பெயருக்குக்கூட விமானப்படை இல்லாத ஈரானை தங்கள் வான்படையால் நசுக்கிவிடலாம் என, அமெரிக்காவும் இஸ்ரேலும் கருதிய வேளையில், ஈரான் தனது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான சக்தியைப் பயன்படுத்தி, உலகை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொண்ட ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள், ஈரான் வலுவான பதிலடியைத் தருவதற்கே வழிவகுத்துள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் (இல்லாத) அணு ஆயுதத் திட்டம் என்ற முக்கியத்துவம் குறைந்த ஒரு விடயத்தில் கவனம் செலுத்திய நேரத்தில், சமச்சீரற்ற போரை எதிர் கொள்வதற்காக ஈரான் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்தியது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் கவனிக்கப்படாமலோ அல்லது சரியாக மதிப்பிடப்படாமலோ இருக்கையில், ஈரான் வழக்கமான இராணுவங்கள் சிந்தித்துத் திட்டமிடாத புதுமையான கொள்முதல், உற்பத்தி மற்றும் இருப்பிட நுட்பங்களைக் கொண்டு, பல தசாப்தங்களாக ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானப் போருக்குத் தன்னைத் தயார்படுத்தி வந்தது.
ஈரானின் ஏவுகணைக் கிடங்கு பூமிக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்பது மட்டுமே அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் தெரிந்திருந்தது. ஆனால், அந்த ஆயுதக் கிடங்கு எவ்வாறு கட்டமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது என்பது அவைகளுக்குத் தெரிந்திருக்கவில்லை.
ஈரானியர்கள் தங்களது பாலிஸ்டிக் ஏவுகணைகளை சுலபமாகக் கொண்டு செல்லவும், பொருத்தவும் கூடிய வகையில் சிறிய பாகங்களாக உருவாக்கினர். யூன் 2025 இல் நடந்த 12 நாள் போருக்குப் பின்னர்தான் ஈரானியர்கள் தமது பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தைப் புதுப்பித்திருப்பதை இஸ்ரேலியர்கள் அறிந்து கொண்டனர்.
வளி உயர் அடுக்குகளுக்கு வளைந்த பாதையில் பயணித்து, பின்னர் புவியீர்ப்பு விசையைப் பயன்படுத்தி ஒலியின் வேகத்தை விடப் பல மடங்கு வேகத்தை அடையும் பல்வேறு வகையான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் உருவாக்கியிருப்பதைக் கண்டு இஸ்ரேலியர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்று, ‘தி நியுயோர்க் ரைம்ஸ்’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையொன்றில் ஜோன் இஸ்மே சுட்டிக் காட்டியிருக்கிறார்.ஈரானின் மிக நீண்ட தூரம் செல்லக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையால் சுமார் 1200 மைல்கள் தூரத்தில் உள்ள இலக்குகளைக்கூடத் தாக்க முடியும். 2019ஆம் ஆண்டில் ஈரான், ‘மத்திய கிழக்கிலேயே மிகப்பெரிய மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டுள்ளது’ என, உளவுத்துறை முகவரகம் கூறியது.
சுமார் 30 முதல் 190 மைல்கள் வரையான தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ‘அண்மைத் தாக்குதல்’ ஏவுகணைகள், 190 முதல் 620 மைல்கள் வரை பயணிக்கக்கூடிய ‘குறுகிய தூர’ ஏவுகணைகள், சுமார் 1240 மைல்கள் வரை செல்லக்கூடிய ‘நடுத்தர தூர’ ஏவுகணைகள் என, ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் என ஈரானின் ஏவுகணை களஞ்சியம் இருந்தது என, இஸ்மாயி என்பவர் கூறியிருக்கிறார்.
சக்தி வாய்ந்த குணடுகளால் ஈரானின் ஏவுகணைத் திறனில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை அமெரிக்கர்களும் இஸ்ரேலியர்களும் உணர்ந்தனர். எனவே, சிறப்பு படைகளைக் கொண்டு தரைவழிப் படையெடுப்பு நடத்துவது ஈரானியர்களை சரணடைய நிர்ப்பந்திக்கும் என அவர்கள் எண்ணினர். ஆனால், அது மிகப்பெரிய மனித உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும் என்பதால், ஏனைய சக்திகளின் ஆதரவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவது என்ற மாற்று வழி பரிசீலிக்கப்பட்டது.
