இஸ்ரேலிய செய்தித்தாளான "தி ஜெருசலேம் போஸ்ட்" 2026 மார்ச் 14 ஆம் திகதி வெளியிட்டுள்ள ஒரு தகவலின் படி சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் 1918 ஆம் ஆண்டில் டேவிட் பென் கியூரியன் "நமது நிலம் மற்றும் அதன் பிராந்தியத்தின் எல்லைகள்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி இருந்தார். இவர் பிற்காலத்தில் இஸ்ரேலின் முதலாவது பிரதமராக பதவி வகித்தார்.
அந்த கட்டுரை வெளியான காலப்பகுதி துருக்கி பேரரசு வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், பிரிட்டன் மற்றும் பிரான்ஸால் நவீன மத்திய கிழக்கு செதுக்கப்பட்டுக் கொண்டிருந்த காலமாகும். இஸ்ரேல் என்ற ஒரு நாடோ அல்லது அரசோ ஸ்தாபிக்கப்படாத ஒரு காலப்பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்மொழியப்படும் இஸ்ரேலின் எல்லைகள் என்பது, மேற்கில் மத்தியதரைக் கடல், கிழக்கில் சிரிய பாலைவனம், தெற்கில் சினாய் மற்றும் அரேபியா பாலைவனங்கள், மற்றும் வடக்கில் லெபனான் மற்றும் ஹெர்மோன் மலைகள் ஆகியவற்றால் சூழப்பட்ட ஓர் இயற்கையான புவியியல் அலகு என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் மிக முக்கியமாக இஸ்ரேலின் தரைவழியான இயற்கையான வடக்கு எல்லை, தெற்கு லெபனானில் உள்ள லிட்டானி ஆறு என்றும் அவர் முடிவு செய்திருந்தார்.

தற்போது பிரதமர் நெதன்யாஹுவின் இஸ்ரேலிய அரசாங்கம், இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே பலஸ்தீனர்களை வெளியேற்றி, மேற்குக் கரையை கைப்பற்றி, தெற்கு லெபனானை லிட்டானி நதி வரை இணைக்கும் வகையில், யூதர்களுக்கு மட்டுமேயான குடியேற்றங்களை உருவாக்கி வருகின்றது.
1930 மற்றும் 1940 களில் இஸ்ரேலை உருவாக்கும் வகையில், சியோனிச யூத குண்டர்கள் பலஸ்தீன நிலங்களை சூறையாடியபோது, மேற்குக் கரையில் உள்ள பலஸ்தீனர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்ற வசதியாக வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டதோடு, இஸ்ரேலிய அரசாங்கம் அதற்கு தேவையான ஆதரவையும் நிதி உதவியையும் வழங்கியது.
இன்று இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களை கைவிட்டு விட்டு, காஸாவில் பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு ஆதரவளித்துக் கொண்டு, தங்கள் அதிகாரம், செல்வம், அரண்மனைகள், மற்றும் வசதிகளைப் பற்றி மட்டுமே கவலைப்படும் அரபு சர்வாதிகாரிகள் கண்மூடித்தனமாக இருக்கும் நிலையில், அமெரிக்கா, -பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவின் முழு ஆதரவுடன் இது நடக்கின்றது.
கிழக்கு ஜெருசலேமை உள்ளடக்கிய, மேற்குக் கரையின் பலஸ்தீனப் பகுதி 1967 ஜூன் 7 முதல் இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது. ஆறு நாள் போரின் போது இஸ்ரேலிய படைகள் இப்பகுதியைக் கைப்பற்றி பின்னர் ஜோர்டானால் ஆளப்பட்டது.
ஜூன் 1967 முதல் இஸ்ரேல், சர்வதேச சட்டத்தை மீறி மேற்குக் கரை முழுவதும் யூதர்களுக்கு மட்டுமேயான குடியேற்றங்களையும் நிறுவி உள்ளது. அமெரிக்கா-, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவின் பாரபட்சமான, கண்மூடித்தனமான ஆதரவின் காரணமாக எந்தவொரு சர்வதேச தீர்மானத்தையும் மீறுவதற்கு இஸ்ரேலுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஐ.நா.வைப் பற்றியோ அதன் தீர்மானங்கள் பற்றியோ இஸ்ரேல் கவலைப்பட்டதே கிடையாது.

மேற்குக் கரையில் 2,747,943 பலஸ்தீனர்கள் மற்றும் 670,000 இற்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடியேறிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, அவர்களில் சுமார் 220,000 பேர் கிழக்கு ஜெருசலேமில் வாழ்கின்றனர்.
