இலங்கையின் இதயப்பகுதியான கொழும்பு மற்றும் அதன் கனவுத் திட்டமான துறைமுக நகரம் இன்று ஒரு ஆபத்தான பரிமாணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
முதலீட்டாளர்களின் சொர்க்கம் என்று வர்ணிக்கப்பட்ட இந்த நிலப்பரப்பு, தற்போது சர்வதேச சைபர் குற்றவாளிகளின் புகலிடமாக மாறி வருகிறதோ என்ற அச்சம் பாராளுமன்ற உறுப்பினர் அமில பிரசாத் சிறிவர்தனவின் அண்மைய உரையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வர்த்தக விசாக்களை கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு இலங்கைக்குள் ஊடுருவும் சீனப் பிரஜைகள், நூற்றுக்கணக்கான போலி நிறுவனங்களை பதிவு செய்து, அவற்றின் ஊடாக பாரிய அளவிலான சர்வதேச நிதி மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக அமில பிரசாத் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, துறைமுக நகரத்திற்குள் இயங்கும் பல நிறுவனங்கள் வெறும் காகித அளவிலேயே உள்ளன. இவை வரி செலுத்துவதில்லை என்பது ஒருபுறமிருக்க, இவற்றின் பின்னணியில் உள்ள டிஜிட்டல் செயல்பாடுகளைக் கண்காணிக்க அரசாங்கத்தின் டிஜிட்டல் அமைச்சிடம் முறையான தொழில்நுட்பக் கட்டமைப்போ அல்லது கண்காணிப்பு அமைப்போ இல்லை என்பது அம்பலமாகியுள்ளது.
முறையான கண்காணிப்பின்றி இவர்களுக்கு கதவுகளைத் திறந்து விடுவது, உள்நாட்டு நேர்மையான வர்த்தகர்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல், கறுப்புப் பணப் பரிமாற்றத்திற்கான மையமாக இலங்கையை மாற்றிவிடும் என அவர் எச்சரித்துள்ளார்.
சீனாவைப் பின்னணியாகக் கொண்ட சைபர் குற்றக் கும்பல்கள் ஆசிய பிராந்தியத்தில் எவ்வாறு வேரூன்றியுள்ளன என்பதைக் கவனித்தால், இலங்கையின் நிலைமை எவ்வளவு மோசமானது என்பது புரியும்.
சர்வதேச அளவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 75 பில்லியன் டொலர் அளவிலான பணம் இந்த வகை மோசடிகள் மூலம் சீனக் கும்பல்களால் சுருட்டப்பட்டுள்ளது.
இதில் இலங்கை, மியான்மர் மற்றும் கம்போடியா போன்ற நாடுகள் முக்கிய மையங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மட்டும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுமார் 100,000க்கும் அதிகமான சீனப் பிரஜைகள் சைபர் குற்றங்களுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டு அந்தந்த நாட்டு அரசாங்கங்களால் வெளியேற்றப்பட்டுள்ளனர் அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களில் மாத்திரம் இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட சோதனைகளில், கடுகண்ணாவ, அளுத்கம மற்றும் கொழும்பின் சொகுசு வீடுகளில் தங்கியிருந்த 200க்கும் மேற்பட்ட சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான சிம் கார்டுகள், அதிநவீன கணினிகள் மற்றும் சுமார் 200க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்கள் கைப்பற்றப்பட்டன.

சீனக் குற்றவாளிகள் இலங்கையைத் தேர்ந்தெடுப்பது ஏன்?ஏன் சீனச் சைபர் கும்பல்கள் கம்போடியா அல்லது மியான்மரைத் தவிர்த்துவிட்டு இலங்கையை நோக்கித் தங்கள் பார்வையைத் திருப்புகின்றன?
இதற்குக் பின்னால் பல மூலோபாய காரணங்கள் உள்ளன. பொருளாதார நெருக்கடி மற்றும் தளர்வான சட்டங்கள் மற்றும் இலங்கையின் தற்போதைய பொருளாதாரச் சூழலில், 'முதலீடு' என்ற பெயரில் வரும் எந்தவொரு வெளிநாட்டுப் பணத்தையும் அரசாங்கம் வரவேற்கிறது.
