சி.சி.என்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி கபில சந்திரசேன, மே 8 ஆம் திகதி, கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்டமை நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து ஊழல் வழக்கு ஒன்று தொடர்பாக அவரிடம் சாட்சியங்கள் பெற இருந்த வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அது தொடர்பான விசாரணைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவே கூறவேண்டியுள்ளது.
கபில சந்திரசேன உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டாலும் மேற்படி விமானப் போக்குவரத்து வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அவரது தரப்பினர் மீது பலரும் தமது சந்தேகக் கண்களை திருப்பியுள்ளனர்.
மேலும் கண்டறிக
உள்ளூர் செய்திகள்
வணிக செய்திகள்
மின்னிதழ் சந்தா
நீண்ட காலமாக நடைபெற்று வரும் குறித்த எயார் பஸ் ஊழல் வழக்கில், கபில சந்திரசேனவின் பிணையை இரத்து செய்ய இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், அவரது மரணம் இடம்பெற்றுள்ளது.
எயார்பஸ் ஒப்பந்தம் மற்றும் அது சார்ந்த கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் எதிர்வரும் 12 ஆம் திகதி வாக்குமூலம் அளிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான வழக்கில் தொடர்புடைய மிக முக்கியமான அதிகாரி ஒருவரின் திடீர் மரணம் பலத்த சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.
2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் A-330 ரகத்தைச் சேர்ந்த 6 விமானங்களையும், A-350 ரகத்தைச் சேர்ந்த 8 விமானங்களையும் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை கையூட்டாகப் பெற்றதாக கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த கொடுக்கல் வாங்கலில் தனக்குக் கிடைத்த 2 மில்லியன் அமெரிக்க டொலர்களில், 20 மில்லியன் ரூபாயை அன்றைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கும், 60 மில்லியன் ரூபாயை அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் வழங்கியதாக கபில சந்திரசேன கூறியுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்திருந்தது. இருப்பினும், இதனை மறுத்துள்ள கபில சந்திரசேனவின் சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்ன, தனது கட்சிக்காரரை அச்சுறுத்தி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இந்த வாக்குமூலத்தைப் பெற்றுள்ளதாக நீதிமன்றில் சத்தியக்கடதாசி ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
தொழில்சார் பொறியியலாளரான கபில சந்திரசேன, தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகிப்பதற்கு முன்பு, ராஜபக்ச அரசாங்கத்தின் நிர்வாகத்தின் போது தொடங்கப்பட்டு, தற்போது செயல்படாத நிலையில் உள்ள "மிஹின் லங்கா"வின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.இலங்கை செய்திகள்
ஊழல் சம்பவம் என்ன?
எயார் பஸ் ஊழலானது, முந்தைய ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சியின் போது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மேற்கொண்ட விமானக் கொள்முதல்களுடன் தொடர்புடையது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஆறு A-330 ரக விமானங்கள் மற்றும் எட்டு A-350 ரக விமானங்கள் எயார் பஸ் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டது
எயார் பஸ் நிறுவனம் (Airbus) உலகின் முன்னணி ஐரோப்பிய விமான மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனமான ஏர்பஸ், வணிக ரீதியான விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்களை வடிவமைத்து உற்பத்தி செய்கிறது.
குறித்த நிறுவனம் சம்மந்தமாக இங்கிலாந்தில் இடம்பெற்ற வழக்கொன்றில், விமான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, இலங்கை உட்பட பல நாடுகளுக்கு பெருமளவு இலஞ்சம் கொடுத்ததாக, 2020 ஆம் ஆண்டு இங்கிலாந்து நீதிமன்றம் ஒன்றில் நிறுவனம் ஒப்புக்கொண்டது.
சர்வதேச விசாரணைகளின்படி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மேற்கொண்ட விமானக் கொள்முதல்கள் தொடர்பாக, இலங்கை இடைத்தரகு நிறுவனம் ஒன்று மில்லியன் கணக்கான டொலர்களை இரகசிய பணமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) சமர்ப்பிக்கப்பட்ட புலனாய்வு ஆவணங்கள், பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க என்பவர் ஒரே ஒரு இயக்குநராகவும் பங்குதாரராகவும் குறிப்பிடப்பட்டிருந்த "பிஸ் சொல்யூஷன்ஸ் (Biz Solutions)" என்ற நிறுவனத்தின் பெயரில், சிங்கப்பூரில் பராமரிக்கப்பட்டு வந்த ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கிக் கணக்கிற்கு, Airbus SAS- இன் தாய் நிறுவனமான ஐரோப்பிய விமான பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனத்திடமிருந்து (EADS) 2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் பெறப்பட்டதாக, வெளிப்படுத்தியுள்ளன.
பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க தற்போது மர்மமான முறையில் மரணித்துள்ள கபில சந்திரசேனவின் மனைவியாவார். இந்த விடயம் பெரும் சர்ச்சையை உண்டாக்கியதை தொடர்ந்து, கபில சந்திரசேன முதலில் 2020 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அதன் பின்னர், இந்த வருடத்தின் மார்ச் 12-ஆம் திகதி, அவரை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு மீண்டும் கைது செய்தது.
