அண்மையில் ஆறு தமிழ்ப்பேசும் கட்சிகளின் கூட்டு, ஜனாதிபதிஅநுரகுமார திசாநாயக்கையும்,இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவையும் சந்தித்து பேசியிருந்தது.
இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், பொதுவாக பேசப்பட்ட விடயங்களில் ஒன்று, புதிய அரசியலமைப்பை கொண்டு வருவது பற்றியதாகும்.
ஜனாதிபதி அநுரகுமார திசாசநாயக்கவை பொறுத்தவரையில் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதாக, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே வாக்குறுதியை கொடுத்திருந்தார்.
அந்த வாக்குறுதியை காப்பாற்றுவோம் என அவர் பதிலளித்திருக்கிறார், ஆனால் அதற்கான காலக்கெடு எதையும் அவர் முன்வைத்திருக்கவில்லை.
ஜனாதிபதி அநுரவிடம் இதனை வலியுறுத்தியது தொடர்பாக, இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவிடம், தமிழ் மொழிபேசும் மக்களின் அரசியல் பேரவை எடுத்துக் கூறியிருந்தது.
அப்போது இந்தியத் தூதுவர் புதிய அரசியலமைப்பை வலியுறுத்துகின்ற போது கவனமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிய அச்சம் இந்தியாவிடம் இருப்பதை இது புலப்படுத்தியிருக்கிறது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் தற்போதுள்ள அரசியலமைப்பில் இருக்கின்ற 13ஆவது திருத்தச் சட்டம் இல்லாமல் போய்விடும்.
இதனால் மாகாண சபைகள் காலாவதியாக போய்விடுமா என்ற சந்தேகம் இந்தியாவிடம் ஏற்பட்டிருக்கிறது.
1987 ஆம் ஆண்டு இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையீடு செய்தது.
இந்திய-இலங்கை ஒப்பந்தம் மூலமாக, இந்தியா அந்த தலையீட்டைச் செய்தபோது, இனப்பிரச்சினைக்கான தீர்வு என, 13 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து, மாகாண சபைகளை உருவாக்குகின்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.
இது தமிழர்களுடன் கலந்து பேசி எடுக்கப்பட்ட முடிவு அல்ல.
அப்போது அரசியல் அரங்கில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியும் சரி, ஆயுதப் போராட்ட அரங்கில் இருந்த அமைப்புகளும் சரி, இதனை ஒரு தீர்வாக ஏற்றுக் கொண்டிருக்கவில்லை.
ஏனென்றால் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், இந்தியாவின் மாநிலங்களுக்கு இருந்த உரிமைகள், அதிகாரங்கள் கூட, மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.
ஆனாலும், வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து- ஒரு தனியான நிர்வாக அலகை உருவாக்கி -தனித்துவமான ஓர் அரசியல் தீர்வை ஏற்படுத்துவது இந்தியாவின் திட்டமாக இருந்தது.
அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன தந்திரமான முறையில் அதனை மாற்றி, எல்லா மாகாணங்களுக்கும் தனித்தனியான நிர்வாக அலகு
களை உருவாக்கி, தெற்கில் தனக்கு எதிர்ப்பு எழாதபடி பார்த்துக் கொண்டார் எனச் சொல்லப்படுவதுண்டு.
ஆனால் அது முழு உண்மையல்ல.
அவர் வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கான, தனித்துவமான அதிகாரப்பகிர்வை – தரம் குறைப்பதற்காகவே, ஏனைய மாகாணங்களிலும் சபைகளை உருவாக்கினால் என்பது தான் உண்மை. இதன் மூலம், தமிழர்களுக்குத் தனித்துவமான தீர்வு ஒன்றை வழங்காமல், தடுத்தார்.
ஆனால், அந்த மாகாண சபைகளையும், 13ஆவது திருத்தச் சட்டத்தையும், விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
அவர்கள் கடைசிவரை அதில் உறுதியாக இருந்தார்கள்.
ஆனால், தமிழர் விடுதலைக் கூட்டணியும், சில தமிழ்ப் போராளி அமைப்புகளும் அதனை ஏற்றுக் கொண்டதுடன், வடக்கு-கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிட்டன.
வடக்கு-கிழக்கு மாகாண சபை குறுகிய காலத்தில் கலைக்கப்பட்ட பின்னர், அதற்கு தேர்தல் நடைபெறவில்லை.