பாகிஸ்தான், துருக்கி மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு உதவிக்கரம் நீட்ட, அமைதியான முறையில் ஒரு முடிவை எட்டுவதற்கான முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் என்பன விதித்துள்ள முன்நிபந்தனைகள் இரு தரப்பினருக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதை ஏறக்குறைய சாத்தியமற்றதாக்குகின்றன. இரு தரப்பினரும் தமது நிபந்தனைகளைத் தளர்த்திக் கொள்ளும் நிலையில் இல்லை.
ஈரான் தனது இருப்பே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாலும், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அகந்தையும், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் உணர்வும் சமரசம் செய்துகொள்ள அனுமதிக்காததாலும், அவ்வாறு செய்ய இயலாது. எனவே, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானை தொடர்ந்து தாக்கி, அதன் கார்க் தீவை கைப்பற்ற முயற்சிக்கும் அதே வேளையில், ஈரானும் தனது ஏவுகணை உற்பத்தியையும், பதில் தாக்குதல் திறன்களையும் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் உற்பத்தி மற்றும் சேமிப்பு அமைப்புகளின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
1 ஈரான் தனது ஆயுதங்களில் 90 சதவீதமானவற்றைத் தானே உற்பத்தி செய்கிறது. பல தசாப்தங்களாக விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக, அது ‘தகவமைப்பு கண்டுபிடிப்பு’ கலையில் தேர்ச்சி பெற்றுள்ளது.
2 அமெரிக்காவின் கூற்றுப்படி, ஈரான் மேற்கத்தைய மற்றும் சோவியத் உபகரணங்களின் உள்ளுர் நகல்களை உருவாக்க, ‘நிறுவன உளவு மற்றும் அறிவுசார் திருட்டை’ பயன்படுத்துகிறது.
3 அதன் புகழ்பெற்ற ‘ஸாஹெட்’ ட்ரோன்களுக்கு, கண்காணிக்கவோ அல்லது தடை செய்யவோ கடினமான, உடனடியாகக் கிடைக்கும் வணிகக் கூறுகளை ஈரான் பயன்படுத்துகிறது.
4 வான்வழித் தாக்குதல்களில் இருந்து உற்பத்தியைப் பாதுகாக்க, ஈரான் பரந்த நிலத்தடி ‘ஏவுகணை நகரங்களை’ கட்டியுள்ளது. இந்த வசதிகள் மலைகளில் ஆழமாக அமைக்கப்பட்டு, கொங்கிரீட்டால் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
5 சில வசதிகள் தீவிர மோதலின் போதும் ஆயுதக் கிடங்குகள் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்யும் வகையில், ஏவுகணைகளை மறைவான ஏவுதளங்களுக்கு விரைவாக நகர்த்துவதற்கு புதையிரதப் பாதைகளைப் பயன்படுத்துகின்றன.
6 ஈரான் தனது உற்பத்தித் தடத்தை தனது எல்லைகளுக்கு அப்பால் விரிவுபடுத்தியுள்ளது. தஜிகிஸ்தான், ரஸ்யா, எத்தியோப்பியா மற்றும் வெனிசூலா போன்ற நாடுகளில் ட்ரோன் மற்றும் ஆயுத தயாரிப்பு ஆலைகளை நிறுவியுள்ளது.
7 ஈரான் ஒரு எதிர்ப்பு அச்சை உருவாக்கியுள்ளது. இது அதன் பிராந்திய கூட்டாளிகளுக்கு (லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மற்றும் யெமனில் உள்ள ஹூதிகள்) உள்நாட்டில் தங்கள் சொந்த ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பத்தையும் பயிற்சியையும் வழங்குகிறது. இதன் மூலம் ஒரு தன்னிறைவு பெற்ற பரவலாக்கப்பட்ட வலையமைப்பை உருவாக்கியுள்ளது.
8 தடைகள் இருந்தபோதிலும், ஈரான் ரஸ்யாவிலிருந்து முக்கியமான பொருட்கள் மற்றும் மேம்பட்ட அமைப்புகளை (பயிற்சி ஜெட் விமானங்கள் மற்றும் கவச வாகனங்கள் போன்றவை) தொடர்ந்து பெற்று வருகிறது. சீனாவிலிருந்து திட எரிபொருள் கலவைகள் போன்ற சிறப்பு ஏவுகணை கூறுகளை இறக்குமதி செய்கிறது.
