ஜெனீவாவுக்கு அப்பால் : இந்தியாவை அச்சுறுத்தும் அமெரிக்க தீர்மானம் (கட்டுரை)
"இறுதிப் போரில், விடுதலைப் புலிகளின் தலைவர்களை காப்பாற்றுவதற்கு, அமெரிக்கா முயற்சி எடுத்திருந்தது. அதற்காகவே ஒரு அமெரிக்க போர்க் கப்பல், முல்லைத் தீவு கடலுக்கு அருகாமையில் நிறுத்தப் பட்டிருந்தது.
இலங்கையானது, இந்தியாவின் செல்வாக்குக்கு உட்பட்ட நாடு. அங்கு அமெரிக்க இராணுவத் தலையீடு ஏற்படுவதை, இந்தியா விரும்பவில்லை." இதனை ஹரிஹரன், தந்தி டிவி பேட்டியில் தெரிவித்தார்.
அதாவது, இலங்கைக் கடற்கரையில், அமெரிக்கக் மரைன் படையினர் வந்திறங்குவதற்கு முன்னர், புலிகளின் கதையை முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவுக்கு ஏற்பட்டது.
அன்று இந்தியா, சிறிலங்காப் படைகளுடன் ஒத்துழைத்து போரை முடிவுக்கு கொண்டு வந்திரா விட்டால், அமெரிக்கா தலையிட்டு, புலிகளின் தலைவர்களை தப்ப வைத்திருப்பார்கள்.
இந்தத் தகவலை,ஏற்கனவே நோர்வேயின் மத்தியஸ்தரான எரிக் சூல்ஹைமும் உறுதிப் படுத்தி இருந்தார். புலிகளின் தலைமையை சரணடைய வைப்பதற்கு, கேபி மூலம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
பல தடவைகள், எரிக் சூல்ஹைம் டெல்லி சென்று, பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை பற்றி கூற வேண்டி இருந்தது. ஆனால், அமெரிக்க கப்பல் விவகாரம், இந்தியாவை கலந்தாலோசிக்காமல் எடுக்கப் பட்ட முடிவாகவே தெரிகின்றது.
தந்தி தொலைக்காட்சி பேட்டியில், ஹரிஹரன் சொல்லாமல் விட்ட தகவல் இது. அன்று, அமெரிக்கப் படைகள் முல்லைத்தீவு கடற்பகுதியில் வந்திறங்கி இருந்தால், சிலநேரம் அங்கேயே முகாமிட்டு தங்கி விட்டிருப்பார்கள்.அது நடந்திருக்குமா, இல்லையா என்பதை விட, இலங்கையில் அமெரிக்கப் படைகள் நிலை கொள்வது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று, இந்திய அரசு நம்புகிறது.
மேற்குறிப்பிட்ட பூகோள அரசியல் பின்னணியை வைத்துக் கொண்டே, ஜெனீவா தீர்மானங்களை ஆராய வேண்டியுள்ளது. இந்தியா அமெரிக்காவுடன் சிறந்த இராஜதந்திர உறவுகளை கொண்டிருக்கலாம்.பொருளாதாரத்திலும் பல விட்டுக் கொடுப்புகளை செய்திருக்கலாம். ஆயினும், அமெரிக்காவிடம் இருந்தே இந்தியாவுக்கு ஆபத்து வரும் என்று, இந்திய அரசு மட்டத்தில் நம்புகிறார்கள். அதற்கு சிறந்த உதாரணம்: ரஷ்யா.
தொன்னூறுகளில் சோவியத் யூனியன் வீழ்ச்சி அடைந்து, ரஷ்யாவில் முதலாளித்துவ மீட்சி ஏற்பட்டது. அப்போது, ரஷ்ய அரசும், மக்களும், அமெரிக்காவை நட்பு சக்தியாகப் பார்த்தார்கள். அரசியல், பொருளாதாரம், எல்லாவற்றிலும் அமெரிக்க உதாரணத்தை பின்பற்றினார்கள்.பனிப்போர் முடிந்து விட்டது என்றும், அமெரிக்காவும், ரஷ்யாவும் நெருக்கமான நண்பர்கள் என்று பலர் நம்பினார்கள். ஆனால், ஒரு தசாப்தத்தின் பின்னர், அந்த நம்பிக்கை உடைந்து போனது.
