இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள்
மற்றும் இந்திய தனியார் நிறுவனங்கள் அக்டோபர் 2023 முதல் நவம்பர் 2025
வரை, குறைந்த பட்சம் ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் இராணுவ
பாகங்களை உள்ளடக்கிய 2,596 பொதிகளை இஸ்ரேலுக்கு ஏற்றுமதி
செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின்
42 பக்க விசாரணை அறிக்கையில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்
வெளியிடப்பட்டுள்ளது.
ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும்
பாகங்களை இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்வதை இந்திய அரசு உடனடியாக
நிறுத்த வேண்டும் என்றும், அதன் அதிகார வரம்பின் கீழ் செயல்படும்
நிறுவனங்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் இனப் படுகொலைகள் மற்றும்
குற்றங்களுக்கு பங்களிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
என்றும் அறிக்கை மேலும் கூறியுள்ளது.
சகல நிறுவனங்களுக்கும்
தங்களது உலகளாவிய செயற்பாடுகளின் போது மனித உரிமைகளை மதிக்க
வேண்டிய கடப்பாடு உள்ளது. இதில் தங்களது தயாரிப்புகள் சர்வதேச
சட்டங்களின் கீழ் எந்தவிதமான கடுமையான மீறல்களிலும்
ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்த, முன்கூட்டியே செயலூக்கமான,
வலுவான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்பதும் அடங்கும். இந்த
நடவடிக்கைகள் தாங்கள் எதிர்நோக்கும் ஆபத்தின் அளவிற்கு ஏற்ப அமைய
வேண்டும் என்பதும் நியதி.
அக்டோபர் 2023 இற்கும் பிறகு புது
டில்லி இஸ்ரேலுக்கு யுத்தப் பாவனைக்கான ட்ரோன்கள், குண்டுகள் மற்றும்
ஆயுத கூறுகளை வழங்கியது என்ற முந்தைய குற்றச்சாட்டுகளைத்
தொடர்ந்து, காஸாவில் இஸ்ரேலின் இனப் படுகொலைக்கு இந்தியா பொருள்
ரீதியாக ஆதரவளித்துள்ளது என்று குற்றம் சாட்டி வரும் தொடர்
அறிக்கைகளின், அண்மைக்கால அறிக்கை தான் இந்த அதிர்ச்சியூட்டும்
தகவலை தெரிவித்துள்ளது.
"பல ஆண்டுகளாக கிட்டத்தட்ட தினசரி
அடிப்படையில், உலகளவில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஒரு நிகழ்வாக
காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலைகள் அமைந்துள்ளன. இந்த நிலையிலும்
கூட இஸ்ரேலிய இராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறைக்கு, இந்தியா
தொடர்ந்து ஆதரவளித்து வருவதை எமது ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன"
என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் அக்னஸ்
கல்லமார்ட் கூறினார்.
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடி
மருந்துகளை வழங்கும் விடயத்தில், இந்திய அரசு இஸ்ரேலிய பாதுகாப்புத்
துறையுடன் நெருக்கமான மற்றும் இலாபகரமான, கம்பனிகள் மூலமான
வர்த்தக உறவுகளை எவ்வாறு உருவாக்கியுள்ளது மற்றும் இஸ்ரேலின்
இராணுவ நடவடிக்கைகளை ஆதரிக்கும் விநியோகத் தொடர் சங்கிலிகளுக்கு
குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக அது எவ்வாறு மாறியுள்ளது என்ற
விடயங்களை இந்த அறிக்கை ஆவணப்படுத்தி உள்ளது.
இஸ்ரேலிய
இராணுவம் காஸாவில் பலஸ்தீன மக்கள் மீது பரவலான மரணம், அழிவு மற்றும்
துன்பங்களை தொடராக ஏற்படுத்தி வந்தபோது, இந்திய நிறுவனங்கள்
இஸ்ரேலின் பாதுகாப்புத் துறைக்கு யுத்த தளபாடங்களுக்கான பாகங்கள்
மற்றும் வெடிமருந்துகளை கணிசமாக வழங்கியதன் மூலம் தொடர்ந்து இலாபம்
ஈட்டி வந்துள்ளன.
