வடபகுதியில் தமிழ் மக்கள் மீதும், புனர்வாழ்வுப் பயிற்சி பெற்று சமூகத்தில் இணைந்திருப்பவர்கள் மீதும் அரசு பெரும் நெருக்குவாரங்களை மேற்கொண்டிருக்கின்றது.
யுத்த காலத்தைப் போன்று சுற்றி வளைப்புக்கள், வீடு வீடாகத் தேடுதல், சந்தே கத்திற்கு உரியவர்களைக் கண்காணித்தல், வீதிகளில் முக்கிய சந்திகளில் போக்குவரத்து செய்யும் வாகனங்களையும் பயணிகளையும் கண்காணித்தல், தேசிய அடையாள அட்டையைப் பரிசீலனை செய்தல் போன்ற நடவடிக்கைக ளில் இராணுவத்தினர் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்த இராணுவ நடவடிக்கையின் மூலம் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றே பலரும் நம்புகின்றார்கள்.
கைதுசெய்யப்பட்டவர்கள் பற்றிய சரியான தகவல்களும், புள்ளிவிபரங்களும் வெளியிடப்படவில்லை. கடந்த ஐந்து ஆறு வாரங்களாக இந்த நிலைமை தொடர்கின்றது.
இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல் மற்றும் மானுட நேயமற்ற செயற்பாடுகள் குறித்து, குற்றம் சுமத்தி, அவற்றுக்குப் பொறுப்புக் கூறுமாறு அரசாங்கத்திற்கு ஜெனிவா மனித உரிமை பேரவை பிரேரணை மூலம் கொடுக்கப்பட்டுள்ள சர்வதேச நெருக்கடியே இதற்கு முக்கிய காரணம் என பலரும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
பொறுப்புக் கூறும் விடயமானது, சர்வதேச விசாரணையொன்றை நடத்த வேண்டும், நடத்தப்படும் என்ற அளவிற்கு தீவிரமாகியிருக்கின்றது. சர்வதேச விசாரணையொன்றுக்கு இடமளிக்க முடியாது.
உள்ளூரிலேயே நாங்கள் விசாரணைகளை நடத்துவோம் என்று அரசாங்கம் பிடிவாதமாகக் கூறியதை ஏற்று, அதற்கான சந்தர்ப்பத்தையும் ஐ.நா. மன்றமும், சர்வதேசமும் வழங்கியிருந்தன.
ஆயினும் அரசு நடத்திய உள்ளுர் விசாரணைகள், பாதிக்கப்பட்ட மக்களையும் திருப்திப்படுத்தவில்லை. ஐ.நா. மற்றும் சர்வதேச நாடுகளையும் திருப்திப்படுத்துவதாக அமையவில்லை.
இதனால் பொறுப்பு கூறும் விடயம் இலங்கை அரசின் எல்லையைத் தாண்டி, சர்வதேசமட்டத்திலான ஐ.நா. விசாரணை என்ற நிலைமைக்குள் பிரவேசித்திருக்கின்றது.
ஐ.நா. விசாரணைக்கும் இடமளிக்கப்போவதில்லை என்று வீறாப்புடன் பதிலளித்துள்ள அரசு, அத்த கைய விசாரணைகளில் சாட்சியமளிப்பவர்களை, அரசியல் சட்டத்தையும் நாட்டின் இறைமையையும் மீறினார்கள் என குற்றம் சுமத்தி கைது செய்யப்போவதாகவும் மிரட்டியிருக்கின்றது.

அது மட்டுமல்லாமல், சர்வதேச விசாரணைகளை நடத்தவிடாமல் தடுப்பதற்காகவே, வடபகுதியில் பொதுமக்கள் மீதும், முன்னாள் போராளிகள் மீதும் இராணுவ நெருக்குவாரங்கள் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியிருக்கின்றார்.
என்னதான் நடக்கின்றது?
சர்வதேச அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர்ந்துள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் நாட்டில் மீண்டும் விடுதலைப்புலிகளை அணிசேர்க்க முயற்சிக்கின்றார்கள் என்று கூறி வந்த அரசாங்கமும், இராணுவத்தினரும், இப்போது கோபி என்ற ஒரு நபரின் தலைமையில் இந்த மீளிணைவு முயற்சி முன்னெடுக்கப்பட்டிருப்பதாகப் பிரசாரம் செய்துவருகின்றனர்.