9 ஈரான் ‘செலவு திணிப்பு’ உத்தியில் கவனம் செலுத்துகிறது. மேம்பட்ட மற்றும் விலையுயர்ந்த பாதுகாப்புகளை முறியடிக்க மலிவான ஆயுதங்களை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது.
10 ஈரான் குறைந்த விலை வெடிமருந்துகளை (ட்ரோன்கள்) உற்பத்தி செய்து பயன்படுத்துகிறது. இது பாரம்பரிய விமானப்படைகளின் செலவில் ஒரு சிறு பகுதியிலேயே நம்பகமான தடுப்பை பராமரிக்க உதவுகிறது.
சமீபத்தைய மதிப்பீடுகளின்படி, ஈரான் மாதத்திற்கு 100 இற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை உற்பத்தி செய்ய முடியும். இது, அவற்றைத் தடுத்து நிறுத்தப் பயன்படுத்தப்படும் விலையுயர்ந்த ஏவுகணைகளின் உற்பத்தி விகிதத்தை விடப் பன்மடங்கு அதிகமாகும்.
ரஸ்ய மற்றும் சீன உதவி!
சீனாவும் ரஸ்யாவும் ஆயுத விநியோகம் மற்றும் செயற்கைக்கோள் உளவுத் தகவல்கள் மூலம் ஈரானுக்கு உதவுகின்றன. ஈரான், சீனா மற்றும் ரஸ்யா மூன்று நாடுகளும் இணைந்து, ‘தி அட்லாண்டிக் கவுன்சில்’ எனக் குறிப்பிடும் ஒரு ‘தவிர்ப்பு அச்சை’ உருவாக்குகின்றனர். இந்த அச்சு அமெரிக்கத் தடைகளைத் தவிர்க்க உதவுகிறது.
சீனா, ரஸ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிடமிருந்து தடை செய்யப்பட்ட எண்ணெயை இறக்குமதி செய்வதன் மூலமும், பதிலுக்கு அவர்களுக்கு அதிநவீன இரட்டைப் பயன்பாட்டுத் தொழில்நுட்பத்தை விற்பனை செய்வதன் மூலமும் அவர்களுக்கு உதவுகிறது. ரஸ்யாவின் மறைமுக எண்ணெய் கப்பல் படை, மாற்றுப் பணமளிப்பு முறைகள் மற்றும் பண்டமாற்று வர்த்தகம் என்பனவற்றின் மூலம் அமெரிக்கத் தடைகளை மீறுவதில் பங்கு வகிக்கிறது.
மூன்று நாடுகளுக்குமிடையே ஒரு ஒருங்கிணைந்த விநியோகச் சங்கிலித் தொடர்பு உள்ளது. சீனா, ரஸ்யா மற்றும் ஈரான் ஆகியவற்றுக்கிடையிலான வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம், மற்றும் அதனுடன் தொடர்புடைய விநியோகச் சங்கிலிகள், புவியியல் மற்றும் குறிப்பிடத்தக்க மேற்கத்தைய பொருளாதார அழுத்தத்தின் விளைவாகும்.
கடுமையான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் காரணமாக, இந்த நாடுகள் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்தைய நாடுகளிடமிருந்து தொழில்நுட்பத்தையும், உதிரிப்பாகங்களையும் நேரடியாக எளிதில் பெற முடியாது. அச்சு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மேற்கத்தைய நிதியமைப்புக்கு வெளியேயும், மேற்கத்தைய பொருளாதாரக் கட்டுப்பாடுகளின் வரம்பிற்கு வெளியேயும் நடைபெறுவதால், இந்த ஒருங்கிணைப்புச் சங்கிலிகள் தடைகள் மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதை அதிக அளவில் எதிர்க்கின்றன என ‘அட்லாண்டிக் கவுன்சில்’ கூறுகிறது.
‘ஸாஹெட்’ போன்ற ஈரானிய ஆளில்லா விமானங்கள், இறக்குமதி செய்யப்பட்ட மின்னணுவியல் பாகங்கள், இயந்திரங்கள் வழிச்செலுத்தல் கூறுகள், மின்கலங்கள் மற்றும் குறைக்கடத்திகள் ஆகியவற்றின் ஒரு சூழமைப்பைச் சார்ந்துள்ளன.