இந்த பலவீனத்தைச் சீனக் கும்பல்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றன. துறைமுக நகரம் ஒரு தனித்துவமான பொருளாதார வலயத்தைக் கொண்டுள்ளது.
அங்குள்ள சட்ட திட்டங்கள் மற்றும் வரிச் சலுகைகள் இவர்களுக்கு ஒரு பாதுகாப்பான திரையை வழங்குகின்றன. சிறப்பு பொருளாதார வலயம் என்ற போர்வையில் இவர்களது சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்கள் மிக எளிதாக மறைக்கப்படுகின்றன.
அதிவேக இணைய வசதி மற்றும் புவியியல் அமைவிடம் முக்கிய காரணமாக உள்ளன.
தெற்காசியாவிலேயே சிறந்த இணையக் கட்டமைப்பைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை திகழ்வதால், இங்கிருந்து கொண்டு ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளின் வங்கிக் கணக்குகளைத் ஹெக் செய்வது இவர்களுக்கு எளிதாகிறது.
மறுபுறம் வர்த்தக விசா பெறுவதில் உள்ள எளிமை மற்றும் போலி நிறுவனங்களைப் பதிவு செய்வதில் உள்ள சட்டச் சிக்கல்கள் இவர்களுக்குச் சாதகமாக உள்ளன.
சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு இலங்கையை மீண்டும் 'சாம்பல் பட்டியலில்' சேர்க்கும் அபாயம் உள்ளதாகப் எச்சரிக்கின்றனர்.
சைபர் குற்றங்கள் மூலம் ஈட்டப்படும் பணம் இலங்கையின் வங்கி முறைமைக்குள் கலந்தால், அது நாட்டின் ஒட்டுமொத்த நிதி நம்பகத்தன்மையையும் சிதைத்துவிடும். ஒரு நாடு சைபர் குற்றவாளிகளின் கூடாரமாக மாறினால், அங்கு கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற பெருநிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வரமாட்டார்கள்.
இறுதியில், நேர்மையான இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய டிஜிட்டல் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்ற அச்சமும் எச்சரிக்கையும் வெகுவாக உள்ளன.இலங்கை செய்திகள்
அரசாங்கத்தின் உடனடி கடமை என்ன?குற்றப் புலனாய்வுத் துறையின் அறிக்கைகளின்படி, இந்தக் கும்பல்கள் வெறும் நிதி மோசடியுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. மனிதக் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றுக்கும் இந்தச் சைபர் மையங்களையே தகவல் தொடர்புத் தளமாகப் பயன்படுத்துகின்றனர்.
எனவே, அரசாங்கம் உடனடியாகப் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். துறைமுக நகரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து சீன நிறுவனங்களின் உண்மைத்தன்மை மற்றும் அவற்றின் நிதி ஆதாரங்கள் குறித்து ஒரு 'விசேட தடயவியல் தணிக்கை' நடத்தப்பட வேண்டும். டிஜிட்டல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் குடிவரவு திணைக்களம் இணைந்து 'நிகழ்நேர விசா கண்காணிப்பு' முறையை அமுல்படுத்த வேண்டும்.
சீன அரசாங்கத்துடன் இணைந்து, குற்றப் பின்னணி கொண்ட நபர்களின் விபரங்களைப் பெற்று அவர்களைக் கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார எழுச்சியை நோக்கிப் பயணிக்கும் இந்த வேளையில், இத்தகைய சைபர் நச்சுப் பாம்புகள் நாட்டுக்குள் புற்று வைப்பதைத் தடுத்து நிறுத்தத் தவறினால், எதிர்கால சந்ததியினர் ஒரு 'டிஜிட்டல் அடிமைத்தனத்திற்குள்' தள்ளப்படுவது நிச்சயம்.
அரசாங்கம் மெத்தனமாக இருந்தால், 'முதலீட்டு சொர்க்கம்' என்பது 'குற்றவாளிகளின் நரகமாக' மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!