அமெரிக்கா மற்றும் ஜேர்மனி உட்பட பல
முக்கிய நாடுகளில் இருந்து இடைவிடாத ஆயுதங்கள் மற்றும் வெடி
மருந்துகளை இஸ்ரேல் பெற்று வந்துள்ளது. மேலும், ஸ்லோவேனியா மற்றும்
பிரான்ஸ் வழியாகவும் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அனுப்பப்பட்டு
வந்துள்ளன. இவற்றின் மூலமும் இஸ்ரேல் குற்றங்களைப் புரிந்துள்ளதோடு
சர்வதேச சட்டங்களையும் மீறி உள்ளது என்பதையும், சர்வதேச
மன்னிப்புச் சபை ஆவணப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய
இராணுவத்துக்கு விநியோகங்களை மேற்கொள்ளும், அந்த நாட்டின் மிகப்
பெரிய உள்ளூர் நிறுவனங்களுக்கு இந்திய ஆயுதங்கள், வெடிமருந்துகள்,
உதிரிப் பாகங்கள் மற்றும் முக்கிய பாகங்கள் எவ்வாறு
அனுப்பப்பட்டுள்ளன என்பதையும், இந்த அறிக்கை வெளிப்படுத்தி
உள்ளது. இந்த விடயத்தை உறுதிப்படுத்த, இந்தியாவுக்கும்
இஸ்ரேலுக்கும் இடையிலான ஏற்றுமதி வர்த்தக அளவு தரவுகளை இந்த
அறிக்கை பயன்படுத்தி உள்ளது. இந்திய அரசுக்கு நேரடியாக சொந்தமான
நிறுவனங்களும் மற்றும் இந்திய அரச கட்டுப்பாட்டு நிறுவனங்களும்
இந்த அறிக்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த ஆயுத
விநியோகங்கள், இராணுவ தொழில்நுட்பம், பாகங்கள் மற்றும்
உபகரணங்களின் நேரடி மற்றும் மறைமுக பரிமாற்றம் என்பன சர்வதேச
சட்டங்களை கடுமையான விதத்தில் மீறும் செயல்களாகும். இவற்றை
முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், இஸ்ரேல் மீது விரிவான ஆயுதத் தடைகளை
விதிக்க வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை அழைப்பு
விடுத்துள்ளது.
இதனிடையே, காஸாவில் பட்டினி, அதிகரித்து
வரும் மரணங்களின் எண்ணிக்கை, என்பன குறித்த சீற்றம் உலகளாவிய
ரீதியில் அதிகரித்து வருவதால், இஸ்ரேலுக்கான ஆயுத பரிமாற்றங்களை
நிறுத்துமாறு இந்தியாவில் உள்ள சமூக செயற்பாட்டு ஆர்வலர்களைக்
கொண்ட குழுக்கள், அந்த நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை
விடுத்துள்ளன.
மனிதாபிமான ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும்
முக்கிய பிரஜைகள் இது சம்பந்தமாக நீதிமன்றங்களில் மனுக்களையும்
தாக்கல் செய்துள்ளனர். சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறும்
விடயத்தில் இந்தியா, இஸ்ரேலுக்கு உடந்தையாக இருக்கும் அபாயம்
இருப்பதாக எச்சரித்து திறந்த மடல்களையும் பலர் எழுதி உள்ளனர்.
இந்திய தொழில் சங்கங்களின் மையம் (சி.ஐ.டி.யூ) போன்ற தொழில்
சங்கங்கள், இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் இராணுவப் பொருட்களை உற்பத்தி
செய்வதற்கும், கொண்டு செல்வதற்கும் பகிரங்கமாக எதிர்ப்பும்
தெரிவித்துள்ளன.
