இந்திய தலைநகரில் ' ஜந்தர் மந்தர் ' (18 ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வானிலை அவதான நிலையம் ) வளாகத்தில், 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' கடந்த பல நாட்களாக முன்னெடுத்துவரும் போராட்டங்களுக்கு புதுடில்லிக்கும் அப்பால் பல மாநிலங்களிலும் மாணவர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவு பெருகிவருகிறது.Politics
இந்த போராட்டங்கள் இலங்கையின் 2022 'அரகலய' போராட்டம், பங்களாதேஷின் 2024 மாணவர் கிளர்ச்சி மற்றும் நேபாளத்தின் 2025 இளம் தலைமுறையினரின் (Gen Z) கிளர்ச்சியை நினைவூட்டுகின்றன.
மூன்று தெற்காசிய நாடுகளிலும் அரசாங்கங்களை தூக்கியெறிந்த அந்த கிளர்ச்சிகளின் ஆரம்பக்கட்டத் தோற்றத்தைக் கொண்டதாக புதுடில்லி போராட்டங்கள் இருக்கின்ற போதிலும், இந்தியாவின் பரப்பளவு மற்றும் பன்முகத்தன்மையை கருத்தில் கொள்ளும் போது அது போன்ற ஒரு சாத்தியப்பாடு பிராந்தியத்தின் மிகப்பெரிய நாட்டில் நடப்பது அரிது என்பதே பெரும்பாலான அரசியல் அவதானிகளின் அபிப்பிராயமாக இருக்கிறது.
இலங்கை, பங்களாதேஷ், நேபாளத்தில் ஆட்சிகளை தூக்கியெறிவதே போராட்டங்களின் நோக்கமாக இருந்தது. போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதுடன் அரச சொத்துக்களைச் சேதப்படுத்தினர். ஜந்தர் மந்தர் போராட்டக்காரர்கள், இந்திய அரசாங்கம் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை; பாராளுமன்றம் உட்பட அரச நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுக்கவுமில்லை.
அதனால், இதுவரையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது புதுடில்லி போராட்டங்களை இந்தியாவின் மூன்று அயல் நாடுகளினதும் கிளர்ச்சிகளுடன் ஒப்பிடுவது இந்த கட்டத்தில் சரியானதல்ல.Beaches & Islands
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் வழிநடத்தலில் மாணவர்களும் இளந் தலைமறையினரும் ஆயிரக்கணக்கில் அணிதிரண்டு நடத்தி வரும் தற்போதைய போராட்டங்கள் பல வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் இடம் பெறும் மிகப்பெரிய அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களாகும்.
சமூக வலைத் தளங்களில் கடந்த மே மாதம் 16 ஆம் திகதி ஒரு கேலித்தனமான எதிர்வினையாகத் தொடங்கிய ஓர் இயக்கம் நவீன இந்திய வரலாற்றில் மிகவும் பலம்பொருந்திய இளந்தலைமுறை எழுச்சியாக மாறியிருக்கிறது.
இந்திய உச்ச நீதிமன்றத்தில் மே 15 ஆம் திகதி வழக்கு விசாரணை ஒன்றின் போது பிரதம நீதியரசர் சூர்ய காந்த், வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களையும் மாணவ ஆர்வலர்களையும் 'சமூகத்தின் கரப்பான் பூச்சிகள்' என்றும் 'ஒட்டுண்ணிகள்' என்றும் ஒப்பிட்டுப் பேசியதைத் தொடர்ந்து மறுநாளே உருவானதே இந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியாகும்.
அமெரிக்காவின் பொஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற 30 வயதான அபிஜித் தீப்கே என்ற மகாராஷ்டிரா மாநிலத்தின் சத்ரபதி சம்பாஜிநகரைச் (முன்னர் அவுரங்கபாத்) சேர்ந்த மாணவர் இணையத்தில் தொடங்கிய இந்த கட்சி, ஒரு கேலித்தனமான இயக்கத்திலிருந்து பலம்பொருந்திய அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கிறது. தீப்கே, முன்னர் அரவிந்த கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடகக் குழுவில் பணியாற்றியவர்.
