரும்­ப­வில்லை" என்று அவர் கூறினார்.

கடந்த 10 ஆண்­டு­களில், நாசா தனது மனித விண்­வெளிப் பயணத் திட்­டத்தை மீண்டும் உயிர்ப்­பித்­துள்­ளது. இதற்கு கிரேக்க நிலவுக் கட­வுளின் பெயரான 'ஆர்­டெமிஸ்' (Artemis) என்ற பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. 

இதன் உச்­சக்­கட்­ட­மாக, 1972 ஆம் ஆண்­டுக்குப் பிறகு நிலவின் பகு­திக்கு மேற்­கொள்­ளப்­பட்ட முதல் மனிதப் பயணம் கடந்த மாதம்  வெற்­றி­க­ர­மாக அமைந்­தது.

அதே வேளையில், தனது நிலவு ஆய்வுத் திட்­டங்­க­ளுக்கு நிலவுக் கட­வுளின் பெய­ரான 'சாங் ஈ' (Chang’e) என்று பெய­ரிட்­டுள்ள சீனா, அமெ­ரிக்­கா­வுக்கு இணை­யாக முன்­னே­று­வதில் பெரும் சாத­னை­களைப் படைத்­துள்­ளது.

 2024ஆம் ஆண்டில், சாங் ஈ-6 விண்­கலம் மூலம் நிலவின் மறை­வான பகு­தி­யி­லி­ருந்து (Far side) மாதி­ரி­களைச் சேக­ரித்த முதல் நாடு என்ற பெரு­மையை சீனா பெற்­றது.


நிலவில் மனி­தர்கள் தங்­கு­வ­தற்கு அவ­சி­ய­மான நீர் பனிக்­கட்­டியைத் தேடி, சாங் ஈ-7 விண்­கலம் 2026 ஆம் ஆண்டின் இறு­தியில் நிலவின் தென்­து­ரு­வத்­திற்கு அனுப்­பப்­ப­ட­வுள்­ளது.

"ஒட்­டு­மொத்­த­மாகப் பார்க்­கையில், பணிகள் சுமு­க­மாக நடை­பெற்று வரு­கின்­றன," என்று சோங்கிங் பல்­க­லைக்­க­ழகப் பேரா­சி­ரி­யரும், சீனாவின் விண்­வெளித் திட்­டத்தின் முக்­கிய விஞ்­ஞா­னி­யு­மான கிசீ கெங்சின் (Xie Gengxin) தெரி­வித்­துள்ளார். 
இவர் 2019 ஆம் ஆண்டில்  நிலவில் முதன்­மு­த­லாக ஒரு பச்சை இலையை வளரச் செய்த வர­லாற்றுச் சிறப்­பு­மிக்க பரி­சோ­த­னையை முன்­னின்று நடத்­தி­யவர்.

இவ­ரது மற்­றொரு சோத­னையில் விண்­வெ­ளியில் ஒரு பட்­டாம்­பூச்சி   முட்­டை­யி­லி­ருந்து வெளி­வந்­ததும் குறிப்­பி­டத்­தக்­கது.

சீனா தனது விண்­வெளி வீரர்­க­ளுக்­கான உப­க­ர­ணங்­களைத் தொடர்ந்து சோதித்து வரு­கி­றது. லாங் மார்ச்-10 ரொக்கெட் மூலம் மெங்சோ (Mengzhou) எனப்­படும் 'கனவுப் படகு' விண்­க­லத்தில் மூன்று விண்­வெளி வீரர்கள் அனுப்­பப்­ப­டுவர். 

பின்னர், லான்யு (Lanyue) எனப்­படும் ஒன்­பது மீற்றர் நிலவு இறங்கு கலம் (Lander), இரு­வரை நிலவின் மேற்­ப­ரப்­பிற்கு அழைத்துச் செல்லும். அங்கு அவர்கள் வாங்யு (Wangyu) எனப்­படும் புதிய விண்­வெளி உடை­களை அணிந்து நிலவின் கர­டு­மு­ர­டான பகு­தி­களில் ஆய்வு செய்வர். இந்த உடை விண்­வெளி வீரர்கள் எளி­தாகக் குனிந்து வேலை செய்­வ­தற்கு ஏற்ப வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­வேளை  அமெ­ரிக்­காவில், ஸ்பேஸ் எக்ஸ், புளூ ஒரிஜின்  நிறு­வ­னங்கள் நாசா­விற்­கான  தங்­க­ளது நிலவு இறங்கு கலன்­களை உரு­வாக்­கு­வதில் போட்­டி­யிட்டு வரு­கின்­றன. 

