ன்னும் 600,000 டொலர் மாயம் ; ஐவருக்கு பயணத்தடை
30 Apr, 2026
ஹிஸ்புல்லா
பாலஸ்தீனத்தின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹூதிக்கள் மற்றும் ஈராக்கிய ஷியா ஆயுதக்குழுக்களுக்கு பக்கபலமாக ஈரானே இருந்து செயல்படுகிறது. இந்த ஆயுதக் குழுக்களை முழுமையாக அழித்து ஒழிப்பதற்கு ஈரான் மீதான தாக்குதல்கள் நடத்தியே ஆக வேண்டும் என்பது இரு நாடுகளின் நிலைப்பாடாகும்.
இதற்குப் பின்னால் உள்ள அமெரிக்காவின் நீண்டகாலப் புவிசார் அரசியல் மூலோபாயம் மிகவும் தெளிவானது.
வளைகுடா பிராந்தியத்தின் மாபெரும் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைத் தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம், உலக அரங்கில் தனக்குப் போட்டியாக உருவெடுத்துள்ள சீனா, அத்துடன் ஐரோப்பிய வல்லரசான ஜெர்மனி மற்றும் ஆசியாவின் ஜப்பான் போன்ற நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகளுக்குக் கடிவாளமிடும் வீட்டோ அதிகாரத்தை (Veto power) அமெரிக்கா தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறது.
உலகளாவிய வர்த்தக அமைப்பில் 2023 ஆம் ஆண்டளவில் சுமார் 70 சதவீத நாடுகள் அமெரிக்காவை விட சீனாவுடனேயே அதிக வர்த்தகம் மேற்கொண்டிருந்தன.
இந்த நிலையில், சரிந்து வரும் தனது பொருளாதார மேலாதிக்கத்தையும், உலகளாவிய ரீதியில் அமெரிக்க டொலர் கொண்டுள்ள அந்தஸ்தையும் பாதுகாத்துக்கொள்ள, பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்ட இராணுவ நிர்ப்பந்தங்களை அமெரிக்கா கையாள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை, குறிப்பாக மத்திய கிழக்குக் கொள்கையைத் தீர்மானிப்பதில் இஸ்ரேலிய மற்றும் சவுதி அரேபிய அழுத்தக் குழுக்களின் (Lobby Groups) பங்கு அளப்பரியது.
இந்த யுத்தத்திற்கான இறுதிக்கட்ட இராணுவ முடிவுகள் மற்றும் அதற்கான அரசியல் பாதுகாப்பு ஆகியவை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வோஷிங்டன் பயணத்தின்போதே இறுதி செய்யப்பட்டன.
மறுபுறம், சவுதி அரேபியாவின் அழுத்தமும் இதில் பெரும் பங்கு வகித்துள்ளது. அதிகாரபூர்வமாக இராஜதந்திர தீர்வுகளை வலியுறுத்துவதாக சவுதி கூறினாலும்,
இளவரசர் முகமது பின் சல்மான்
அதன் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஈரான் அணுஆயுத பலம் பொருந்திய நாடாக மாறி பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகிவிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததாக செய்திகள் பரவியுள்ளன.
எனினும், இந்த முடிவுகள் வெறுமனே வெளிநாட்டு அரசியல் தலைவர்களால் மட்டும் எடுக்கப்பட்டவையல்ல; தேசிய துப்பாக்கி சங்கம் (NRA), புதைபடிவ எரிபொருள் பெருநிறுவனங்கள் (Fossil fuels) மற்றும் சர்வதேச மருந்து நிறுவனங்கள் (Big Pharma) போன்ற மாபெரும் கோர்ப்பரேட் நிறுவனங்களின் கட்டமைப்பு ரீதியான இலாப நோக்கங்களும் இதில் ஆழமாகப் பின்னிப்பிணைந்துள்ளன.
2026 ஈரான் யுத்தத்தின் தொடக்கமானது, 1914- ஆம் ஆண்டு முதலாம் உலகப் போருக்கு முந்திய காலகட்டத்தில் ஐரோப்பிய வல்லரசுகளிடையே நிலவிய மனநிலையைத் துல்லியமாகக் காட்டுகிறது.