'கரப்பான் பூச்சிகள்' என்ற அந்த இழிவான சொல்லைக் கேட்டுப் பின்வாங்குவதற்குப் பதிலாக, இந்திய இளைஞர்கள் அதை தங்களது எதிர்கால வாழ்க்கைப் போராட்டத்துக்கான அடையாளமாகவே ஏற்றுக்கொண்டனர். எத்தகைய சூழலிலும் அழியாமல் வாழும் திறன்கொண்ட கரப்பான் பூச்சியை இந்த இளைஞர்கள் கஷ்டங்களைத் தாங்கிக்கொண்டு மீண்டெழும் ஆற்றலின் அடையாளமாக மாற்றியிருக்கிறார்கள்.
அரசாங்கத்தினால் கைவிடப்பட்டவர்களாக தங்களை உணர்ந்த இந்தியா பூராவுமுள்ள இலட்சக்கணக்கான இளைஞர்களை இந்த இயக்கம் ஒன்று திரட்டியிருக்கிறது.
வேலையற்ற இளைஞர்களை கரப்பான் பூச்சிகள் என்று பிரதம நீதியரசர் அழைத்தவுடன், சமூக வலைத்தளத்தில் பகிடியாக பதிவொன்றைச் செய்த தீப்கே, "அனைத்து கரப்பான் பூச்சிகளும் ஒன்றுசேர்ந்து வந்தால் என்னவாகும்" என்று கேள்வியெழுப்பினார்.
அந்த கேள்விக்கான பதிலாக தற்போது கரப்பான் பூச்சிகள் புதுடில்லிக்கு படையெடுத்து மோடி அரசாங்கத்துக்கு பாரிய சவாலைத் தோற்றுவித்திருக்கின்றன. ஆளும் பாரதிய ஜனதா கட்சியை நையாண்டி செய்யும் நோக்குடனேயே தீப்கே தனது இணையத்தளக் கட்சிக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரைச் சூட்டினார். 'சமூகக் கட்டமைப்பு கணக்கில் எடுக்கத்தவறிய மக்களுக்கான ஒரு கட்சி' என்பதே அதன் சுலோகமாகும்.
இந்த கட்சி தொடங்கி இரு வாரங்களுக்கு உள்ளாகவே அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 கோடியே 20 இலட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்பாளர்கள் இணைந்து கொண்டார்கள். பாரதிய ஜனதா கட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கையை விடவும் இது அதிகமாகும்.
விமர்சனங்களை சகித்துக்கொள்ளாத சுபாவமுடைய மோடி அரசாங்கம், தேசிய பாதுகாப்புக் காரணங்களைச் சாட்டாகக் கூறி, கரப்பான் பூச்சிகளின் சமூக ஊடகக் கணக்குகளை முடக்குவதற்கு முயற்சித்த போதிலும், அதில் வெற்றிபெற முடியவில்லை.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினால் இளைய தலைமுறையினரை அணிதிரட்டுவதற்கு உடனடியாகப் பயன்படுத்தக்கூடியதாக இருந்தது உயர்கல்வி அமைப்பில் நிலவிய சீர்கேடுகளேயாகும். குறிப்பாக, 'நீட் ' (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு -- National Eligibility cum Entrance Test - NEET) போன்ற உயர்மட்ட போட்டிப் பரீட்சைகளில் ஏற்பட்ட பேரழிவுகரமான வினாத்தாள் கசிவும் பரீட்சை இரத்துகளும் இந்தியா பூராவும் இலட்சக் கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கியதோடு கவலைக்குரிய வகையில் மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொள்வதற்கும் வழிவகுத்தது.
பரீட்சைக் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்காதமைக்காக மோடி அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டப்பட்டது. இந்த பிரச்சினையை வைத்து ஆதரவாளர்களை அணிதிரட்டத் தொடங்கிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பரீட்சை வினாத்தாள் கசிவுகளுக்கு அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும் என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது.
