news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கேள்விக்கு உள்ளாகும் சுவிசின் எதிர்காலம்

23 Jun, 2026


சுவிட்சர்லாந்து மக்கள் தொகையை ஒரு கோடியாக மட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் வலதுசாரிக் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி கோரிய சர்வஜன வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்திருக்கிறது. 

வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட இந்த வாக்கெடுப்பில் வாக்களித்த 54.79 சதவீத வாக்காளர்கள் இந்த முன்மொழிவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

மொத்த வாக்காளர்களில் 58.86 சதவீத வாக்காளர்களே வாக்களிப்பில் கலந்துகொண்ட இந்த வாக்கெடுப்பில் 1,808,916 பேர் இல்லை என வாக்க ளித்திருந்தனர். 45.21 சதவீத மக்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

ஜூன் 14ஆம் திகதி நடைபெற்ற இந்த வாக்கெடுப்பு 2050ஆம் ஆண்டை எட்டும் போது சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை ஒரு கோடியைத் தாண்டக் கூடாது என்ற கோஷத்துடன் நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடாக சுவிஸ் இல்லாத போதிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் நுழைவு விசா அனுமதி எதுவும் இன்றி சுவிஸ் நாட்டுக்குள் வருகை தர முடியும், 

தங்கள் நாட்டு அடையாள அட்டையுடன் சுவிஸ் நாட்டில் வேலைகளைத் தேடிக் கொள்ள முடியும் ஆகியன உள்ளிட்ட சலுகைகள் காரணமாக சுவிஸ் நாட்டின் மக்கள் தொகை அதிகரிக்கிறது என்பது சுவிஸ் மக்கள் கட்சியின் கரிசனையாக உள்ளது. 

இது தவிர, சமஷ்டி அரசாங்கத்தின் அகதிகள் தொடர்பிலான நெகிழ்ச்சியான கொள்கை காரணமாகவும் சுவிஸ் நாட்டின் மக்கள் தொகை ஆண்டு தோறும் அதிகரிக்கிறது என்பது இக்கட்சியின் வாதம்.

சிறிய நாடான சுவிஸ் தன்னை பௌதீக அடிப்படையில் விரிவுபடுத்திக் கொள்வதற்கான எந்த வாய்ப்பும் அற்ற நிலையில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது ஒன்றே நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பு பற்றாக்குறை, வாடகை வீடுகள் போதாமை, போக்குவரத்து நெருக்கடி, குற்றச் செயல்கள் உள்ளிட்ட விடயங்களைக் கட்டுப்படுத்துவதற்குச் சிறந்த வழி என்பது இந்தக் கட்சியின் நிலைப்பாடு.

சுவிஸ் நாட்டின் தற்போதைய சனத்தொகை 9.1 மில்லியனாக உள்ளது. இதில் சற்றொப்ப 27 சதவீதம் வெளிநாட்டவராக உள்ளனர். குழந்தை பெறுவதில் சுவிஸ் நாட்டவர்கள் அக்கறை காட்டாமல் இருந்து வருகின்ற போதிலும் வெளிநாட்டவர் வருகை காரணமாக நாட்டின் சனத்தொகை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் சுட்டுகின்றன.

 


ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக சுவிட்சர்லாந்து இல்லாத போதிலும், ஐரோப்பாக் கண்டத்தின் மத்தியில் நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட புவியியல் அமைப்பை அந்த நாடு கொண்டுள்ளதால் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான மக்கள் ஊடாட்டத்தை அந்த நாடு அனுமதித்துள்ளது. 

2002ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது. அன்றிலிருந்து இன்றுவரை சுவிஸ் சனத்தொகை 1.7 மில்லியனால் அதிகரித்து உள்ளது. எனவே, வெளிநாட்டவர் வருகையே கட்டுப்படுத்த வேண்டும் என்பதுவும் வலதுசாரிகளின் பிரேரணையின் அடித்தளமாக உள்ளது.

