உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தாக்கமான 'எல் நினோ'காலநிலை நிகழ்வு எதிர்பார்த்ததை விட முன்னதாகவே இலங்கையில் தீவிரமடைந்து, எதிர்வரும் நவம்பர் மாதமளவில் அதன் உச்சகட்ட நிலையை அடையக்கூடும் எனப் சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஜூலை, ஆகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் நாடளாவிய ரீதியில் மிகக் கடுமையான வறட்சியான வானிலை நிலவும். அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வறட்சியைத் தொடர்ந்து, கடும் மழை பெய்யும். இதனால் நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயங்கள் உருவாகலாம்.
எல் நினோ என்பது இலங்கைக்கு மட்டும் உரியது அல்லாமல், ஒரு உலகளாவிய காலநிலை சவாலாகும். இதன் தாக்கங்களை எதிர்கொள்ள அனைத்து அரசாங்க நிறுவனங்கள் மற்றும் ஊடக அமைப்புகளுடன் இணைந்து விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
விவசாயம், குடிநீர் விநியோகம், மின்சாரம், வேலைவாய்ப்பு மற்றும் மனித வாழ்வாதாரம் ஆகியவற்றில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க அரசாங்கம் ஏற்கனவே குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை வகுத்து வருகிறது.
நாட்டில் ஏற்படவுள்ள கடும் வறட்சியைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் மின்சாரம் மற்றும் குடிநீரை மிகவும் பொறுப்புடனும் சிக்கனமாகவும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தீவிர வெப்பம் மற்றும் வறட்சியினால் விவசாயம், மீன்பிடி போன்ற உணர்திறன் வாய்ந்த துறைகளில் வேலை இழப்புகள் மற்றும் வாழ்வாதாரப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு அரசிற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!