news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஜே.ஆரை போன்று சர்வஜன வாக்கெடுப்பு மூலம் பாராளுமன்ற ஆயுளை நீடிக்க விரும்புகிறாரா அநுர?

30 Aug, 2026
1982 ஆம் ஆண்டு பாராளுமன்ற ஆயுட் காலத்தை நீடிப்பதற்கு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன தான் கொண்டு வந்த அரசியலமைப்பைப் பயன்படுத்தி சர்வஜன வாக்கெடுப்புக்குச் சென்றார். 

அதன் மூலம் பாராளுமன்றத்தை ஆறு வருடங்களுக்கு நீடித்துக் கொண்டார். இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான ஜேர்.ஆர், தனக்கேற்றவாறு 1978 ஆம் ஆண்டு இரண்டாவது அரசியலமைப்பை உருவாக்கினார். 

அதன் மூலம் சர்வ அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதியானார். இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக வேண்டும் என்ற அதிகாரத்தில் அப்போதைய சுதந்திரக் கட்சித் தலைவர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையையும் பறித்தார். 

சிறிமா பண்டாரநாயக்கவின் குடியுரிமையைப் பறித்ததால், 1982 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட பொருத்தமான வேட்பாளர்கள் எவரும் இருக்கவில்லை. இதனால் சுதந்திர கட்சி சார்பில் போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேகடுவையை அவர் எளிதாகத் தோற்கடித்து இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியானார்.  

இப்போது ஜே.ஆரின் பாணியை பயன்படுத்தி தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற ஆட்சி காலத்தை அடுத்த ஐந்து வருடங்களுக்கு நீடிப்பதற்கு ஜனாதிபதி அநுர குமார திட்டமிடுகின்றாரா என்பது தற்போதைய அரசியல் வட்டாரத்தில் முக்கிய கேள்வியாக உள்ளது. 

ஏனென்றால்   22 ஆவது திருத்தச் சட்டம் குறித்து சர்வஜன  வாக்கெடுப்பை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் மற்றும் சில சிவில் சமூக அமைப்புகள் கோரிக்கை முன் வைத்திருப்பதானது எமது நாட்டில் நாற்பத்து நான்கு  வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு மக்கள்   வாக்கெடுப்பு இடம்பெறுமா என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

22 ஆம்   திருத்தச்சட்டமானது நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதிப்படையச் செய்யும் என்பதால் அவற்றை நடைமுறைப்படுத்த பாராளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை மாத்திரம் போதாது என்றும் மக்களின் அங்கீகாரத்துடன் கூடிய சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என சட்டத்தரணிகள் சங்கம் தனது தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது. 

அரசியலமைப்பு உட்பட சில முக்கியமான  விவகாரங்களில் தெளிவைப் பெறுவதற்கு உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானங்கள் பெறப்படுவது வழமையானதொன்று. அவை    பாராளுமன்ற சபாநாயகரிடம் வழங்கப்படும் போது அதை அவர் அதை சபைக்கு அறிவிப்பார். சில சரத்துகளை நிறைவேற்ற சிறப்புப் பெரும்பான்மை அல்லது மக்கள் கருத்துக்கணிப்பு தேவை போன்ற விடயங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.  

1982 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் முன்னெடுக்கப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பானது ஒரு ஜனநாயக அச்சுறுத்தல் என இன்றும் வர்ணிக்கப்படுகின்றது. 

ஜே. ஆர்.ஜெயவர்தன


1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் ஜே. ஆர்.ஜெயவர்தன  தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி 168 தொகுதிகளில் 140 இடங்களை கைப்பற்றி 6/5 பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. அதே போன்று தற்போது தேசிய மக்கள் சக்தியானது மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கும் மேலதிகமாக 159 ஆசனங்களை பாராளுமன்றில் தக்க வைத்துள்ளது. அநுரகுமார திசாநாயக்க ஏன் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என்ற கேள்வி எழலாம்.