கோபியுடன் இணைந்துள்ளதாக வேறு இருவருடைய பெயர்களையும் இணைத்து, அவர்களின் பெயர் விபரங்கள் மற்றும் புகைப்படங்களுடன் வடபகுதியெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன.இவர்கள் பற்றிய தகவல்களைத் தருபவர்களுக்கு பத்து இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என்ற அறிவித்தலும் வெளியாகியிருக்கின்றது.
இந்தச் சுவரொட்டிகள் நாட்டின் தலைநகர் கொழும்பிலும் ஒட்டப்பட்டிருக்கின்றன.விடுதலைப்புலிகளை மீளிணைக்க முயல்கின்றார்கள் என்று இராணுவப் பேச்சாளர் உட்பட இராணுவ அதிகாரிகளும், அரச தரப்பு அரசியல் வாதிகளும், அரசாங்கமும் கூறிவருகின்ற போதிலும், தேடப்படுகின்றார்கள் என்று அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் பத்திரிகை அறிக்கைகளில், தேடப்படுபவர்கள் பல்வேறு குற்றச்செயல்களுடன் சம்பந் தப்பட்டிருப்பதாகவும், அதற்காகவே அவர்கள் தேடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
தேடப்படுபவர்கள் உண்மையிலேயே விடுதலைப்புலிகளை மீண்டும் ஒன்றிணைக்க முயற்சிக்கின்றார்கள் என்றால், ஏன் அவ்வாறு இந்த அறிவித்தல்களில் குறிப்பிடப்படவில்லை என்று பொதுமக்கள் வினவுகின்றார்கள்.
இவர்கள் பயங்கரவாதத்தை மீண்டும் நாட்டில் உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றார்கள் என்றால், அரசாங்கம் ஏன் அவர்களைப் பயங்கரவாதிகள் என்று பகிரங்கமாகக் குறிப்பிடவில்லை என்றும் பொதுமக்கள் வினா எழுப்பியிருக்கின்றார்கள்.
தேடப்படுபவர்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கும், இராணுவத்திற்கும் சரியான தெளிவு இல்லையென்றும், இது புலிப்பூச்சாண்டி காட்டி, போரினால் பாதிக்கப்பட்டுள்ள தங்களை இம்சிப்பதற்காகவே இந்த நாடகத்தை அரசு அரங்கேற்றியிருப்பதாகவே மக்கள் சந்தேகம் கொண்டிருக்கின்றார்கள்.தேடப்படுகின்ற கோபி என்பவருக்கு அடைக்கலம் கொடுத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கிளிநொச்சி விசுவமடு பகுதியில் தமது வீட்டிலிருந்த ஜெயக்குமாரியும் அவருடைய மகள் விபூசிகாவும் பெரிய இராணுவ சுற்றிவளைப்பொன்றின்போது கைது செய்யப்பட்டிருந்தார்கள்.
அந்தச் சந்தர்ப்பத்தில் கோபியைத் தேடிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்ற பயங்கரவாத தடுப்புப், புலனாய்வு பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் மீது கோபி கைத் துப்பாக்கிப்பிரயோகம் செய்து காயப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுவிட்டார் என்றும் இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தச் சம்பத்தைத் தொடர்ந்து கோபியைத் தேடும் படலம் ஒரு தொடர்கதையாக மாறியிருக்கின்றது. இதற்காகவே சுற்றி வளைப்புக்கள், தேடுதல்கள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாகவும் அரச தரப்பில் காரணம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
பயங்கரவாதம் மீண்டும் தலையெடுக்க அனுமதிக்க முடியாது. பொதுமக்கள் அதனை விரும்பவில்லை. அவர்களின் பாதுகாப்புக்காகவே இந்த இராணுவ நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றன என்று இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டிருக்கின்றார்.நெருக்குவாரங்கள்
ஆனால் இந்த இராணுவ நடவடிக்கை காரணமாக தாங்கள் அச்சமடைந்திருப்பதுடன், அன்றாட வாழ்க்கையில் அமைதியிழந்திருப்பதாகவே பொதுமக்கள் கூறுகின்றார்கள்.
தேடுதல் என்ற போர்வையில் வீடுகளுக்குள் புகுந்து அலசுவதும், புதியவர்கள் யாரேனும் வந்தார்களா?, வெளிநாடுகளில் இருந்து யாரும் பணம் அனுப் பினார்களா?,
பிறந்த இடம் எங்கே, எவ்வளவு காலம் தற்போதைய இடத்தில் இருக்கின்றீர்கள்?, அதற்கு முன்னர் எங்கிருந்தீர்கள் என்ன செய்தீர்கள் என்று கேள்விகள் கேட்டு குடைந்தெடுப்பதாகவும் சிலர் கூறுகின்றார்கள்.
