கூகுளின் AI ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம்: ஒரு பார்வையில் பேசும் எதிர்கால தொழில்நுட்பம்!
உலக தொழில்நுட்ப துறையின் முன்னணி நிறுவனமான Google தனது புதிய AI ஸ்மார்ட் கண்ணாடிகளை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தி தொழில்நுட்ப உலகில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற Google I/O மாநாட்டில் வெளியிடப்பட்ட இந்த புதிய ஸ்மார்ட் கண்ணாடிகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாக இணைக்கும் அடுத்த தலைமுறை சாதனமாக பார்க்கப்படுகின்றன.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான Google Glass தனியுரிமை மற்றும் கண்காணிப்பு அச்சங்கள் காரணமாக தோல்வியடைந்த நிலையில், தற்போது மேம்பட்ட வடிவமைப்பும் AI வசதிகளும் கொண்டு கூகுள் மீண்டும் இந்த துறையில் களமிறங்கியுள்ளது.
இந்த புதிய கண்ணாடிகளில் மைக்ரோஃபோன், கேமரா மற்றும் சிறிய ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பயனர்கள் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளவும், இசை கேட்கவும், புகைப்படங்கள் எடுக்கவும் மற்றும் கூகுளின் Gemini செயற்கை நுண்ணறிவு உதவியாளருடன் நேரடியாக உரையாடவும் முடியும்.
மேலும், இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் Android மற்றும் Apple சாதனங்களுடன் இணைந்து செயல்படக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் Samsung நிறுவனத்தின் தொழில்நுட்ப பங்களிப்பும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏற்கனவே 7 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட் கண்ணாடிகளை விற்பனை செய்து சந்தையில் முன்னிலையில் இருக்கும் Meta நிறுவனத்திற்கு இது கடுமையான போட்டியை ஏற்படுத்தக்கூடும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர்.
தற்போதைய மாடல் ஒலிவசதிகளுடன் வெளிவர உள்ள நிலையில், எதிர்காலத்தில் Built-in display கொண்ட மேம்பட்ட AI கண்ணாடி மாடல்களையும் கூகுள் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், கேமரா பொருத்தப்பட்ட இந்த சாதனங்கள் மீண்டும் தனியுரிமை மற்றும் கண்காணிப்பு தொடர்பான விவாதங்களை தூண்டும் வாய்ப்பு உள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!