ஈரான்- அமெரிக்க போரின் மத்தியில் மேற்குக்கரையை முழுமையாக ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. காஸா மீதான தாக்குதல் பெருமளவு முழுமை அடைந்த நிலையில், மேற்குக் கரையை நோக்கி யூதக் குடியிருப்புகளை விஸ்தரித்து நிரந்தரக் குடியிருப்பாக மாற்றுவதுடன், எல்லையோர நாடுகள் மீது தாக்குதலை நடத்தி, பலஸ்தீன மக்களின் வாழ்விடங்களை முற்றாகவே அழித்தொழித்து வரும் இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் செயற்படுத்தி வருகிறது.
ஈரான்- அமெரிக்க போரை உலகம் விழிப்போடு அவதானித்துக் கொண்டிருக்கும் போது, மேற்குக்கரை மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இஸ்ரேல் உறுதிப்படுத்தி வருகின்றது. இதற்கு பலஸ்தீனியர்கள் கொடுக்கும் விலை அதிகமாக உள்ளது.
அங்கு பாரியளவில் மனித அவலம் நிகழ்ந்து வருகிறது. சிறுவர்கள், குழந்தைகள் கொல்லப்படுவது மட்டுமன்றி, அவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இராணுவத் தாக்குதல்கள் பலஸ்தீனர்களை கொல்வதிலேயே கவனம் கொண்டுள்ளதைக் காணமுடிகிறது.
ஜெருசலேமுக்கு கிழக்கே உள்ள பகுதியில் புதிய குடியேற்றக் கட்டுமானத்தை முன்னெடுக்கும் திட்டம் சர்வதேச அளவில் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் பகுதி மேற்குக் கரையின் வடக்கு– தெற்கு தொடர்ச்சியை இல்லாமல் செய்கிறது.
இத்திட்டம் எதிர்கால பலஸ்தீனிய அரசின் நிலப்பரப்பு தொடர்ச்சியை மிகவும் சிக்கலாக்கும் உபாயத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. ஜெருசலேமுக்கு கிழக்கே உள்ள பகுதியில் புதிய குடியேற்றக் கட்டுமானத்தை முன்னெடுக்கும் திட்டத்தின் பிரகாரம் 1200 வீடுகளை அமைப்பதற்கான ஒப்புதலை இஸ்ரேலிய அரசாங்கம் அங்கீகரித்ததை அடுத்து ஆக்கிரமிப்பு தீவிரமடைந்தது. இக்குடியேற்றத் திட்டம் மேற்குக் கரையின் வடக்கு–தெற்கு தொடர்ச்சியை முற்றாகவே துண்டிக்கும் நடவடிக்கையாக உள்ளது. இது பலஸ்தீனிய அரசின் நிலப்பரப்பு தொடர்ச்சியை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கையாகவே உள்ளது.
இதனால் பலஸ்தீனிய கிராமப்புற மக்கள் இடம்பெயர்வதற்கான அழுத்தம் அதிகரித்துள்ளது. மனித உரிமை கண்காணிப்பகத்தின் தகவலின் பிரகாரம் 2023 முதல் 2026 ஓகஸ்ட் வரை 107 பலஸ்தீனிய குடியிருப்புக்கள் அகற்றப்பட்டுள்ளன. இஸ்ரேலிய குடியேற்ற விரிவாக்கமும் மேற்குக் கரையின் பகுதிகளை இணைக்கும் முயற்சிகளும் தீவிரமடைந்துள்ளன.

அது மட்டுமன்றி, கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக் கரையில் 36,973 யூதக் குடியிருப்பு அலகுகள் அங்கீகரிக்கப்பட்டதாக ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்குக்கரையின் முழுமையான பகுதி மீது தாக்குதலை நடத்தி பலஸ்தீனர்களின் இருப்பிடங்களை அழித்துவிட்டு அவர்களை முகாம்களிலும் எல்லையோர நாடுகளிலும் குடியேற்ற இஸ்ரேல் திட்டமிடுகிறது. அது மட்டுமன்றி, பலஸ்தீனர்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து அகற்றிவிட்டு யூதர்கள் குடியேற்றப்படுகின்ற காட்சிகள் தினமும் அரங்கேறி வருகின்றன.
இஸ்ரேல் மேற்குக்கரை மீதான விமானத் தாக்குதலை நிகழ்த்தியவாறு தரைவழித் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. பலஸ்தீனர்களின் குடியிருப்புகள், வைத்தியசாலைகள், பொதுக்கட்டடங்களை விமானத் தாக்குதல் மூலம் அழித்துவிட்டு, தரைவழித் தாக்குதல் மூலம் யூதக் குடியிருப்புகளை நிறுவி வருகிறது. மேற்குக் கரை மீதான தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல், பலஸ்தீன குடியிருப்பாளர்களின் இருப்பிடங்களை அழிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது.
