news@ilakkiyainfo.com

பிரிவுகள்

சைப்ரஸில் படகு கவிழ்ந்து விபத்து; 07 பேர் உயிரிழப்பு, 23 பேரைக் காணவில்லை

31 Aug, 2026

வடக்கு சைப்ரஸின் கிரேனியா துறைமுகத்திலிருந்து துருக்கி நோக்கிப் பயணித்த சுமார் 270 பயணிகளைக் கொண்ட கட்டுமரப் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 07 பேர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 12.30 மணியளவில் கிரேனியா துறைமுகத்திலிருந்து துருக்கியின் தசுச்சு துறைமுகம் நோக்கிப் புறப்பட்ட ‘ஃபிலோஜெட்’ என்ற தனியாருக்குச் சொந்தமான படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.


துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, கரையிலிருந்து சுமார் 4 கடல் மைல் தொலைவில் படகுக்குள் எதிர்பாராத விதமாக நீர் புக ஆரம்பித்துள்ளது.

இதனை அடுத்து, படகு தலைகீழாகக் கவிழ்ந்த நிலையில், உயிர்காப்பு உடைகளை அணிந்திருந்த பயணிகள் சிலர் கவிழ்ந்த படகின் மேற்பகுதியைப் பிடித்துக்கொண்டு உயிருக்கு போராடியுள்ளனர்.


இதுவரை 237 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், 07 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 23 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


துருக்கிய சைப்ரஸ் கடலோரக் காவல் படையின் 04 படகுகள், ஒரு சிவில் பயணிகள் படகு, துருக்கியின் 5 கடலோரக் காவல் படகுகள் மற்றும் 2 ஹெலிகொப்டர்கள் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.


“காணாமல்போன 23 பேரையும் தேடும் பணி தீவிரமாக இடம்பெற்று வருகிறது. படகின் உட்பகுதியில் பயணிகள் யாரேனும் சிக்கியிருந்தால் அவர்களை மீட்பது தற்போது எளிதானதல்ல. இருப்பினும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அவர்களை மீட்க முயற்சித்து வருகிறோம்” என துருக்கிய சைப்ரஸ் தலைவர் துபான் எர்ஹுர்மான் தெரிவித்துள்ளார்.


கடந்த சனிக்கிழமை சைப்ரஸ் பகுதியில் கடுமையான புயல் வீசியிருந்த போதிலும், படகு புறப்பட்ட ஞாயிற்றுக்கிழமை கடற்பயணத்துக்கு உகந்த வானிலையே நிலவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படகு கவிழ்ந்ததற்கான சரியான காரணம் குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!