புளூ ஒரிஜின் 2026 ஆம் ஆண்டில்  தனது 'புளூ மூன்' கலனைச் சோதிக்கத் திட்­ட­மிட்­டுள்­ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறு­வ­னத்தின் 52 மீற்றர் உய­ர­மான பிரம்­மாண்ட இறங்கு கலம் குறித்த கூடுதல் விவ­ரங்கள் இன்னும் வெளி­யா­க­வில்லை.

இந்த இரு நிறு­வ­னங்­களின் கலன்­களும் இன்னும் முழு­மை­ய­டை­யா­தது நாசாவின் காலக்­கெடு குறித்த கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ளது.

நிலவு என்­பது அந்­தார்­டிக்­காவைப் போல இரா­ணுவ நட­வ­டிக்­கைகள் மற்றும் சுரங்கத் தொழில்கள் இல்­லாத, அறி­வி­ய­லுக்­காக மட்டும் பயன்­படும் ஒரு பொது­வான இட­மாக இருக்க வேண்டும் என்று விஞ்­ஞா­னிகள் விரும்­பு­கின்­றனர். 

இருப்­பினும், வொஷிங்­ட­னுக்கும்  பெய்­ஜிங்­கிற்கும் இடையே கடும் போட்டி நில­வு­கி­றது. 2011 ஆம் ஆண்டில்  இயற்­றப்­பட்ட அமெ­ரிக்கச் சட்­டத்­தின்­படி, நாசா சீன விண்­வெளி நிறு­வ­னத்­துடன் இணைந்து பணி­யாற்றத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால், சீனா தனது விண்­வெளித் திட்­டத்தை அமெ­ரிக்­கா­வு­ட­னான போட்­டி­யாகப் பார்க்­காமல், தனது உள்­நாட்டு இலக்­கு­களை அடை­வ­தி­லேயே கவனம் செலுத்­து­கி­றது. 

"அமெ­ரிக்­காவை முழு­மை­யாக முந்­து­வது எங்கள் இலக்­கல்ல, அது யதார்த்­தமும் அல்ல, அதற்கான அவ­சி­யமும் இல்லை," என்று பேரா­சி­ரியர் கிசீ கூறு­கிறார். அதே சமயம், நிலவில் மனி­தர்­களை இறக்­கு­வது நாட்­டுக்கு ஒரு பெரு­மி­தத்தைத் தரும் என்றும் அவர் குறிப்­பி­டு­கிறார்.

அமெ­ரிக்கா தடை விதித்­தாலும், ஐரோப்­பிய விண்­வெளி நிறு­வனம் (ESA) மற்றும் இத்­தாலி, பிரான்ஸ், சுவீடன் போன்ற நாடுகள் சீனாவின் சாங் ஈ-6 திட்டத்தில் இணைந்து செயற்பட்டன. 

பிரான்ஸின் விண்வெளி ஆராய்ச்சியாளர் பியர்-யவ்ஸ் மெஸ்லின் (Pierre-Yves Meslin) கூறுகையில், "ஐரோப்பியர்களாகிய எங்களிடம் நிலவுக்குச் செல்லத் தேவையான கருவிகள் இல்லை.

 எனவே நாங்கள் அமெரிக்கா அல்லது சீனாவைச் சார்ந்து இருக்கிறோம். இப்போது சீனா ஒரு நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக உருவெடுத்துள்ளது" என்றார்.

சீனாவின் விண்­வெளித் திட்டம் மிகவும் தெளி­வா­னதும்  முறை­யா­ன­து­மாகும் என்று அவர் பாராட்­டு­கிறார். 

இரண்டு தசாப்­தங்­க­ளுக்கு முன்னர்  விண்­வெளி மாநா­டு­களில் சீன விஞ்­ஞா­னி­களின் எண்­ணிக்கை குறை­வாக இருந்­தது, ஆனால் இப்­போது சீன இளை­ஞர்கள் பெரு­ம­ளவில் அதில் பங்­கேற்­பதை அவர் சுட்­டிக்­காட்­டு­கிறார். 

"அவர்கள் ஒன்றைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்­து­விட்டால், அதை நிச்­சயம் செய்தே  முடிப்­பார்கள்" என்று சீனாவின் உறுதிப்பாட்டை அவர் மெச்சுகறார்.

-சுபத்திரா-

(ஒலிவர் ஹோம்ஸ், த கார்டியன்)

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!