பலஸ்தீனர்கள் கைது செய்யப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும், கொல்லப்படுவதும் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.அந்தப் பிரதேசத்தின் குடியிருப்பாளர்களை முகாம்களுக்கு விரட்டி விட்டு முகாம்களில் இருந்து இளைஞர்களை கைது செய்வது, அவர்கள் மீது தாக்குதலை நிகழ்த்தி அவர்களை இயங்க முடியாத சூழலுக்குள் தள்ளுவது என்பனவும் இஸ்ரேலின் செயல்களாக உள்ளன.
அதேவேளை யூதர்களின் குடியேற்றங்கள் மீது பலஸ்தீனியர்கள் தாக்குதல் நடத்த முடியாத அளவுக்கு பாதுகாப்பு அரண்களையும் இராணுவ நடவடிக்கைகளையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. பலஸ்தீன மக்கள் தமது நாட்டை விட்டு வெளியேறுகின்ற சூழலை யூத இராணுவம் மேற்கொண்டு வருகின்றது.
ஆனாலும் பலஸ்தீனர்கள் தங்களது முகாம்களில் இருந்து கொண்டு யூதக் குடியிருப்புகளின் மீதான தாக்குதல்களையும் போராட்டங்களையும் முன்னெடுத்துக் கொண்டே இருக்கின்றனர். தமது நிலத்தின் மீது உரிமை கோரும் இயக்கங்களையும் அமைப்புகளையும் உருவாக்கி யூத இராணுவத்துக்கு எதிராகப் போராடி வருவதை அவதானிக்க முடிகிறது.

இராணுவ நடவடிக்கைகளையும் படுகொலைகளையும் கைதுகளையும் இஸ்ரேல் நிகழ்த்திய போதும், பலஸ்தீனர்கள் தங்களது நிலப்பரப்பிலிருந்து முழுமையாக வெளியேறாது போராடி வருகின்றனர்.
பலஸ்தீன மக்களின் அடிப்படைத் தேவைகளை தடை செய்யும் விதத்தில் ஐ. நா. நிவாரணப் பணியை முடக்கும் நோக்கத்தோடு, ஐ.நா பணியாளர்கள் மீதும் இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது.
நிவாரணப் பணிக்காக அமைக்கப்பட்ட முகாம்களை யூத இராணுவம் மூடியும் வருவதாக ஐ. நா நிவாரணப் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலஸ்தீனத்துக்குரிய அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் தலைவர், அதன் கிழக்கு ஜெருசலேம் முகாமை இஸ்ரேல் கைப்பற்றியதைக் கண்டித்துள்ளார்.
தற்காலிக ஆணையர் ஜெனரல் கிறிஸ்டியன் சாண்டர்ஸ் ஐ.நா. வளாகத்தின் அடிப்படை உரிமையை இஸ்ரேல் மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், இஸ்ரேலின் இந்நடவடிக்கையினால் எதனையும் சாதிக்க முடியாது என்றும், இந்த அமைப்பு எங்கும் செல்லப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மக்களுக்கான உணவு நெருக்கடியை யூத இராணுவம் ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தமது நிவாரண முகாம்களை மூடுமாறும், வெளியேறுமாறும் நிர்பந்திக்கப்படுவதை எதிர்கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் ஐ.நா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ஏறக்குறைய உணவை ஆயுதமாகக் கொண்டு மேற்குக் கரையிலிருந்து பலஸ்தீனியர்களை முழுமையாக வெளியேற்றுகின்ற நடவடிக்கையாகவே தெரிகிறது.
ஈரான்- − அமெரிக்க போரைப் பயன்படுத்தியவாறு மேற்குக்கரையில் யூதக் குடியிருப்பை விஸ்தரிப்பதும் எல்லையில் இருக்கிற அரபு நாடுகள் மீது தாக்குதலை நிகழ்த்தி பலஸ்தீனர்களுக்கான ஆதரவைத் தடுப்பதும் இஸ்ரேலின் உபாயமாகும். உலகத்தின் கவனத்தை திசைதிருப்பிவிட்டு, பலஸ்தீன மக்களையும் அவர்களது குடியிருப்புகளையும் அழிப்பதில் இஸ்ரேல் முனைப்புடன் செயற்படுகின்றது.
இதன் மூலம் மேற்குக்கரையை முழுமையாகக் கைப்பற்றி, யூதக் குடியிருப்புகளை உத்தரவாதப்படுத்த இஸ்ரேல் முயற்சிக்கின்றது
பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் யாழ். பல்கலைக்கழகம்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!