news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சிறுமி மீதான துஷ்பிரயோக சம்பவம்…! ; தேரரை பாதுகாக்கின்றதா அரசாங்கம்?

25 May, 2026
அநுராதபுரம் அட்டமாஸ்தானத்தின் தலைமை விகாராதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் சிறுமி துஷ்பிரயோக வழக்கில்  பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றமை நாட்டின் நீதித்துறை மீதான மக்கள் நம்பிக்கையை இழக்கச்செய்துள்ளதாக  மனித உரிமை செயற்பாட்டாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். 

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்காக அவர் இம்மாதம் 9 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். 2022 ஆம் ஆண்டு அச்சிறுமிக்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தற்போதே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.   எனினும் அவர் கடந்த வெள்ளிக்கிழமை  22 ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டார். 

 பல்லேகம  தேரர் சம்பந்தப்பட்ட அதிர்ச்சிச் சம்பவ வழக்கில், அவருக்கு எதிராகத் தேவைக்கும் அதிகமான அத்தாட்சிகள் மற்றும் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இருந்தும் பொலிஸார் அநீதியான முறையில் செயற்பட்டுள்ளதாகச் சிறுவர் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி சஞ்சீவினி அபேகோன் நீதிமன்றத்தில் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


பாதிக்கப்பட்ட சிறுமி மீது தேரர் தொடர்ச்சியாக இத்தகைய மோசமான செயல்களில் ஈடுபட்டதற்கான மிக வலுவான சான்றாக, முதன்முறையாக இந்தச் சம்பவம் நடந்த போது வெளியான இரத்தம் தோய்ந்த சிறுமியின் உள்ளாடை மற்றும் தேரரின் உயிரணுக்கள்  துடைக்கப்பட்ட துணித் துண்டுகள் நீதிமன்றத்தில் முக்கிய ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.  

இந்த முக்கிய சான்றுப் பொருட்கள் அனைத்தும் தற்போது மிகவும் துல்லியமான இரசாயனப் பகுப்பாய்வுப் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

அதுமட்டுமன்றி, பல்லேகம  தேரர் இச்சிறுமியை அடிக்கடி வரவழைத்து இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பதற்கு அத்தாட்சியாக, அவர்களின் தொலைபேசிப் பரிமாற்றங்கள் தொடர்பான  88  அழைப்புச் சான்றிதழ்கள் உத்தியோகபூர்வமாகப் பெறப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு தேவைக்கும் அதிகமான அடுக்கடுக்கான ஆதாரங்கள்  தெளிவாக இருக்கும் போது, பொலிஸார் உரிய முறையில் சட்டத்தை நிலைநாட்டாமல் தேரரின் விகாரைக்கே நேரடியாகச் சென்று அவருக்குச் சாதகமான முறையில் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாகச் சஞ்சீவினி அபேகோன் குற்றம் சாட்டினார். 

பொலிஸார் இந்த விவகாரத்தை மிகவும் அசிரத்தையாகக் கையாண்டு, தேரரை பிணையில் விடுதலை செய்வதற்கு ஏதுவாக அநீதியான வேலைகளைச் செய்துள்ளனர் என்றும் அவர் நீதிவான் முன்னிலையில் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

 சந்தேக நபரான தேரருக்கு பிணை வழங்கப்பட்டமை குறித்து அதிர்ச்சியுடன் பேசிய பாதிக்கப்பட்ட சிறுமிக்காக முன்னிலையான ஒரு சட்டத்தரணி, இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு ஏதேனும் உள்ளதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். Politics

மேற்படி தேரர்  செல்வாக்கு மிக்கவர். “இத்தகையதொரு பின்னணியில் இந்த சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்டால், பாதிக்கப்பட்ட சிறுமியும் ஏனைய சாட்சிகளும் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக எமது அதிகாரசபை அவதானிக்கின்றது.

 மேலும், இந்த பிக்கு மத, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய செல்வாக்கைச் செலுத்தக்கூடிய ஒருவராவார். அதேநேரம் இச்சிறுமி பொருளாதார ரீதியாக கடுமையான வறுமையால் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியாவார். மேலோட்டமாகப் பார்க்கும்போதே தெளிவாகத் தெரியும் 

இந்த சமச்சீரற்ற அதிகாரத்துக்கு முன்னிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் சாட்சியங்கள் மீதும் சாட்சிகளின் மீதும் தாக்கம் செலுத்தப்படுவதற்கான அதிக அபாயம் நிலவுவது எமது அதிகாரசபைக்குப் புலனாகின்றது,” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபரான பல்லேகம ஹேமரதன தேரரையும், பாதிக்கப்பட்ட சிறுமியைப் பணத்திற்காக விற்பனை செய்த குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள அவளது தாயாரையும் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர், 

அவர்களுக்குப் பிணை வழங்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், சந்தேகநபர் தரப்பின் சமர்ப்பிப்புகளைக் கருத்திற்கொண்டு நீதவான் சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளமை முக்கிய விடயம்.

பொலிஸார் எவ்வாறு இந்த விசாரணையை நடத்தினார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆரம்பக் கட்டத்தில் செய்ய வேண்டிய எந்தவொரு காரியமும் முறையாகச் செய்யப்படவில்லை. அதனால்தான் அதிகாரசபைக்கு ஒரு மனுவைத் தாக்கல் செய்து நீதவானிடம் விடயங்களை விளக்கிக்கூற வேண்டியதாயிற்று. அதன் பின்னரே ஹேமரதன தேரர் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டதுடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டது.”