இந்த கோரிக்கையை முன்வைத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் முதலாவது களப் போராட்டம் (Offline protest) ஜூன் முற்பகுதியில் டில்லியில் இடம் பெற்றது. அதை வழி நடத்துவதற்காக தீப்கே அமெரிக்காவில் இருந்து ஜூன் 6 ஆம் திகதி இந்தியா திரும்பினார்.
இரண்டாவது பெரிய போராட்டம் டில்லியில் ஜூன் பிற்பகுதியில் இடம்பெற்றது. இந்த தடவை போராட்டக்காரர்கள் பிரதான் பதவியில் இருந்து விலகும்வரை அங்கிருந்து வெளியேறுவதில்லை என்று சூளுரைத்தனர்.
இந்தியாவின் இளந் தலைமுறையினரைப் பொறுத்தவரை, நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் கல்வி முறைமைக்கு எதிராக -- தங்களுக்கு தவறிழைத்துவரும் தொழிற்சந்தை தொடர்பாக நிலவும் பரந்தளவிலான விரக்திக்காக -- குரல் கொடுக்கும் ஒரு இயக்கமாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைப் பார்க்கிறார்கள்.
அந்த கட்சியின் முழக்கம் பல்கலைக்கழக வளாகங்களையும் தாண்டி எதிரொலிக்கிறது. காஷ்மீரில் லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த பொறியியலாளரும் கல்வித்துறைச் செயற்பாட்டாளருமான சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதப் போராட்டம் மூலம் இந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து உறுதுணையாக நின்றபோது போராட்டத்தின் வேகம் வெகுவாக அதிகரித்தது. இது மாணவர்கள், இளந் தொழில் வல்லுனர்கள் மற்றும் சிவில் சமூகத்தினரை ஜனநாயகத்துக்கும் கல்விமுறையில் நேர்மைக்குமான பொதுவான ஒரு போராட்டத்தின் கீழ் ஒன்றிணைத்திருக்கிறது.
ஆரம்பக் கட்டத்திலேயே போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தி அவர்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளுக்கு இணங்கி சுமுகமான முறையில் தீர்வைக் காண்பதற்கு பதிலாக, மோடி அரசாங்கம் போராட்டங்களை ஒடுக்குவதற்கு மிகவும் கடுமையான நடவடிக்கைகளளில் நாட்டம் காட்டியது.
மக்கள் கூடுவதற்கு தடைவிதிக்கும் வகையில் தடைகள் விதிக்கப்பட்டன. புதுடில்லியில் மத்திய மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன. மொபைல் இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டன. மேலும், பாராளுமன்றத்தை நோக்கி கடந்த திங்கட்கிழமை அமைதியான முறையில் பேரணியாகச் சென்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகமும் கொடூரமான தடியடியும் நடத்தப்பட்டது.
அடக்குமுறை நடவடிக்கைகள் எழுச்சியைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, தற்போது நாடுதழுவிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பல மாநிலங்களுக்கும் போராட்டம் பரவியிருக்கிறது. பலவீனமடைந்த நிலையில் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடவில்லை.
பொலிசாரின் அத்துமீறல்களுக்கு எதிராக நாடுதழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்த போராட்ட இயக்கம் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்தியாவில் வன்முறை மூளக்கூடும் என்ற கவலையை அடுத்து சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதற்கு இணங்கினார்.
டில்லி மருத்துவமனை ஒன்றில் மோடி அரசாங்கத்தின் இரு அமைச்சர்களின் முன்னிலையில் அவர் 26 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த வியாழக்கிழமை இரவு முடித்துக்கொண்டார். தோல்விக்கு உள்ளாகியிருக்கும் பரீட்சை முறையில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று தனக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டதாக மருத்துவமனை படுக்கையில் இருந்தவாறு வியாழக்கிழமை இரவு வெளியிட்ட காணொளி ஒன்றில் வாங்சுக் கூறியிருந்தார்.