கிராமப்பகுதிகளில் சில வேளைகளில் நீண்டநேரம் இராணுவத்தினரும் புலனாய்வாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதனால் என்ன நடக்கப்போகின்றதோ, யார் யாரைப் பிடித்துச் செல்லப்போகின்றார்களோ என்று தங்களுக்கு அச்சமாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள்.
முன்னாள் போராளிகளின் நிலைமைகள் இதை விட மோசமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புனர்வாழ்வு பெற்று சமூகத்தில் இணை க்கப்பட்டுள்ள தங்களை படையினர் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதுடன், அடிக்கடி கூட்டங்கள் நிகழ்வுகள் என்று அழைத்து தமது நேரடித் தொடர்பில் வைத்திருக்கின்றபோதிலும், இப்போது புதிது புதிதாக வருபவர்கள் தங்களைத் தேடி வந்து பதிவுகளை மேற்கொள்வதாகக் கூறியிருக்கின்றனர்.
பதிவுகளுக்காக வருபவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தீர்களா? எவ்வளவு காலம் இருந்தீர்கள், என்ன செய்தீர்கள், இப்போது என்ன செய்கின்றீர்கள்?, வெளிநாட்டுத் தொடர்புகள் இருக்கின்றதா, வெளிநாடுகளில் இருந்து பணம் வருகின்றதா?, ஏன் வருகின்றது என்று கேள்விகளால் தங்களைத் துளைத்தெடுப்பதா கவும், இதனால் தங்களுக்குப் பெரும் அசௌகரியங்கள் ஏற்பட்டிருப்பதாக அவர்கள் கூறியிருக்கின்றனர்.
தங்களைத் தேடி வருபவர்கள், தாங்கள் வேலை க்குச் சென்றிருந்தால் அல்லது அலுவல்கள் காரணமாக வெளியில் சென்றிருந்தால் தாங்கள் வரும் வரையில் பல மணித்தியாலங்களாக பதிவுக்காக வருபவர்கள் தமது வீட்டுப் பகுதிகளில் காத்திருப்பனால், அயல் வீடுகளில் உள்ளவர்களும் அச்சமடைந்து, தங்கள் மீது வெறுப்படைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புனர்வாழ்வு பெற்று சுயதொழிலுக்காக வங்கியில் கடன் எடுத்து தொழில் செய்பவர்களும் படையினரின் இத்தகைய நடவடிக்கைகளினால் தொழில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், வியாபாரம் செய்யும் இடங்களில் இவர்களின் கண்காணிப்பு நடவடிக்கையினால் வாடிக்கையாளர்கள் வருவது குறைந்து செல்வதாகவும், இதனால் வங்கிக்கு கடன் செலுத்த முடியாத நிலமை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள சிலர் வங்கிகளிடம் தங்களால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பது குறித்து எடுத்துக் கூறியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்கள் மற்றும் புனர்வாழ்வு பெற்றிருப்பவர்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற இந்தக் கண்காணிப்பு மற்றும் நெருக்குவார நடவடிக்கைகள் அரசு கூறுவதைப்போல, விடுதலைப்புலிகள் மீண்டும் அணி சேர்வதைத் தடுப்பது மட் டுந்தான் நோக்கமா என்பது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சந்தேகம் வெளியிட்டிருக்கின்றது.
இன அழிப்பு நோக்கத்துடன், தமிழ் இளைஞர், யுவதிகளின் நிம்மதியைக் கெடுத்து, அவர்களுடைய வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் சமூக அடிப்படையில் தலைமைத்துவம் மிக்கவர்களாக மாறிவிடக் கூடாது என்பதற்காகவே இத்தகைய இராணுவ தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சமூகவியலாளர்கள் கருதுகின்றார்கள்.
இளைஞர், யுவதிகள் மத்தியில் கிராம மட்டத்தில் அல்லது சமூக மட்டத்தில் தலை வர்கள், புதிய தலைமைகள் உருவாகிவிடக் கூடாது என்பதை இந்தச் செயற்பாடுகள் நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் கருத முடியும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
விடுதலைப்புலிகள் பலம் பெற்றிருந்த காலத் தில் சிங்களப் பேரினத்தின் அரசியல் சக் தியைப் பலவீனப்படுத்துவதற்காக ஆளுமைபெற்றிருந்த சிங்கள அரசியல் தலைவர்களை குறிவை த்து தாக்குதல்களை மேற்கொண்டிருந்தார்கள்.
