நாம் தமிழரின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டும் ஜெயாவை ஆதரிக்கும் இந்த முடிவை எடுத்திருப்பதாக பேசியிருக்கிறார் சீமான். 2016-ல் ஆட்சியை பிடித்து அவர் முதலமைச்சராக அமர, அண்ணனுக்கு ‘அறிவார்ந்த பெருமக்கள்’ கொடுத்திருக்கும் ஐடியாவாகவும் இது இருக்கக்கூடும்.

என்ன தான் கராத்தே மாஸ்டராக இருந்தாலும் ஒரு சமயத்தில் ஒரு எதிரியை தான் வீழ்த்த முடியும் என்பதால் விஜயகாந்த், பா.ஜ.க போன்றவர்களை எழுந்திருக்க முடியாமல் வீழ்த்துவதற்கு ஜெயாவை பயன்படுத்த போகிறாராம் அண்ணன்.

வழக்கமாக ஆண்டைகள்தான் அடியாட்களை ஏவுவார்கள். ஆனால் ஒரு அடிமையே ஆண்டையை அதாவது அம்மாவை கையாள் போல பயன்படுத்துகிறார் என்றால் அதை விவேகமென்று பார்க்காமல் தப்பி ஓடும் மான் கராத்தே மாஸ்டர் போல பார்ப்பது பாரிய பிழை.

வேறு கட்சிகளை என்ன செய்வதாக உத்தேசம் என்றால், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அண்ணனை எதிரியாக கருதினாலும் இது போன்ற அல்லு சில்லு கட்சிகளை அவர் எதிரியாக கருதவில்லையாம். அதன் பின்னர் இந்த மே மாதம் முதல் ஒரு ஆண்டுக்கு புலிப்பாய்ச்சல் என்ற வேலைத்திட்டத்தை வைத்து ஒரு ஆண்டு வேலை செய்யவிருக்கிறாராம்.

பின்னர் 2016 தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு முதல்வராக போகிறாராம். பின்னர் பிரதமர், அடுத்து அமெரிக்க ஜனாதிபதி, அப்பால் ஐநா செயலர், பிறகு பிரபஞ்ச பொறுப்பாளர், அண்டத்தின் ஆண்டவர் என ஏணிகளில் ஏறி மண் முதல் விண் வரை பல்வேறு பதவிகளை பிடிக்க அண்ணன் அட்டகாசமான திட்டங்களை வைத்திருக்கிறார். இந்த மெயின் திட்டத்தில் தம்பிகள் பலரும் துணைத்திட்டங்களை அதாவது வார்டு, எம் எல் ஏ, எம்பி, ஐநாவில் கொடி ஏற்றும் வேலை என்று வைத்திருக்கிறார்கள். ஆகவே அண்ணனும், தம்பிகளும் ஒருவரை ஒருவர் இந்த கனவுத் தூக்கத்தில் இருந்து எழுப்புவது சாத்தியமில்லை. அதையும் மீறி எழுப்ப வேண்டும் என்ற கருணை உங்களை தொந்தரவு செய்தால் இன்செப்ஷன் படக்கதை போல கனவுக்குள் ஊடுருவித்தான் மீட்க முடியும்.

யாராவது அண்ணனை தூக்கத்தில் இருந்து எழுப்பிவிட்டால் தேவலை.

இடிந்தகரை போராட்டத் தலைமைக்கு தான் பல மணி நேரம் அரசியல் பாடம் எடுத்ததாக கூறிக்கொள்ளும் அண்ணனுக்கு அரசியல் பாடம் எடுத்த மாமேதை யார், அல்வாக்கே அல்வா கொடுத்த ஆயிரம் வாலா – அறிவுவாலா யார் என்று தெரியாமல் மண்டையே வெடித்துவிடும் போல இருக்கிறது.

திராவிட இயக்கம், திமுக, போலிக் கம்யூனிஸ்டுகள் போன்றவர்களெல்லாம் பல்லாண்டுகளாக ஓடிப் பெற்ற சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம், கவர்ச்சி அரசியல், சவடால் பேச்சு, இன்ன பிற அணியலங்காரங்களை, அண்ணன் மட்டும் தோன்றிய ஓரிரு ஆண்டுகளில் ஒளி வேகத்தில் பெற்று விட்டார் என்பது மலைக்க வைக்கிறது.

தேர்தல் அரசியலும், தமிழினவாதமும் போட்டி போட்டுக் கொண்டு நாம் தமிழர் பார்ட்டியை பஞ்சராக்கி வருகிறது.  காற்றுப் போன இந்த பலூனை கோபுரத்தில் கட்ட நினைக்கும் தம்பிகள் பின்னொரு நாளில் அவர்களது முயற்சி எள்ளி நகையாடப்படும் என்பதறிந்து மனம் திருந்தி வந்தால் ஆறுதலும், தேறுதலும், விடுதலையும் சொல்லித் தர நாங்கள் இருக்கிறோம். முடிவு செய்யுங்கள்!

-    ரவி