தற்போது, ரஷ்யாவும், மேற்குலகமும், மீண்டும் ஒரு பனிப் போருக்குள் மாட்டிக் கொண்டுள்ளன. அதே வரலாறு இந்தியாவிலும் நடக்கின்றது.
உக்ரைன் பிரச்சினையில், ரஷ்யா மேற்குலகுடன் விட்டுக் கொடாத தன்மையுடன் நடந்து கொள்வதற்கு காரணம் உள்ளது. "உக்ரைன் பற்றி நீங்கள் என்ன பேச விரும்பினாலும், மொஸ்கோவுக்கு வாருங்கள்" என்று ரஷ்யா கூறுகின்றது.
பிராந்திய வல்லரசான ரஷ்யா, உக்ரைன் தனது செல்வாக்குக்கு உட்பட்ட நாடு என்று கருதுகின்றது. மேற்குலகம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. அதே போன்று தான், இலங்கை தனது செல்வாக்குக்கு உட்பட்ட நாடு, என்று இந்தியா கருதுகின்றது.
"இலங்கை பற்றி நீங்கள் என்ன பேச விரும்பினாலும் டெல்லிக்கு வாருங்கள்." என்று கூறுகின்றது. ஜெனீவாவில், இலங்கை தொடர்பாக இந்தியாவுக்கும், மேற்குலகிற்கும் இடையில் ஒரு பலப் பரீட்சை நடக்கின்றது.
ஜெனீவாவில், இந்தியா இலங்கைக்கு சார்பாக நடந்து கொள்ளக் காரணம் என்ன? ஒவ்வொரு வருடமும், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் உள்நோக்கம் என்ன? மனித உரிமைகள், போர்க்குற்றங்கள் பற்றி சிலாகித்துப் பேசப் பட்டாலும், அமெரிக்கா அவற்றை ஒரு சாட்டாகவே பயன்படுத்தி வருவது தெரிந்த விடயம். "அமெரிக்கா, ஈழத் தமிழர்கள் மேல் கொண்ட கரிசனை காரணமாக, சிறிலங்கா அரசை தண்டிக்க விரும்புகிறது..." என்று நம்பும் தமிழர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால், தமிழர்கள் நினைப்பது போல, அமெரிக்க அரசாங்கத்தில் உள்ளவர்களும் நினைக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை.அமெரிக்கா எப்போதும் தனது நலன் சார்ந்தே சிந்தித்து, செயல்பட்டு வருகின்றது. ஆகவே, ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம், ஈழத் தமிழருக்கு ஆதரவானது என்பது எந்தளவுக்கு உண்மை இல்லையோ, சிறிலங்கா அரசை தண்டிப்பதற்கானது என்பதும் உண்மையாக இருக்க முடியாது.
ஒரு சுண்டைக்காய் நாடான இலங்கையை அடி பணிய வைப்பது, அமெரிக்காவுக்கு இலகுவான காரியம். அதற்கு இந்த ஐ.நா.மன்றம், ஜெனீவா எதுவும் தேவையில்லை. அண்மையில், உக்ரைன் பிரச்சினையில் சில ரஷ்ய அரசியல்வாதிகள் மீது பொருளாதாரத் தடைகள் கொண்டு வரப் பட்டன. அதெல்லாம், ஐ.நா. வை கேட்காமலே நடைமுறைப் படுத்தப் பட்டன.
அமெரிக்கா நினைத்திருந்தால், போர்க்குற்றம், இனப்படுகொலை குற்றச்சாட்டை சுமத்தி, இலங்கையை ஆளும் ராஜபக்ச கும்பலை சேர்ந்தவர்களின் வெளிநாட்டு சொத்துக்களை, வங்கிக் கணக்குகளை முடக்கி இருக்க முடியும்.
அவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய விடாமல் தடுத்திருக்க முடியும். அது எதையும் அமெரிக்கா செய்யவில்லை. "இனிமேல் ஒரு ஐ.நா. விசாரணைக் குழு நியமித்து, அது சொன்ன பிறகு தான், அமெரிக்கா இலங்கை மீது தடைகளை விதிக்கும்" என்பது நம்பத் தகுந்தது அல்ல.
ஜெனீவாவில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம், இலங்கை அரசு மீது அழுத்தம் கொடுப்பதற்கு மட்டுமே பயன்படும். என்ன நோக்கத்திற்காக அந்த அழுத்தம் கொடுக்கப் படுகின்றது? என்பது தான் கேள்வி. "தமிழீழம் கிடைக்கும், தமிழர்களுக்கு நீதி கிடைக்கும்..." என்று கூறி தமிழ் மக்களை நம்ப வைக்கலாம். ஆனால், "ஒரு சிறுபான்மை இன மக்கள் நலன் சார்ந்து அமெரிக்கா செயற்படுகின்றது" என்று, இந்தியாவிலும், பிற உலக நாடுகளிலும் நம்புவோர் மிகக் குறைவு. ஆகவே, இந்திய அரசும் அதனை நம்பப் போவதில்லை. அப்படியானால் வேறொரு காரணம் இருக்க வேண்டும். என்ன அது? இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள டியேகோ கார்சியா தீவில், அமெரிக்க இராணுவத் தளம் அமைந்துள்ளது. முன்பு பிரிட்டனின் காலனியாக இருந்த குட்டித் தீவில் வாழ்ந்த மக்கள் வெளியேற்றப் பட்டு, அந்த இடம் அமெரிக்க படையினரிடம் குத்தகைக்கு விடப் பட்டது. அந்த ஒப்பந்தக் காலம் 2016 ம் ஆண்டு முடிவடைகின்றது. ஒப்பந்தம் புதுப்பிப்பதற்கு சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. டியேகோ கார்சியா தீவின் பூர்வ குடிகள், பலவந்தமாக வெளியேற்றப் பட்டு, பிரிட்டனிலும், மொரிசியஸ் தீவிலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தமது சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான அனுமதி மறுக்கப் படுகின்றது.இது தொடர்பாக, கடந்த சில வருடங்களாக வழக்கு நடந்து வருகின்றது. தாயகம் திரும்ப விரும்பும் டியேகோ கார்சியா மக்கள், பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குகள் யாவும், அரசாங்கத்தின் தலையீடு காரணமாக நீர்த்துப் போகச் செய்யப் பட்டன.
ஆயினும், டியேகோ கார்சியா மக்கள் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கின்றனர். 2016 ம் ஆண்டிலிருந்து, புதிய ஒப்பந்தம் போடப் படுமானால், அது பெரியதொரு கலவரத்திற்கு வழி வகுக்கும்.
ஆயிரம் கடல் மைல் தொலைவில் இருந்தாலும், டியேகோ கார்சியா தனக்கு சொந்தமாக வேண்டும் என்று, மொரீசியஸ் உரிமை கோரி வருகின்றது.
அதனால், 2016 ம் ஆண்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப் படுவதை, மொரிசியஸ் நாடும் எதிர்க்கும் என்பது திண்ணம். டியேகோ கார்சியா தீவை தன்னிடம் ஒப்படைக்குமாறு, மொரிசியஸ் பிரிட்டனுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.