இதே வேளை சர்வதேச அளவில் இந்த இடைத்தரவு ஒப்பந்த சர்ச்சைகள் விமர்சனத்துக்குள்ளானதையடுத்து 2023 ஆம் ஆண்டு கபில சந்திரசேன மீது அமெரிக்கா தடைகளையும் விசா கட்டுப்பாடுகளையும் விதித்தது. இந்த தடையே இந்த வழக்கின் மீது சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க வைத்தது.
இந்தத் தடைகள் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் நீட்டிக்கப்பட்டு, அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் அரவிந்த டி சில்வா கபில சந்திரசேனவின் மைத்துனராவார். கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அரவிந்தவின் வீட்டிலேயே கபில சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை செய்திகள்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 60 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது, முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு 20 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது என, கபில சந்திரசேன கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து, கபில சந்திரசேனவினால் பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் அமைச்சர் ஆகிய இருவரையும் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், பின்னர் சட்டத்தரணிகள் வெளியிட்ட ஒரு பிரமாணப் பத்திரத்தின் மூலம், கபில சந்திரசேன தான் முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற்றார்.
கபில சந்திரசேனவின் சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தயாரித்த பிரமாணப் பத்திரத்தில், "இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் அளித்த தனது வாக்குமூலம் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தத்தின் கீழ் பெறப்பட்டதாக அவர் கூறினார். புலனாய்வாளர்கள் தன்னைக் கைது செய்வதாக அச்சுறுத்தியதாகவும், வாக்குமூலம் பதிவு செய்யப்படும்போது தனது வழக்கறிஞரை அணுக தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும்" அவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகனும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினருமான ஷமிந்திர ராஜபக்ச, தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணைகளை பிறப்பித்தபோது இந்த விசாரணை மேலும் விரிவடைந்தது.
கடந்த மார்ச் 12-ஆம் திகதி கைது செய்யப்பட்ட கபில சந்திரசேன, 54 நாட்களுக்குப் பிறகு கடந்த 5-ஆம் திகதி நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஆனால் நீதிமன்றம் பிணை வழங்கியதைத் தொடர்ந்து மற்றொரு சர்ச்சை எழுந்தது. பிணை நிபந்தனைகளை நிறைவேற்றும்போது, தனது உறவினர்கள் என இருவரைப் போலியாக முன்னிலைப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
தலா 15,000 ரூபா பெற்றுக்கொண்டு போலிப் பிணையாளர்களாக நீதிமன்றத்தில் முன்னிலையானதாக கூறப்படும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு கபில சந்திரசேனவை தனிப்பட்ட முறையில் தெரியாது என்றும், பிணை வழங்கும் நடைமுறையின் போது கிராம அலுவலர் சான்றிதழ்கள் உட்பட சந்தேகத்திற்குரிய ஆவணங்களைப் பயன்படுத்தியதாகவும் பொலிஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், கபில சந்திரசேனவின் பிணையை ரத்து செய்ய இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவரைக் கைது செய்து மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கொழும்பு 7 - பார்ன்ஸ் பிளேஸில் உள்ள சந்திரசேனவின் வீட்டில் வைத்து அவரை கைது செய்ய, 8 ஆம் திகதி அதிகாரிகள் சென்றபோது, அவர் கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்து, ஒரு முச்சக்கர வண்டியில் அங்கிருந்து புறப்பட்டு, தனது மைத்துனரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான அரவிந்த டி சில்வாவின் வீட்டிற்கு சென்றதாகக் கூறப்படுகிறது.
அதன்பின்னே அவர் அந்த வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார் என தெரிவிக்கப்படுகின்றது. கபில சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை சில ஊடகங்கள் வெளிப்படுத்திய போது அவர் உயிரை மாய்த்துக்கொண்டார் என்றே ஒலி/ஒளிபரப்பின. அவை மகிந்தவின் ஆதரவு ஊடகங்கள். அரசியல்வாதிகளும் மகிந்த ஆதரவு தரப்பினரும் அதன் உரிமையாளர்களாக இருக்கின்றனர்.
சடலம் மீட்கப்படும் முன்னரே எவ்வாறு இந்த ஊடகங்கள் இது தற்கொலை என்ற முடிவுக்கு வரலாம் என்ற கேள்வியும் எழுந்தது. பல மில்லியன் தரகு பணம் பெற்ற இந்த சம்பவம் குறித்த வழக்கு தொடர்பான இப்போது முன்னாள் ஜனாதிபதி 12 ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வாக்குமூலம் அளிக்கச் செல்கின்றார். அவர் அளிக்கும் வாக்குமூலத்தில் என்ன விடயங்கள் வெளிவரப்போகின்றன அவர் கைது செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!