2006ஆம் ஆண்டு வடக்கு- கிழக்கு மாகாணங்களை தனித்தனி நிர்வாக அலகுகளாக பிரித்து- இரு வேறு மாகாண சபைகளை உருவாக்குவதற்கு, ஜே.வி.பி. வழிவகுத்தது.
உயர்நீதிமன்றத்தில் ஜே.வி.பி. தொடுத்த வழக்கினால், 1987ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தன தற்காலிகமாக ஒன்றிணைத்து வர்த்தமானி மூலம் அறிவித்த பிரகடனம் உயர்நீதிமன்றினால் இரத்துச் செய்யப்பட்டது.
இதனால், வடக்கிலும், கிழக்கிலும் தனித்தனி மாகாண சபைகள் உருவாகும் நிலையை ஏற்படுத்தியது.
2008ஆம் ஆண்டு போர் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த போது, மஹிந்த ராஜபக்ஷ, கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தினார். ஆனால், 2009இல் போர் முடிவுக்கு வந்த போதும், அவர் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்தார்.
இந்தியாவின் கடும் அழுத்தங்களை அடுத்தே, 2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஐந்தாண்டு பதவி காலத்திற்கு பின்னர், அது மீண்டும் உறக்க நிலைக்குச் சென்று விட்டது.
வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் மாத்திரமின்றி- நாட்டின் எல்லா மாகாண
சபைகளுமே, இப்போது உறங்கு நிலை யில் தான் இருக்கின்றன. அதனை மீண்டும் தட்டி எழுப்பி இயங்கச் செய்வதற்கு தமிழ்ப் பேசும் கட்சிகள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என, 13 ஆவது திருத்தச் சட்டத்தையும், மாகாண சபைகளையுமே இந்தியா குறிப்பிட்டு வருகிறது.
தமிழ் மக்களையும் – அதனை ஒரு தீர்வாக ஏற்றுக் கொள்ள வைக்கவும் முற்படுகிறது.
இவ்வாறான நிலையில் தான், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால், 13ஆவது திருத்தச் சட்டமும் மாகாண சபைகளும் காணாமல் ஆக்கப்பட்டு விடும் என்ற கவலை இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
தமிழ் மக்களுக்கு கௌரவமாக, நீதியாக, சமத்துவமாக வாழத்தக்க ஓர் அரசியல் தீர்வை எட்டுவதற்கு, இந்தியா எப்போதும் துணை நிற்கும் என பல சந்தர்ப்பங்களில் வாக்குறுதி அளித்திருக்கிறது. இந்தியப் பிரதமர் மோடி அதனை பல்வேறு சந்தர்ப்பங்களில் பகிரங்கமாகவே கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போது, தற்போதைய அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டம் என்னவாகும் என்று கேள்விக்கு தெளிவான பதில் இல்லை.
அதனை முழுமையாக பெயர்த்தெடுத்து விட்டு, புதிய அரசியலமைப்பை உருவாக்கினால், அதில் அதிகாரப்பகிர்வு எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்ற கேள்வி இருக்கிறது. தற்போதைய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் புதிய அரசியலமைப்பை உருவாக்க விடயத்தை, “அ“ வில் இருந்து தொடங்கும் எண்ணம் இல்லை.
நல்லாட்சி அரசின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகளின் மூலம் உருவாக்கப்பட்ட வரைவின் தொடர்ச்சியாகவே அது இருக்கும் என தற்போதைய ஜனாதிபதி முன்னர் வாக்குறுதி அளித்திருந்ததாக தமிழ்ப் பேசும் கட்சிகள் சில கூறுகின்றன.
இதனால் தான், தற்போதைய அரசாங்கம் ‘ஏக்கிய ராஜ்ய’ அரசியலமைப்பை கொண்டு வருவதில் உறுதியாக இருக்கிறது என்று, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி தொடர்ந்து எச்சரித்து வருகிறது
அந்த எச்சரிக்கையை மெய்ப்பிக்கும் வகையிலான சில சமிக்ஞைகள் இப்போது தென்படத் தொடங்கியுள்ளன.
இந்த கட்டத்தில் தான் இந்தியா, புதிய அரசியலமைப்புக்கான பணிகளை ஆரம்பத்தில் இருந்து தொடங்குவது குறித்து கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்திருக்கிறது.
