கறை படிந்து வரும் புனித உடைகள்….!
18 May, 2026
விசாகப்பட்டினத்தில் நடந்த 'மிலன் -2026 கூட்டுப் பயிற்சி மற்றும் சர்வதேச கடற்படை மீளாய்வில் பங்கேற்பதற்காக, ஈரானில் இருந்து ஐரிஸ் டெனா போர்க்கப்பல் வந்திருந்தது.
பெப்ரவரி 26ஆம் திகதி கூட்டுப் பயிற்சி முடிந்த நிலையில், இலங்கையில் தரித்துச் செல்வதற்கு இலங்கை அரசாங்கத்திடம் அனுமதி கோரப்பட்டது.
அப்போது 3 போர்க்கப்பல்களை, துறைமுகத்திற்கு, ஒத்துழைப்பு வருகையாக, அனுப்புவதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் ஈரானிய வெளிவிவகார அமைச்சு அனுமதி கோரியது.
அப்போது, ஈரானில் போர் தொடங்கவில்லை. ஆனாலும் உடனடியாக அரசாங்கம் அதற்கு பதில் அளிக்கவில்லை.
அதை ஆராய்ந்த போது ஈரானியக் கப்பல்கள், இலங்கை கடல் எல்லைக்கு அருகில் காணப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியிருக்கிறார்.
ஒத்துழைப்பு வருகைக்கான அணுகுமுறை அதுவல்ல என்றும், அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த நிலையில், போர் தொடங்கியதால், அதனுடன் தொடர்புடைய ஒரு தரப்புக்கு அனுமதி கொடுப்பது முறையல்ல என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், ஈரானின் 'ஐரிஸ் புஷேர்' (IRIS Bushehr) போர்க்கப்பலில் இருந்த மாலுமி ஒருவர் உடல் நலன் பாதிக்கப்பட்டிருந்ததால், அவருக்கு சிகிச்சை அளிக்க ஈரான் உதவி கோரியது.
அந்த உதவி வழங்கப்பட்டு, கரைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஈரானிய கப்பல்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்ட நிலையில்- காலியில் இருந்து 19 கடல் மைல் தொலைவில் ஈரானின் ஐரிஸ் டெனாதரித்து நின்ற போதே, அமெரிக்க நீர்மூழ்கி தாக்கியழித்திருக்கிறது.
எச்சரிக்கை எதையும் வழங்காமலேயே அமெரிக்க நீர்மூழ்கி தாக்கியதாகவும், இதன் மூலம் அமெரிக்கா விபரீதமான விளைவுகளை எதிர்கொள்ளும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்ற பின்னரும் கூட, 'ஐரிஸ் புஷேர்' கப்பலுக்கு உடனடியாக அனுமதி வழங்கவில்லை.
கிட்டத்தட்ட 36 மணித்தியாலங்களின் பின்னர், கப்பலை திருகோணமலைக்கு கொண்டு செல்லவும், அதிலிருந்த 208 பேரையும் கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்கவும் அரசாங்கம் தீர்மானித்தது.
இந்த விவகாரத்தில் பல இரகசியங்கள் மறைந்துள்ளதால், இதுபற்றி இலங்கை அரசாங்கம் வெளிப்படையாக பல விடயங்களை கூறத் தயங்குகிறது.
இந்தியாவில் அழைப்பின் பேரில் வந்த போர்க்கப்பல் இந்திய பெருங்கடலில் மூழ்கடிக்கப்பட்டிருப்பது இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்காலத்தில் இந்தியாவின் அழைப்பை ஏற்று ஈரானிய போர்க்கப்பல்கள் மாத்திரமல்ல, ஏனைய நாடுகளின் போர்க்கப்பல்களும் கூட வருகை தருவதற்கு தயங்க கூடும்.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா பயன்படுத்திய நீர்மூழ்கி எதுவென்று இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை.
ஆனால், அதில் 3 அவுஸ்ரேலிய கடற்படையினர் இருந்தனர் என்பதை, அவுஸ்ரேலியப் பிரதமர் உறுதி செய்திருக்கிறார்.
எம்.கே - 48 ரக டோபிடோ தான் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவிடம் உள்ள மூன்று வகையான நீர்மூழ்கிகளிலும், இதனை பயன்படுத்த முடியும்.
கப்பலில் அடித்தளத்தைத் தாக்கி, வாயு குமிழிகளையும் அதிக அழுத்தத்தையும் கொண்ட அலைகளை உருவாக்கி, கப்பலில் அடித்தளத்தை சிதைத்து இரண்டாக பிளவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட ஆயுதமே இது.
டோபிடோ
5.8 மீற்றர் நீளத்தைக் கொண்ட இந்த டோபிடோ 1,676 கிலோ எடையையும், 650 இறாத்தல் உயர் சக்தி வெடிமருந்தையும் கொண்டது. இந்த டோபிடோ, சுமார் 40 தொடக்கம் 50 கிலோமீற்றர் தூரம் வரை சென்று தாக்கக் கூடியது.
எனவே, இலங்கை கடல் எல்லைக்கு அருகில் இருந்தே, அமெரிக்க நீர்மூழ்கி தாக்குதலை நடத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் இலங்கைக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது.