இன்று சுமார் 175 உத்தியோகபூர்வ குடியேற்றங்கள் மற்றும் சுமார் 200- அங்கீகரிக்கப்படாத புறக்காவல் நிலையங்கள் (கிழக்கு ஜெருசலேம் தவிர) என்பன 470,000 இற்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடியேற்ற வாசிகளைக் கொண்டுள்ளன. குறிப்பிடத்தக்க விரிவாக்கம் மேலும் தொடர்கின்றது. இதில் புதிய குடியேற்றங்கள் அங்கீகரிக்கப்பட்டு மேலும் பல புறக்காவல் நிலையங்களை சட்டப்பூர்வமாக்குவதற்கான முயற்சிகளும் அடங்கி உள்ளன.
இந்த மோதலானது ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை இணைக்கவும், வடக்கு காஸாவை தனிமைப்படுத்தவும், இஸ்ரேலின் பாதுகாப்புக்கான ஒரு மண்டலமாக செயல்படவும், காஸாவில் பல பில்லியன் டொலர் மதிப்புள்ள கடல் இயற்கை எரிவாயு வளங்களைக் கைப்பற்றி, பின்னர் அதை அபிவிருத்தி செய்து, காஸா வழியாக "பென் கியுரியன் கால்வாய் திட்டத்தை" நிறுவவும் எடுக்கப்படுகின்ற ஒரு முயற்சியாகும்.
இந்த கால்வாய் எகிப்து வழியாக செல்லும் சூயஸ் கால்வாய்க்கு போட்டியாக, அகபா வளைகுடாவை மத்தியதரைக் கடலுடன் இணைக்கும் திட்டமாகும் என்று கட்டுரையாளர் மனுவல் ஹசாசியன் குறிப்பிட்டுள்ளார்.
1967 ஆம் ஆண்டில் மேற்குக் கரையை ஆக்கிரமித்தது முதல், மேற்குக் கரை முழுவதும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான டுனாம் நிலங்களை (சுமார் 200,000 ஹெக்டேர்) இஸ்ரேல் தவறாகப் பயன்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் இந்த நிலத்தை தனது சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகின்றது. இதில் புதிய குடியேற்றங்களைக் கட்டுதல், விவசாய நிலங்களைப் பேணுதல், மற்றும் தொழில்துறை மண்டலங்களை உருவாக்கல், உட்பட தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்தை விரிவுபடுத்துதல் மற்றும் முக்கியமாக குடியேறிய மக்களுக்கு சேவை செய்யும் சாலைகளை அமைத்தல் என்பன அடங்கும்.
இது தவிர பலஸ்தீன மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் அடாவடித் தனங்களில் வன்முறைகள் மூலம் மக்களை அடித்து துன்புறுத்துவது, அவர்கள் மீது கற்களை வீசுவது, மக்களை அச்சுறுத்துவது, வயல்களை எரிப்பது, மரங்கள் மற்றும் பயிர்களை அழிப்பது, பயிர்களை சூறையாடுவது, வீடுகள் மற்றும் வாகனங்களை சேதப்படுத்துவது,
வீதிகளில் தடைகளை ஏற்படுத்துவது மற்றும் சில சந்தர்ப்பங்களில் கொலை செய்வது என்பனவும் அடங்கும். பண்ணைகள் என்று அழைக்கப்படும் பகுதிகளைச் சேர்ந்த குடியேற்றவாசிகள், பலஸ்தீன விவசாயிகளையும் மேய்ப்பர்களையும் அவர்களது வயல்களிலிருந்தும், பல தலைமுறைகளாக அவர்கள் பயன்படுத்தும் மேய்ச்சல் நிலங்கள் மற்றும் நீர் ஆதாரங்களிலிருந்தும், வன்முறையை கையாண்டு, துரத்தி வருகின்றார்கள். அவர்கள் தினசரி வன்முறையான மோதல்களைத் தொடங்குகின்றார்கள் மற்றும் பலஸ்தீனர்களின் மந்தைகளை சிதறடிக்க ட்ரோன்களையும் பயன்படுத்துகின்றார்கள்.
பலஸ்தீனர்கள் அச்சத்தில் உள்ளனர். இராணுவத்தில் இருந்து காவல்துறையில் வரை மற்றும் ஷின் பெட் உளவுத்துறை சேவை என எல்லாமே அவர்களை அச்சுறுத்துகின்றன. கைதுகள், விசாரணைகள், சிறையிலிருந்து சோதனைச் சாவடிகள், மற்றும் ரோந்துப் பணிகள் என எல்லாமே அச்சுறுத்தலாக மாறி உள்ளன.
