காஸா பேரழிவுகள் மீது ஒட்டுமொத்த உலகினதும் கண்கள் நிலைக்குத்தி நிற்கின்றன. அந்த ஒடுங்கிய நிலப்பரப்பில் நிகழும் அட்டூழியங்களை ஊடகங்கள் தொடர்ச்சியாக எழுதிவருகின்றன.
ஆனால், அதற்குச் சில மைல்களுக்கு அப்பால், இந்த அழிவுச் செயல்களுக்குக் கிஞ்சித்தும் குறையாத வன்முறைகள் மெதுவாக அரங்கேறி வருவதைப் பலரும் அறிவதில்லை. அதுதான், இஸ்ரேலியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பிராந்தியத்தில் தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காகப் பலஸ்தீனர்கள் நடத்தும் போராட்டம்.
இது வெறுமனே ஆயுத மோதலுக்கு அப்பாற்பட்ட, அவலங்கள் நிறைந்த கதை. வலுக்கட்டாயமான இடம்பெயர்வு, கட்டமைக்கப்பட்ட அடக்குமுறை மற்றும் தமது சொந்த மண்ணில் நிம்மதியாக உயிர் வாழ்வதற்குரிய உரிமையைத் திட்டமிட்ட ரீதியில் இல்லாதொழித்தல் போன்ற கொடுமைகள் இதில் அடங்கியுள்ளன.
மேற்குக் கரையின் 'குஸ்ரா' என்ற கிராமத்தில் வாழும் ஆயிஷா அபு ரிதாவின் குடும்பத்தை உதாரணமாகக் கருதுவோம். இவர் வாழும் வீட்டை நூற்றுக்கணக்கான இஸ்ரேலியக் குடியிருப்பாளர்கள் சுற்றிவளைத்துள்ளனர். ஆயிஷாவின் வீட்டைத் தமதாக்கிக்கொள்வதே அவர்களின் நோக்கம். ஆனால், அக்குடும்பத்தினரை அவ்வளவு இலகுவாக விரட்ட முடியாது. என்ன நடந்தாலும் உயிருள்ள வரை போராடுவதற்கு அவர்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளனர். இதனால், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதைத் தடுத்து, அவர்களைத் தொடர்ந்து அச்சத்திற்கு உள்ளாக்கி வருகின்றனர்.
இங்கிருந்து சில மைல்கள் தூரத்தில் உள்ள ஜோர்தான் பள்ளத்தாக்கில் ஆதில் தாராக்மே என்ற நோயாளியின் குடும்பம் வாழ்கிறது. சுட்டெரிக்கும் 43 பாகை வெயிலில், ஒரு படுக்கை விரிப்பைக் கம்புகளில் சொருகி நிழல் தேடும் கூடாரம் மட்டுமே அவர்களின் புகலிடம். சுவர்கள் இல்லை; மறைவுகள் கிடையாது.
சில நாட்களுக்கு முன்னர், இஸ்ரேலிய இராணுவத்தின் புல்டோசர்கள் ஆதிலின் வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கின. வீட்டிலிருந்த பொருட்களும், தளபாடங்களும், அவரின் நீரிழிவு நோய்க்கான மருந்துகளும் நிர்மூலமாக்கப்பட்டன.
ஆதிலின் வீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற இஸ்ரேலிய உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப் பத்திரத்தைக் கிஞ்சித்தும் மதிக்காமல் அதிகாரிகள் சுவர்களை இடித்துத் தள்ளினர். அதன்பின்னர் யூதக் குடியிருப்பாளர்கள் வேலி போட்டனர்; ஆதில் வளர்த்த கால்நடைகள் களவாடப்பட்டன; தாகத்திற்கு நீரெடுக்க வீட்டு வளாகத்திலிருந்த கிணற்றைக் கூட நெருங்க முடியாத சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இவையொன்றும் ஆங்காங்கே நடக்கும் தனித்தனியான சம்பவங்கள் அல்ல; ஒரு பிராந்தியம் முழுவதும் ஒவ்வொரு நாளும் நீடிக்கும் கசப்பான யதார்த்தம்.

மேற்குக் கரை நிலவரம் – ஒரு பார்வையில்:
1,400+ : இவ்வாண்டில் பலஸ்தீனர்கள் மீது நடத்தப்பட்ட குடியிருப்பாளர்களின் தாக்குதல்கள்.
3,800+ : இந்த வன்முறைகளால் வீடிழந்த பலஸ்தீனர்கள் (பாதிப்பேர் சிறுவர்கள்).
