இலங்கையின் அரசியல் வரலாற்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கும், ஆளும் கட்சியின் தலைமைக்கும் இடையே அதிகாரம் பிரிக்கப்படும் போது ஆட்சி இயந்திரம் சீர்குலைந்து பேரழிவைச் சந்திப்பது ஒன்றும் புதிய கதையல்ல.
கட்சி இயந்திரத்தின் மீது முழுமையான கட்டுப்பாடு இல்லாமல் ஒரு ஜனாதிபதியால் நாட்டை ஆள முடியாது என்பதை ஜே.ஆர். ஜெயவர்தன அன்றே தெளிவாக உணர்ந்திருந்தார்.
அதனால்தான், நாட்டின் ஜனாதிபதியே ஆளும் கட்சியின் தலைவராகவும் இருப்பார் என்ற எழுதப்படாத விதியை அவர் உருவாக்கி, தனக்குக் கீழ் கட்சியை அரணாக வைத்திருந்தார்.
அவருக்குப் பின்வந்த ஆர். பிரேமதாச, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்களின் ஆட்சிக் காலம் வரை ஜனாதிபதியிடமே கட்சியின் முழு அதிகாரமும் குவிந்திருந்ததால், அதிகார மையங்களுக்கு இடையிலான பெரிய முரண்பாடுகள் இன்றி ஆட்சி நகர்ந்தது.
இருப்பினும், இருவேறு தலைமைகளிடம் அதிகாரம் சிதறிய போதெல்லாம் நாடு கடுமையான அரசியல் ஸ்திரமற்ற தன்மையையே சந்தித்திருக்கிறது.
இதற்கு மிகச்சிறந்த வரலாற்று உதாரணம் 2015 ஆம் ஆண்டு உருவான நல்லாட்சி அரசாங்கமாகும். அன்று ஜனாதிபதி அதிகாரம் மைத்திரிபால சிறிசேனவிடமும், பாராளுமன்றக் கட்சி அதிகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் சிக்கியபோது ஆட்சி முற்றிலும் முடங்கிப்போனதுடன், நாட்டின் தேசிய பாதுகாப்பும் கேள்விக்குறியானது.
இதே வரலாற்றுத் தவறை 2019 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷவும் செய்தார். கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கிவிட்டு, பொதுஜன பெரமுன கட்சியின் உண்மையான அதிகாரத்தை மஹிந்தவும் பசிலும் தங்கள் வசம் வைத்திருந்தனர்.
நிதியமைச்சு, கொள்கை வகுப்புகள் மற்றும் அதிகாரத்துவ நியமனங்களில் ஏற்பட்ட இந்த உள்வீட்டு அதிகார மோதல்களே, இறுதியில் நாடு முன் எப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்குள் வெடித்துச் சிதறக் காரணமாயின.
இந்த வரலாற்றுப் பின்னணியில் நின்று தற்போதைய அரசியல் சூழலை உற்றுநோக்கினால், இன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சியிலும் இதே போன்றதொரு நிழல் யுத்தம் தொடங்குவதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படுவதைக் காண முடிகிறது.
அரசாங்கத்தின் உள்வீட்டு முரண்பாடுகளும் இரகசியப் பேச்சுவார்த்தைகளும்

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டின் அதியுயர் பதவியில் அமர்ந்திருந்தாலும், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) பாரம்பரிய நிறுவன கலாச்சாரப்படி உண்மையான கொள்கை மற்றும் அரசியல் அதிகாரம் அதன் பெலவத்தை தலைமையகத்திலும், கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவிடமே எஞ்சியிருக்கிறது.
பாராளுமன்றத்தில் தங்களுக்குப் பெரும்பான்மை பலம் இருந்தாலும், எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து ஜனாதிபதி தரப்பும் கட்சியின் சித்தாந்தத் தரப்பும் இருவேறு துருவங்களாகச் சிந்திப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக, பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைத்துக் கொள்வது தொடர்பாக ஜனாதிபதி தரப்பு மேற்கொண்டு வரும் சில சமரச நகர்வுகளுக்கும், அதற்கு எதிராக ஜே.வி.பி உத்தியோகபூர்வமாக வெளியிட்ட கடுமையான கொள்கை அறிக்கைக்கும் இடையே உள்ள முரண்பாடே இந்த உள்வீட்டு அதிகார இழுபறியை முதன்முதலாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இதனோடு இணைத்து, பாராளுமன்ற நடவடிக்கைகளை சுமூகமாகக் கொண்டு செல்வதற்காக 'எதிர்க்கட்சிகளிலுள்ள திறமையானவர்கள் எங்களோடு வந்து இணைய முடியும்' என்று தேசிய மக்கள் சக்தி அறிவித்ததாக அண்மைய நாட்களாக செய்திகள் பரவத் தொடங்கின.
