இலங்கையில் சமஷ்டி ஆட்சிமுறைக்காக எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க முதன் முதலாகக் குரல் கொடுத்து இந்த வருடத்துடன் சரியாக ஒரு நூற்றாண்டு நிறைவு பெறுகிறது. தனது யோசனைக்கு வடக்குத் தமிழர்களின் ஆதரவை பெறுவதற்கு அன்று அவர் எடுத்த முயற்சி பயன் தரவில்லை.
அவரது கோரிக்கைக்கு அன்று இனத்துவ அரசியல் பரிமாணம் ஒன்று இருக்கவில்லை. அன்றைய தமிழ் தலைவர்கள் பண்டாரநாயக்கவுடன் ஒத்துழைத்து சமஷ்டிக் கோரிக்கைக்காக பாடுபட்டிருந்தால் சிலவேளை இலங்கையின் அரசியல் வரலாறு நிச்சயமாக வேறுபட்டதாக இருந்திருக்கும்.
அதேவேளை, துரதிர்ஷ்டவசமாக, டொனமூர் அரசியலமைப்புக்கு பிறகு பெரும்பான்மை இனத்தவர்களின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்துக்கு வருவதற்காக, இனங்களுக்கு இடையிலான உறவுகள் படுமோசமாக சீர்குலைவதற்கு வழிவகுத்த தீவிரமான இனவாத கொள்கைகளை பண்டாரநாயக்க கடைப்பிடிக்காமல் இருந்திருந்தாலும் இலங்கையின் அரசியல் வரலாறு வேறு விதமாகவே இருந்திருக்கும்.
இலங்கையில் சமஷ்டி ஆட்சிமுறை தொடர்பான விவாதம் ஒரு நூற்றாண்டு வரலாற்றைக் கொண்டதாக இருக்கின்ற அதேவேளை, சமஷ்டி முறையின் அடிப்படையில் தங்களது பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கை முக்கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக நீடிக்கிறது.
எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி சமஷ்டி ஆட்சிமுறைக் கோரிக்கையை முன்வைத்த போதிலும், கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் இரு வேறு அரசாங்கங்களுடன் சமஷ்டி முறைக்கு குறைவான தீர்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஒப்பந்தங்களைச் செய்து கொண்டது.
செல்வநாயகத்துடன் அந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட இரு பிரதமர்கள் தென்னிலங்கையின் சிங்கள இனவாத சக்திகளின் எதிர்ப்புக்கு மத்தியில், கனவான்களாக அரசியல் துணிவாற்றலை வெளிக்காட்ட முடியாதவர்களாக நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள்.
கொழும்பு அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, தேசிய இனப் பிரச்சினைக்கு இணக்கபூர்வமான அரசியல் தீர்வைக் காண்பது இனிமேலும் சாத்தியமில்லை என்ற ஒரு கட்டம் வந்ததும் தனிநாட்டுக் கோரிக்கை பிறந்தது. சமஷ்டி கோரிக்கையை முன்வைத்தபோது தமிழ் மிதவாத அரசியல் தலைவர்களிடம் அதை அடைவதற்கு நடைமுறைச் சாத்தியமான வழிவரை படம் ஒன்று இருக்கவில்லை. அதைப் போன்றே தனிநாட்டுக் கோரிக்கையை வென்றெடுப்பதற்கான எந்தவொரு திட்டமும் அவர்களிடம் இருக்கவில்லை.Geographic Reference
இறுதியில், தனிநாட்டை அடைவதற்காக தமிழ் இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் உள்நாட்டுப் போராக மாறியதும் அதன் விளைவான பெருமளவு உயிரிழப்புகளும் அழிவுகளும் அண்மைக்கால வரலாறு. வட்டுக்கோட்டை (1976 மே 14) தீர்மானத்துக்கு பிறகு மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக தமிழர் அரசியலில் 'மறக்கப்பட்டதாக' இருந்த சமஷ்டித் தீர்வுக் கோரிக்கை போரின் முடிவுக்குப் பின்னரான காலப் பகுதியில் மீண்டும் மேலெழுந்திருக்கிறது.