முக்கியமான பரீட்சை வினாத்தாள் கசிவு காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு போதுமான இழப்பீடுகள் வழங்கப்படும் என்றும் போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள், இளைஞர்கள் மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்றும் வாங்சுக்கிற்கு அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது.
பரீட்சை வினாத்தாள் கசிவுகளுக்கு பின்னால் உள்ளவர்களை தண்டிப்பதற்கு விசேட விரைவு நீதிமன்றங்கள் நியமிக்கப்படும் என்று பிரதமர் மோடி வியாழனன்று விடுத்த அறிவிப்பை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி உடனடியாகவே நிராகரித்தது.
" இந்தியாவில் ஒவ்வொரு பிரச்சினைக்கும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால், அந்த நீதிமன்றங்களினால் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்மையால் தீர்த்து வைக்கப்பட்டனவா? இந்த கேள்விக்கான பதில் உங்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும் ". என்று கரப்பான் பூச்சி கட்சியின் பேச்சாளர் மோடிக்கு பதிலளித்திருக்கிறார்.
அதேவேளை, கல்வியமைச்சர் பிரதான் பதவிவிலகும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் சோனம் வாங்சுக்கின் தியாகத்தை ஒருபோதும் வீணடிக்கப் போவதில்லை என்றும் கரப்பான் பூச்சி கட்சியின் தலைவர் தீப்கே அறிவித்திருந்தார்.
இந்த போராட்டத்துக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற நடவடிக்கைகளை முடக்கியிருந்தன. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் சகோதரி பிரியங்காவும் பிரதமரின் வாசஸ்தலத்தின் முன்பாக மறியல் போராட்டத்தை நடத்தியதையடுத்து கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்படனர்.
கணக்கில் எடுக்கப்படவில்லை என்பதற்காக கொதித்தெழுந்த ஒரு தலைமுறையினர் தங்களை அடக்குவது மிகவும் கடினமானது என்பதை நிரூபித்து போராட்டத்தை மேலும் உத்வேகத்துடன் தொடரும் நிலையில் இந்தியத் தலைநகரின் வீதிகள் கடுமையான போர்க்களமாகக் காட்சியளிக்கின்றன.
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மத்திய கல்வியமைச்சர் அடுத்த ஓரிரு தினங்களுக்குள் பதவி விலகாவிட்டால் தேசிய போராட்டத்துக்கான இன்னொரு அழைப்பை விடுக்கப்போவதாக வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கிறது.
புகழ்பெற்ற எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான அருந்ததி ராய் " கரப்பான் பூச்சி ஜனநாயகம் ; நிராயுதபாணயானதும்்ஆபத்தானதும் " Cockroach Democracy ; Unarmed and Dangerous ' என்ற தலைப்பில் எழுதியிருக்கும் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார் ;
" கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை வலியுறுத்தி தொடங்கிய மாணவர்கள் தலைமையிலான இந்த போராட்டம் இந்தியாவின் அரசியல் கட்டமைப்பிற்கே சவால் விடுக்கும் ஒரு விரிவான இயக்கமாக உருவெடுத்திருக்கிறது.
" இந்த இயக்கம் சாதி, மதம் மற்றும் வர்க்கப் பிரிவினைகளைக் கடந்து மக்களை ஒன்று படுத்தியுள்ளதாகவும் வேலைவாய்பின்மை, பணவீக்கம், சுற்றுச்சூழல் தகராறு மற்றும் குடியுரிமை தொடர்பான கொள்கைகளுக்கு எதிரான பரவலான விரக்தியின் வெளிப்பாடாக மாறியிருக்கிறது.
" இந்த இயக்கம் உடனடியாக அரசியல் மாற்றத்துக்கு வழி வகுக்கப்போவதில்லை என்பதை ஒத்துக்கொண்டாலும், இது மக்களின் வளர்ந்துவரும் ஆக்ரோசத்தைப் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் சமகால அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணமாக அமையக்கூடும்."
வீரகத்தி தனபாலசிங்கம்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!