சில துளிகளில் யதார்த்தம் (Reality Check)
* உறுதியளிக்கப்படுவது: வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதானமும் ஸ்திரத்தன்மையும்.
* கிடைப்பது: ஐ.நா.வைப் புறக்கணித்து,
ஐ.சி.சி. தீர்ப்புகளை மறைத்து, கடந்தகால அட்டூழியங்களை மூடி மறைக்கும் தீர்வு.
* முதன்மை நோக்கம்: ஈரான் யுத்தம் மற்றும் போர்க் குற்றங்களிலிருந்து உலக நாடுகளின் கவனத்தைத் திசைதிருப்புதல்.
இன்னுமொரு 'சமாதானத் திட்டம்' பற்றிய அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இது டொனால்ட் ட்ரம்ப்பின் 'கருணை'யில் காஸா மக்களுக்கு விமோசனம் தேடிக் கொடுத்தல் பற்றியது. இதற்கும் மேலைத்தேய ஊடகங்கள் வழக்கம்போல அதிக முக்கியத்துவம் அளித்துள்ளன. சிக்கலான தொழில்நுட்ப வார்த்தைகளைப் பயன்படுத்தி, காஸாவின் எதிர்காலம் பற்றிய ஒரு அழகான பொய் பிம்பத்தைக் கட்டமைக்க முனைகின்றன.
இதே பத்தியில் இந்தப் போலித்தனங்கள் பற்றி நாம் பல முறை பேசிவிட்டோம்.
இன்றும் கூட மேலைத்தேய ஊடகங்கள் அமெரிக்காவின் சமாதான முன்முயற்சிகளைப் பற்றிப் பேசுகையில், அதன் மறைமுக உள்நோக்கம் என்ன, எந்த உண்மைகள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன என்பதை கவனமாக ஆராய வேண்டியிருக்கிறது
.
இன்றைய சூழ்நிலையில் இரண்டு விடயங்கள் பிரதானமாகப் பேசப்படுகின்றன. டொனால்ட் ட்ரம்ப்பின் 'மேலான' சிந்தனையில் உதித்த 'சமாதான சபை' (Board of Peace) பற்றிய திட்டம் மற்றும் அதனூடாக காஸாவில் அமைதியை நிலைநாட்டுவதற்காக வகுக்கப்பட்ட பாதை வரைபடம் (Roadmap). இந்த வரைபடங்களில் ஆயுதக் களைவு பற்றிய அட்டவணைகள் இருக்கின்றன.
எந்தெந்த இலக்குகளை எப்போது அடைய வேண்டும் என்ற கால வரையறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. காஸா நிலப்பரப்பு எப்படியெல்லாம் நிர்வகிக்கப்படும், ஆட்சி செய்யப்படும் என்ற விபரங்கள் எழுதப்பட்டுள்ளன. மேலோட்டமாகப் பார்த்தால், இது கவனமாக வடிவமைக்கப்பட்ட ஆக்கபூர்வமான திட்டம் போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தும். ஆனால், சில அடிப்படை கேள்விகளை எழுப்பினால் அது முற்றுமுழுதும் ஒரு மாயை என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த நேரத்தில், இப்படியொரு திட்டம் ஏன் தேவை என்பதுதான் மிக முக்கியமான கேள்வி. இதற்குப் பின்னால் உள்ள அப்பட்டமான உண்மை: உலகின் கவனத்தைத் திசைதிருப்புவது.
அமெரிக்காவுக்கு இரண்டு பிரதான விடயங்களிலிருந்து உலகத்தின் பார்வையைத் திருப்ப வேண்டிய கட்டாயம் இருக்கிறது. முதலாவது, ஈரானுக்கு எதிரான யுத்தம் ஏற்படுத்தியிருக்கின்ற மோசமான விளைவுகள்.
இரண்டாவது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ.சி.சி.) இஸ்ரேலிய தலைவர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இனச்சுத்திகரிப்பு மற்றும் போர்க் குற்றச்சாட்டுகள். காஸாவின் எதிர்கால ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பு மீது ஊடகங்கள் வாயிலாகக் கவனத்தைக் குவிப்பதன் மூலம், கடந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களை அமெரிக்கா மறக்கடிக்கப் பார்க்கிறது. இஸ்ரேலுடன் கூட்டாகக் கட்டவிழ்த்துவிட்ட குற்றச்செயல்களைத் திரைமறைவுக்குக் கொண்டுசெல்ல முயல்கிறது.