தெற்கு லெபனானைப் பொறுத்தவரை, லிட்டானி மற்றும் சஹ்ரானி ஆறுகள் வரைக்குமான பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்களைப் பாதிக்கும் கட்டாய இடப்பெயர்வு உத்தரவுகளை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமன்றி அவ்வப்போது சிறப்பு சோதனைகளையும் அவர்கள் கடக்க வேண்டி உள்ளது. லிட்டானி ஆற்றின் தெற்கே அமைந்துள்ள டசன் கணக்கான நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களையும் ஆற்றின் வடக்கே உள்ள சில பகுதிகளையும் சேர்ந்த மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் பலமுறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
தற்போது பலஸ்தீனப் பகுதியான காஸாவும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தற்போது நடந்து வரும் ஈரானுக்கு எதிரான அமெரிக்க, இஸ்ரேலிய போரின் போது, இஸ்ரேல் மீதான ஈரானின் கடுமையான பதில் தாக்குதல், அகண்ட இஸ்ரேலை உருவாக்கும் நோக்கில், பலஸ்தீன மற்றும் அரபு நிலங்களை அபகரிப்பதற்கான சியோனிச கனவை சிதைத்துள்ளது.
காஸா மற்றும் ஈரான் மீதான இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனம், உலகில் மிகவும் வெறுக்கப்படும் நாடான இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான உலகளாவிய விரோதத்தைத் தூண்டி விட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் நக்பா வருடாந்த நினைவு நிகழ்வின் போது, அமெரிக்கா ஐரோப்பா ஆசியா ஆபிரிக்கா மற்றும் பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நிச்சயமாக அரபு நாடுகளைத் தவிர. சர்வாதிகாரிகள் தங்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய எஜமானர்களைப் குஷிப்படுத்த தங்கள் மக்களை எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாதவாறு மிருகத்தனமான ஒடுக்கு முறையின் கீழ் வைத்திருக்கின்றனர்.
ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள படி "மேற்குலகின் அன்புக்கு சொந்தமானவர்கள், ஆனால், உலகளாவிய ரீதியில் தனிமைப்படுத்தப் பட்டவர்கள் என்பதே இஸ்ரேலின் உருவம். இன்றைய உலக சூழலில் இந்த நிலை மேலும் ஆழமடைந்து வருகின்றது. இதனால் இஸ்ரேலின் மவுசு உலகளாவிய மட்டத்தில் வரலாறு காணாத சரிவை சந்தித்து விட்டது. காஸாவில் ஏற்படுத்திய பேரழிவு, லெபனான் மற்றும் ஈரான் சம்பந்தப்பட்ட மோதல்கள் அதிகரித்து வருவதால், இஸ்ரேல் என்ற நாட்டைப் பற்றிய கருத்து பெரிதும் களங்கப்படுத்தப்பட்டுள்ளது. இது உலகளவில் தீவிர இராஜதந்திர மற்றும் பொது ஆய்வை தூண்டியுள்ளது.
முன்னொருபோதும் இல்லாத வகையில் சர்வதேச தனிமைப்படுத்தல், போர்க்குற்றங்கள் குறித்த பரவலான குற்றச்சாட்டுகள் உலகளவில் இஸ்ரேலுக்கு எதிராக அதிகரித்துள்ள நிலையில், அதன் தலைமை நடைமுறையில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடிவிறாந்து உத்தரவுகளையும் எதிர்கொண்டுள்ளது. வெல்லமுடியாத ஒரு சக்தி என்ற இஸ்ரேலின் மாய பிம்பத்தின் மீது ஈரான் கடுமையான அடியை கொடுத்துள்ளது”.
நிலைமை என்னவென்றால், "இஸ்ரேல் தொடர்ந்து இருக்கக்கூடாது இதை ஒரு யூதனாக நான் சொல்கிறேன்" என்று நோம் சோமோஸ்கி என்பவர் கூறி உள்ளார்.
அரசியல் ஆய்வாளர் நார்மன் பின்கெல்ஸ்டைன் என்பரின் கருத்துப்படி "இஸ்ரேலியர்களுக்கு தங்களது மூட்டை முடிச்சுக்களை கட்டிக் கொண்டு, பலஸ்தீன மண்ணை விட்டு வெளியேறும் உரிமை மட்டுமே எஞ்சி உள்ளது". Politics
அமெரிக்க பத்திரிகையாளர் அனா காஸ்பரியன் "உலக அமைதிக்கு இஸ்ரேல் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இஸ்ரேலுக்கும் அதன் அரசாங்கத்துக்கும் சார்பாக அவர்களின் கூட்டு இனப்படுகொலையின் ஆதரவாளராக இருப்பது முற்றிலும் ஒழுக்கக் கேடானது என்று நான் கருதுகின்றேன்” என்று கூறுகின்றார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!