தற்காப்பு உத்திகளை விட, எதிரியை முந்திக்கொண்டு முதல் தாக்குதலைத் தொடுப்பதே முழுமையான வெற்றியைத் தரும் என்ற ‘தாக்குதலின் மீதான மாயை’ வோஷிங்டனிலும் ஜெருசலேமிலும் மேலோங்கியிருந்தது.
ஈரானின் அணுஆயுதத் திட்டம் ஒரு குறிப்பிட்ட அபாயகரமான எல்லையைத் தொடப் போகிறது, தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் எதிரிக்குப் பலம் சேர்க்கும் என்ற அனுமானங்களின் அடிப்படையில், நீண்டகால இராஜதந்திரத்திற்குப் பதிலாகத் தலைமையைத் துண்டிக்கும் (Decapitation) நேரடி தாக்குதல் நடவடிக்கை தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஆனால், வான்வழித் தாக்குதல்கள் எதிரியின் இராணுவத் திறனைத் தற்காலிகமாகக் குறைக்குமே தவிர, ஒருபோதும் இணக்கமான மற்றும் ஜனநாயக அரசுகளை உருவாக்காது என்பதை ஈராக் போர் உள்ளிட்ட வரலாற்று நிகழ்வுகள் பலமுறை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளன.
இந்த யுத்தம் ஈரானின் அணுஆயுத அச்சுறுத்தலை நிரந்தரமாக ஒழித்து, மத்திய கிழக்கிலும் உலக அளவிலும் அமைதியைக் கொண்டுவருவதற்கானது என அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்களால் அதிகாரபூர்வமாகத் தொடர்ந்து பிரகடனப்படுத்தப்பட்டாலும், யதார்த்தத்தில் இது இராணுவ-தொழில்துறை கூட்டமைப்பின் (Military-Industrial Complex) அபரிமிதமான இலாப வேட்கைக்காகவே நடத்தப்படுகிறது.
ஆயுத விற்பனையாளர்கள், பெருநிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் பங்குச்சந்தை வியாபாரிகளின் இலாபத்தை உறுதி செய்வதற்காகவே உலகளாவிய மோதல்கள் செயற்கையாக நீடிக்கப்படுகின்றன.
அமெரிக்கப் பாதுகாப்புத் துறையானது தனது கட்டமைப்பு ரீதியான இலாபத்தை நிலைநிறுத்திக் கொள்ள ‘உலகை உள்ளடக்கிய’ (Cover the globe) மூலோபாயத்தைத் தொடர்ந்து பின்பற்றுகிறது;
இதற்காக உலகம் முழுவதும் 85 நாடுகளில் நேரடி மற்றும் மறைமுகப் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளையும், 750 இற்கும் மேற்பட்ட மாபெரும் இராணுவத் தளங்களையும் பராமரித்து வருகிறது.
உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு மற்றும் மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்களில் ஆயுதங்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுத் தீர்ந்துபோன நிலையில், அமெரிக்க அரசாங்கம் ஆயுத உற்பத்தியை முடுக்கிவிட பல பில்லியன் டொலர்களைப் புதிய ஆயுதக் கொள்முதல் கட்டளைகளாக வழங்கியுள்ளது.
இதனால் உலகின் முன்னணி ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளன.
மார்ச் 2023 முதல் மார்ச் 2026 வரையிலான மூன்றாண்டு காலகட்டத்தில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நிறுவனங்களின் பங்குச்சந்தை வளர்ச்சியும், அவற்றின் 2024 ஆம் ஆண்டின் அதிகாரபூர்வ பாதுகாப்பு வருவாயும் அதிர்ச்சியளிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளன.
ஈரானிய அதியுயர் தலைவர் கமேனி உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்கள் அழிக்கப்பட்ட நிலையில், போருக்குப் பிந்திய ஈரானின் நிலை குறித்து எந்தவொரு தெளிவான திட்டமும் அமெரிக்காவிடமோ இஸ்ரேலிடமோ இல்லை.
போரை முடித்து, இஸ்லாமியப் புரட்சிகரக் காவற்படையை சரணடையவைத்து, முன்னாள் ஈரானிய மன்னர் ஷாவின் மகன் தலைமையில் புதிய அரசு அமைப்பது என்று அமெரிக்க – இஸ்ரேலிய திட்டம் நிறைவேறுவதற்கான சாத்தியம் மிகக் குறைவு.
