news@ilakkiyainfo.com

பிரிவுகள்

திறைசேரி நிதி மோசடி: அரச நிர்வாக முரண்பாடுகளால் உண்மைகள் மறைக்கப்படுகின்றவா?

15 May, 2026

கடந்த வாரம், ‘திறைசேரி மோசடி: கசப்பான பாடம்’ வெளியான பத்தியின் தொடர்ச்சியாக, குறித்த மோசடியில் காணப்படுகின்ற முரண்பாடான நிர்வாக முரண்பாடுகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் தற்போது உண்மைகள் மூடிமறைக்கப்படுகின்றனவா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான காரணங்களை இந்தப் பத்தியில் ஆராயலாம்.

இலங்கையின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்திலிருந்து ஆஸ்திரேலிய கடன் வழங்குநர் நிறுவனத்திற்குச் செலுத்தப்பட வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள், ஒரு மர்மமான முறையில் மூன்றாம் தரப்பு போலி கணக்கிற்குத் திசைதிருப்பப்பட்ட விவகாரம், நாட்டின் நிதி நிர்வாகத்தில் நிலவும் பாரிய முரண்பாடுகளை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. 

இந்தச் சம்பவம் வெறும் இணையத் திருட்டு என்பதையும் கடந்து, அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களில் நிலவும் பொறுப்புக்கூறல் குறைபாடுகள், முரண்பாடான அறிக்கைகள் மற்றும் மர்மமான உயிரிழப்புகள் ஆகியவற்றால் பாரியதொரு நிர்வாகச் சிக்கலாக உருவெடுத்துள்ளது. 

குறிப்பாக, திறைசேரி மற்றும் மத்திய வங்கி ஆகிய இரு பிரதான நிதி நிறுவனங்களுக்கு இடையே நிலவும் அதிகாரப்போட்டி மற்றும் பொறுப்பைத்தட்டிக்கழிக்கும் போக்குகள் இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளன.

இந்த மோசடியின் ஆரம்பமே பாரிய முரண்பாட்டுடன் தான் தொடங்குகிறது. 2026 ஜனவரியில் அவுஸ்திரேலிய கடன் தவணை செலுத்தப்பட்ட போது, அதற்கான வங்கி விபரங்கள் மாற்றப்பட்டிருந்தன. 

ஆனால், திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும பாராளுமன்றக் குழுவின் முன்னிலையில் வியக்கத்தக்க தகவலை வெளியிட்டார். 

அதாவது, ஜனவரி மாதத்திலேயே இந்தியாவிற்கான கடன் கொடுப்பனவின் போது கணக்கு விபரங்கள் மாற்றப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்து தடுத்து நிறுத்தியதாக அவர் குறிப்பிட்டார். 

இங்குதான் முதல் முரண்பாடு எழுகிறது; இந்தியக்கடன் கொடுப்பனவில் மோசடி முயற்சி நடந்ததை ஜனவரியிலேயே கண்டறிந்த அதிகாரிகள், அதே காலகட்டத்தில் அவுஸ்திரேலியாவிற்கான கொடுப்பனவிலும் அத்தகைய மாற்றம் நிகழ்ந்திருப்பதை ஏன் கவனிக்கத் தவறினார்கள்? 


இந்தியக் கொடுக்கல் வாங்கலில் அச்சுறுத்தலை உணர்ந்த ஒரு நிர்வாகம், ஏனைய அனைத்து வெளிநாட்டுப் பரிமாற்றங்களையும் உடனடியாகச் சரிபார்த்திருக்க வேண்டும். 

ஆனால், அவுஸ்திரேலியாவிற்குப் பணம் சென்றடையவில்லை என்ற தகவல் ஏப்ரல் மாதம் வரும் வரை திறைசேரி மௌனம் காத்தமை, அவர்களின் கண்காணிப்பு முறையில் உள்ள பாரிய ஓட்டையை அம்பலப்படுத்தியுள்ளது.

அடுத்தது, நிர்வாக ரீதியான முரண்பாடாகும், அது கொடுப்பனவுகளை உறுதிப்படுத்தும் நடைமுறையில் காணப்படுகிறது. சர்வதேச கடன் தவணையைச் செலுத்தும் போது, 13 உயர்மட்ட அதிகாரிகள் அந்த ஆவணங்களைச் சரிபார்த்து கையெழுத்திட வேண்டும் என்பது விதிமுறையாகும். 

இத்தனை அதிகாரிகளின் கைகளைக் கடந்து செல்லும் ஒரு ஆவணத்தில், வங்கிக் கணக்கு இலக்கம் மாற்றப்பட்டிருப்பதை ஒருவர் கூடக்கண்டறியவில்லை என்பது நம்பகத்தன்மையற்றதாக உள்ளது. 