இலங்கையில் நடந்த பொதுநல வாய நாடுகளின் உச்சி மகாநாட்டினை மொரிசியஸ் பகிஷ்கரித்ததமைக்கு, அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
மொரிசியஸ் நாட்டில், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்பதும், அவர்கள் உணர்வு பூர்வமாக ஈழத் தமிழர்களை ஆதரிப்பதும் உண்மை தான்.ஆனால், பிரிட்டன் மீது அழுத்தம் கொடுப்பதற்கு சாதகமாக, மொரிசியஸ் அரசு தமிழ் தேசியவாதிகளை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புண்டு. மொரிசியஸ் அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று, பிரிட்டனும் எதிர்பார்க்கலாம்.
இதற்கிடையே, அமெரிக்கா இராணுவ தளம் அமைப்பதற்காக, மாலைதீவை அணுகியது. ஆனால், "ஒரு முஸ்லிம் நாடான" மாலைதீவு, அமெரிக்க இராணுவ தளத்தை வைத்திருப்பதால் உண்டாகும் சிக்கல்களை கவனத்தில் எடுத்து, மறுப்புக் கூறி விட்டது. ஆகவே, அமெரிக்காவுக்கு இருக்கும் ஒரேயொரு தெரிவு, இலங்கைத் தீவு மட்டுமே. ஏற்கனவே, டியேகோ கார்சியா தீவில் சுமார் ஆயிரம் அமெரிக்க படையினர் நிறுத்தப் பட்டுள்ளனர். வெளியுலகத் தொடர்பற்ற டியேகோ கார்சியா தீவுக்கு, அனுமதியில்லாமல் யாரும் செல்ல முடியாது. அங்குள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் வேலை செய்வதற்கென, இரண்டாயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டுப் பணியாட்கள் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.அதிலே குறைந்தது அரை வாசிப் பேராவது இலங்கைப் பிரஜைகள் என்பது குறிப்பிடத் தக்கது. (இலங்கையரை தவிர, பிலிப்பைன்ஸ் நாட்டவரும் வேலை செய்கின்றனர். சில பிரிட்டிஷ் படையினரும் அங்கே உள்ளனர். அவர்களைத் தவிர வேறெந்த நாட்டினரும், டியேகோ கார்சியா தீவுக்கு செல்ல முடியாது.)
இலங்கையில் அமெரிக்க தளம் அமைப்பதால், அமெரிக்காவுக்கு வேறு பல ஆதாயங்களும் கிடைக்கலாம். இலங்கை, இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்திருப்பது மட்டுமல்ல, சிறந்த பொருளாதாரக் கட்டுமான வசதி கொண்டது. விமான நிலையம், துறைமுக வசதிகளும் உள்ளன. மேலும், பெரும்பான்மையான இலங்கை மக்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள் உட்பட, அமெரிக்காவுக்கு ஆதரவானவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. அது இந்தியாவுக்கு மிக அண்மையில் அமைந்துள்ளது. அதனால், அமெரிக்கா இந்தியாவை கண்காணிப்பது இலகுவாகி விடும். (முப்பது வருடங்களுக்கு முன்னர், இலங்கையில் வொயிஸ் ஒப் அமெரிக்கா தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதை, இந்தியா கடுமையாக எதிர்த்தமை இங்கே நினைவுகூரத் தக்கது.) நடைமுறை பூகோள அரசியல் களத்தில் ஆசியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ தளம் அவசியமானது. சிறிலங்காவில் ராஜபக்ச அரசு, ஜெனீவா தீர்மானங்கள் குறித்து மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதில் இருந்தே, அது எந்தளவு தூரம் அமெரிக்காவுக்கு நெருக்கமாகச் செல்கின்றது என்பது தெரிய வருகின்றது. இந்தியாவின் நெருக்குவாரம் காரணமாக, இலங்கையில் அமெரிக்க தளம் அமைக்கும் திட்டம் பின்போடப் பட்டு வருகின்றது. ஆனால், இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்னர், அது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப் பட வேண்டும். அநேகமாக, அடுத்த வருடம் (2015), "இலங்கையில் அமெரிக்கத் தளம் அமைக்கப் படுமா, இல்லையா?" என்ற கேள்விக்கு விடை கிடைத்து விடும். -கலையரசன்-
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!