அதேபாணியில் வடக்கு - கிழக்குப் பிரதேசங்களில் இளைஞர்கள் மத்தியிலும், சமூகத்திலும் செயலூக்கம் மிக்கவர்களையும், தலைமைத்துவத்தில் இருந்தவர்களையும் செயலற்றவர்களாக மாற்றுவதற்காக வகைதொகையற்ற விதத்தில் அவசரகாலச் சட்டத்தின் துணையோடு பலர் கைதுசெய்யப்பட்டார்கள் என்றும்....,
பலர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், அல்லது அவர்களுடன் இணைந்து செயற்பட்டார்கள் என்று குறிப்பிட்டு அடையாளம் தெரியாத வகையில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்றும் சமூகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். இப்போதைய நிலையும் அந்த நிலைமையுடன் ஒப்பு நோக்க தூண்டப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள்.புலம்பெயர்ந்தவர்கள் மீதும் நெருக்குதல்கள்
களத்தில் மட்டுமல்லாமல் புலத்தில் உள்ளவர்கள் மீதும் இலங்கை அரசு தனது அதிகாரத்தையும் நெருக்குதல்களையும் பிரயோகித்திருக்கின்றது. புலம் பெயர் தமிழர்களின் 16 அமைப்புக்களைத் தடைசெய்துள்ள அரசு, அந்த அமைப்புக்களுடன் தொடர்புடையவர்கள் எனக் குறிப்பிட்டு, நானூறுக்கும் மேற்பட்டவர்களை நாட்டுக்குள் பிரவேசிக்க முடியாது எனக் கூறி தடை விதித்திருக்கின்றது.
இந்தத் தடையுத்தரவை அரசாங்கம் தனது வர்த்தமானிப் பத்திரிகை மூலமாகப் பிரகடனப்படுத்தியிருக்கின்றது, பயங்கரவாதம் மீண்டும் தலையெடுக்கக் கூடாது என்பதற்காக, ஐ.நா. மன்றத்தின் சட்ட விதியொன்றைத் துணையாகக் கொண்டு தடைசெய்யப்பட்டுள்ள தமிழர் நிறுவனங்களினதும், ஆட்களினதும் பெயர்ப் பட்டியல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
ஐ.நா. சபையின் பிரகடனங்களை ஏற்று, அவற்றுக்கமைவாக செயற்படுவதாக உறுதியளித்து, ஐ.நா. மன்றத்தில் இலங்கை உறுப்புரிமை பெற்றிருக்கின்றது.
இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இந்த வருடத்துடன் மூன்று பிரேரணகைள் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. ஆயினும் மூன்று பிரேரணைகளையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்திருக்கின்றது.
ஐ.நா. மன்றப் பிரகடனங்களை ஏற்றுக'கொண்டுள்ள அதேநேரம், ஐ.நா. மனித உரிமைப் பேரவை பிரேரணைகளின் மூலமாக வலியுறுத்தப்பட்டுள்ள பொறுப்பு கூறல் கடமையைச் செய்ய மாட்டேன் என்று அரசு அடம் பிடித்துக்கொண்டிருக்கின்றது.
மறுபுறத்தில், ஐ.நா. மன்றத்தின் விதிமுறையொன்றை கையில் எடுத்துக்கொண்டு, நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்களையும், 16 தமிழர் அமைப்புக்களையும் தனக்கு வசதியாக இந்த அரசு தடை செய்திருக்கின்றது. முரண்பாடான இந்த செய்கை என்பது இல ங்கை அரசாங்கத்தின் தனி முத்திரையென்றே சொல்ல வேண்டும்.
இறுதி யுத்தத்தின்போது, இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மானுடத்திற்கு எதிரான காரியங்கள் என்பன குறித்து பொறுப்பு கூறுவதற்கு மறுப்பு தெரிவிக்கின்ற அரசாங்கம், அத்தகைய மீறல் நடவடிக்கைகளில் விடுதலைப்புலிகளே ஈடுபட்டிருந்தார்கள் என்று பிரசாரம் செய்து வருகின்றது.
