கிண்ணியாவில் பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பு: ஒரே இரவில் எட்டு பேர் கைது
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் கடல் சிப்பி கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை பொலிஸ் வழங்கிய தகவலின்படி, கிண்ணியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று இந்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, உப்பாறு பகுதியில் எந்தவித அனுமதிப்பத்திரமும் இன்றி சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 3 உழவு இயந்திரங்களும், 4 டிப்பர் வாகனங்களும் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் முற்றுகையிடப்பட்டு கைப்பற்றப்பட்டன.
அத்துடன், அந்த வாகனங்களை இயக்கிய சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கிண்ணியா சூரங்கள் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடல் சிப்பிகளை களஞ்சியசாலைக்குக் கடத்திச் சென்ற உழவு இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது தலா 50 கிலோகிராம் எடை கொண்ட 70 கடல் சிப்பி மூடைகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும், கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மற்றும் பொருட்களையும் திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் இயற்கை வள கடத்தல்களுக்கு எதிராக தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!