வாக்கெடுப்பில் கலந்து கொண்ட வர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் பிரேரணையை எதிர்த்து வாக்களித்து அதனைத் தோற்கடித்து இருந்த போதிலும் 41.14 சதவீதமக்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத நிலையில், வாக்களிக்கத் தவறிய அந்த மக்களின் மனோநிலை என்னவென்று அறியாமல் எதிர்காலம் என்னவாக அமையப் போகிறது என்ற அச்சம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.


சுவிஸ் கட்சிகளைப் பொறுத்தவரை சுவிஸ் மக்கள் கட்சி வாக்காளர்கள் மாத்திரமே இந்த பிரேரணையை பெருவாரியாக ஆதரித்து உள்ளனர். இந்தக் கட்சி ஆதரவாளர்களில் 95 சதவீதத்தினர் பிரேரணையை ஆதரித்து வாக்களித்து உள்னர்.

சுவிட்சர்லாந்தின்  இரண்டாவது பெரிய கட்சியான சமூக ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்களில் 88 சதவீதத்தினர் பிரேரணைக்கு எதிராக வாக்களித்து உள்ளனர். ஏனைய கட்சிகளான பசுமை லிபரல் கட்சி 85%, பசுமைக் கட்சி 75%, மையக் கட்சி 67%, வலதுசாரிக் கட்சியாக அறியப்பட்ட சுதந்திர ஜனநாயகக் கட்சி 57% என ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்களில் பெரும்பான்மையினர் பிரேரணைக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர்.


அதேவேளை, சுதந்திர ஜனநாயகக் கட்சியின் 43 சதவீத ஆதரவாளர்களும், மையக் கட்சியின் 33 சதவீத ஆதர வாளர்களும் பிரேரணையை ஆதரித்து வாக்களித்துள்ளமை சுவிஸ் சமூகத்தில் நிலவும் பாரிய பிளவை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளது.

மாநிலங்களைப் பொறுத்தவரை சுவிஸ் மக்கள் கட்சியின் செல்வாக்கு அதிகம் உள்ள பகுதிகள் என அறியப்படும் மாநிலங்களில் பிரேரணைக்கு ஆதரவான வாக்குகள் பெருவாரியாகக் கிடைத்துள்ளன. குறிப்பாக அப்பன்செல் இன்னர்ஹோடன் (65.92 %), சுவிற்ஸ் (63.19 %), ஊரி (59.90 %) உள்ளிட்ட 12 மாநிலங்களில் பிரேரணைக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளனர். அத்துடன் இத்தாலி மொழி பேசும் திச்சினோ மாநிலமும் (50.66 %) பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.


வழக்கம் போன்று பிரெஞ்சு மொழி பேசும் மாநிலங்கள் பிரேரணைக்கு எதிராக பெரும்பான்மையாக வாக்களித்துள்ளன. நொசத்தல் (67.26 %), ஜெனிவா (65.42 %), வோ (64.47 %), பிறிபேர்க் (54.87 %), வலிஸ் (52.78%) என பிரேரணைக்கு எதிரான வாக்களிப்பைப் பார்க்க முடிகின்றது. பிரெஞ்சு மொழி பேசும் மாநிலங்களில் ஒட்டு மொத்தமாக 62.08 சதவீத மக்கள் பிரேரணையை எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

அதேபோன்று சுவிசின் வர்த்தகத் தலைநகராக அறியப்படும் சூரிச் நகரைக் கொண்ட மாநிலத்தில் 60.03 சதவீத மக்களும், பேர்ண் மாநிலத்தில் 55.40 சதவீத மக்களும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்து உள்ளனர். 

சிறிய மாநிலமான பாசல் நகரத்திலேயே அதி கூடிய வீதத்தில் பிரேரணைக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். அங்கு 73.48 சதவீத மக்கள் பிரேரணையை எதிர்த்து வாக்களித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக ஜேர்மன் மொழி பேசும் மாநிலங்களில் 53.02 சதவீத மக்கள் பிரேரணையை எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

அதேவேளை, இந்த வாக்களிப்பில் மற்றொரு அம்சத்தையும் அவதானிக்க முடிந்தது. பெரு நகரங்களிலும், நகர்ப் புறங்களிலும் வாழ்பவர்கள் பெரும்பான்மையாக பிரேரணைக்கு எதிராக வாக்களித்துள்ள நிலையில், கிராமப் புறங்களிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் வாழும் மக்கள் பிரேரணையை ஆதரித்து வாக்களித்துள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