ஆனால், ஈரானியப் படைகள் புதிய தலைமையின் கீழ் அணுசக்தித் திட்டங்களை நிலத்தடிக்கு மாற்றி, வடகொரியாவை போன்று முழுமையான அணுஆயுத நாடாக உருவெடுப்பதற்கான சாத்தியக்கூறுகளே மிக அதிகம் என போரியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
இந்தப் புவிசார் அரசியல் சிக்கலில், சீனா தனது மாபெரும் வர்த்தக நலன்களுக்கும் இராணுவ நலன்களுக்கும் இடையேயான வியூகம் ஒன்றை வகுத்து இருப்பை முதன்மைப்படுத்த முயல்கிறது. உக்ரைன் போரில் முழுமையாகக் கவனம் செலுத்தும் ரஷ்யாவோ, உயரும் மசகு எண்ணெய் விலையாலும், அமெரிக்காவின் கவனச் சிதறலாலும் மறைமுகமாக இலாபமடைகிறது.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு, 2003 ஈராக் போரின் கசப்பான நினைவுகளால், இந்த யுத்தத்தில் நேரடியாகப் பங்கேற்பதைத் தவிர்த்து நடுநிலை வகிக்க முற்படுகிறது.
மறுபுறம் உக்ரைன், ரஷ்யாவின் முக்கிய ஆயுத விநியோகஸ்தரான ஈரானின் வீழ்ச்சியைத் தமக்குக் கிடைத்த வாய்ப்பாகக் கருதுகிறது. அதேநேரம், தனது ட்ரோன் எதிர்ப்புத் தொழில்நுட்பங்களை மத்திய கிழக்கில் சந்தைப்படுத்தவும் முனைகிறது.
ஒன்றை மாத்திரம் அழுத்தமாகச் சொல்ல முடியும். 2026 ஈரான் யுத்தம், இருபத்தோராம் நூற்றாண்டின் பூகோள அரசியல் யதார்த்தங்களையும், முதலாளித்துவ உலக ஒழுங்கின் கோர முகத்தையும் எந்தவிதத் திரையுமின்றி அம்பலப்படுத்தியுள்ளது.
இந்த யுத்தம் உலக அமைதிக்கானதோ, மத்திய கிழக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கானதோ அல்ல. இது அமெரிக்காவில் உள்ள இராணுவ-தொழில்துறை கூட்டமைப்பு நிறுவனங்களின் மூலதனப் பெருக்கத்திற்கான வியாபாரமாகும்.
ஒரு சுதந்திர நாட்டின் இறையாண்மை என்பது ஏகாதிபத்திய நாடுகளால் எந்தளவுக்கு கேலிக்கூத்தாக மாற்றப்பட்டுள்ளது என்பதையும், உலகளாவிய ஜனநாயகம் மற்றும் சர்வதேச சட்டங்கள் என்பவை பெருமுதலாளிகளின் நிதி அசுரபலத்தின் முன்னால் எவ்விதம் மண்டியிட்டுள்ளன என்பதையும் இந்த யுத்தம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனங்கள் மீறப்பட்டு, பல இலட்சம் மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டு, மீள முடியாத சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் படுகொலைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன.
எதிர்கால உலகம், தாராளவாத சர்வதேச ஒழுங்கு என்ற போலிப் போர்வையிலிருந்து விடுபட்டு, இராணுவ வலிமை மற்றும் பொருளாதாரத் தடைகள் மட்டுமே மேலாதிக்கம் செலுத்தும் ஒரு பன்முக யதார்த்தவாதப் (Multipolar Realist) புதிய அதிகாரப் படிநிலையை நோக்கி மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
இதில் மனித குலத்தின் அமைதியோ, மானுடவியலோ, சுற்றுச்சூழலின் பாதுகாப்போ முதலாளித்துவ அழுத்தக் குழுக்களின் இலாப-நட்டக் கணக்குகளின் முன்னால் ஒரு பொருட்டாகவே கருதப்படுவதில்லை என்பதே வரலாறு நமக்கு உணர்த்தும் கசப்பான உண்மையாகும்.
சிவா சின்னப்பொடி
Comments
Leave a Reply
Write the comments...............