அதுமட்டுமன்றி, மின்னஞ்சல் மூலம் வந்த புதிய கணக்கு விபரங்களை உறுதிப்படுத்த, அதிகாரிகள் கடன் ஒப்பந்தத்தில் உள்ள தொலைபேசி எண்களைப் பயன்படுத்தாமல், மோசடிக்காரர்கள் மின்னஞ்சலில் வழங்கியிருந்த போலி எண்ணுக்கே அழைத்து உறுதிப்படுத்தியுள்ளனர்.

 இதுவொரு தற்செயலான பிழையா அல்லது உள்ளக அதிகாரிகள் யாராவது திட்டமிட்டு இந்த மோசடிக்குத் துணை போயுள்ளனரா என்ற சந்தேகம் வலுப்பெறச் செய்கிறது. அதன் ஆரம்பகட்ட விசாரணைகளின் முடிவிலேயே ஐந்து அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.


இந்த விவகாரத்தில் பாராளுமன்றத்தின் அதிகாரமும் திறைசேரியின் தன்னிச்சையான செயற்பாடும் மற்றொரு கூர்மைப்படுத்தப்படுத்தப்பட்ட முரண்பாடாகவுள்ளது. நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்திடமே உள்ளது. 

ஆனால், ஜனவரியில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து மூன்று மாதங்களாக பாராளுமன்றத்திற்கோ அல்லது அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கோ ஏன் அறிவிக்கப்படவில்லை? 

ஏப்ரல் 23ஆம் திகதி ‘சுயாதீன சட்டத்தரணிகள் சங்கம்’ இந்த விவகாரத்தை அம்பலப்படுத்திய பின்னரே, திறைசேரி செயலாளர் இது குறித்துப் பேச முன்வந்தார். 

பாராளுமன்றக் குழுவின் அழைப்பைத் தொடர்ச்சியாகப் புறக்கணித்த அவர், இறுதியாக இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் ஏப்ரல் 30ஆம் திகதி முன்னிலையான போதும் ‘இரகசியத்தன்மை’ என்ற போர்வையில் பல உண்மைகளை மறைக்க முயன்றிருக்கின்றார். 

2025 நவம்பர் முதல் 2026 வரையான காலப்பகுதியில் மொத்தம் 10 கடன் கொடுப்பனவுகளில் இத்தகைய மோசடி ஊடுருவல்கள் நடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டமை, 2.5 மில்லியன் டொலர் என்பது பெரியதொரு பனிப்பாறையின் ஒர் சிறிய முனை மட்டுமே என்பதை உணர்த்துகிறது.


அடுத்து இலங்கை மத்திய வங்கி மற்றும் திறைசேரிக்கு இடையிலான பொறுப்புக்கூறல் முரண்பாடு முக்கியமான விடயமாகின்றது. இந்த விடயத்தினை வெளிப்படுத்தியிருப்பவர் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆவார். இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் காணப்பட்டாலும் அவருடைய சுட்டிக்காட்டல்களின்படி, 2026 ஜனவரியில் புதிய அரச கடன் முகாமைத்துவச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னர், வெளிநாட்டு கடன் செலுத்தல்கள் அனைத்தும் மத்திய வங்கியின் கீழேயே இருந்தன. இலங்கை செய்திகள்

அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கான கடன் தவணைகள் 2025 செப்டெம்பர் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் செலுத்தப்பட்டவையாகும். அவ்வாறாயின், அந்த மோசடிக்கு மத்திய வங்கியே முழுமையாகப் பொறுப்புக்கூற வேண்டும். 

ஆனால், தற்போது திறைசேரி அதிகாரிகள் மட்டும் தண்டிக்கப்பட்டு, மத்திய வங்கியின் ஆளுநர் அல்லது நாணயச் சபை உறுப்பினர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது ஏன்? 

மத்திய வங்கி ‘சுயாதீனம்’ என்ற அந்தஸ்தைப் பயன்படுத்தித் தனது தவறுகளை மறைக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. திறைசேரிக்கும் மத்திய வங்கிக்கும் இடையே நிலவும் இந்த அதிகாரப்பகிர்வுச் சிக்கல், மோசடிக்காரர்களுக்கு இடைவெளியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதை வெளிப்படுத்துகின்றது. 