பொதுவாக நகர்ப் புறங்களிலும், நகரை அண்டிய பிரதேசங்களிலும் வெளிநாட்டுப் பூர்வீகத்தைக் கொண்டவர்கள் அதிகமாக வாழ்வது உலகளாவிய வழக்கம். அந்த வகையில் இந்த வாக்களிப்பு சாத்தியப் பட்டதாகக் கருத முடியும். அதேவேளை, நகர்ப் புறங்களில் நிலவும் பல் இன, மொழி, கலாசாரக் கூறுகளும் இந்த முடிவில் செல்வாக்குச் செலுத்தியிருக்கக் கூடும்.

நடுநிலை நாடு என அறியப்படும் சுவிஸ் நாட்டில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான உள்ளடக்கத்துடன் கூடிய ஒரு பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்படுவதென்பது 

உலக அரங்கில் சுவிஸ் நாட்டுக்கு ஒரு அவமானமாகவே பார்க்கப்படுகின்றது. அதேவேளை, உலகளாவிய அடிப்படையில் வலதுசாரிகளின் எழுச்சி பரவலாக அவதானிக்கப்பட்டுவரும் நிலையில் சுவிஸ் நாடும் அத்தகைய போக்கிற்கு விதி விலக்காக இல்லை எனவும் புரிந்து கொள்ளலாம்.

நடைபெற்று முடிந்த மக்கள் வாக்கெடுப்பின் முடிவை இடதுசாரிகளும், பொதுவில் சுவிஸின் நடுநிலைத் தன்மையைக் கொண்டாடுபவர்களும் வரவேற்றுள்ளனர். 

ஆனால், இந்த மகிழ்ச்சி நீடித்த ஒன்றா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. ஏனெனில், வாக்கெடுப்பின் முடிவுகள் ஒட்டுமொத்த சுவிஸ் மக்களின் எண்ணங்களையும் பிரதிபலிக்கின்றதா என்ற கேள்வி எழுவதைத் தடுக்க முடியவில்லை. 

வாக்களிப்பில் கலந்து கொள்ளாத 41.14 சதவீத மக்களும் பிரேரணையை ஏற்கின்றனரா அல்லது நிராகரிக்கின்றனரா என்பதும் நிச்சயமாகத் தெரியாது. எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு பிரேரணை மீது  வாக்கெடுப்பு நடைபெறும் போது அவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதையும் தற்போது ஊகிக்க முடியாத நிலையே உள்ளது.

நடைபெற்று முடிந்த வாக்கெடுப்பில் சுவிஸ் நாட்டின் கிராமப் புறங்களிலும் நகர்ப் புறங்களிலும் வாழும் மக்களின் சிந்தனைப் போக்கில் உள்ள பாரிய முரண் தெளிவாகத் தெரிகிறது. 

ஒரு நாட்டின் இதயம் கிராமங்களிலேயே உள்ளது என்ற பொதுவான கருத்தின் அடிப்படையில் பார்த்தால் சுவிஸ் நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிர்காலத்தில் ஆபத்து இருக்கிறது என்பதாகவே கருத வாய்ப்பு உள்ளது. வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி தனது முயற்சியில் இருந்து பின்வாங்கும் தன்மை கொண்ட ஒரு கட்சி அல்ல. 

அந்தக் கட்சியின் ஆதரவுத் தளம் மாறாத நிலையில் உள்ளது என்பது தொடர்ச்சியாக ஒவ்வொரு தேர்தலிலும் வெளிப்பட்டு வரும் நிதர்சனம். சுவிஸ் நாட்டின் சமூகச் சூழலில் வெளிநாட்டுப் பின்னணி கொண்டவர்களால் ஏதாவது பாரிய பிரச்சினை ஏற்படும் வரை ஓடுமீன் ஓடி உறுமீனை எதிர்பார்த்து அந்தக் கட்சி நிச்சயம் காத்திருக்கும்.


சுவிசிலிருந்து சண் தவராசா

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!