தேசிய இனப் பிரச்சினைக்கு சமஷ்டி முறையின் அடிப்படையில் நிலைபேறான அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்பதே இன்று சகல இலங்கை தமிழ் தேசியவாத அரசியல் கட்சிகளினதும் பிரதான கோரிக்கையாக இருக்கிறது. கோரிக்கை ஒன்றாக இருக்கின்ற போதிலும், இந்த கட்சிகளினால் தமிழ் மக்கள் சார்பில் ஒருமித்த நிலைப்பாட்டை முன்வைப்பதற்கு இணக்கப்பாட்டுக்கு வரமுடியவில்லை.
நோர்வேயின் அனுசரணையுடன் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் முன்னெடுக்கப்பட்ட சமாதானச் செயன் முறையின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிருவாகத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் வெளிநாடுகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் ஒரு கட்டத்தில் சமஷ்டி முறையின் அடிப்படையில் அரசியல் தீர்வைக் காண்பது குறித்து ஆராயத் தயாராக இருப்பதாக கூறப்பட்டதை தவிர, கொழும்பு அரசாங்கங்கள் ஒருபோதுமே தமிழ் அரசியல் தலைமைத்துவத்துடன் சமஷ்டித் தீர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதில்லை.
பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் முதலாவது குடியரசு அரசியலமைப்பை வரைவதற்காக அமைத்த அரசியல் நிருணய சபையிடம் தமிழரசு கட்சி சமர்ப்பித்த சமஷ்டிமுறை யோசனை அடியோடு நிராகரிக்கப்பட்டது. 1972 மே 22 முதல் நடைமுறைக்கு வந்த அந்த அரசியலமைப்புத்தான் இலங்கையை ஒரு ஒற்றையாட்சி அரசு என்று பிரகடனம் செய்தது.
ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கொண்டு வந்த இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு ( 1978) நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தியதுடன் ஒற்றையாட்சி முறையை மேலும் வலுப்படுத்தியது.Psychology
1987 ஜூலை இந்திய-இலங்கை சமாதான உடன்படிக்கையின் விளைவாக கொண்டு வரப்பட்ட மாகாணசபை முறைமையுடனான தமிழர்களின் 38 வருடகால அனுபவம் ஒற்றையாட்சியின் கீழ் பயனுறுதியுடைய அதிகாரப்பகிர்வு சாத்தியமில்லை என்பதை தெளிவாக நிரூபித்திருக்கிறது.
இத்தகைய பின்புலத்தில், ஒற்றையாட்சி முறையை மாற்றி, சமஷ்டி முறையின் அடிப்படையிலான அரசியலமைப்பு ஒன்றைக் கொண்டு வருவது மாத்திரமே இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிலைபேறான தீர்வாக அமையமுடியும் என்பதே சகல தமிழ் தேசியவாத அரசியல் கட்சிகளினதும் உறுதியான நிலைப்பாடாக இன்று இருக்கிறது. ஆனால், இந்த கட்சிகள் தங்களது கோரிக்கையை வெறுமனே வலியுறுத்தி வருகின்றனவே தவிர, உள்நாட்டில் அதை வென்றெடுப்பதற்கான அரசியல் வேலைத் திட்டம் எதையும் கொண்டிருப்பதாக தெரியவில்லை.
இலங்கை தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் தற்போது நடைமுறையில் இருக்கும் மாகாண சபைகளை அவற்றின் குறைபாடுகளுக்கு மத்தியிலும், பாதுகாத்துப் பயன்படுத்திக் கொண்டு நீண்டகால நோக்கில் சமஷ்டித்தீர்வை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டவையாக இருக்கின்றன.
அ
தேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் வேறு சில குழுக்களையும் உள்ளடக்கிய தமிழ்த் தேசியப் பேரவை, அதிகாரப் பகிர்வு விடயத்தில் மாகாண சபைகள் முறைமையை தொடக்கப்புள்ளியாகக் கூட கருதமுடியாது என்றும் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை ஒழிக்கப்பட்டு தமிழ் (தேசத்தின்) மக்களின் இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்கக்கூடிய சமஷ்டி முறை மாத்திரமே இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு ஒரே வழி என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது.
