news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஜே.வி.பியின் 1971 ஏப்ரல் ஆயுதக் கிளர்ச்சி: ஒரு மீள் பார்வை- (பகுதி-2)

06 Aug, 2026
முன்னைய கட்டுரையில் 1970 பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் அமைந்த ‘மக்கள் முன்னணி’ அரசாங்கத்தை ஒரு வருட காலத்துக்குள்ளாகவே ஆயுதக் கிளர்ச்சி மூலம் தூக்கியெறிய வேண்டிய தேவை ஏன் ஜே.வி.பி. இயக்கத்துக்கு ஏற்பட்டது? என்ற நியாயமான கேள்வியை எழுப்பியிருந்தேன்.

இன்றுவரை அந்தக் கேள்வி விடை கிடைக்காமல் தொடர்கிறது.

முக்கியமாக, அந்தக் காலகட்டத்தில் ஜே.வி.பி. இயக்கம் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றக்கூடிய அளவுக்கு ஆள்பலத்தையும் ஆயுத பலத்தையும் கொண்டிருக்கவில்லை. இருந்தும் ஜே.வி.பி. தற்கொலைக்கொப்பான அந்த முயற்சியில் இறங்கியது. அதனால் பாரிய அழிவுகளையும் சந்தித்தது.


ரோகண விஜேவீர

ஜே.வி.பியின் அந்த முயற்சிக்கு அதன் முதிர்ச்சியற்ற சிறுபிள்ளைத்தனமான சிந்தனையா அல்லது வெளிச் சக்திகள் சிலவற்றின் தூண்டுதலா காரணம் என்ற சந்தேகம் இன்றுவரை தொடர்கிறது. ஆனால், ஜே.வி.பியின் அன்றைய கால நிலைமைகளையும், அதன் பிற்கால செயற்பாடுகளையும் ஆராய்ந்த சில ஆய்வாளர்கள், ஜே.வி.பி. அன்றும் இன்றும் உள்நோக்கம் கொண்ட சில வெளிச்சக்திகளால் இயக்கப்பட்டு வருகின்றது என்றே கூறுகின்றனர்.

ஜே.வி.பி. துலைமை தனது ஆயுதக்கிளர்ச்சிக்கு 1971 ஏப்ரல் 5ஆம் திகதியை முன்கூட்டியே தீர்மானித்திருந்ததா என்பது இன்றுவரை தெளிவில்லாமல் இருக்கின்றது. 

ஆனால், சிலரின் கருத்துப்படி, ஜே.வி.பியின் அன்றைய தலைவர் ரோகண விஜேவீர, கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு ஏப்ரல் 4ஆம் திகதி கொழும்பு திரும்புகையில் வெள்ளவாயா என்ற இடத்தில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டத் தலைமை அவசரம் அவசரமாக ஏப்ரல் 5ஆம் திகதி தாக்குதலை ஆரம்பித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தம்மிடமிருந்த பழைய ரகமான (சொட் கன்) துப்பாக்கிகளைக் கொண்டு கிராமப்புறங்களில் இருந்த பொலிஸ் நிலையங்களைத் தாக்கி அவற்றைக் கைப்பற்றிய ஜே.வி.பியினர், சில பொலிஸ் நிலையங்களை ஒரு வாரம் வரை கூட தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

இருப்பினும், அப்பொழுது பொலிஸ் படையின் எண்ணிக்கை 6,000 வரை இருந்ததாலும், அவர்களிடம் நவீன ரக ரைபிள் ஆயுதங்கள் இருந்ததாலும், அவர்கள் அந்தப் பொலிஸ் நிலையங்களின் கட்டுப்பாட்டைக் மீளவும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், அதில் ஈடுபட்ட சில ஜே.வி.பியினரைக் கொன்றும் சிலரைக் கைது செய்தும் இருந்தனர்.

ஜே.வி.பி. ஆயுதக் கிளர்ச்சி மூலம் இலங்கையின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, தற்போது நடைமுறையில் உள்ள முதலாளித்துவ அதிகார அமைப்பைத் தூக்கி எறிந்து, அதன் இடத்தில் ஒரு சோசலிச அரசை உருவாக்கப்போவதாக எப்பொழுதும் கூறி வந்துள்ளது.