மேலும், இந்தியா 20,000 தொழிலாளர்களையும்
இஸ்ரேலுக்கு அனுப்பி உள்ளது. காஸா மீதான போரை இஸ்ரேல் தொடங்கியது
முதல், அங்கு கட்டிட நிர்மாணப் பிரிவில் பலஸ்தீன தொழிலாளர்களுக்கு
அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யவே
பல்லாயிரக்கணக்கான இந்திய தொழிலாளிகள் இஸ்ரேலுக்கு
அனுப்பப்பட்டுள்ளனர். இந்த விடயத்தில் இஸ்ரேலுடனான ஒப்பந்தத்தை
இரத்து செய்யுமாறு, இந்தியாவில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்கள்
தங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
ஆனால், இந்தக்
கோரிக்கைகளை அலட்சியம்செய்யும் வகையில் இனப் படுகொலை தொடர்பாக
குற்றம் சாட்டி, சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக, தென்
ஆபிரிக்கா தொடுத்த வழக்கில் இணைந்து கொள்ள புது டில்லி மறுத்துவிட்டது.
மேலும் இஸ்ரேல் மீது ஆயுதத் தடை விதிக்க வேண்டும் என்ற
அழைப்புக்களையும் இந்தியா நிராகரித்துள்ளது.
இந்தியாவுக்குள்
பலஸ்தீன சார்பு போராட்டங்கள் மற்றும் எல்லா வகையான பலஸ்தீன ஆதரவு
செயல்பாடுகளையும் இந்திய அரசு தடுத்துள்ளது. இந்தியாவுக்குள் உள்ள
மனித உரிமைகள் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள்,
இஸ்ரேலுடனான ஏற்றுமதி உரிமத்தை நிறுத்துமாறு அரசாங்கத்துக்கு
மனு அளித்துள்ளனர். தொடர்ந்து இடம்பெற்று வரும் வர்த்தக
பரிமாற்றங்கள் சர்வதேச சட்டக் கடமைகளை மீறுவதாக அவர்கள் தமது
மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி, மற்றும்
யுத்தக் குற்றவாளியாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள, இஸ்ரேலிய
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு ஆகியோரின் தலைமையின் கீழ் கடந்த
பத்தாண்டுகளில் இந்திய-இஸ்ரேல் உறவுகள் முன்னொரு போதும் இல்லாத
வகையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு தொடக்கத்தில்
மோடியின் உயர்மட்ட இஸ்ரேல் விஜயம், 'பாசிசத்தைத் தழுவுதல்' என்று
சர்வதேச ரீதியாக வர்ணிக்கப்பட்டது. இந்த விஜயம் தார்மீக ரீதியாக
கண்டிக்கத்தக்கது என்றும் விவரிக்கப்பட்டது. மோடியின் இஸ்ரேல்
விஜயத்தின் போது, இரு நாடுகளும் சமாதானம், புதிய கண்டு பிடிப்புக்கள்
மற்றும் சுபீட்சம் என்பனவற்றை வலுப்படுத்தும், சிறப்பு மூலோபாய
உறவுகளையும் மேம்படுத்திக் கொண்டன.
இந்தியா 1950 இல்
இஸ்ரேலை அங்கீகரித்தது. ஆனால், 1992 வரை முழு இராஜதந்திர உறவுகளை
ஏற்படுத்திக் கொள்ளவில்லை. பலஸ்தீன மக்களை வெளியேற்றியதன் மூலம்,
சியோனிசம் ஓர் இன ரீதியான தேசிய அரசை உருவாக்கியுள்ளது
என்பதையும், இஸ்ரேல் முதலில் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு காலனித்துவ
சக்தியுடனும் பின்னர் அமெரிக்க ஏகாதிபத்திய சக்தியுடனும் தன்னை
இணைத்துக் கொண்டுள்ளது என்பதையும் இந்தியத் தலைவர்கள் நன்கு புரிந்து
வைத்துள்ளனர்.மோடியின் தலைமையின் கீழ், இந்தியா
இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு ஏற்படுத்திக்
கொண்டுள்ள உறவுகள், இனி ஒருபோதும் நிறுத்தப்படப் போவதும் இல்லை.