122 : இஸ்ரேலினால் மாதம் ஒன்றுக்கு சராசரியாக இடிக்கப்படும் பலஸ்தீனக் கட்டிடங்கள்.மேற்குக் கரை என்பது ஐந்து லட்சத்திற்கும் அதிகமான இஸ்ரேலியக் குடியிருப்பாளர்கள் வாழும் பிராந்தியமாகும். இங்கு பலவந்தமாக நிர்மாணிக்கப்பட்ட யூதக் குடியிருப்புகள் சட்டவிரோதமானவை என சர்வதேசச் சட்டங்கள் கூறுகின்றன.
யூதக் குடியிருப்பாளர்கள் பலஸ்தீனர்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடும்போது, அவர்கள் எதனையும் தனித்துச் செய்யவில்லை. அந்தச் செயல்களுக்கு இஸ்ரேலிய அரசின் மறைமுக ஆதரவு உண்டு.
அராஜகம் புரியும் குடியிருப்பாளர்களுக்குப் படைவீரர்கள் ஒத்தாசை வழங்கிய சந்தர்ப்பங்களை 'அல்ஜஸீரா' போன்ற ஊடகங்கள் ஆதாரங்களுடன் பட்டியலிட்டுள்ளன. பயிர்ச்செய்கையை நிர்மூலமாக்கி, நீர் விநியோகக் குழாய்களை உடைத்து, குடும்பங்களைத் தாக்கி, காணிகளைப் பறித்துக்கொள்ளும் நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
மேற்குக் கரை மிகவும் பாரபட்சமான அடிப்படையில் மூன்று நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 'ஏரியா-பீ', 'ஏரியா-சீ' என்றழைக்கப்படும் பிரதேசங்களில் பலஸ்தீனர்களுக்கு எதுவித சட்டப் பாதுகாப்பும் கிடையாது. இங்கு வீடுகளை நிர்மாணிக்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. தேவை கருதி ஏதேனும் கட்டுமானப் பணியை ஆரம்பித்தால், வீடாக இருந்தாலும், பாடசாலையாக இருந்தாலும், சூரிய மின்வலு உற்பத்திக் கட்டிடமாக இருந்தாலும் புல்டோசர்கள் வந்து தரைமட்டமாக்கிவிடும்.
நீதிமன்ற ஆவணங்களை அதிகாரிகள் தூக்கியெறிந்துவிட்டு சில நிமிடங்களில் வீடுகளை இடிக்கிறார்கள். பல வருடங்களாக மக்களின் தாகத்தைத் தீர்த்த கிணறுகளும் நீரூற்றுகளும் வேலி போட்டு அடைக்கப்படுகின்றன. வேலிகள், தடுப்புச்சுவர்கள், சோதனைச்சாவடிகள் ஊடாக நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி, இயல்பாக வாழ முடியாமல் செய்வதன் மூலம் பலஸ்தீனர்களை விரட்டியடிப்பதே அவர்களின் பிரதான நோக்கம்.
மேற்குக் கரையின் நிலைமை 'முறிவுப் புள்ளி' (Breaking point) நோக்கி நகர்வதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. நிலப்பரப்புகளைக் கைப்பற்றி, மேற்குக் கரையின் பெரும்பாலான பாகங்களை இஸ்ரேலுடன் இணைத்துக்கொள்வதற்காகவே இத்தகைய திட்டமிட்ட அராஜகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.
ஓர் இனக்குழுமத்தின் மீது வேண்டுமென்றே வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, அவர்களின் உட்கட்டமைப்பு வசதிகளை நிர்மூலமாக்கி, குடிநீரைப் பெற முடியாமல் செய்து, அவர்களைப் பாரம்பரிய மண்ணிலிருந்து விரட்டியடித்து, அந்த இடத்தில் வேறு இனத்தவர்களைக் குடியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதெனில், அதனை வெறும் அரசியல் பிரச்சினையாகக் கருத முடியாது. இது தெள்ளத்தெளிவான இனச்சுத்திகரிப்பாகும் (Ethnic Cleansing).
இந்தக் கட்டுரையை வாசித்துக்கொண்டி ருக்கும் இலங்கை வாசகர்கள் பலருக்கும், தாம் வாழும் மண்ணிலிருந்து வலுக்கட்டாயமாக விரட்டியடிக்கப்பட்டதன் வலி நன்றாகவே புரிந்திருக்கும். காஸாவில் நேரடிப் பேரழிவு கட்டவிழ்த்து விடப்படுகிறதென்றால், மேற்குக் கரை வரைபடத்திலிருந்து பலஸ்தீனர்கள் கட்டம் கட்டமாக இல்லாதொழிக்கப்படுகிறார்கள். இந்தப் பிரச்சினை தொடர்பில் உலகம் மௌனம் சாதிக்குமாயின், அது அநீதி இழைக்கும் புல்டோசர்களுக்கான பாதையை மேலும் விசாலமாக்குவதாகவே அமையும்.
சதீஷ் கிருஷ்ணபிள்ளை
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!