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில், சந்தேக நபரான ஹேமரதன தேரர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும்போது பொலிஸார் முறைமையற்ற விதத்திலும் பொறுப்பற்ற வகையிலும் செயற்பட்டுள்ளனர் என்பது மிகவும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

 பொலிஸார் மீது செல்வாக்கு பிரயோகிக்கப் பட்டுள்ளதாக  சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதுடன், பொலிஸாரினால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்து, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவியும் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியுமான பிரீதி இனோகா ரணசிங்கவினால் ஒரு வாரத்துக்குள் அனுப்பப்பட்ட இரண்டு கடிதங்களிலும், பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை ஊழியர்கள் மீதும் சந்தேக நபரான தேரர் தனது செல்வாக்கைப் பிரயோகித்துள்ளார் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேரர்  தொடர்பில் பொலிஸார் ஒரு சாதாரண சந்தேக நபரை நடத்தும் விதத்தில் அல்லாமல், ஏதோவொரு விசேடமான முறையில் செயற்பட்டுள்ளனர்  எனத் தெரிவிக்கும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அறிக்கை, பொலிஸாரின் செயற்பாடுகளைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்துள்ளதுடன், அதன் காரணமாகவே இத்தகைய துஷ்பிரயோகச் சம்பவமொன்றின் சந்தேக நபருக்கு பிணை வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலைமையையும் விளக்கியுள்ளது.

 பாதிக்கப்பட்ட சிறுமி குறித்து அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

“மகள் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும்போது, மகளோடு இருப்பதற்கு தருகிறீர்களா என்று தேரர் என்னிடம் கேட்டார்,” எனத் தாய் கூறியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அதேபோன்று சந்தேகநபரான தேரர் அச்சிறுமியை விகாரைக்குள் அழைத்துச் சென்று சிறிது நேரத்திலேயே சிறுமி வெளியே வந்ததாகவும், பிள்ளை முகம் சுளித்தபடி இருந்ததால் தான் அது குறித்துப் பிள்ளையிடம் கேட்டபோது, 

சம்பந்தப்பட்ட தேரர் தனது முகத்தில் முத்தமிட்டதாகப் பிள்ளை கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் சம்பந்தப்பட்ட தேரர் தாய்க்கு ஒரு இலட்சம் ரூபாய் பணம் வழங்கியதாகவும், ‘மகளே, வறுமை காரணமாகத்தான் இந்தப் பணத்தை வாங்குகிறேன்’ என தான் பாதிக்கப்பட்ட பிள்ளையிடம் கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது,” என சந்தேகநபரான தாயின் வாக்குமூலம் தொடர்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

சந்தேகநபரான தேரர் கடந்த வழக்குத் தவணைகள் எவற்றிலுமே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாத நிலையில், அத்தனகல்ல உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான விசாரணைக் குழுவின் அனுராதபுரத்துக்கான மூன்று நாள் விஜயத்தின் பின்னர், அவர் அவசரமாகக் கொழும்புக்கு வந்து நவலோக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 அதன் பின்னர், இந்தத் தேரரைச் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அல்லது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்றுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பலமுறை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட போதிலும் கடந்த வழக்குத் தவணை வரை அது நடக்கவில்லை.


சந்தேகநபரான தேரரின் வைத்திய கட்டில் அறிக்கைளைக் கண்காணித்து அவற்றை இந்த அறிக்கையில் சேர்த்துள்ள அதிகாரசபை, சந்தேகநபருக்கு ‘அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு எவ்வித நோய் நிலைமையும் இல்லை’ எனக் கூறுகிறது.

பொலிஸாரின் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் உரிமைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையான   சட்டத்தரணிகளுக்கும்,  தேரர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமை அதிர்ச்சியளித்துள்ளது.

“ஒரு சட்டத்தரணியாக இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம். வெவ்வேறு நபர்கள் சட்டத்தின் முன்னிலையில் வெவ்வேறு விதமாக நடத்தப்படுகிறார்களா என எனக்குத் தோன்றியது. 

அது அவ்வாறு நடக்குமாயின், இவற்றின் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறது என்றுதானே நாம் நினைக்க வேண்டியுள்ளது? அவ்வாறு சந்தேகப்படுவது நியாயமானதுதானே?” என பாதிக்கப்பட்ட சிறுமியின் உரிமைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி யாலித விஜேசுந்தர தெரிவித்தார்.Politics

தேரரின் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த நீதிமன்ற வளாகத்துக்கு அனுராதபுரம் ருவன்வெலிசாய விகாராதிபதி ஈதலவெடுனுவெவே ஞானதிலக, அபயகிரிய ரஜமகா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் கள்ளஞ்சியே ரதனசிறி, லங்காராம விகாரையின் விகாராதிபதி ரளபனாவே தம்மஜோதி, தூபாராம விகாரையின் விகாராதிபதி கஹல்லே ஞானிந்த மற்றும் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி நுஹேதன்னே பஞ்ஞாநந்த உள்ளிட்ட தேரர்கள் வருகை தந்திருந்தனர். 

விகாராதிபதிகள் பல்லேகம தேரரின் செயலை ஆதரிக்கின்றனரா , அவர்கள் ஏன் நீதிமன்றுக்கு வர வேண்டும் என்ற கேள்வியும் எழுகின்றது. இதே வேளை அட்டமாஸ்தானாதிபதி மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க, தற்போதைய ஜனாதிபதி அநுர உட்பட பல உயர்மட்டத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்த ஒருவர். 

இலங்கைக்கு வருகை தந்த இந்திய பிரதமர் மோடியும் அவரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றிருக்கிறார். எனவே இவ்வாறு பல உயர்மட்ட பிரமுகர்களுடன் தொடர்பிணை பேணி வந்த ஒருவருக்கு எதிராக  நடவடிக்கை எடுப்பதற்கு இந்த அரசாங்கம் பின்னடிக்கின்றதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

-சி.என்.என்-

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!