இந்தச் சூழலில்தான், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவோடு ஜனாதிபதி தரப்பு இரகசியமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகக் கசியும் வதந்திகளும் இப்போது கொழும்பு அரசியல் அரங்கில் பிரதானமாகப் பேசப்படுகின்றன.
நெருப்பின்றிப் புகையாது என்ற பழமொழிக்கு ஏற்ப, அண்மையில் நடைபெற்ற ஜே.வி.பி இன் மத்திய குழுவுக் கூட்டத்தில் இந்த தன்னிச்சையான நகர்வுகள் குறித்து கடுமையான வாக்குவாதங்களும் முரண்பாடுகளும் வெடித்ததாக உள்வட்டாரத் தகவல்கள் கசிந்துள்ளன. கட்சிக்கு அப்பாற்பட்ட இராஜதந்திர நகர்வுகளை ஜனாதிபதி தரப்பு விரும்பினாலும், பாரம்பரிய ஜே.வி.பி இன் இடதுசாரிப் போக்கு அதற்கு முட்டுக்கட்டையாக அமைந்து வருகிறது.Travel
ஒரு இராஜ்ஜியமும் இரு அரசர்களும்
இங்கு ஒரு விடயம் அப்பட்டமான உண்மையாக உருவெடுத்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இன்று தனித்துவமாக எந்தவொரு தீர்க்கமான முடிவையும் அல்லது அதிரடியான அரசியல் நியமனங்களையும் எடுப்பதில் பெரும் நெருக்கடி உருவாகியிருக்கிறது என்பதுதான் அது. நாட்டின் நிறைவேற்று அதிகாரியாக இருந்தாலும், தன்னை ஆட்சிக்கட்டிலில் ஏற்றிய கட்சியின் கூட்டுத் தீர்மானங்களுக்கும் சித்தாந்தங்களுக்கும் அடிபணிய வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகளுடனான உறவுகள், பொருளாதார மறுசீரமைப்புகள் மற்றும் உள்நாட்டு அரசியல் கூட்டணிகள் போன்ற விவகாரங்களில் ஜனாதிபதி செயலகத்திற்கும் பெலவத்தை கட்சித் தலைமையகத்திற்கும் இடையே நிலவும் இந்த இணக்கப்பாடற்ற தன்மை, நாட்டை மீண்டும் ஒரு நிர்வாக முடக்கத்தை நோக்கித் தள்ளுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதியின் முழுமையான கட்டுப்பாட்டிலேயே ஆளும் கட்சி இருக்க வேண்டும் என்ற வரலாற்று அவசியத்தைத்தான் இந்த தற்போதைய நெருக்கடி அரசாங்கத்திற்கு மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. கட்சி ஒரு பக்கமும் ஜனாதிபதி மறுபக்கமும் இழுக்கும் இழுபறி நிலையானது, வாக்களித்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தேக்கநிலையை மட்டுமே தோற்றுவிக்கும். முந்தைய மைத்திரி-ரணில் நல்லாட்சியின் வீழ்ச்சியையும், கோட்டாபய-மஹிந்த கூட்டணியின் துயரரமான முடிவையும் போலவே, 'ஒரு இராஜ்ஜியத்தை இருவர் ஆள முடியாது' என்ற வரலாற்றுப் பாடம் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் பொருந்துமா என்ற பலத்த எச்சரிக்கையும் கேள்வியும் இன்று ஒட்டுமொத்த இலங்கை மக்கள் முன்னேயும் நின்றுகொண்டிருக்கிறது. இங்கிருந்து ஜனாதிபதி அநுர எவ்வாறு கட்சியைத் தன்வசப்படுத்தி நாட்டை வழிநடத்தப் போகிறார் என்பதிலேயே இந்த ஆட்சியின் ஆயுள் தங்கியுள்ளது.
(லியோ நிரோஷ தர்ஷன்)
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!