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற சகல விதமான ஊழல் மோசடி நடவடிக்கைகள் குறித்து அதீத கவனமெடுத்து ஆட்சிய. நகர்த்தும் அநுர, பல சிரேஷ்ட அமைச்சர்கள், அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார். 

முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த, ரம்புக்வெல, உட்பட பலருக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு அவர்களில் சிலர் சிறைத்தண்டனையை அனுபவிக்கின்றனர். 

சிலர் பிணையில் வெளியே வந்துள்ளனர். சிரேஷ்ட அரசியல்வாதிகள் மாத்திரமின்றி முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராகவும் அநுர அரசு தனது நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. 

இதில் ரணில், கோட்டாபய ஆகியோருக்கு எதிராக வழக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனவே நாட்டை பொருளாதார ரீதியாக பின்னடையச் செய்த முன்னாள் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் பாதாள உலக கோஷ்டியினருக்கும் எதிராகவும் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஐந்து வருடங்கள் போதாது என அநுர நினைத்திருக்கலாம்.

மேலும் ஜனாதிபதி அநுரவின் ஊழலுக்கு எதிரான ஆட்சியை பெரும்பாலான மக்கள் வரவேற்றுள்ளனர். 22 ஆவது திருத்தச்சட்டத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படுமாயின் அதற்கு மக்கள் தமது ஆதரவை நிச்சயமாக வழங்குவர் என்றே எதிர்வு கூறப்படுகின்றது.    

நிறைவேற்று அதிகார முறையைக் கொண்டு வந்த ஜே.ஆருக்கு நிர்வாக அதிகாரங்கள் இருந்த போதிலும் பொருளாதார முடிவுகள் குறித்த ஒப்புதல்கள் மற்றும் வரவு செலவு திட்டம் போன்ற அம்சங்களுக்கு பாராளுமன்றத்தின் ஆதரவு தேவைப்பட்டது. அதே போன்று நாட்டின் அதிகாரமிக்க சபையாக விளங்கும் பாராளுமன்றத்தை தனது தனது ஆட்சியதிகாரத்தின் கீழ் வைத்துக்கொள்ள அநுர விரும்புகிறார் எனலாம்.    

 ஜே. ஆர் தனது அதிகாரத்தை நிலைநாட்ட மக்கள் வாக்கெடுப்பை வலிந்து மேற்கொண்டார். ஆனால் அதற்கு மக்களின் ஆதரவு இருந்தது. அவர் எதிர்ப்பார்த்தது போன்றே பாராளுமன்ற ஆயுட் காலத்தை நீடிக்க ஜே.ஆருக்கு மக்கள் தமது ஆணையை வழங்கினர். 

தற்போதைய அரசாங்கமும் ஏதாவதொரு வகையில் தனது அதிகாரத்தை நிலைநாட்ட   பாராளுமன்றத்தின் ஊடாக தனது மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி 22 ஆவது திருத்தத்தை கொண்டு வர முயற்சிக்கின்றது என்பது எதிர்த்தரப்பினரின் கவலை. 

மக்களின் ஆணை இருக்கின்றது என்பதற்காக ஜனநாயக பண்புகளை பலவீனப்படுத்தும் பல முடிவுகளை கடந்த ஆட்சியாளர்கள் எடுத்திருந்தமையை நாடு அறியும். மகிந்த மற்றும் கோட்டாபய ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட 18 மற்றும் 20 ஆவது திருத்தச்சட்டங்கள் என்பன இதற்கு சாட்சி.

ஷிராணி பண்டாரநாய



 22 ஆவது திருத்தச்சட்டம் நீதித்துறை இறையாண்மையை பாதிக்கின்றது என்பது இங்கு எதிர்த்தரப்பினரால் முன் வைக்கப்படும் ஓர் விவாதமாகும். இலங்கையின் 43 ஆவது பிரதம நீதியரசராக விளங்கிய ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக 2013 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் பாராளுமன்றில் குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்டு அவரை பதவி நீக்கியமை இலங்கை நீதித்துறை வரலாற்றில் ஒரு கறை படிந்த சம்பவமாக விளங்குகின்றது.  