அப்படியான ஒரு முயற்சியைச் செய்வதானால், அந்த இயக்கம் முழு நாட்டையும் கைப்பற்றும் அளவுக்குப் பலம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், ஜே.வி.பி. கிராமப்புறங்களில் சில பொலிஸ் நிலையங்களைத் தாக்கியதே தவிர, தலைநகரான கொழும்பைக் கைப்பற்றும் பலமோ, திட்டமோ ஜே.வி.பியிடம் இருந்ததாகத் தெரியவில்லை.

பிற்காலத்தில் இதுபற்றி ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த ஜே.வி.பி. தலைவர் ரோகண விஜேவீர, கொழும்பை கைப்பற்றும் பொறுப்பை இராணுவத்தில் உள்ள சில பிரிவினரிடம் தாம் ஒப்படைத்திருந்ததாகவும், ஆனால் அவர்கள் அதைச் செய்யத் தவறிவிட்டனர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இங்கே கேள்வி என்னவென்றால், ஒரு புரட்சிகர சோசலிச இயக்கம் தமது நோக்கத்துக்கு பிற்போக்கு அரச இராணுவம் உதவும் என எவ்வாறு நம்பியிருந்தது என்பதாகும்.

அது ஒருபுறமிருக்க, ஜே.வி.பி. தனது கிளர்ச்சி நடவடிக்கைக்கு இலங்கையின் சிறுபான்மை தேசிய இனத்தவர்களான வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களையோ, மலையக தமிழ் தோட்டப் பாட்டாளி மக்களையோ அணிதிரட்டி இருக்கவும் இல்லை. அது மட்டுமில்லாமல், சிங்கள மக்கள் மத்தியில் இருந்த அமைப்பு ரீதியில் திரண்டிருந்த தொழிலாளி வர்க்கத்தையும் இணைத்திருக்கவும் இல்லை.

வெறுமனே இளைஞர்களைக் கொண்டு இலங்கையின் புரட்சியை நடத்தி முடிக்கலாம் என ஜே.வி.பி. தலைமை எண்ணியிருந்தது போலத் தெரிகிறது. 

இளைஞர்களுக்கு வரலாற்று நிகழ்வுகளில் ஒரு முக்கிய பாத்திரம் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஒரு வர்க்க சமுதாயத்தில் இளைஞர்கள் என்பவர்கள் ஒரு தனி வர்க்கமல்ல, அவர்கள் பல்வேறு வர்க்கங்களின் அங்கத்தவர்கள் என்பதை ஜே.வி.பி. தலைமை உணரத் தவறிவிட்டது.

இந்த நிலைமைகளை வைத்துப் பார்க்கையில், இலங்கையில் அப்போது பதவியில் இருந்த சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசாங்கத்தைத் தூக்கி எறிவதற்கு இலங்கையின் உள்நாட்டு பிற்போக்கு சக்திகளும், வெளிநாட்டு ஏகாதிபத்திய சக்திகளும் இணைந்து ஜே.வி.பியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளனர் என வலுவான சந்தேகம் எழுகின்றது.

ஜே.வி.பியை அப்போதைய இலங்கை அரசைத் தூக்கி எறிவதற்குப் பயன்படுத்தியதில் வெளிநாட்டுச் சக்திகளின் பங்களிப்பு குறித்து மிகவும் நமபத்தகுந்த ஆதாரங்கள் அதிகம் கிடைக்காவிடினும், உள்நாட்டு பிற்போக்கு சக்திகளின் – குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் – பங்களிப்பு குறித்து சில நம்பிக்கையான ஆதாரங்கள் இருக்கின்றன. அது பற்றி இக்கட்டுரையின் அடுத்த தொடரில் பார்ப்போம்.

(கட்டுரை தொடரும்)

சுப்பராஜன்

ஜே.வி.பியின் 1971 ஏப்ரல் ஆயுதக் கிளர்ச்சி: ஒரு மீள் பார்வை- (பகுதி-1)


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!