உடனடியாக, இலங்கைக் கடற்படையும், விமானப்படையும் செயற்பட்டு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும் - சர்வதேச உடன்பாடுகளுக்கு அமைய இலங்கை செயற்பட்டிருந்தாலும் - அமெரிக்காவுடனான அண்மைக்கால பாதுகாப்பு கூட்டு தொடர்பாக, அதிகம் கேள்விகள் எழுந்திருக்கின்றன.
ஈரான் போர் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்னதாக, அமெரிக்க கடற்படையின் பசுபிக் கப்பல்படை தளபதி அட்மிரல் ஸ்டீபன் கோஹ்லர் இலங்கைக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்தப் பயணத்தின் போது அவர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் கொழும்பு துறைமுகத்தின் பாதுகாப்பு சூழல் குறித்தும் கலந்தாலோசனை நடத்தியிருந்தார்.
ஈரான் மீதான தாக்குதலுக்கு இலங்கையை தளமாக பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்வதற்காகவே, அமெரிக்க பசுபிக் தளபதி இந்தப் பயணத்தை மேற்கொண்டாரா என்ற சந்தேகங்களும் முன்னர் எழுப்பப்பட்டிருந்தன.
அவர் இலங்கைப் பயணத்தை முடித்து சரியாக 12 நாட்களில், ஈரானிய போர்க்கப்பல் இலங்கை கடற்பரப்புக்கு அருகே மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கை- அமெரிக்க உறவுகள் விடயத்தில், வெளிப்படைத்தன்மை தொடர்பாக சந்தேகங்களை தோற்றுவித்திருக்கிறது.
அமெரிக்கா நிகழ்த்தியுள்ள இந்த தாக்குதல், இந்திய பெருங்கடலில் அமைதியைக் குலைத்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில், அமைதியான, பாதுகாப்பான, வெளிப்படையான கப்பல் பாதையை உறுதி செய்வதே தமது கொள்கை எனக் கூறி வந்த அமெரிக்காவே இன்று அதனை கேள்விக்குட்படுத்தியிருக்கிறது.
அமெரிக்கா ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையுடன் பேச்சுக்களை நடத்துகின்ற போது- அமைதியான பாதுகாப்பான வெளிப்படையான கப்பல் பாதை பற்றிய வாக்குறுதியையே எதிர்பார்த்தது.
அதையே தனது கொள்கையாகவும் நிலை நிறுத்தி வந்தது.
இந்தச் சம்பவம் நடப்பதற்கு சில வாரங்கள் முன்னதாக, சீனாவில் இருந்து ஈரானுக்கு ஏவுகணை தயாரிப்புக்கான பொருட்களை ஏற்றிக் கொண்டு பயணித்த சரக்கு கப்பல் ஒன்றை - இலங்கைக்கு அருகேயுள்ள கடற்பகுதியில் அமெரிக்க கடற்படையினர் வழிமறித்து சோதனையிட்டனர்.
ஏவுகணை தயாரிப்புக்கான பெருமளவு கருவிகள் மற்றும் பொருட்களை பறித்துக் கொண்டு, அந்தக் கப்பலை தொடர்ந்து பயணிக்க அமெரிக்க கடற்படை அனுமதியளித்திருந்தது.
இது இந்தியப் பெருங்கடலின் அமைதி குலையத் தொடங்கியதற்கான ஆரம்ப அறிகுறி தான்.
இந்தச் சம்பவங்களில், இலங்கையின் பங்களிப்பு என்ன என்ற கேள்விகளும் உள்ளன.
இலங்கை தவிர்க்க முடியாதபடி அமெரிக்காவின் பாதுகாப்பு வியூகத்திற்குள் சிக்கிக் கொண்டு விட்டது.
அமெரிக்காவினால் வழங்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல்களும், கண்காணிப்பு விமானங்களும் , ஹெலிகொப்டர்களும் இலங்கையின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டவை அல்ல.
அவை அமெரிக்காவின் பாதுகாப்பு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, இலங்கைக்கு வழங்கப்பட்டவை என்பது நிரூபணமாகி வருகிறது.
இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா ஒரு போர்முனையை திறந்திருப்பது, இலங்கை ஆபத்தான ஒரு சூழலில் சிக்கியிருக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
போருக்கு அப்பாற்பட்ட ஒரு தரப்பாக- இலங்கை தன்னைக் காட்டிக் கொண்டு வந்தது.
ஆனால், இலங்கையின் நடுநிலை ஏற்கெனவே கேள்விக்குள்ளாகி விட்ட நிலையில்- போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்துக்கு பின்னர், இன்னமும் கேள்விகள் அதிகரித்திருக்கின்றன.
ஈரான் மீதான போர் ஒரு வலிந்த நடவடிக்கை தான். தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதற்காக அமெரிக்கா எடுத்துள்ள இந்த நடவடிக்கை, அது நியாயப்படுத்தும் விதம் கவனிக்கத்தக்கது.
இது ஈரானுக்கு மட்டும் பொருத்தமானது அல்ல, எதிர்காலத்தில் இலங்கைக்கு கூட இவ்வாறான அச்சுறுத்தல்கள் வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
-சுபத்திரா-
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!