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக இல்லாமல் ஆக்கும்போது அதற்கு மாற்றான அதிகாரப் பகிர்வு எவ்வாறு கொண்டுவரப்படும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என இந்தியா கூறியிருக்கிறது.
ஏனென்றால், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் பல கட்டங்கள் உள்ளன. சில வேளைகளில் அதனை நிறைவேற்ற முடியாமலும் போகலாம்.
அது பாதி வழியில் – திரிசங்கு நிலையையும் அடையலாம்.
2018ஆம் ஆண்டு நல்லாட்சி அரசின் காலத்தில் கொண்டு வரப்பட்ட மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டம் அதற்கு நல்லதொரு உதாரணம்.
அந்தச் சட்டத்தினால் தான் இன்று வரை மாகாண சபைகள் இயங்க முடியாத நிலையில் இருக்கின்றன.
இவ்வாறான நிலையில் தான் இந்தியத் தூதுவர், சந்தோஷ் ஜா, அதிகாரப் பகிர்வு விடயத்தில், கவனமாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், இதே இந்தியா, தான் உருவா
க்கிய 13 ஆவது திருத்தச் சட்டத்தில் ஜே.ஆர்.ஜயவர்தன, அதிகாரங்களை மற்ற மாகாணங்களுக்கும் பகிர்ந்து கொடுத்த போது எதிர்க்கவில்லை. ஜே. ஆருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க மறுத்த போதும், அதனை எதிர்க்கவில்லை.
உயர்நீதிமன்றம் மூலமாக, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்ட போதும் இந்தியா எதிர்க்கவில்லை.
அந்தச் சூழலைப் பொருத்தமான முறையில் கையாளுவதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் பின்னர் மாகாண சபைகளின் அதிகாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக - சட்டங்கள் மூலமாகவும் வர்த்தமானி அறிவித்தல் மூலமாகவும் பறிக்கப்பட்ட போதும் இந்தியா எதிர்க்கவில்லை.
ஆனால், இப்போது, புதிய அரசியலமைப்பை உருவாக்குகின்ற முயற்சிகளில் இறங்குகின்ற போது 13ஆவது திருத்தச்சட்டத்தின் நிலை பற்றி, தமிழ்ப்பேசும் கட்சிகளிடம் இந்தியா எச்சரித்திருக்கிறது.
கடந்த வாரம் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் வரையப்பட்டிருந்த ஆசிரியர் தலையங்கம், 13ஆவது திருத்தச் சட்டத்தையும் மாகாண சபைகளையும் வல்லுறவின் மூலம் பிறந்த குழந்தைகள் என ஒப்பீடு செய்திருந்தது. இது 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக தென்னிலங்கையில் உள்ள அதிருப்தியை வெளிப்படுத்துகிறது. புதிய அரசியலமைப்பின் ஊடாக அதிகாரங்கள் பகிரப்பட்டால், இத்தகைய அதிருப்திகள் களையப்படக்கூடும்.
ஆனால், தெற்கிலுள்ள தரப்புகள் புதிய அரசியலமைப்பின் ஊடாக, தெளிவான அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வை வழங்குவதற்கு முன்வருமா என்பதே கேள்வி.
தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்க த்தை வழிநடத்தும் ஜே.வி.பி., இந்திய-
இலங்கை ஒப்பந்தம் செய்து கொள்ளப் பட்ட போது, அதனை ஏற்றுக்கொள்ள வில்லை, 13ஆவது திருத்தச் சட்டத்தை யும் ஏற்றுக்கொள்ள வில்லை.
இவற்றிற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடியிருந்தது.
இந்த அடிப்படையில், தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பில் இருந்து,
13வது திருத்தச் சட்டத்தை நீக்குவ
தற்கு முற்படுகிறதா கேள்வி முக்கியமாக இருக்கிறது. இத்தகைய சந்தேகங்களுக்கான தெளிவான பதிலு டன் தான், புதிய அரசியலமைப்புக் கான நகர்வில் இறங்கவேண்டும்.
புதிய அரசியலமைப்பு முக்கியமானதொரு தேவையாக இருந்தாலும்- தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றாத, அதிகாரப்பகிர்வை உறுதி செய்யாத- ஒன்றாக அது இருந்தால், அந்த அரசியலமைப்பு கொண்டு வரப்படுவதில் அர்த்தம் ஏதும் இல்லை.
என்.கண்ணன்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!