இந்தப் பாகங்களில் பல அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் யப்பானில் இருந்து வந்தாலும், அவை ஈரானிய உற்பத்தியாளர்களைச் சென்றடைவதற்கு முன்பு, கொள்முதல் வலையமைப்புகள் பெரும்பாலும் சீன விநியோகஸ்தர்கள் அல்லது வர்த்தக நிறுவனங்கள் மூலம் அவற்றைப் பெறுகின்றன. ஈரானுக்கான சீனாவின் இரட்டைப் பயன்பாட்டு ஏற்றுமதிகள் 2024 ஜனவரியில் உச்சத்தை எட்டின.
2022 முதல் ரஸ்யாவும் ஈரானும் ஆளில்லா விமானத் தொழில்நுட்பத்தையும், உற்பத்தி அறிவையும் பரிமாறிக்கொண்டு, தங்கள் உற்பத்தித் திறனை விரிவுபடுத்தி வருகின்றன. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, உக்ரைனில் ரஸ்யா நடத்தும் போருக்கு உதவுவதற்காக, ஈரான் 600 பிரிக்கப்பட்ட ஸாஹத் – 16 ஆளில்லா விமானங்கள், 1300 ஆளில்லா விமானங்களுக்கான பாகங்கள், பயிற்சி மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை ரஸ்யாவுக்கு வழங்கியது.
சீன மின்னணு சந்தைகளும், விநியோகஸ்தர்களும் இந்தச் செயல்பாட்டில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆரம்பத்தில் பொதுப்பயன்பாடுகளுக்காகத் தயாரிக்கப்பட்ட நிலைமை உணர்விகள் அல்லது செயற்கைக்கோள் வழிசெலுத்தல் தொகுதிகள் போன்ற கூறுகளை, சீன இடைத்தரகர்கள் மூலம் வாங்கி ஈரானிய ஆயுத அமைப்புகளில் ஒருங்கிணைக்க முடியும்.
வர்த்தக மின்னணுவியலைத் தழுவி அமைப்பதில் ரஸ்யாவின் அனுபவமும் இந்தப் புத்தாக்கச் சூழலுக்கு வலுச் சேர்க்கிறது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவ இலக்குகளைக் குறி வைப்பதற்காக, ஈரானிய ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளில் சீன செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்புகள் இணைக்கப்பட்டுள்ளதாகச் சில வல்லுனர்கள் நம்புகின்றனர்.
2025 நொவம்பரில் ஈரானின் விமான உற்பத்தித் தொழிற்துறை நிறுவனத்துடன் தொடர்புடைய ஒரு தனி வலையமைப்பு, சீன உணர்விகள் மற்றும் வழிசெலுத்தல் கருவிகளைப் பெறுவதற்காகப் போலி நிறுவனங்களைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
2021 இல் சீன தேசிய விண்வெளி நிர்வாகத்திற்குச் சொந்தமான புவி இருப்பிடத்தைக் கண்டறியும் செயற்கைக்கோள் அமைப்பான பெய்டோவை அணுகுவதற்கான அனுமதியை சீனா ஈரானுக்கு வழங்கியது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தொடங்கியதிலிருந்து, அச்சுறுத்தல் பகுப்பாய்வைக் குழப்புவதற்கும், உண்மையான ஈரானிய இராணுவ நகர்வுகளை மறைப்பதற்கும், திசைதிருப்பும் சமிக்ஞைகளை உருவாக்க ஈரான் பெய்டோவைப் பயன்படுத்தி வருகிறது.
ஏவுகணை மற்றும் வெடிபொருட்கள் உற்பத்தியைத் தொடர்வதற்கான ஈரானியத் திறன், இரசாயன முன்னோடிப் பொருட்கள் மற்றும் தொழில்துறை பொருட்களுக்கான அணுகலைச் சார்ந்துள்ளது.
இரசாயனவியலில் ஒரு முன்னோடிப் பொருள் என்பது மற்றொரு சேர்மத்தை உருவாக்கும் ஒரு வேதி வினையில் பங்கேற்கும் ஒரு சேர்மமாகும். இந்தப் பொருட்கள் மேற்கத்தைய ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருந்தாலும், உற்பத்தி பல அதிகார வரம்புகளில் பரவியிருக்கும் போது, அவற்றை அமுல்படுத்துவது மிகவும் கடினம் என, அட்லாண்டிக் கவுன்சில் கூறுகிறது.
-பி.கே.பாலச்சந்திரன் (P.K.Balachandran Nair)
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!