அத்துடன், அந்த வகையில் அவர்கள் மேற்கொண்டிருந்த பயங்கரவாதச் செயல்களுக்கு அவர்களே பொறுப்புக் கூற வேண்டும் என்றும், அரச படைகள் மனிதாபிமான நடவடிக்கையிலேயே ஈடுபட்டிருந்தார்கள் என்றும் எவரையும் அவர்கள் கொல்லவில்லையென்றும் அரசியல்வாதிகளும், அரசாங்கமும் கூறி வருவதைக் காணலாம்.
யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களாகின்ற நிலையிலும், அரச தொலைக்காட்சிகளில் இன்றைய திகதியில் அன்று நடந்தது என்ற தலைப்பில் விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதல்கள் பற்றிய விவரணக் காட்சிகள் ஒவ்வொரு நாளும் இப்போது ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.
பல்வேறு இடங்களிலும் விடுதலைப்புலிகள் நடத்திய காட்சிகளைக் காட்டி, இராணுவ சிப்பாய்களான தேசிய வீரர்களை விடுதலைப்புலிகள் படுகொலை செய்தார்கள் என்றும், தேசிய வீர்கள் பலியாகிப் போனர்கள் என்றும், தேசிய வீரர்களின் உயிர்களைப் புலிகள் பறித்தார்கள் என்றும் அரசு இதன் மூலம் பிரசாரம் செய்து வருகின்றது.
இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் எற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று கூறிக்கொண்டே, சிறுபான்மையினராகிய தமிழ் மக்கள் மீது பெரும்பான்மை இன மக்களுக்கு நிரந்தரமான வெறுப்புணர்வை ஊட்டத்தக்க காரியங்களை அது மேற்கொண்டுவருதைக் காணலாம்.
இது, தொட்டிலை ஆட்டிக்கொண்டே, குழந்தையைக் கிள்ளுகின்ற அரசாங்கத்தின் முரண்பாடான செயலேயல்லாமல் வேறு ஒன்றுமில்லை.
மோசமான முப்பது வருட யுத்தத்தின் பின்னர், இறைமையுள்ள ஒரு ஜனநாயக அரசுக்கு இருக்க வேண்டிய, சிறுபான்மையினராகிய தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற உயர்ந்த அரசியல் நோக்கம் இல ங்கை அரசாங்கத்திடம் இல்லை என்பது வெளியாகியிருக்கின்றது.இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல்தீர்வுகாண வேண்டும், அதன் ஊடாக இந்த நாட்டின்சிறுபான்மை இன மக்களுடன் பெரும்பான்மை இன மக்கள்நல்லிணக்கத்தோடும், ஐக்கியத்துடனும் வாழ வழி செய்ய வேண்டும் என்றதேசிய ரீதியிலான நல்லெண்ணம் ஆட்சியாளர் களிடம் இல்லை என்பதும் வெளிச்சமாகியிருக்கின்றது.
இன அழிப்பை மறைமுக நிகழ்ச்சி நிரலாகக் கொண்டுதான் இந்த அரசு செயற்படுகின்றதோ என்ற சந்தேகத்தையும் இது உறுதிப்படுத்த முற்படுகின்றது.
இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே, தேசிய ஐக்கியத்துக்கான மாநாட்டில் முக்கிய உரையாற்றிய ஜனாதிபதி இந்த நாட்டில் சிறுபான்மையினர் என்று எவரும் கிடையாது என்று குறிபபிட்டிருக்கின்றார்.
யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் இதே கருத்தை வெளியிட்ட ஜனாதிபதி நாட்டில் பெரும்பான்மையானவர்கள் என்பது அரசுக்கு ஆதரவானவர்கள் என்றும் சிறுபான்மையினர் என்பது அரசுக்கு விரோதமானவர்கள் என்றும் வியாக்கியானம் கூறியிருந்தார்.
அந்த நிலைப்பாட்டை அவர் மீண்டும் நினைவூட்டி, நிலைநிறுத்தியிருப்பதன் மூலம், இந்த நாட்டில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற தேவையே கிடையாது என்பதை ஆழமாகவும் ஆணித்தரமாகவும் உணர்த் தியிருக் கின்றார்.
சிறுபான்மையினராகிய தமிழ் மக்களின் அரசி யல் அபிலாஷைகளை அடிப்படையா கக் கொண்ட இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் நிலைப்பாடு.
நாட்டில் சிறுபான்மையினரே இல்லையென்றால், பிரச்சினையும் இல்லை, பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற தேவை யும் இல்லையல்லவா?-
செல்வரத்தினம் சிறிதரன்-
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!