போர்க் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச சமூகத்தின் நெருக்குதலின் மூலமாக இலங்கை அரசைப் பொறுப்புக்கூற வைக்கலாம் என்ற நம்பிக்கையில் கடைப்பிடித்த அதே அணுகுமுறையையே தமிழ் கட்சிகள் அரசியல் தீர்வு விடயத்திலும் தற்போது கடைப்பிடிக்கின்றன. குறிப்பாக, இந்தியாவைக் கொண்டு நெருக்குதலைக் கொடுப்பதன் மூலமாக தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை அடையலாம் என்று அவை நம்புகின்றன.Astrology & Divination
இந்திய தலைவர்களை குறிப்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் போன்ற இராஜதந்திரிகளைச் சந்திக்கின்ற வேளைகளில் எல்லாம் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் மாகாணசபை தேர்தல்களை மேலும் காலந்தாழ்த்தாமல் நடத்துவதற்கும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்க வேண்டும் என்று கேட்பதுடன் நின்றுவிடுவதில்லை. சமஷ்டித் தீர்வொன்றைக் காண்பதற்கு கொழும்பை வலியுறுத்த வேண்டும் என்றும் அவர்கள் இந்தியாவிடம் வேண்டுகோள் விடுக்கத் தவறுவதில்லை.Biographies & Quotations
சமாதான உடன்படிக்கையைத் தொடர்ந்து மாகாண சபைகளை அறிமுகப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தத்தைக் கூட மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலம் கடந்த நிலையிலும், முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் இருந்துவரும் இலங்கை அரசாங்கங்களிடம் சமஷ்டி முறையின் அடிப்படையில் தீர்வைக் காண்பது குறித்து எவ்வாறு பேசமுடியும் என்று ஜெய்சங்கர் கொழும்பில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்த ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்படையாக கேள்வியெழுப்பினார்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்காக உள்நாட்டில் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் வெற்றிபெறவில்லை. இந்தியாவின் நேரடித் தலையீடு இல்லையென்றால் மாகாணசபைகள் மூலமான அதிகாரப் பகிர்வு ஏற்பாடு கூட வந்திருக்காது. அவ்வாறிருந்தும், இதுநாள்வரை மாகாணசபைகளை பயனுறுதியுடைய முறையில் இலங்கை அரசாங்கங்களைக் கொண்டு இயங்கவைக்க இந்தியாவினால் முடியவில்லை என்பதே யதார்த்த நிலையாகும். இந்த இலட்சணத்தில் சமஷ்டித் தீர்வைக் கொண்டுவருவதற்கு இந்தியாவினால் என்ன செய்ய முடியும்?
ஆனால், அண்மைக் காலமாக தமிழ்த் தேசியப் பேரவை தமிழ்நாடு மாநிலத்தின் ஊடாக புதுடில்லிக்கு நெருக்குதலைக் கொடுத்து கொழும்பை வழிக்குக்கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையில் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது.Politics
2025 டிசம்பரில் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் மாநிலத்தின் ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவையின் தூதுக்குழு இரண்டாவது சுற்றாக கடந்த பல நாட்களாக இன்றைய முதலமைச்சர் ஜோசப் விஜய்யையும் ஏனைய அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறது.
இந்த சந்திப்புகளின் போது இலங்கையில் தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் பல்வேறு அரசியல், மனித உரிமைகள் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதுடன் " ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை ஒழிக்கப்பட்டு தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படைலான அரசியல் தீர்வின் அவசியம் " குறித்து வலியுறுத்தியதாகவும் தமிழ் தேசிய பேரவையின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்த அவர்கள், மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய பிரதிநிதித்துவக்குழு ஒன்றை அமைத்து இலங்கை இனப் பிரச்சினை தொடர்பில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் சர்வகட்சி மகாநாடொன்றைக் கூட்ட வேண்டும் என்றும் வேண்டுகோளை முன்வைத்தார்கள்.
