13 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று, ஐந்து நாட்களாகத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடூரச் சம்பவம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி, சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் 13 வயது சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டி ஓட்டுநர் கடத்திச் சென்று, 32 நபர்களிடம் விற்று கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்
கடந்த ஜூன் 18-ஆம் திகதி, சிறுமி ஒருவர் வீட்டிற்குச் செல்ல முச்சகக்கர வண்டியில் ஏறியுள்ளார். ஆனால், அந்த ஓட்டுநர் சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல், கடத்திச் சென்று ஒரு ஹோட்டலில் விற்றுள்ளார். ஜூன் 22-ஆம் திகதி பொலிஸாரால் சிறுமி மீட்கப்படும் வரை, அந்த ஐந்து நாட்களில் அவர் நான்கு வெவ்வேறு உள்ளூர் ஹோட்டல்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிறுமியின் அலறல் சத்தத்தை நிறுத்துவதாற்கு அவருக்குக் கட்டாயப்படுத்தி மதுபானம் புகட்டப்பட்டு, கொடூரமான முறையில் 32 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்ட பொலிஸார் , சிறுமியைக் கடத்திய ஓட்டுநர் உட்பட இந்தச் சங்கிலித் தொடர் குற்றத்தில் நேரடியாகத் தொடர்புடைய 12 பேரை இதுவரை கைது செய்துள்ளனர். எஞ்சிய குற்றவாளிகளைப் பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையை முன்னெடுத்துள்ளனர்
மேலும், சிறுமி அடைத்து வைக்கப்பட்டிருந்த மற்றும் இந்த அக்கிரமத்திற்குத் துணையாகச் செயல்பட்ட நான்கு ஹோட்டல்களையும் அதிகாரிகள் அதிரடியாக இடித்து தரைமட்டமாக்கினர். பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தேவையான உயர்தர மருத்துவச் சிகிச்சையும், உளவியல் ஆலோசனைகளும் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியுள்ள நிலையில், பொதுமக்கள் கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். "பிஞ்சுச் சிறுமியைச் சித்திரவதை செய்த மிருகங்களுக்குத் தூக்குத் தண்டனை மட்டுமே சரியான தீர்ப்பு" என்று கோஷமிட்டு வருகின்றனர். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும், குற்றவாளிகளுக்கு எதிரான மரண தண்டனை கோரிக்கையையும் ஒட்டுமொத்த மக்களும் வலுவாக முன்வைத்துள்ளனர்.
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு மிகக்கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என்று பொலிஸார் உறுதியளித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!