இந்த நிர்வாகச் சீர்கேட்டின் உச்சகட்டமாக, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஷவின் மர்ம மரணம் அமைந்துள்ளது. 2.5அமெரிக்க டொலர்கள் மோசடி தொடர்பில் இடைநிறுத்தம் செய்யப்பட்ட ஐந்து அதிகாரிகளில் ஒருவரான இவர், தனது வீட்டின் தோட்டத்தில் நரம்புகள் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை பல அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸார் இதனைத் தற்கொலை என்று விரைவாக முடிவெடுத்தாலும், தற்போது குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம், நிதி மோசடி குறித்து உயர்மட்ட விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது முக்கிய அதிகாரி இவ்வாறு உயிரிழப்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. 

அவர் மீதான நிர்வாக அழுத்தங்கள் காரணமாக இது நடந்ததா அல்லது அவர் ஏதாவது உண்மைகளை வெளிப்படுத்தத் தயாராக இருந்தாரா? இந்த மரணம் உண்மைகளை மூடிமறைப்பதற்கான ஒரு வழியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பது விசாரிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

அரசாங்கம் இந்த மோசடியை தொழில்நுட்ப ரீதியான ‘ஹெக்கிங்’ சம்பவமாகச் சித்தரிக்க முயன்றாலும், அதில் உள்ள தொழில்நுட்ப முரண்பாடுகள் வேறொரு விடயத்தையே கூறுகின்றன. 

வடகொரியாவின் லாசரஸ் (டுயணயசரள) போன்ற நுணுக்கமான ஹெக்கிங் குழுக்கள் ஊடுருவியிருந்தால், அவை மின்னஞ்சல் மட்டத்தில் மட்டும் நின்றிருக்காது. திணைக்களத்தின் உள்ளகக் கணினி கட்டமைப்பையே (ஐவெநசயெட ளுநசஎநசள) அவை மாற்றியமைத்திருக்க வேண்டும். 

அவ்வாறாயின், 13அதிகாரிகள் பார்த்த ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் ஹெக்கர்களால் போலியாக உருவாக்கப்பட்டிருக்கலாம். 

ஆனால், இதற்கான முறையான தடயவியல் ஆய்வை (குழசநளெiஉ யுரனவை) மேற்கொள்ளாமல், வெறும் உள்ளக விசாரணைகளுடன் அரசாங்கம் திருப்தி அடைவது ஏன்? 

சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனங்களின் உதவியை நாடாமல், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (ஊஐனு) சாதாரண விசாரணைகளை மட்டும் முன்னிலைப்படுத்துவது, உண்மையான அச்சுறுத்தல் காரணியைக் கண்டுபிடிக்க அரசாங்கம் தயங்குவதையே காட்டுகிறது.


மேலும், நிதி முகாமைத்துவம் குறித்த அரசாங்கத்தின் அறிக்கைகளிலும் பெரும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. ஒருபுறம் ரூபாவின் பெறுமதி ஸ்திரமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், மறுபுறம் டொலரின் பெறுமதி உயர்ந்து வருவது கடன் செலுத்தலில் அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. 

இத்தகைய சூழலில், 2.5 மில்லியன் டொலர் போன்றதொரு பாரிய தொகை காணாமல் போனதை ‘நிர்வாகத் தவறு’ என்று சுருக்கிப் பார்ப்பது அபத்தமானது. இதுவொரு திட்டமிட்ட நிதித்திருட்டு (குiயெnஉயைட குசயரன) என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் தென்படுகின்றன. 

குறிப்பாக, கடந்த காலங்களில் இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி போன்ற சம்பவங்களுடன் ஒப்பிடும் போது, இதிலும் சில ‘பெரிய தலைகள்’ பின்னணியில் இருந்து கொண்டு அதிகாரிகளைப் பலிகடாக்களாக்குகிறார்களோ என்ற சந்தேகம் வலுவாகிறது.இலங்கை செய்திகள்

சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்களிடம் கடன் பெற்று நாடு மீளப்போராடும் வேளையில், இருக்கும் நிதியைப் பாதுகாக்க வக்கில்லாதவொரு நிர்வாகக் கட்டமைப்பை வைத்துக்கொண்டு பொருளாதார மறுசீரமைப்பு பற்றிப் பேசுவது நகைப்புக்குரியது. 

இந்த முரண்பாடுகள் களையப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் மற்றும் முறையான தொழில்நுட்பத் ஆய்சு அறிக்கைகள் வெளிவரும் வரை, இலங்கையின் நிதி இறையாண்மை பெரும் கேள்விக்குறியே. இது வெறுமே பண இழப்பல்ல, ஒட்டுமொத்த நிர்வாகக் கட்டமைப்பின் தோல்வியாகும்.

ஆர்.ராம்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!