இவருக்கு எதிரான மகிந்த அரசின் நடவடிக்கைகளை அப்போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடுமையாக எதிர்த்தது. எதிர்க்கட்சிகள், மனித உரிமை அமைப்புகளும் தமது கண்டனங்களை முன் வைத்தன. ஆனால் இங்கு பாராளுமன்றத்தின் மியூயுயர் அதிகாரமே வெற்றி பெற்றது. அதை எவ்வாறு மகிந்த பயன்படுத்தினார் என்பது அவரது அதிகாரத்துக்குட்பட்டது. 

பல  சந்தர்ப்பங்களில்  கடந்த ஆட்சியாளர்கள் பாராளுமன்றத்தின் அதிகாரத்தையே உச்ச அளவில் பயன்படுத்தியுள்ளனர். 2022  ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவை 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்தவர்கள் மக்களல்லர்….பாராளுமன்ற உறுப்பினர்களே.   பாராளுமன்றத்தின் உயரிய அதிகாரம் வெளிப்பட்ட சிறந்ததொரு வரலாற்று சம்பவம் அது. 

 இத்திருத்தச்சட்டம் குறித்து உயர்நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றமை குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறியிருக்கும் விடயங்கள் முக்கியமானவை.   ‘நீதிமன்றத்தின் அதிகாரங்கள் குறித்தே கொண்டுவரப்படும் ஒரு திருத்தத்தை ஆராய்வதற்கு உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை அல்லது அதிகாரம் இருக்கக் கூடாது என்று வாதிட்டவர்களே, தற்போது அதே உயர்நீதிமன்றத்தை நாடி மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர். 

நீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெற்றால் அதற்கு ஆதரவாகவே மக்கள் வாக்களிப்பர் ‘ என்று கூறியுள்ள அவர்  ‘தேங்கிக் கிடக்கும் வழக்குகளால் இலட்சக்கணக்கான மக்கள் கடும் மன உளைச்சலில் இருக்கின்றனர். 

நீதிமன்ற வழக்குகளை விரைவுபடுத்த வேண்டுமாயின், நீதிபதிகளின் சேவைக்காலத்தை மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை நீடிக்க வேண்டும்.நீதிபதிகளின் சேவைக்காலத்தை நீடிப்பதன் மூலம் வழக்குகள் விரைந்து முடிவுக்கு வரும் என்பதால், பொதுமக்கள் இந்தத் திருத்தத்துக்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள்’ எனக் கூறியுள்ளார்.   

இத்திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற பாராளுமன்ற பெரும்பான்மையோடு பொதுசன அபிப்ராயமும் அவசியம் என்பதே பிரதான கோரிக்கையாகும். பாராளுமன்றத்தில்   மூன்றிலிரண்டு பெரும்பான்மை இருப்பதால் அது பற்றி அரசாங்கத்துக்கு கவலையில்லை. 

சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என்றால் அதற்கும் அரசாங்கம் தயாராக இருப்பதாகவே தெரிகின்றது. ஜே.ஆரின் பாணியில் அடுத்த பொதுத் தேர்தலை நடத்தாமல், பாராளுமன்றத்தின் ஆயுட் காலத்தை நீட்டிப்பதற்கு மீண்டும் ஒரு சர்வஜன வாக்கெடுப்புக்கு நடப்பு அரசாங்கம் செல்வதற்கான ஒரு அடித்தளத்தை இட இது அரசாங்கத்துக்கு ஒரு வாய்ப்பாக மாறிவிடக் கூடிய சந்தர்ப்பங்களும் அதிகம். 

எனவே 22 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற   சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் தனது வியாக்கியானத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதை ஜனாதிபதி அநுரகுமார விரும்பியிருப்பார் என்று கூறலாம். இதை அடிப்படையாகக் கொண்டு மக்கள் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தாமலேயே   பாராளுமன்ற ஆட்சியை  மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடித்துக் கொள்வதற்கும் மக்கள் ஆணையைப் பெறும் முயற்சிகளில் ஜனாதிபதி அநுர இறங்குவாரா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

சி.சி.என்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!