இலங்கையில் தமிழ்க் கட்சிகள் தமிழ் மக்கள் சார்பில் ஒருமித்த நிலைப்பாட்டை முன்வைக்க இணக்கத்துக்கு வரமுடியாமல் இருக்கின்ற நிலையில், தமிழ்நாட்டுக் கட்சிகளிடம் இவ்வாறு கேட்பதில் உள்ள பொருந்தாத்தன்மையை தமிழ்த் தேசியப் பேரவை முதலில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இது இவ்வாறிருக்க, தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பிலான உணர்வுநிலை பல்வேறு காரணிகளின் விளைவாக " தணிந்து போயிருக்கின்ற " இன்றைய காலகட்டத்தில் மீண்டும் அவர்களை " தட்டியெழுப்புவதற்கு " தமிழ் தேசிய பேரவை முன்னெடுக்கின்ற முயற்சிகள் எந்தளவுக்கு பயன்தரும் என்பதும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்கக்கூடியதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் உட்பட மாநில அரசியல் சக்திகள் இயக்கம் ஒன்றை முன்னெடுக்க அக்கறை காட்டுமா என்பதும் முக்கியமான கேள்விகள்.Language Resources
தங்களது கோரிக்கைகள் தொடர்பில் உள்நாட்டில் ஜனநாயக ரீதியான மக்கள் இயக்கம் ஒன்றை முன்னெடுக்காமலும் முதலில் அரசாங்கத்தை அணுகாமலும் தமிழ்நாட்டில் ஆதரவைத் திரட்டுவதில் உள்ள பொருத்தப்பாடு குறித்து தமிழ்த் தேசியப் பேரவை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். வடக்கு,கிழக்கில் எந்தவிதமான அரசியல் இயக்கத்தையும் முன்னெடுக்காமல் தமிழ்நாட்டு அரசியல் சக்திகளின் ஒருமைப்பாட்டை நாடுவதனால் மாத்திரம் எதைச் சாதிக்க முடியும்?
இலங்கைத் தமிழ்க் கட்சிகள் இந்தியாவின் உதவியையும் ஆதரவையும் கோருவது என்பது வரலாற்று ரீதியாக ஆழமாக வேரூன்றிய ஒரு தந்திரோபாயமாகும். ஆனால், இன்றைய சூழ்நிலையில் அது சிக்கலான புவிசார் அரசியல் மற்றும் உள்நாட்டு வரம்புகளைக் கொண்ட ஓர் அணுகுமுறையாகும்.
இனப்பிரச்சினையில் முறையான ஓர் உடன்படிக்கை அடிப்படையிலான "அதிகாரபூர்வத் தகுதியை" கொண்டிருக்கும் ஒரேயொரு வெளிநாடு இந்தியா மாத்திரம் என்பதே தற்போது தமிழ்க் கட்சிகள் புதுடில்லியை நோக்கிப் பார்ப்பதற்கான முதன்மையான காரணியாகும். 1987 ஜூலை சமாதான உடன்படிக்கை காரணமாக கொழும்புக்கு நெருக்குதலைக் கொடுப்பதற்கு அல்லது நல்லெண்ணத்தைப் பயன்படுத்துவதற்கு இந்தியாவுக்கு " கடப்பாடு" இருப்பதாக தமிழ்க் கட்சிகள் நம்புகின்றன.Campaigns & Elections
ஆனால், மாகாணசபை தேர்தல்களை நடத்துவதுடன் 13 ஆவது திருத்தத்தையும் முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு அவ்வப்போது இலங்கை அரசாங்கங்களிடம் வேண்டுகோள் விடுப்பதை தவிர, வேறு எந்தவிதமாகவும் அந்த " கடப்பாட்டை " புது.டில்லி நோக்குவதாக தெரியவில்லை. அது விடயத்தில் நெருக்குதலைப் பிரயோகிப்பதற்கு மோடி நிருவாகம் முன்வரும் என்று எதிர்பார்க்க முடியாது.
சமாதான உடன்படிக்கைக்கு கொழும்பைப் பொறப்புக்கூற வைப்பதற்கு இந்தியாவின் பாத்திரத்தை முன்னிறுத்துவது தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை, இயல்பான ஒரு தந்திரோபாயமாக இருந்தாலும் கூட, முழுமையான சமஷ்டிக் கட்டமைப்பை இந்தியா பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையின் நடைமுறைச் சாத்தியத் தன்மை பற்றி சிந்திக்க வேண்டும்.