ஓரளவு ஆயுதங்கள் இப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டும்
வருகின்றன. அதேவேளை பல இந்திய நிறுவனங்கள் இஸ்ரேலின் இராணுவ
உற்பத்தி தொழில்துறை வளாகங்களை போசித்தும் வருகின்றன.
பலஸ்தீனத்தை
ஆதரித்துக் கொண்டு இஸ்ரேலுடனான நட்பையும் பேணிக் கொள்ள முடியும்
என்று பல தசாப்தங்களாக, இந்திய அதிகாரிகள் நம்பி வந்துள்ளனர்.
அதற்கான தொடர் முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது ஒரு
வகையான மாயத் தோற்றம். அந்தத் தோற்றத்தை அதிகாரபூர்வமாக
பாதுகாத்துக் கொள்ளவும் இந்தியா முயன்று வருகின்றது. ஆனால், சர்வதேச
மன்னிப்புச் சபையின் அறிக்கை, அந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள
முடியாத ஒன்றாகவும், வலுவிழந்ததாகவும் ஆக்குகின்றது.
ஓர்
இனப்படுகொலை ஆட்சிக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கியது என்ற
தலைப்பில், இந்திய அரசியல் பொருளாதார நிபுணரும், அரசியல்
விமர்சகருமான பிரபாத் பட்நாயக் எழுதி உள்ள ஓர் ஆக்கத்தில் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்:
இந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள்
உண்மையில் காஸாவில் இஸ்ரேலால் பயன்படுத்தப்பட்டன என்பதில் எந்த
சந்தேகமும் இல்லை.
காஸாவில் நுசீராட் என்ற இடத்தில் உள்ள ஐ. நா. நடத்தும்
பள்ளியில், இடம்பெயர்ந்த பலஸ்தீனர்களுக்கு அடைக்கலம் அளிக்கப்
பட்டிருந்தது. அதன் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 33 பேர்
கொல்லப்பட்டனர். தாக்குதல் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஏவுகணைத்
துண்டுகளில் "இந்தியாவில் தயாரிக்கப்பட்டது" என்று பெயரிடப்பட்டிருந்தது.நுசீராட்டில்
உள்ள ஒரு பாடசாலையில் தஞ்சம் புகுந்த, 33 பலஸ்தீன மக்கள் படுகொலை
செய்யப்பட்டதில் இந்திய ஆயுதங்கள் இஸ்ரேலால் பயன்படுத்தப்பட்டன என்ற உண்மை,
இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.
இது சர்வதேச நீதிமன்றத்தின்
தற்காலிக உத்தரவை மீறிய ஒரு இனப் படுகொலைச் செயலாகும். இது இனப்
படுகொலையில் உடந்தையாக இருந்ததற்காக இந்தியாவை சட்டப்பூர்வமாக
குற்றவாளியாக்கும் நிலையையும் உருவாக்கி உள்ளது.
எனவே இந்திய அரசாங்கத்தின்
நிலைப்பாடு தார்மீக ரீதியாக கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, அது சட்டத்தில்
இருந்தும் தப்ப முடியாது. உலக நாடுகள் மத்தியில், மிகப் பெரிய அளவில்,
இஸ்ரேலிய ஆயுதங்களை வாங்கும் நாடாக இந்தியா உள்ளது. மேலும் பல இஸ்ரேலிய
ஆயுத உற்பத்தியாளர்கள் இந்திய நிறுவனங்களுடன், கூட்டு முயற்சிகள் மூலம்,
இந்தியாவில் உற்பத்தி வசதிகள் பலவற்றையும் நிறுவியுள்ளனர்.
(லத்தீப் பாரூக்)
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!