காஸா மக்களைக் குண்டுபோட்டுக் கொன்றொழித்த அட்டூழியங்கள் ஒருபுறமிருக்கட்டும்; உணவுப் பொருட்களும் மனிதாபிமான உதவிகளும் கிடைப்பதைத் தடுத்து, ஒரு சமூகத்தையே பட்டினி போட்டுக் கொல்வது சர்வதேச சட்டங்களை (ஜெனிவா பிரகடனத்தின் 54ஆவது ஷரத்தை) மீறும் அப்பட்டமான போர்க் குற்றமாகும். காஸாவின் கடந்தகால அநீதிகளுக்குப் பதில் கூறாமல், எதிர்காலம் பற்றிய பசப்பு வார்த்தைகளைப் பேசும் இந்த விவரணைக்குள் 'பொறுப்புக் கூறல்' என்பது மாயமாய் மறைந்துபோகிறது.

சுயநலம்
ட்ரம்பின் 'சமாதான சபை' என்பது எவ்வளவு அபத்தமானது என்பதை அதன் அமைப்பை வைத்தே புரிந்து கொள்ள முடியும்:
ஆயுட்காலத் தலைவர்: இந்த அமைப்பின் ஆயுட்காலத் தலைவராக டொனால்ட் ட்ரம்ப் கடமையாற்றுவார்.
கட்டண உறுப்பினர்: இதில் அங்கத்துவம் வகிக்க விரும்பும் நாடுகள் பெருந்தொகை பணத்தைச் சந்தாவாகச் செலுத்த வேண்டும்.
சட்டத்திற்கு அப்பாற்பட்டது: இச்சமாதான சபையானது ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பிற்குள் வராது; சர்வதேச சட்டங்களுக்கும் கட்டுப்பட்டு நடக்காது.
சமாதான சபையின் ஊடாக ஐ.நா. கட்டமைப்பை வலிமையற்றதாக்க முனைவது ஏன்? பதில் எளிமையானது. சர்வதேச சட்டம் பலஸ்தீனத்தின் இறையாண்மையை அங்கீகரிக்கிறது; போர்க் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலை எதிர்பார்க்கிறது.
எதற்குமே கட்டுப்படாமல் தனியாக இயங்க முனையும் 'சமாதான சபை'யானது, நோபல் சமாதானப் பரிசின் மீது அதீத மோகம் கொண்ட டொனால்ட் ட்ரம்பைத் தவிர வேறு யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாத ஒரு தனியார் ‘கிளப்’ போன்றது.
3. சமாதானமா? அல்லது சரணடைவா?
சமாதான சபை முன்மொழியும் இத்திட்டம், காஸா பலஸ்தீனர்களுக்கு வைக்கப்பட்ட பொறியே தவிர வேறொன்றும் கிடையாது.
வரலாற்று ரீதியான தவறுகளைக் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட 'போர் நிறுத்தத்தை' மட்டும் நினைவுகூர்வோம். அன்றிலிருந்து இன்று வரை 1,100 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். உதவிகள் முடக்கப்படுகின்றன் இராணுவக் காவலரண்கள் விஸ்தரிக்கப்படுகின்றன.
இஸ்ரேலின் இராணுவ அடக்குமுறை நீக்கப்படும் என்ற எந்தவொரு உத்தரவாதமும் இல்லாத சூழலில், சமாதானத் திட்டத்திற்கு அடிபணிய வேண்டும் என்று பலஸ்தீனர்களைக் கேட்பது எந்த வகையில் நியாயமாகும்? இது இராஜதந்திரமா அல்லது பலஸ்தீனர்களைப் பணயக் கைதிகளாக மாற்றும் அடாவடித்தனமா?
உண்ண உணவின்றி, சொந்த வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து, எதிர்காலம் கேள்விக் குறியாக நிற்கும் ஒரு சமூகத்தை, சுயநிர்ணய உரிமையுள்ள மனிதர்களாக நோக்காமல், ஆளப்பட வேண்டிய 'மந்தைக் கூட்டமாக' மட்டுமே இச்சமாதானத் திட்டம் அணுகுகிறது. மேலைத்தேய ஊடகங்கள் கட்டமைக்கும் பசப்பு வார்த்தைகளைத் தாண்டி ஆராய் கையில் ஒரு கசப்பான உண்மை வெளிப் படுகிறது:
ட்ரம்பின் சமாதான சபையோ அல்லது இந்த காஸா சமாதானத் திட்டமோ, திறந்தவெளிச் சிறைக்கூடமாக மாற்றப்பட்டுள்ள ஒரு நிலப்பரப்பிற்கு நீதி நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல. மாறாக, தனிப் பட்ட முறையில் புகழ் தேடும் ஒரு மனிதர், ஒடுக்கப்பட்ட மனிதர்களின் கல்லறைக்கு மேல் தனக்கான புகழ்கோபுரத்தை எழுப்புவ தற்காக ஆடப்படும் ஆபத்தான நாடகமாகும்.
சதீஷ் கிருஷ்ணபிள்ளை

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!