தமிழ்த் தேசியத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் ஒரு சமஷ்டி கட்டமைப்பை தமிழ் கட்சிகள் கோருகின்ற போதிலும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக் கட்டமைப்பு இந்த கோரிக்கையுடன் ஒத்துப்போகமுடியாத தெளிவான வரம்புகளைக் கொண்டிருக்கிறது. இந்தியாவே மிகவும் வலுவான மத்திய அரசைக் கொண்ட ஓரளவு சமஷ்டி மாதிரியில் (மாநிலங்களின் ஒன்றியம்) இருக்கும் நிலையில், தனது சொந்த எல்லைக்குள் மாநிலங்களுக்கு வழங்கத் தயங்கும் தன்னாட்சியை அயல்நாடு ஒன்றில் ஒரு முழுமையான சமஷ்டி அமைப்பாக வற்புறுத்துவதற்கு புதுடில்லி முன்வரும் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
தங்களது அதிகாரங்களை மோடி நிருவாகம் பறித்தெடுக்கிறது என்ற குற்றச்சாட்டை தமிழ்நாடு உட்பட பல மாநில அரசாங்கங்கள் அண்மைக்காலமாக முன்வைத்து வருவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.இலங்கை வணிகம்
1980 களில் செய்ததைப் போன்ற இராணுவ பலத்துடன் கூடிய தலையீட்டு இராஜதந்திரக் காலம் எப்போதோ கடந்து விட்டது. இன்று இலங்கையைப் பொறுத்தவரை, புதுடில்லியின் முதன்மை நோக்கம் இந்தியாவின் கடல்சார்மற்றும் மூலோபாய நலன்களை மதிக்கும் நிலையானதும் நட்புறவானதுமான அரசாங்கத்தைப் பேணிப் பாதுகாப்பதாகும். தமிழர் விவகாரத்தில் கொழும்பு அரசாங்கத்துக்கு மிதமிஞ்சிய நெருக்குதலைக் கொடுப்பது கொழும்பை இந்தியாவுக்கு விரோதமான வல்லாதிக்க நாடுகளின் குறிப்பாக, சீனாவின் பிடிக்குள் தள்ளிவிடும் என்று புதுடில்லி நம்புகிறது.
தென்னிலங்கை அரசியல் சூழலில், "சமஷ்டி " என்ற சொல் நாட்டுப் பிரிவினைக்கான முதற்படியாகவே பார்க்கப்படுகிறது. அதனால், கடுமையான சிங்கள தேசியவாத எதிர்ப்பைக் கிளப்பி, இராஜதந்திர ரீதியான எந்தவொரு முன்னேற்றத்தையும் முடக்கிவிடக்கூடிய அணுகுமுறையை இந்தியா ஒருபோதும் கடைப்பிடிக்காது என்று நம்பலாம்.
இந்த கருத்துக்களை இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தமிழ்நாட்டு அரசியல் சக்திகளினதும் மக்களின் ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் மீண்டும் பெறும் நோக்குடன் தமிழ்த் தேசியப் பேரவை மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளை மலினப்படுத்தும் எண்ணத்தில் முன்வைக்கப்படுபவையாக வியாக்கியானம் செய்ய வேண்டியதில்லை. அந்த பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளினதும் குழுக்களினதும் தலைவர்கள் சரியானது என்று தங்களுக்கு தெரிகின்ற தந்திரோபாயத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.
ஆனால், 1983 கறுப்பு ஜூலைக்கு பின்னரான காலப்பகுதியில் இன்று வரை இனப்பிரச்சினையில் தமிழ்நாட்டு அரசியல் சக்திகளின் ஆதரவினதும் இந்தியாவின் ஈடுபாட்டினதும் மட்டுப்பாடுகள் பற்றியும் அவற்றினால் அடையக்கூடியதாக இருந்த விளைவுகளைப் பற்றியும் ஒரு தெளிவு இருப்பது அவசியமாகும்.
இந்தியாவின் முன்னைய ஈடுபாட்டை தமிழர் தரப்பு கையாண்ட முறையின் விளைவாக தோன்றிய நிலைவரம் பற்றியும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ் தேசிய பேரவையின் அண்மைக்கால முயற்சிகளுக்கு பிறகு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அரசாங்கமும் மாநில அரசியல் சக்திகளும் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கப் போகின்றன என்பது முக்கியமானது. அடுத்துவரும் நாட்களில் அதை அறியக்கூடியதாக இருக்கும்.Geographic Reference
தற்போதைக்கு குறைந்தபட்சம் இலங்கையில் மாகாணசபை தேர்தல்களை நடத்தி 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்குமாறு மோடி அரசாங்கத்தை வலியுறுத்துவராக இருந்தால் அதுவே பெரிய விடயமாக இருக்கும். நாம் ஒன்றுமே செய்யாமல் எமக்கு எவரும் வாங்கித் தருவதல்ல சமஷ்டி.
வீரகத்தி தனபாலசிங்கம்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!